என் மலர்
புதுச்சேரி
- மெகா வேலை வாய்ப்பு முகாம் உப்பளம் இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
- இதில் 40-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
புதுச்சேரி:
அம்மா அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி டிவைன் சிட்டி ஆகியவை சார்பில் இளைஞர்கள் பயன் பெரும் வகையில் மெகா வேலை வாய்ப்பு முகாம் உப்பளம் இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் 40-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில அ.தி.மு.க. செயலாளர் நடராசன் ,கிழக்கு மாநில ஜெ. பேரவை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர், கிழக்கு மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாகமணி, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுவை மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், புதுவை நகர செயலாளர் அன்பழக உடையார், மாநில அண்ணா தொழிற்ச்சங்க செயலாளர் பாப்புசாமி, கிழக்கு மாநில செயலாளர் ஞானவேல், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.
- புதுவை மாநிலத்தில் நேற்று 1603 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
- இதில் 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று 1603 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 109 பேர் புதுவையை சேர்ந்தவர்கள், காரைக்காலில் 18 பேரும்,ஏனாமில் 2 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகியில் தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை. தற்போது 10 பேர் மருத்துவமனையிலும், 821 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டு மொத்தமாக 831 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
புதுவையில் நாள்தோறும் படிப்படியாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. இன்று 83 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதில் 82 பேர் புதுவையையும், ஒருவர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
புதுவையில் இதுவரை 1 லட்சத்து 67 ஆயிரத்து 660 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 867 பேர் குணமடைந்துள்ளனர். 1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். புதுவை மாநிலத்தில் இதுவரை 17 லட்சத்து 56 ஆயிரத்து 53 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர் தொகுதி 28-வது மாநாடு நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மாநாட்டு கொடி ஏற்றி வைத்து பேசினார்.
- இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் சலீம் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர் தொகுதி 28-வது மாநாடு நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மாநாட்டு கொடி ஏற்றி வைத்து பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் சலீம் மாநாட்டை தொடங்கி வைத்தார். பாகூர் தொகுதி குழு உறுப்பினர் விஜயபாலன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தொகுதி செயலாளர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார்.
தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர்கள் அமுதா பெருமாள், தொகுதி பொருளாளர் ராஜா, தசரதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். துணைச் செயலாளர் தாமோதரன் நன்றி கூறினார். மாநாட்டில் உள்ளாச்சி தேர்தலில் போட்டியிடுவது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஓட்டு வங்கியை கூடுதலாக்குவது, விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவது தடுத்திட வேண்டும்.
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சமுதாய நலவழி மையமாக தரம் உயர்த்திட வேண்டும். கொம்யூன் அளவிலான தலைமை நூலகம் அமைக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை திறந்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மீன்வளர்ப்போர் தின விழா கம்பன் கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது
- அமைச்சர் லட்சுமிநாராயணன் விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:
அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகாமை ஆகியவை சார்பில் தேசிய மீன்வளர்ப்போர் தின விழா கம்பன் கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
அமைச்சர் லட்சுமிநாராயணன் விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு சொந்தமான பாகூரில் அமைந்துள்ள மீன் குஞ்சு வளர்ப்பு மையத்தில் சீர்காழியில் அமைந்துள்ள மத்திய அரசின் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் மூலம் திலேப்பியா மீன் பொரிப்பகம் அமைப்பதற்க்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.
தொடர்ந்து, நன்னீர் மீன்வளர்ப்போரை ஊக்குவிக்கும் பொருட்டு சுமார் 20 மீன்வளர்ப்போருக்கு நன்னீரில் வளரக்கூடிய கொடுவா மற்றும் திலேபியா மீன் குஞ்சுகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்.
முருங்கப்பாக்கம் மற்றும் தேங்காய்த்திட்டு சதுப்பு நிலக்காடுகளில் கல்நண்டு உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு சுமார் 1500 கல்நண்டு குஞ்சுகள் விடப்பட்டது. மேலும், உள்நாட்டு மீன்வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் மத்திய அரசின் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் பற்றி விளக்கப்பட்டது.
இதில் செல்வகணபதி எம்.பி, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. , அரசுச் செயலர்கள் நெடுஞ்செழியன், ராகவன், மீன்வளத்துறை இயக்குநர் பாலாஜி, இணை இயக்குநர் தெய்வசிகாமணி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீன்வளர்ப்போர்கள் பங்குபெற்றனர். விழா ஏற்பாடுகளை துணை இயக்குநர கோவிந்த சாமி செய்திருந்தார்.
- சிலுக்காரிப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் புதியதாக 3-ம் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
- திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் பங்கேற்று புதியதாக அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையினை திறந்து வைத்தார்
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட்பட்ட சிலுக்காரிப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் புதியதாக 3-ம் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் பங்கேற்று புதியதாக அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுவை அரசு பள்ளி கல்வித்துறையின் துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவழகன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியை மாணவ-மாணவிகள் மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
- கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் நேஷனல் கோச்சிங் கேம்ப் தொடக்க விழா நடந்தது.
- எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், அனிபால் கென்னடி, பெத்தி செமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் 19 வயதுக்குட்பட்ட சிறப்பு விளையாட்டு வீரர்களுக்கான வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் நேஷனல் கோச்சிங் கேம்ப் தொடக்க விழா நடந்தது.
எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், அனிபால் கென்னடி, பெத்தி செமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். இதில் புதுவை, தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, குஜராத், சட்டீஸ்கர், டெல்லி, கேரளா, அரியானா, கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 17 மாநிலங்களிலிருந்து 250 ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
5 நாட்கள் நடக்கும் போட்டியில், 15 விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 2023-ல் ஜெர்மனி நாட்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த முகாமில் விளையாட்டு வீரர்கள் , பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சனா
- ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்
புதுச்சேரி:
புதுவை கடற்கரைக்கு சுற்றுலா வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சனா (வயது24). இவர் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.
கடந்த 7-ந் தேதி சஞ்சனா தனது தோழிகளுடன் புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவை காந்தி ரோட்டில் ஒரு தனியார் விடுதியில் தங்கிய அவர்கள் நவநாகரீக உடை அணிந்து கடற்கரையை சுற்றி பார்க்க சென்றனர். டூப்ளக்ஸ் சிலை அருகே அவர்கள் நின்று கடல் அழகை ரசித்துக்கொண்டிருந்த போது ஒருவர் சஞ்சனாவின் உடல் அழகை வர்ணித்து கிண்டல் செய்தார்.
மேலும் சஞ்சனாவின் உடலின் பல இடங்களை தொட்டு சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சனா மற்றும் அவரது தோழிகள் அலறல் சத்தம் போட்டனர். இதையடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டவர் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதைத்தொடர்ந்து சஞ்சனா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். அவர் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்த மூர்த்தி(வயது59) என்பதும் இவர் புதுவை கடற்கரை சாலையில் யாசகம் எடுத்து ஜீவனம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
- வம்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர்
- சுதாகர் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து வந்தார்
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அருகே கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருமாம்பாக்கம் அருகே வம்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது45). கூலி தொழிலாளி. இவருக்கு சத்யா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
மது குடிக்கும் பழக்க முள்ள சுதாகர் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து வந்தார். இதனால் சத்யா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
இதற்கிடையே அதிக குடி பழக்கத்தினால் சுதாகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு உடல் மெலிந்து போனதால் மன உளைச்சலில் இருந்து வந்தார். அடிக்கடி குடும்பத்தி னரிடம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வந்தார்.
இந்த நிலையில் வழக்கம் போல் சத்யா வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகளும் விளையாட சென்றிருந்த நேரத்தில் மனமுடைந்த சுதாகர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி சத்யா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தவளக்குப்பம் நல்லவாடு ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது57). கூலி தொழிலாளி. இவருக்கு கவுரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். செல்வராஜ் அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கமுடையவர்.
அதுபோல் காசான்திட்டு சாராயக்கடைக்கு செல்வராஜ் சாராயம் குடிக்க சென்றார். அப்போது அளவுக்கு அதிமாக சாராயம் குடித்ததால் செல்வராஜ் சாராயக்கடை அருகிலேயே இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் உத்திரபாலன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வில்லியனூரில் நரிக்குறவர்களுடன் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகள் வழங்கி குறைகளை கேட்டறிந்தார்.
- வில்லியனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆயுஷ்மான் மருத்துவமனையை பார்வையிட்டு பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார்.
புதுச்சேரி:
புதுவையில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய மந்திரி முருகன், வில்லியனூர் கூடப்பாக்கம் சாலையில் வசிக்கும் நரிக்குறவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது, நரிக்குறவர்கள் மனைப்பட்டா வழங்கி, அடிப்படை வசதி செய்து தரக்கோரினர். அவர்களிடம், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி கூறினார்.
அதனை தொடர்ந்து வில்லியனூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆயுஷ்மான் மருத்துவமனையை பார்வையிட்டு பணிகள் குறித்து விபரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆயுர்வேத மருத்துவத்துறை இயக்குனர் ஜெயந்தி, மருத்துவமனை இந்த ஆண்டு இறுதிக்குள் திறப்பு விழா நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் மோகன்குமார், மாவட்டத் தலைவர் ஆனந்தன், தொகுதி பொறுப்பாளர்கள் கண்ணபிரான், செந்தில்குமரன், மாவட்ட துணைத் தலைவர் விஜயலட்சுமி கலந்துகொண்டனர்.
- கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்தவும், கட்சியை மீண்டும் வலுப்படுத்தவும் டெல்லி தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- புதுவை மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை மாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
புதுச்சேரி:
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை புதுவை அரசியலில் இருந்து விலக்க வேண்டும், மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என மேலிட பொறுப்பாளர் குண்டுராவிடம் நேரில் வலியுறுத்துவதற்காக புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் பெங்களூர் விரைந்துள்ளனர்.
புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் விரக்தி மனநிலைக்கு சென்றனர். இதை தொடர்ந்து கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்தவும், கட்சியை மீண்டும் வலுப்படுத்தவும் டெல்லி தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை புதிய பொலிவோடு வளர்த்தெடுக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை மாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த கோரிக்கையை டெல்லி தலைமையிடம் அவர்கள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோரின் ஆதரவாளர்கள் இந்த கோரிக்கையை கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை சந்தித்து நேரில் வலியுறுத்துவதற்காக பெங்களூர் சென்றுள்ளனர்.
அவர்கள் இன்று தினேஷ் குண்டுராவை சந்தித்து புதுவை அரசியல் நிலவரம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிலவரம் குறித்து விளக்கம் அளிப்பார்கள் என தெரிகிறது.
- ஊழியர்களுக்கு குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படாமலும் உள்ளது.
- தற்போதைய நிலவரப்படி 4 மாத ஊழியம் நிலுவையில் உள்ளது
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்க சாமிக்கு முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., சம்பத் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை நகராட்சிக்கு போதிய வருவாய் இல்லாததால் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலும் ஊழியர்களுக்கு குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படாமலும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 4 மாத ஊழியம் நிலுவையில் உள்ளது.
அதேபோல் ஓய்வூதியம், ஊழியர்கள் பணி நிறைவின்போது கொடுக்கப்படும் ஓய்வு பலன்கள் என எதையும் செய்ய இயலாத நிலையில் புதுவை நகராட்சி உள்ளது. இன்றைய நிலவரப்படி புதுவை நகராட்சி 44.69 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்காமல் ஊழியருக்கு நிலுவை வைத்துள்ளது.
புதுவை நகராட்சியின் ஆணையர், துணை ஆணையர், முதுநிலை கணக்கு அதிகாரி மற்றும் சுகாதார அதிகாரி ஆகிய முக்கிய பணியில் உள்ளவர்களுக்கு மட்டும் அரசு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. பிற ஊழியர்களுக்கு நகராட்சி மூலம் பெறப்படும் நிதி ஆதாரத்தைக் கொண்டு ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
முக்கிய அதிகாரிகளுக்கு தங்கு தடையின்றி அரசு ஊதியம் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருவதால் இவர்களுக்கு நகராட்சியின் வருவாய் இழப்பை பற்றி எந்த கவலையும் இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கும் நகராட்சி மூலமே ஊதியம் பெற வேண்டும் என்ற நிலை இருந்திருந்தால் வருவாய் பெருக்க அக்கறை காட்டி இருப்பார்கள். நகராட்சிக்கு வருவாயை உருவாக்கக்கூடிய முக்கிய பதவியான வருவாய் அதிகாரி 1-ல் ஓய்வு பெற்ற 68 வயதான நபரை நியமிக்க வேண்டிய கட்டாயம் என்ன?.
நகராட்சி ஊழியர்களுக்கு ஊழியம் சரியான நேரத்தில் வழங்கப்பட்டால் மட்டுமே அவர்கள் சிறப்பாக பணியாற்றி நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள இயலும். எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்த குளறுபடிகளை களைந்து நகராட்சி ஊழியர்கள் சம்பளம் தங்கு தடை இன்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும் இணைந்து வன மகோற்சவம் விழாவினை நடத்தியது.
- மரங்களின் பயன்பாடு குறித்தும் அதை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும் பேசினார்
புதுச்சேரி:
மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியும், புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும் இணைந்து வன மகோற்சவம் விழாவினை நடத்தியது.
ஆசிரியர் சசிக்குமார் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி விழாவிற்கு தலைமை தாங்கி வனம் மற்றும் மரங்களின் பயன்பாடு குறித்தும் அதை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும் பேசினார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் ஒருங்கிணைப்பாளர் நித்யா சிறப்புரையாற்றினார்.பள்ளி ஆசிரியர்கள் சுமதி ராகவன், ஜெயசுந்தர், பாவாடைசாமி, பாலிவிஜய், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
இறுதியாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தென்னரசு, வினோத், சதீஷ், வெங்கடேசன், செல்வபிருந்தா ஆகியோர் செய்திருந்தனர்.






