என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தனியார் நிறுவன ஊழியருக்கு பீர் பாட்டில் குத்து
கிருமாம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரை பீர் பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் நேவிராஜ்(வயது26). இவர் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது நேவிராஜியிடம் அவரது ஊரை சேர்ந்த புகழ் என்ற புகழேந்தி என்பவர் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார்.
அதன்படி நேவிராஜ் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார். 2 மாதம் மட்டுமே தவணை தொகை கட்டிய புகழ் அதன் பிறகு தவணை தொகை கட்டவில்லை.
அடுத்த சில நாட்களில் ஒரு வழக்கில் புகழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் புகழ் வாங்கிய மோட்டார் சைக்கிளை அவரது நண்பர்களான திருக்குமரன் மற்றும் வசந்த் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர்.
இதையடுத்து தவணை தொகை கட்டாததால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய நேவிராஜ் வேலை பார்க்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய அந்த நிறுவனத்தை சேர்ந்த அகஸ்டின் என்பவர் கிருமாம்பாக்கத்துக்கு வந்தார். அவருடன் நேவிராஜியும் உடன் வந்தார்.
இதன் காரணமாக நேவிராஜ் மீது திருக்குமரனும், வசந்தும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேவிராஜ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார்.
பின்னர் நேவிராஜ் அகஸ்டினுடன் அங்குள்ள சுடுகாட்டு பகுதிக்கு சென்றார். அப்போது சிலர் சண்டை போட்டுக்கொண்டிருந்தை கண்ட நேவிராஜ் அங்கு சென்று பார்த்தார்.
அந்த நேரத்தில் அங்கிருந்த திருக்குமரனும், வசந்தும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி காட்டிக்கொடுத்த துரோகியே என்று பேசி அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து நேவிராஜியின் முகத்தில் குத்தினர். மேலும் இனிமேல் எங்களிடம் வைத்துக்கொண்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
பீர் பாட்டிலால் குத்தியதில் முகத்தில் காயமடைந்த நேவிராஜ் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருக்குமரன் மற்றும் வசந்தை தேடி வருகிறார்கள்.
Next Story






