என் மலர்
நீங்கள் தேடியது "Delhi Training"
- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
- இதில் எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 16, எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு 708 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு மாறுபடும்.
புதுவை சட்டமன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள் ஆகியோர் வாக்களிப்பர். இதில் எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 16, எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு 708 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டமன்றத்தில் உள்ள கமிட்டி அறையில் நடக்கிறது. தேர்தலுக்கான வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி ஆகியவை டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், லட்சுமிகாந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் வாக்கு அதிகம் பெற்றிருந்தாலும், வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். இதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களில் முதல் விருப்பம், 2-ம் விருப்பம் என வாக்குப்பதிவு செய்யலாம்.
வாக்குப்பதிவு முறை குறித்து விளக்குவதற்காக டெல்லியில் பா.ஜனதா சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்றார். அவர் இன்று பயிற்சியில் பங்கேற்றார்.
இன்று இரவு டெல்லியிலிருந்து புறப்பட்டு புதுவைக்கு திரும்புகிறார். தேர்தலுக்கு முந்தைய நாளான 17-ந் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம் கூறுகிறார்.






