என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
    • திருவாண்டார் கோவில் பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து அதில் வாகனங்கள் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

    திருவாண்டார் கோவில் பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து அதில் வாகனங்கள் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. தற்போது திருபுவனை வழியாக கடலூர் செல்லும் முக்கிய சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், புதுவையில் இருந்து வருகின்ற வாகனங்கள் கடலூர் சாலை வழியாக திரும்ப முடியாமல் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்கின்றன.

    மேலும் புதுவையில் இருந்து வரும் வாகனங்கள் அந்த வழியாக விழுப்புரம் செல்ல முடியாமல் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன. மேம்பாலம் அருகில் குறுகிய சாலை பகுதியில் சினிமா தியேட்டர், வணிககடைகள், ஓட்டல்கள் மிக நெருக்கமாக அமைந்த கட்டிடங்கள் இருப்பதால், குறுகிய சாலை வழியாக தற்போது வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு சாலையினை அகலப்படுத்தி வாகனங்கள் சென்றுவர வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் இவ்வழியாக பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்வதற்கு இடையூறாக இந்த பகுதி இருப்பதால், நேரத்திற்கு வேலைக்கு செல்வோரின் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

    திருபுவனை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய லாரிகள் மற்றும் வாகனங்கள் இந்த பகுதியில் திரும்ப முடியாமல் திணறி வருகின்றன.

    சாலையின் இரு புறமும் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக இப்பகுதி விளங்கி வருகின்றது. திருபுவனை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தினை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சின்னகடை மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.
    • இங்குள்ள மேற்கூரைகள் சேதமடைந்தும், மின்சார பலகை பாதுகாப்பாக இல்லாமலும் உள்ளது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சின்னகடை மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இங்குள்ள மேற்கூரைகள் சேதமடைந்தும், மின்சார பலகை பாதுகாப்பாக இல்லாமலும் உள்ளது. 

    இதனால் மீன் வியாபாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து இப்பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியை மீன் வியாபாரிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

    இதையடுத்து சின்னக்கடை மீன் வியாபாரிகளை அனிபால் கென்னடி அழைத்து சென்று புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார். செயற்பொறியாளர் சிவபாலன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது சின்னக்கடை மீன் மார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் முழுமையாக புதுப்பித்து நடவடிக்கை எடுக்க அரசு தவறவிட்டதால், நகராட்சி தான் இதை செய்து கொடுக்க வேண்டும் என்று ஆணையர் மற்றும் செயற்பொறியாளரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    அதற்கு நகராட்சியில் போதுமான நிதி இல்லாததால் இதை செய்து கொடுக்க காலதாமதம் ஆகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும், சட்டமன்ற நிதியின் கீழ் இதை செய்து கொடுங்கள் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து இந்த முயற்சிக்கு ஆவண செய்யலாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரண் துணை அமைப்பாளர் ஆரோக்கியராஜ், தி.மு.க. பிரமுகர் அஷ்ரப், காந்தி, கணேசன், நிசார், பீட்டர், ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • இதில் எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 16, எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு 708 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு மாறுபடும்.

    புதுவை சட்டமன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள் ஆகியோர் வாக்களிப்பர். இதில் எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 16, எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு 708 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டமன்றத்தில் உள்ள கமிட்டி அறையில் நடக்கிறது. தேர்தலுக்கான வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி ஆகியவை டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், லட்சுமிகாந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் வாக்கு அதிகம் பெற்றிருந்தாலும், வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். இதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களில் முதல் விருப்பம், 2-ம் விருப்பம் என வாக்குப்பதிவு செய்யலாம்.

    வாக்குப்பதிவு முறை குறித்து விளக்குவதற்காக டெல்லியில் பா.ஜனதா சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்றார். அவர் இன்று பயிற்சியில் பங்கேற்றார். 

    இன்று இரவு டெல்லியிலிருந்து புறப்பட்டு புதுவைக்கு திரும்புகிறார். தேர்தலுக்கு முந்தைய நாளான 17-ந் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம் கூறுகிறார்.

    • சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர்.
    • நாளை (14-ந்தேதி) அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்துவரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா ஊரடங்கு காரணமாக, மாங்கனித்திருவிழா, கைலாசநாதர் கோவில் உள்ளேயே, பக்தர்கள் இன்றி மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 11-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. மாங்கனித்திருவிழாவின் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 11 மணிக்கு, காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அம்மையாரின் மாங்கனி அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவிழாவின் மூன்றாம் நாள் முக்கிய நிகழ்சியாக, இன்று (13-ந் தேதி)காலை 7 மணிக்கு பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு மற்றும் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரியே பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார்.

    அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொறுட்டு வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர். அந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை எடுத்துச் சென்றனர். பவளக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடி யார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை சென்றடைந்தது.

    அதன்பின்னர், பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் பெருமாள், துணைத் தலைவர் முரளி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    மாநில செயலாளர் அந்தோணி நோக்க உரையாற்றினார். கூட்டப்பாக்கத்தை சேர்ந்த மாணவர் விஷ்ணுக்குமார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

    மாணவர் விஷ்ணுகுமார் தற்கொலைக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் அனைதிந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் எரிக்ரம்போ, உதயராஜ், எழிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • வில்லியனூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் தென்கலை வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

    வில்லியனூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் தென்கலை வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    14 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கடந்த 9-ந் தேதி கருடசேவையும், 11-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன் குமார், சிவா எம்.எல்.ஏ., மற்றும் வில்லியனூர் பகுதி முக்கிய பிரமுகர்கள் கோவில் நிர்வாகிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    கோவிந்தா கோவிந்தா கோஷங்களுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே அன்னதானம் நடைபெற்றது.

    போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து 16-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 17-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற்று விழா நிறைவடைகிறது.

    கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த 2 ஆண்டுகளாக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இன்று நடந்த தேரோட்டத்தில் பக்தர்கள் உற்சாகமாக தேரை வடம்பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்தனர்.

    • வில்லியனூர் தொகுதியில நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தலைவர் சிவா மொபட்டிலேயே சுற்றி ஆய்வு செய்தார்.
    • திருக்காமீஸ்வரர் நகர், வீரவாஞ்சி நகர், தில்லை நகர், ஒதியம்பட்டு, கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதியில நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தலைவர் சிவா மொபட்டிலேயே சுற்றி ஆய்வு செய்தார்.

    அதன்படி வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் தொகுதி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆய்வுப்பணியை வில்லியனூர் வசந்த நகரில் தொடங்கி, திருக்காமீஸ்வரர் நகர், வீரவாஞ்சி நகர், தில்லை நகர், ஒதியம்பட்டு, கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் மேற்கொண்டார்.

    ஆய்வு பணியின்போது தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, விவசாய தொழிலாளர்கள் அணி செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி கலியமூர்த்தி, இளைஞரணி மணிகண்டன் மற்றும் ரமணன், தர்மராஜ், சாந்தி, திலகர், கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • காலாப்பட்டில் தலைமை ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகையை கொள்ளையடித்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
    • புதுவை பெரிய காலாப்பட்டு பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் பெனிடிக்பிரான்சிஸ் (வயது58).

    புதுச்சேரி:

    காலாப்பட்டில் தலைமை ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகையை கொள்ளையடித்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை பெரிய காலாப்பட்டு பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் பெனிடிக்பிரான்சிஸ் (வயது58). இவரது மனைவி விமலாஜெயசீலி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெரம்ப லூரில் வசித்து வருகிறார்.

    பெனிடிக்பிரான்சிஸ் மரக்காணத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விமலாஜெயசீலி கீழ்புத்துப்பட்டை அடுத்த செய்யாங்குப்பம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    சம்வத்தன்று இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றனர். பின்னர் பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.7 1/2 லட்சம் ஆகும். மர்மநபர்கள் பலநாள் நோட்டமிட்டு பட்டப்பகலில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பெனிடிக் பிரான்சிஸ் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருள் மணி ஆகியோர் தலைமை யிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    இந்தநிலையில் பிள்ளைச்சாவடியில் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் விழுப்புரம் கூனிமேடு குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த சுமன் என்ற ஸ்ரீமன் (27) என்பதும் தலைமை ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகையை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. மேலும் திருடப்பட்ட நகையில் 15 பவுனை புத்துப்பட்டு அய்யனார் கோவில் அருகே முட்புதரில் மறைத்து வைத்திருந்தார்.மேலும் 10 பவுனை மயிலாடுதுறையில் கடையில் விற்று அந்த பணத்தை செலவு செய்ததும் தெரியவந்தது. பின்னர் அந்த 25 பவுன் நகையை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 திருட்டு வழக்குகள் உள்பட 6 வழக்குகள் உள்ளது.

    • கட்டிட வேலை செய்த போது தொழிலாளி தவறி விழுந்து பலியானர்.
    • பண்ருட்டி அடுத்த சித்திரை சாவடியை சேர்ந்தவர் சிவ கணபதி (32) கட்டிடதொழிலாளி. இவர் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் 1 மகள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    கட்டிட வேலை செய்த போது தொழிலாளி தவறி விழுந்து பலியானர்.

    பண்ருட்டி அடுத்த சித்திரை சாவடியை சேர்ந்தவர் சிவ கணபதி (32) கட்டிடதொழிலாளி. இவர் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். இவர் புதுவை முத்தையால்பேட்டையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில்கட்டிட வேலைசெய்துவந்தார்.

    கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் மேல்குடிநீர் தொட்டியில் டைல்ஸ் ஒட்டும் பணி ஈடுபட்டிருந்தார்.

    அப்போது தவறி விழுந்தார் இதனால் படுகாயம் அடைந்த அவரை

    புதுவை அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிவகணபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து முத்தியால் பேட்டைபோலீசில் புகார்செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது.
    • இக்கோவில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

    புதுச்சேரி:

    பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது.

    பழமையான கோவில் இக்கோவில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

    இத்தகைய பழமையான கோவிலில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு 2 ஆண்டுக்கு பின் கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடந்தது.

    திருக்கல்யாணம் கடந்த 10-ந் தேதி பொதுமக்கள் சார்பில் மூலநாதர்-வேதாம்பிகை அம்மன் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 7.30 மணியளவில் தேரோட்டம் நடை பெற்றது.

    இந்து சமய அற–நிலையத்துறை ஆணையர் சிவசங்கர், செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    இந்த தேரினை பெரும்பாலான பெண்களே இழுத்து சென்று நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் கிராம மக்கள் காய், பழம், பூ, மிட்டாய் வீசினர். பின்னர் விளக்கு ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த தேர் பாகூர் மாட வீதிகள் வழியாக வலம் வந்து பின்னர் கோவிலை வந்தடைந்து. இதில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவல் குழு தலைவர் முத்துராமன், துணைத் தலைவர் சக்திவேல், செயலாளர் காத்தவராயன், பொருளாளர் பிரபு மற்றும் பாகூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • புதுவை ராக் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது.
    • புதுவை மாநிலத்தை சேர்ந்த 12 ஆண்கள் அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை ராக் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 12 ஆண்கள் அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக கோஜுரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன், மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் புதுவை குமார், பொது சேவை இயக்க மீனாட்சி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற ஏம்பலம் லிட்டில் ஸ்டார் பூப்பந்தாட்ட அணி, 2-ம் பரிசு பெற்ற புதுவை ரெயின்போ அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை வழங்கினார்கள். 3-ம் பரிசு பெற்ற ஏம்பலம் சன் பூப்பந்தாட்ட அணி 4-ம் பரிசு பெற்ற பூமியான் பேட்டை டாக்டர் அம்பேத்கார் பூப்பந்தாட்ட அணிக்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

    முடிவில் லிட்டில் ஸ்டார் பூப்பந்தாட்ட கழக செயலாளர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.

    • வில்லியனூர் அடுத்த ஊசுட்டேரி ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • பள்ளியின் தாளாளர் டாக்டர். சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த ஊசுட்டேரி ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

    பள்ளியின் தாளாளர் டாக்டர். சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். பள்ளி முதல்வர் சாந்திஜெயசுந்தர் முன்னிலை வகித்தார். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக போதைப்பொருள் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு வம்சீதர ரெட்டி, சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைப் பொருளால் இளைஞர்கள் எவ்வாறு பாதிப்படைகின்றனர் என்பது குறித்து பேசினர். கருத்தரங்கில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×