என் மலர்
நீங்கள் தேடியது "carrying out tasks"
- புதுவை ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 23-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.
- கால்நடை மருத்துவக்கல்லூரியை ரிவர் என அழைக்கின்றனர். ஆறுபோல செழிப்பை தரக்கூடிய நிறுவனமாக உள்ளது.
புதுச்சேரி:
புதுவை ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 23-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். கல்லூரி டீன் செழியன் வரவேற்றார். முதல்-அமைச்சர் ரங்கசாமி 52 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
கால்நடை மருத்துவக்கல்லூரியை ரிவர் என அழைக்கின்றனர். ஆறுபோல செழிப்பை தரக்கூடிய நிறுவனமாக உள்ளது. இங்குள்ள மாண வர்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பணியாற்றி கல்லூரிக்கு பெருமை சேர்க்கின்றனர்.
கல்லூரி தொடங்கி இதுவரை ஆயிரத்து 100 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். இங்கு படித்த மாணவர்களில் 93 சதவீதத்தினருக்கு வேலை கிடைத்துள்ளது. 1994-ம் ஆண்டு நான் விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சராக இருந்தபோது கல்லூரியை தொடங்க எண்ணி டெல்லியில் அனுமதி கேட்டேன். அப்போது தமிழகத்தில் ஏற்கனவே ஒரு கால்நடை மருத்துவக்கல்லூரி இருந்தது. மற்றொரு மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கோரியிருந்தனர்.
இதனால் டெல்லியில் பெரியமாநிலமான தமிழகத்துக்கு 2-வது கல்லூரிக்கே இப்போதுதான் அனுமதி கேட்கின்றனர். கல்லூரிக்கு தேவையான வசதி செய்ய முடியுமா? என கேட்டனர். நிலம், வசதிகளை செய்து கொடுத்தோம். கடந்தகாலத்தில் எளிமையாக அனைத்தையும் செய்ய முடிந்தது.
தற்போது நிர்வாகத்தில் சிரமம் உள்ளது. கல்லூரி தொடங்கும்போது இயக்குனர் கிடைப்பதே கடினமாக இருந்தது. ஆனால் இந்த கல்லூரியில் படித்தவரே இயக்குனராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த காலத்தில் இயக்குனராக இருந்தவர்களும் கல்லூரி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ள னர். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
ஆசியாவிலேயே மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இந்த கல்லூரி உள்ளது. இன்னும் இந்த கல்லூரியின் தரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
முதுகலை பட்டம் கூடுதலாக 5 பாடப்பிரிவுகளில் தொடங்கவேண்டும் என கேட்டுள்ளனர். ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கவும் கேட்டுள்ளனர். மருத்துவத்தில் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் வருகிறது. புதிய நோய்களும் வருகிறது, புதிய கண்டுபிடிப்புகளும் நடக்கிறது. எனவே ஆராய்ச்சி அவசியமானதாக உள்ளது.
தற்போது 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதை 150 ஆக உயர்த்த உள்ளோம். இதற்கான கட்டிட வசதி தேவைப்படுகிறது. இதற்கு உரிய நிதி ஒதுக்கி செய்து தருவோம். கால்நடை படிப்பு மிகவும் கடினமான படிப்பு. எம்.பி.பி.எஸ். படிப்பை விட கடினமாக உள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். படித்தவர்கள் வாயில்லா ஜீவன்களுக்கு மருத்துவம் செய்வது பெரும் புண்ணியம்.
இங்கு பட்டம் பெறும் மாணவர்கள் குடும்ப நிலையையும் உயர்த்துகின்றனர். அவர்கள் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார், கென்னடி எம்.எல்.ஏ., பெங்களூரு தேசிய கால்நடை உணவியல் மற்றும் உடலியல் நிறுவன இயக்குனர் ராகவேந்திரபட்டா, கால்நடைத்துறை செயலர் ரவிபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






