என் மலர்
புதுச்சேரி
- ஆரோவில் பவுண்டேஷனின் 60-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தமிழக கவர்னரும் ஆரோவில் சேர்மனுமான ஆர்.என். ரவி தலைமையில் நடந்தது.
- ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்த ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் ஆட்சி மன்றக்குழு செயலர் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ஆரோவில் பவுண்டேஷனின் 60-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தமிழக கவர்னரும் ஆரோவில் சேர்மனுமான ஆர்.என். ரவி தலைமையில் நடந்தது.
ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்த ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் ஆட்சி மன்றக்குழு செயலர் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆரோவில் பகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆரோவில் வளர்ச்சிதிட்ட பணிகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்ததுள்ள நிலையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து ஆரோவில்லில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் ஆய்வு செய்த நிலையில் ஆரோவில் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடந்தது.
- 13-ந்தேதி பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
- 14-ந்தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழா நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. முன்னதாக, பரமதத்த செட்டியார் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து நேற்று மாலை மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக புறப்பட்டு இரவு காரைக்கால் அம்மையார் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய நிகழ்ச்சியாக 12-ந்தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், அன்று மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர்(சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 13-ந் தேதி பிச்சாண்ட மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், அதேசமயம், பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகளை, காரைக்கால் கைலாசநாதர் கோவில் அறங்காவல் வாரிய த்தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பி-னர் ஜெயபாரதி ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
- எங்கள் கூட்டணியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்.
- நாராயணசாமி வயிற்றெரிச்சலில், பொறாமையில் தொடர்ந்து இதுபோல பேசி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு துறையிலும் 2 மாதம் ஒரு முறை ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறேன். போலீஸ் துறையில் நடந்த ஆய்வில் நகரில் பெருகிவரும் நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சட்ட-ஒழுங்கு, போதைப்பொருள் விற்பனை தடுப்பு, தொடர் குற்றவாளிகளை கண்காணித்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கந்து வட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் கவர்னரை சந்தித்து அரசின் திட்டங்கள் மக்களை உடனடியாக சென்றடைய வேண்டும். துறை சார்ந்த கோப்புகளுக்கு அனுமதி, இலவச அரிசி வழங்குவது போன்ற திட்டங்களை ஆலோசனை செய்ய சென்றோம். எங்களுக்குள்ளோ, முதல்-அமைச்சருடனோ, கூட்டணியிலோ எந்த குழப்பமும் இல்லை.
எங்கள் கூட்டணியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார். முதலில் அவர் கட்சியில் அவருக்குள்ள பிரச்சினையை பார்க்க வேண்டும். அந்த கட்சியினரே அவர் கட்சி நடவடிக்கையில் தலையிடக்கூடாது என புகார் தெரிவித்து வருகின்றனர்.
அவர் முதலில் அவர் கட்சியை பார்க்கட்டும், எங்கள் கூட்டணியில் மூக்கை நுழைக்க வேண்டும். இந்த அரசு மக்கள் நலத்திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது.
இந்த வயிற்றெரிச்சலில், பொறாமையில் தொடர்ந்து அவர் இதுபோல பேசி வருகிறார். அரசியலில் நானும் உள்ளேன் என தெரியப்படுத்த, எங்கள் அரசின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்.
இது அவரின் அனுபவத்துக்கும், வயதுக்கும் அழகல்ல. அவர் இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.
- கடை முன் பிளாஸ்டிக் விரிப்பை விரித்து, கவிழ்ந்து படுத்து கொண்டு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றினார்.
- சைடிஷ் வைத்துக்கொண்டு ஜாலியாக படுத்துக் கொண்டே மது அருந்தினார்.
புதுச்சேரி:
புதுவையில் ஞாயிற்றுக்கிழமை என்றால் மிக கொண்டாட்டம்தான்.
வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுவையில் அதிகமாக குவிவது வழக்கம். புதுவையில் கிடைக்கும் விதவிதமான மதுவை வாங்கி அருந்துவர். இதுபோல மதுவுக்கு ஆசைப்பட்டு ஒருவர் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட், பெல்ட், தொப்பி, கண் கண்ணாடி அணிந்து வந்திருந்தார். பரபரப்பான மிஷன் வீதியில் காலணி தைக்கும் கடை விடுமுறை என்பதால் மூடி இருந்தது.
அதன் முன் பிளாஸ்டிக் விரிப்பை விரித்து, கவிழ்ந்து படுத்து கொண்டு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றினார். சைடிஷ் வைத்துக்கொண்டு ஜாலியாக படுத்துக் கொண்டே மது அருந்தினார். பரபரப்பாக காணப்படும் வீதியை பற்றி கவலையின்றி தனக்குள்ளே பேசி கொண்டு அவர் மது குடிப்பதை அவ்வழியே சென்ற ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சின்ன மணிக்கூண்டு அருகே நடந்தது
- கூட்டத்துக்கு பழனிராஜா முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சின்ன மணிக்கூண்டு அருகே நடந்தது.
கூட்டத்துக்கு பழனிராஜா முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ்காந்தி, தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ.,க்கள் கென்னடி, சம்பத், செந்தில் குமார், மற்றும் சுப்புராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ., பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் தி.மு.க. அதிக இடங்கள் கேட்டு வெற்றி பெறும். பா.ஜனதா சார்பில் மாதம் 5 மத்திய மந்திரிகள் புதுவைக்கு வருகின்றனர். 6 மாதத்துக்கு ஒரு முறை உள்துறை மந்திரி அமித்ஷா வருகிறார். 2 முறை மோடி வந்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிட அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகள், பல்வேறு வாக்குறுதிகளை அளித்த னர். ஆனால் எதையும் செயல்படுத்த வில்லை. தி.மு.க. ஆட்சியில் அனைத்து பஞ்சாலைகளையும் திறந்து வேலைவாய்ப்பு அளித்தது. இன்று பஞ்சாலைகளை மூடி அரசாணை வெளியிடுகின்றனர்.
மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி அளித்துள்ளதாக மத்திய மந்திரி முருகன் கூறியது உண்மையில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு கொடுத்த நிதியை விட குறைவாகவே அளித்தனர். இந்த ஆண்டு ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதாக கூறுகின்றனர். அரசிடம் எந்த வருவாயம் இல்லாமல் எப்படி பட்ஜெட் தாக்கல் செய்வார்கள்?
இந்த பட்ஜெட் மிக மோசமான பட்ஜெட்டாக இருக்கும். தமிழகத்தில் ரத்தின கம்பளம் விரித்து தொழிற்சாலைகளை வரவேற்கின்றனர், பல்வேறு தொழில் கொள்கை தருகின்றனர். புதுவையில் என்ன தொழில் கொள்கை உள்ளது? மத்திய அரசு நினைத்தால் புதுவையை செல்வ செழிப்பாக மாற்ற முடியும்.
ஆனால் மத்திய அரசு 10 பைசா கூட தரவில்லை, தொழிற்சாலைகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, மிரட்டி புதுவை மாநில அரசாங்கத்தை பணிய வைக்கும் நிலை உருவாகியுள்ளது.
புதுவையை காப்பாற்ற, தொழிற்சாலைகளை கொண்டு வர, வேலை வாய்ப்புகளை உருவாக்க தமிழகம்போல புதுவையிலும் நல்லாட்சி அமைக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுகூட்டத்தில் திமுக பொறுப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன் மற்றும் துணை அமைப்பாளர்கள் வழக்கீல் செந்தில்குமார், சண்.குமரவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், தி.மு.க. மக்கள் சேவை மையம் மதன்பாபு, தி.மு.க நிர்வாகிகள் கணேசன், செல்வம், ரவி, பலராமன், கலைவாணி, சிவக்குமார், தனசேகர், லோகநாதன், கோபிநாத், செந்தில்முருகன், மதன்பாபு, நவீன், பிரபாகரன் எழிலன், மூர்த்தி, சந்துரு, ரெமோ, அல்போன்ஸ், பிரபாகரன், மோகன், ராஜ்குமார், சண்முகம், இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உதயநிதி ஸ்டாலின் மன்றம் மாநில தலைவர் உத்தமன் நன்றி கூறினார்.
- புதுவையில் சர்க்கிள் ஸ்போர்டிப் சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி 3 நாட்கள் அண்ணா திடல் உள் விளையாட்ட ரங்கில் நடந்தது.
- அனைத்து வயதினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி:
புதுவையில் சர்க்கிள் ஸ்போர்டிப் சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி 3 நாட்கள் அண்ணா திடல் உள் விளையாட்ட ரங்கில் நடந்தது. அனைத்து வயதினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- புதுவை அரசு பிப்மேட் மூலம் 5 தொழில்நுட்ப கல்லூரிகளை இயக்கி வருகிறது.
- புதுவை லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனா பரவலால் மாணவிகள் சேர்க்கை குறைந்தது.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு பிப்மேட் மூலம் 5 தொழில்நுட்ப கல்லூரிகளை இயக்கி வருகிறது. இதில் புதுவை லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் கொரோனா பரவலால் மாணவிகள் சேர்க்கை குறைந்தது. இதை காரணம் காட்டி கல்லூரியை மூடி பொறியியல் கல்லூரியாக மாற்ற அரசு முயற்சிக்கிறது.
இந்த ஆண்டு மாணவிகள் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது. இது தவறான முடிவாகும். கொரோனா பரவல், மாணவர் பஸ் நிறுத்தம் போன்ற காரணத்தால் மாணவிகள் சேர்க்கை குறைந்துள்ளது. மக்கள் தொகை குறைவாக உள்ள மாகி, ஏனாம், காரைக்காலில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
23 தொகுதிகளை உள்ளடக்கிய புதுவையில் மாணவி களின் தொழில்கல்விக்கு ஒரே கல்லூரிதான் உள்ளது. இதையும் மூட நினைப்பது மிகவும் வேதனைக்குரியது. எனவே மகளிர் தொழில்நுட்ப கல்லூரியை தொடர்ந்து தடையின்றி அரசு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை மின்துறை தனியார்மய எதிர்ப்பு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சுதேசி மில் அருகே தர்ணா போராட்டம் நடந்தது.
- தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மின்துறை தனியார்மய எதிர்ப்பு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சுதேசி மில் அருகே தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமதாசன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. அபிஷேகம், சேதுசெல்வம், ஐ.என்.டி.யூ.சி. சொக்கலிங்கம், ஞானசேகரன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. பழனி, ஆறுமுகம், சி.ஐ.டி.யூ. சீனுவாசன், முருகன், பெருமாள், எல்.எல்.எப். செந்தில், மனீத், கோவிந்தராஜ், எம்.எல்.எப். வேதாவேணுகோபால், அரசு ஊழியர் சம்மேளனம் ராதாகிருஷ்ணன், மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு ஆலோசகர் ராமசாமி, தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணில் கறுப்புத்துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில், புதுவை மின்துறையை தனியார்மயாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
- புதுவை ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 23-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
- கால்நடை மருத்துவக்கல்லூரியை ரிவர் என அழைக்கின்றனர். ஆறுபோல செழிப்பை தரக்கூடிய நிறுவனமாக உள்ளது.
புதுச்சேரி:
புதுவை ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 23-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். கல்லூரி டீன் செழியன் வரவேற்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி 52 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
கால்நடை மருத்துவக்கல்லூரியை ரிவர் என அழைக்கின்றனர். ஆறுபோல செழிப்பை தரக்கூடிய நிறுவனமாக உள்ளது. இங்குள்ள மாண வர்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பணியாற்றி கல்லூரிக்கு பெருமை சேர்க்கின்றனர்.
கல்லூரி தொடங்கி இதுவரை ஆயிரத்து 100 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். இங்கு படித்த மாணவர்களில் 93 சதவீதத்தினருக்கு வேலை கிடைத்துள்ளது. 1994-ம் ஆண்டு நான் விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சராக இருந்தபோது கல்லூரியை தொடங்க எண்ணி டெல்லியில் அனுமதி கேட்டேன். அப்போது தமிழகத்தில் ஏற்கனவே ஒரு கால்நடை மருத்துவக்கல்லூரி இருந்தது. மற்றொரு மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கோரியிருந்தனர்.
இதனால் டெல்லியில் பெரியமாநிலமான தமிழகத்துக்கு 2-வது கல்லூரிக்கே இப்போதுதான் அனுமதி கேட்கின்றனர். கல்லூரிக்கு தேவையான வசதி செய்ய முடியுமா? என கேட்டனர். நிலம், வசதிகளை செய்து கொடுத்தோம். கடந்தகாலத்தில் எளிமையாக அனைத்தையும் செய்ய முடிந்தது.
தற்போது நிர்வாகத்தில் சிரமம் உள்ளது. கல்லூரி தொடங்கும்போது இயக்குனர் கிடைப்பதே கடினமாக இருந்தது. ஆனால் இந்த கல்லூரியில் படித்தவரே இயக்குனராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த காலத்தில் இயக்குனராக இருந்தவர்களும் கல்லூரி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ள னர். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
ஆசியாவிலேயே மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இந்த கல்லூரி உள்ளது. இன்னும் இந்த கல்லூரியின் தரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
முதுகலை பட்டம் கூடுதலாக 5 பாடப்பிரிவுகளில் தொடங்கவேண்டும் என கேட்டுள்ளனர். ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கவும் கேட்டுள்ளனர். மருத்துவத்தில் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் வருகிறது. புதிய நோய்களும் வருகிறது, புதிய கண்டுபிடிப்புகளும் நடக்கிறது. எனவே ஆராய்ச்சி அவசியமானதாக உள்ளது.
தற்போது 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதை 150 ஆக உயர்த்த உள்ளோம். இதற்கான கட்டிட வசதி தேவைப்படுகிறது. இதற்கு உரிய நிதி ஒதுக்கி செய்து தருவோம். கால்நடை படிப்பு மிகவும் கடினமான படிப்பு. எம்.பி.பி.எஸ். படிப்பை விட கடினமாக உள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். படித்தவர்கள் வாயில்லா ஜீவன்களுக்கு மருத்துவம் செய்வது பெரும் புண்ணியம்.
இங்கு பட்டம் பெறும் மாணவர்கள் குடும்ப நிலையையும் உயர்த்துகின்றனர். அவர்கள் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார், கென்னடி எம்.எல்.ஏ., பெங்களூரு தேசிய கால்நடை உணவியல் மற்றும் உடலியல் நிறுவன இயக்குனர் ராகவேந்திரபட்டா, கால்நடைத்துறை செயலர் ரவிபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- மனைவி குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் 38. ஆட்டோ டிரைவர்.
புதுச்சேரி:
மனைவி குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவை பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் 38. ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி பச்சைவாழி மகள் லட்சுமி தேவி மகன் ஆகாஷ் ஆகியோருடன் அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் தபால்காரர் வீதி செட்டிக்குளம் அருகே தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
தியாகராஜனுக்கு கடன் தொல்லை இருந்தது கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பி கேட்டு தியாகராஜனுக்கு நெருக்கடி கொடுத்துவந்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த தியாகராஜன் தனது மனைவி, குழந்தைகளை விஷம் வைத்து கொண்டு விட்டு தியாகராஜனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தியாகராஜன் தற்கொலை செய்து கொள்வதற்க்கு முன்பு ஆடியோ ஒன்று வெளியிட்டது தெரியவந்தது. தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் தற்கொலைக்கு 3 பேர் காரணம் என தற்கொலை செய்து கொண்ட தியாகராஜ னின் ஆடியோ பதிவு வாக்குமூலத்தை அவரது அண்ணன் பூரணாங்குப்பம் மதியழகன் (வயது38) அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்தார்.
கடன் கொடுத்தவர்கள் பல்வேறு தகாத வார்த்தைகளால் திட்டி போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவு வெளியானதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த ஏலச்சீட்டு நடத்திவரும் டெய்லர் ராமச்சந்திரன் (வயது40). தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டிக் கொண்டு ஏலசீட்டு நடத்தி வரும் முத்து (வயது45). தவளக்குப்பத்தை அடுத்த தானாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்தோஷ்குமார் (வயது38) ஆகியோரை அரியாங்கு ப்பம் போலீசார் கைது செய்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
- புதுவையில் 804 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- இதில் புதுவையில் 45, காரைக்காலில் 6, ஏனாமில் 3 பேர் என புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் 804 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 45, காரைக்காலில் 6, ஏனாமில் 3 பேர் என புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 4, காரைக்காலில் 1, ஏனாம் 3, மாகியில் ஒருவர் என 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 691, காரைக்காலில் 119, ஏனாமில் 23, மாகியில் ஒருவர் என 834 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவையில் 6, காரைக்கா லில் 29, ஏனாமில் 7 பேர் என 42 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 56 ஆயிரத்து 183 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- கோவில் உள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேதராப்பட்டு:
புதுவை குருமாம்பேட் பாண்லே பால் பண்ணை அருகே உள்ள தமிழக பகுதியான பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு கோவிலைக் கட்டி வந்தார்.
27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு இதற்கு பத்துமலை முருகன் கோவில் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்கிடையில் கோவில் உள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை இருந்தது.
இதுகுறித்து கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்ட போது இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர்.
ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்கவில்லை என்று கூறினர். பின்னர் கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்த பொழுது அவர் அறை முழுவதும் நித்யானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும் நித்யானந்தா புகைப்படத்தை ஓவியமாக தீட்டி வைத்திருப்பதும் என நிறைய புகைப்படங்கள் இருந்தது. ஏற்கனவே நித்யானந்தா படங்களை வைத்து அவர் பூஜித்து வந்ததும் தெரியவந்தது. பாதுகாப்பு பணிக்கு வந்த ஆரோவில் போலீசார் நித்யானந்தா சிலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
ஒரு சில பக்தர்கள் அந்த சிலையின் முன்னாடி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கும்பாபிஷேக அழைப்பிதழில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர் கே.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து பங்கேற்பார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கூறினர்.
நித்யானந்தா சீடர் முருகன் கோவில் கட்டி அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






