என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய அரசு எளிமையாக தொழில் தொடங்க ஒரு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை புதுவையிலும் அமல்படுத்த உள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை அரசும், பிரெஞ்சு அரசும் இணைந்து தொழில் முனைவோர் மாநாட்டை அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடத்தியது.

    இன்று 2-வது நாளாக மாநாடு நடந்தது. மாநாட்டில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த 28 நிறுவனங்களும், 58 பிரெஞ்சு இந்திய கூட்டு நிறுவனங்களும் என மொத்தம் 86 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    மாநாட்டில் புதுவையில் தொழில் தொடங்குவதற்கான சூழல், கட்டமைப்புகள், அரசின் சலுகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாடு குறித்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என வாக்குறுதியளித்துள்ளார். கடந்தமாதம் புதுவைக்கு வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவும் பெஸ்ட் புதுவையை உருவாக்க உறுதியளித்துள்ளார். தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த அரசு புதுவையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    இதற்காக ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு எளிமையாக தொழில் தொடங்க ஒரு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை புதுவையிலும் அமல்படுத்த உள்ளோம்.

    மாநாட்டில் பங்கேற்ற நிறுவனத்தினர் புதுவையில் தொழில் தொடங்க மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர். தொழில் தொடங்க தேவையான நிலம், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்துள்ளோம். புதிய தொழிற்சாலைகள் வந்தால் புதுவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    புதுவையின் பொருளாதாரம் மேம்படும். சேதராப்பட்டில் கையகப்படுத்தி உள்ள 750 ஏக்கரில் தொழிற்சாலைகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பம், மருந்துகள் தயாரிப்பு, மின்சாதனம், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

    இதில் பங்கேற்ற 10 நிறுவனங்கள் உடனடியாக தொழில் தொடங்க தயாராக உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் ரூ.ஆயிரம் கோடி முதலீடு புதுவைக்கு வரும். 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை கொண்டுவர முன்னுரிமை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது தொழில்துறை செயலர் அருண் உடனிருந்தார்.

    பா.ஜனதா ஆட்சியில் ஊழல் இல்லை என்று மத்திய மந்திரி மீனாட்சி லேகி பெருமிதம் அடைந்துள்ளார்.
    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதி சோம்பட்டு கிராமத்தில், மத்திய பா.ஜனதா அரசின் 8 ஆண்டு கால மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம், மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை  மந்திரி அமைச்சர் மீனாட்சி லேகி கலந்து கொண்டு பேசியதாவது:- 

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கும்,  ஏழை களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின் ஏழை மக்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வங்கிகளில் கணக்குகள் தொடங்கியுள்ளனர்.

    அதன் மூலம் மத்திய அரசின் இன்ஸ்சூரன்ஸ், பென்ஷன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கொரோனா காலங்களில் ஏழை மகளிர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.பெண்களின்  மேம்பாட்டுக் காக உழைப்பவர் பிரதமர் மோடி மட்டுமே. கிராமப் புறங்களில் உள்ள அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் பெண்களை தலைவராக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

    பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல் நடக்கக் கூடாது என்பதற்காக பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதால், ஊழல், லஞ்சம் முற்றிலும் கிடையாது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்  காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இந்தியா தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக 20 கோடி கழிப்பிடம் பெண்களுக்காக கட்டப்பட்டுள்ளது. 

    பொது சேவை மையங்களின் மூலம் மத்திய அரசின்  அனைத்து திட்டங்களையும் மக்கள் நேரடியாக பெறக்கூடிய வகையில் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. பிரதமர் கூறியபடி, புதுவை  விரைவில் பெஸ்ட் புதுவையாக நிச்சயம் மாறும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    நிகழ்ச்சியில், செல்வ கணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அசோக் பாபு, சிவசங்கரன், நிர்வாகிகள் முத்தழகன், தமிழ்மணி, வீரராகவன், செல்வகுமார், கலியபெருமாள், கண்ணன், மோகன்குமார், செல்வம்,  சிவா, தீனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    லாபகரமாக இயங்கும் புதுவை அரசின் மின்துறையை தனியார் மயமாக்க கூடாது என்று திருச்சி சிவா எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.
    புதுச்சேரி:

    தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா மத்திய மின்சக்தி மந்திரி ராஜ்குமார்சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு மக்களின் நலன், மாநிலங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மே 2020-ல், மத்திய நிதியமைச்சர் 8 யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்குவதாக அறிவித்தார். 

    இது புதுவையில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. மின்விநியோகம் அரசியலமைப்பின் 7-ம் அட்டவணை பட்டியலின் கீழ் வருகிறது. இது அந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மக்களுக்கு மறுக்க முடியாத வகையில் நன்மையாக இருந்தால் மட்டுமே மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள முடியும். 

    லாபகரமாக இயங்கி வரும் மின்துறை, புதுவை அரசுக்கு சொந்தமானது, காரைக்கால் பகுதியில் 33 மெகாவாட் எரிவாயு மின் நிலையத்தை இயக்குகிறது. இது புதுவையை தன்னிறைவுபடுத்துகிறது. புதுவை மின்துறை நாட்டிலேயே தன்னிகரற்று லாபத்தில் இயங்கி வருகிறது. 

    எனவே புதுவையில் மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தனியார்மயத்தால் மின் கட்டணம் உயரும்.  விவசாயத்திற்கும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார பலன்கள் திரும்பப் பெறப்படலாம். 2 ஆயிரம் மின்துறை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. 
    எனவே புதுவை மக்களின் நலன் கருதி மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    புதுவையில் இன்று பி.ஆர்.டி.சி. கண்டக்டர், டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியேற முடியாதபடி பஸ்களை குறுக்கே நிறுத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு சாலை போக்குவரத்துக்கழகத்தில் இளநிலை எழுத்தராக பணிபுரிபவர் பாவாடை.

    இவர் நேற்று முன்தினம் பொது மேலாளர் ஏழுமலையுடன் 100 அடி சாலையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு பி.ஆர்.டி.சி.யில் கண்டக்டராக வேலை பார்க்கும் கொம்பாக்கத்தை சேர்ந்த வேலைய்யன் வந்திருந்தார்.

    அப்போது வேலைய்யன், இளநிலை எழுத்தர் பாவாடையிடம், தொழிலாளர்களின் செலவு, அரியர்ஸ் தொகை எப்போது கிடைக்கும்? என கேட்டுள்ளார். இதில் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாவாடையை, வேலைய்யன் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாவாடை முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வேலைய்யன் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று பாவாடைக்கு ஆதரவாக வேலைய்யன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பி.ஆர்.டி.சி. நிர்வாக அலுவலக ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று பி.ஆர்.டி.சி. கண்டக்டர், டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியேற முடியாதபடி பஸ்களை குறுக்கே நிறுத்தினர்.

    இதனால் அதிகாலை 4 மணி முதல் பி.ஆர்.டி.சி. பஸ்கள் எதுவும் செல்லவில்லை. பஸ்கள் அனைத்தும் பணிமனைக்குள் நிறுத்தப்பட்டிருந்தது. வேலைய்யன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனக்கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று பிற்பகல் வரை பஸ்கள் ஓடவில்லை. நிர்வாகம் தரப்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
    திருமணமான 11 மாதத்தில் விபத்தில் தொழிலாளி பலியானார்.
    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் புதுப்பாக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் ஜெயபால் (வயது 38) தொழிலாளி. இவருக்கும், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவருக்கும் கடந்த 11 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

    இந்நிலையில் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கண்டமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஜெயபால் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று சிகிச்சை முடிந்து புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் கவுதம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெயபால் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில்  ஜெயபால், செல்வி ஆகியோர்  தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயபால் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபால்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 11 மாதத்தில் கணவர் இறந்ததால் மனைவி மிகுந்த சோகத்தில் உள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
    கலிதீர்தாள்குப்பத்தில் சைக்கிள் பேரணி நடந்தது.
    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு அருகே உள்ள கலிதீர்தாள்குப்பம் பெருந்தலைவர் காமராஜர் கலைக் கல்லூரியில் தேசிய மாணவர் படை மற்றும் தாகூர் கலைக்கல்லூரி இணைந்து உலக மிதிவண்டி நாள் முன்னிட்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

     தேசிய மாணவர் படை பிரிவு லெப்டினட் கதிர்வேல் வரவேற்றார்.  கல்லூரி முதல்வர் பாபு தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார். தேசிய மாணவர் படை பிரிவு கமாண்டர் ஹசாரிகா உத்தரவின்பேரில் சைக்கிள் பேரணி கலிதீர்தாள் குப்பம், மதகடிப்பட்டு, திருபுவனை, நல்லூர் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று மிதிவண்டியின் அவசியத்தை மாணவர்கள் எடுத்துக் கூறினர். 

    நிகழ்ச்சியின் முடிவில் தாகூர் கலைக்கல்லூரி கேப்டன் உச்ச பள்ளி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    குளோபல் ஹெல்த் சிட்டியுடன் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 30 ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றி வரும் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையானது 3-ம், 4-ம் நிலை உயர்தர சிகிச்சைக்கான தேவையை கருத்தில் கொண்டு முன்னணி மருத்துவமனையான கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது. 

    இந்த ஒப்பந்தத்தில் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையின் நிறுவனர் முருகேசன், கிளெனீகல்ஸ் குளோபல்  ஹெல்த் சிட்டியின் கார்ப்பரேட் தலைவர் பாஸ்கர் ரெட்டி ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.

    இந்த நிகழ்வின்போது டாக்டர்கள் ராஜேந்திரன், ஜாய்வர்கீஸ், கார்த்திகேயன், ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை முதன்மை நிர்வாகி அப்துல் ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையின் நிறுவனர் முருகேசன் நிருபர்களிடம் கூறும் போது, இதன் மூலம் கல்லீரல் ஆலோசனை பிரிவு மற்றும் எதிர்வரும் காலங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிக்கலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்று நோய், நரம்பியல் சிகிச்சை போன்ற உயர்தர சிகிச்சை துறைகளில் கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் நிபுணத்துவத்தை பயன்படுத்திக் ெகாள்வோம் என்றார். 

    பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் துப்புரவு தொழிலாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
    புதுச்சேரி:

    பிரதமர் மோடி  தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியின் 8 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் 10 நாள் தொடர் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
    புதுவை பாரதீய ஜனதா கட்சி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நிகழ்ச்சியை நடத்தி வரு–கிறது. அதன்படி பாரதீய ஜனதா பட்டியல் அணி சார்பாக  பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி உப்பளம் விளையாட்டு மைதானம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன்  மாலை அணிவித்து நிகழ்ச்சியை தொடங்கினார்.இதில், பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., அசோக் பாபு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.  தீப்பாய்ந்தான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பேசும் போது, பிரதமர்  மோடி   கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார். கொரோனா காலகட்டங்களில் துப்புரவு பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தியது உள்ளிட்ட பாரதீய ஜனதா ஆட்சியின் பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
    நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா மாநிலத் துணைத் தலைவர்கள் செல்வம், ரவிச்சந்திரன், மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி, தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன், உப்பளம் தொகுதி பாரதீய ஜனதா பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், நகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல், மாநில பிரச்சார பிரிவு அமைப்பாளர் ரவி, மாநில பட்டியல் அணி பொருளாளர் சிவபெருமான், சமூக வலைதள அமைப்பாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும். அதை உருவாக்கி தர வேண்டும் என்பதே அரசின் எண்ணம். புதுவையில் அதற்கான சூழல் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு, பிரெஞ்சு தூதரகத்துடன் இணைந்து தொழில்துறை வளர்ச்சிக்கு தொழில்முனைவோர் மாநாட்டை நடத்தியது.

    இந்த மாநாடு அண்ணாசாலையில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, பிரெஞ்சு தூதர் லிசே டால்பட் ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர். மாநாட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும். அதை உருவாக்கி தர வேண்டும் என்பதே அரசின் எண்ணம். புதுவையில் அதற்கான சூழல் உள்ளது. தொழில் தொடங்க தேவையான வசதிகளை விரைவாக செய்து தரவேண்டும். விண்ணப்பித்த ஒரு சில நாட்களிலேயே மின்துறை உட்பட்ட அனைத்து துறைகளிலும் உரிமம் கிடைக்கவேண்டும். இதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் புதுவை அரசு அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், பெஸ்ட் புதுவை என்பது பிரதமரின் எண்ணம். மத்திய அரசு உதவியுடன் தொழில்துறையில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பொருளாதாரத்தை மேம்படுத்த பல நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக மெடிக்கல் டூரிசம், மருந்துகள் தயாரிப்பு, ஸ்டார்ட் அப்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்துகிறோம். புதுவையில் இத்தொழில்களை தொடங்க முதலீடு செய்யலாம் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் 80 பிரெஞ்சு மற்றும் இந்திய நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    புதுவை ரெட்டியார் பாளையத்தில் பஸ் மோதி அங்கன் வாடி பெண் ஊழியர் பலியான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ராஜலட்சுமி எல்லை பிள்ளை சாவடியில் உள்ள அங்கன் வாடியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டு வந்தார்.

    ரெட்டியார் பாளையம் கம்பன் நகர் அருகே வந்த போது தனியார் பஸ் ராஜலட்சுமி மொபட் மீது உரசியது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். பஸ்சின் முன் பக்க டயர் ராஜலட்சுமி தலையில் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே ராஜலட்சுமி துடிதுடித்து இறந்தார். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதை பதைக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    புதுவையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா தூக்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியிருந்தது.

    கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. புதுவையில் ஆயிரத்து 158 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    காரைக்காலில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 17, காரைக்காலில் 5, ஏனாமில் 14 பேர் என மொத்தம் 36 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.  

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 71 ஆயிரத்து 127 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.
    சுண்ணாம்பாற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

     தவளக்குப்பம் அருகே நோணாங்குப்பம் பகுதியில் சுண்ணாம்பாறு உள்ளது. 

    இந்த ஆற்றின் குறுக்கே 2 நீண்ட பாலங்கள் அமைந்து உள்ளது. இதில் உள்ள பழைய பாலத்தின் மீது ஏறி நின்று இன்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

    பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்த அந்த இளம் பெண்ணின் உடலை கண்டு  அங்கு கட்டு மரத்தில் மீன்பிடிப்பவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் மற்றும் புதுவை தீயணைப்புத் துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த கட்டுமரத்தின் உதவியோடு உடலை மீட்டு  கதிர்காமம்  அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

     இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?. இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தற்கொலை சம்பவம் நடந்ததால் 2 பாலத்தின் மீது ஏராளமானோர் கூடி நின்று  வேடிகை பார்த்தனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    ×