என் மலர்
புதுச்சேரி
- ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்
- சோனியா காந்தி நகர் ஆதிகேசவன்
புதுச்சேரி:
வேலை தேடி வந்த வடமாநில வாலிபரை குடிபோதையில் தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் (வயது22). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலை தேடி புதுவை வந்தார். பின்னர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சோனியா காந்தி நகர் ஆதிகேசவன் தெரு ஒரு குடியிருப்பில் தங்கியிருக்கும் தனது ஊரை சேர்ந்தவர்களின் வீட்டில் இருந்து வந்தார்.
அசோக் தான் தங்கியிருந்த வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது குடிபோதையில் வந்த 4 பேர் கும்பல் அசோக்கிடம் ஏதோ கேட்டனர். ஆனால் அசோக்குக்கு பாஷை புரியவில்லை என்பதால் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அங்கு கிடந்த கருங்கற்களை எடுத்து அசோக்கின் தலையில் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த காயம் ஏற்பட்டு அசோக் அலறல் சத்தம் போடவே அவரது ஊர்காரர்கள் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம டைந்த அசோக் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்திரையர்பாளையம் செந்தில்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி குணாவதி. கட்டிட தொழிலாளி. இவர் தான் புதிதாக கட்டி வரும் வீட்டில் மணல் கொட்டி நிரப்பியிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவர் தாயார் புஷ்பா அவரது வீட்டு பாத்திரங்களை எடுத்து வந்து குணாவதியின் வீட்டில் வைத்தார். இதையடுத்து குணாவதி தட்டிக்கேட்ட போது புஷ்பாவின் மகன் ராஜாமணி தகாத வார்த்தைகளால் திட்டி குணாவதியை கையால் தாக்கினார். உடனே அங்கிருந்தவர்கள் இதனை தடுக்கவே ராஜாமணி அங்கி ருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து குணாவதி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மூலக்குளம் களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்
- செடிகள் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்
புதுச்சேரி:
ரெட்டியார்பாளையம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ரெட்டியார்பாளையம் அருகே மூலக்குளம் களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது60). இவர் செடிகள் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு அன்பழகி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கமுள்ள மோகன் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து விட்டு குடிபோதையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பது வழக்கம். இதனை குடும்பத்தினர் கண்டித்த போது இந்த பழக்கத்தை மோகன் கைவிடவில்லை.
இந்த நிலையில் மோகன் மது குடித்து விட்டு மயங்கிய நிலையில் மேரி உழவர்கரை குண்டு சாலையில் விழுந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது மகன் பொன்னியப்பன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு மோகன் மயங்கி கிடந்த இடத்தின் அருகே செடிகளுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் (விஷம்) கிடந்தது.
மோகன் மதுவில் விஷத்தை கலந்து குடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து மோகனை அவரது மகன் பொன்னியப்பன் மீட்டு ஆட்டோவில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் பொன்னியப்பன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி
- கென்னடி நகரை சேர்ந்தவர் புகழேந்தி
புதுச்சேரி:
புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
புதுவை உருளையன் பேட்டை கென்னடி நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது38). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சரோஜா(58) மற்றும் அவரது மகள் திவ்யா(33) ஆகியோரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்தார்.
ஏலச்சீட்டு முடிந்தும் புகழேந்திக்கு அதற்கான பணத்தை சரோஜாவும் அவரது மகள் திவ்யாவும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபோல் மேலும் 8 பேருக்கு அவர்கள் ஏலச்சீட்டு பணத்தை தரவில்லை என தெரிகிறது. மொத்தம் ரூ.25 லட்சத்து 18 ஆயிரம் வரை அவர்கள் கொடுக்க வேண்டியுள்ளது.
ஏலச்சீட்டு பணத்தை புகழேந்தி கேட்ட போது அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று புகழேந்தி சரோஜா வீட்டுக்கு சென்று ஏலச்சீட்டு பணத்தை கேட்ட போது சரோஜா அவரது மகள் திவ்யா மற்றும் திவ்யாவின் கணவர் பிரபாகரன் ஆகியோர் புகழேந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த புகழேந்தி இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மழை வெள்ளத்தை தடுக்க இளைஞர்கள் மணல் மூட்டைகளை ஆங்காகே வைத்து தடுத்து வருகின்றனர்.
- போலீசார், தீயணைப்பு துறையினருடன் உள்ளூர் இளைஞர்களும் இணைந்து வீடுகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
கோதாவரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
ஏனாமின் 14 மீனவ கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஓரிரு நாட்களில் வடியும் என கருதப்பட்ட வெள்ளம் தொடர்ந்து உயர்ந்து வருவதோடு 6-வது நாளாக நீடித்து வருகிறது. நேற்றும் கோதாவரி ஆற்றிலிருந்து வெளியெறும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது.
இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள கோனா வெங்கடரத்தினம் நகர், அய்யன் நகர், பாலயோகி நகர், சுபத்ரா நகர், பரம்பெட் உள்ளிட் கிராமங்களை சூழ்ந்துள்ள நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மக்கள் குடிநீர், உணவின்றி தவித்து வருகின்றனர். 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நகர பகுதியிலும் வெள்ள நீர் ஆறாக ஓடுகிறது. அங்குள்ள மண்டல அதிகாரி அலுவலகம், மருத்துவமனை, போலீஸ் நிலையம் என அனைத்தும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மழை வெள்ளத்தை தடுக்க இளைஞர்கள் மணல் மூட்டைகளை ஆங்காகே வைத்து தடுத்து வருகின்றனர். மேலும் போலீசார், தீயணைப்பு துறையினருடன் உள்ளூர் இளைஞர்களும் இணைந்து வீடுகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.
அய்யன்னா நகரில் ஒரு வீட்டில் நாய் 7 குட்டிகளை ஈன்று இருந்தது. அவற்றை வெள்ள நீரில் இருந்து காப்பாற்றினால் தான் நாங்கள் வருவோம் என குடும்பத்தினர் கூறினர்.
அவர்களது கோரிக்கைகளை ஏற்ற இளைஞர்கள் நாய் குட்டிகளை பத்திரமாக ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்து படகில் ஏற்றினார்கள். இதனால் மன நிம்மதி அடைந்த குடும்பத்தினர் படகிற்கு வந்தனர். நள்ளிரவு வரை மீட்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
ஏனாம் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திராவின் மும்மிடிவரம் காட்டுப்பகுதி உள்ளது. அங்கிருந்து வரும் வெள்ள நீரில் பாம்புகள் அடித்து வரப்படுகிறது. ஏராளமான பாம்புகள் வெள்ள நீரில் வருவதாக மக்கள் பீதியில் உள்ளனர்.
இதனிடையே வெள்ள மீட்பு, நிவாரண பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் வல்லவன் ஏனாம் சென்றுள்ளார்.
- மத்திய பா.ஜனதா ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மைனஸில் இருக்கிறது. பொருளாதாரத்தில் 164- வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
- இலங்கையின் பொருளாதார நிலையை நோக்கி இந்தியா நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று வல்லுநர்கள் எச்சரிக்கி றார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜனதா ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மைனஸில் இருக்கிறது. பொருளாதாரத்தில் 164- வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. எனவே தான் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை கண்டு தற்போது ரூ. 80 யை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.
இலங்கையின் பொருளாதார நிலையை நோக்கி இந்தியா நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று வல்லுநர்கள் எச்சரிக்கி றார்கள். வருமானம் தரும் அரசு நிறுவனங்களை மோடி தனது குஜராத் மாநிலத்தின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விட்டார்.
இதனால் புதிய வரி விதிப்புகள் மற்றும் மேலும் வரிகளை உயர்த்துவது தொடரும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகம் குறைந்துள்ளதால் பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் நாடு கூட பெட்ரோல்-டீசல் விலையை குறைத்து இருக்கிறது. ஆனால் மத்திய பா.ஜனதா அரசு விலையை குறைக்காததால் அனைத்து பொருட்களின் விலை மேலும் மேலும் உயரும்.
வேலையில்லா தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.இதனால் இலங்கை கண்ட கதியை இந்தியா விரைவில் காணவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.பா.ஜனதா அரசு கார்ப்பரேட்டுகளுக்கு உதவி செய்து இந்திய மக்களை ஏமாற்றி நாட்டுக்கு பெரும் கெடுதலை செய்து வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா அரசு மத்திய அரசிடம் நிதி பெற்று புதுவை மாநிலத்தின் பொருளாதார பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. இழப்பை மத்திய அரசு தொடர்ந்து ஈடு கட்டாவிட்டால் புதுவை மாநிலமும், பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- அரியாங்குப்பத்தில் வீட்டில் தனியாக வசித்த போலீஸ் ஏட்டுவின் தாயாரி டம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
- இதில் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டதால் மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தில் வீட்டில் தனியாக வசித்த போலீஸ் ஏட்டுவின் தாயாரி டம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். இதில் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டதால் மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்.கே.நகர். கம்பன் வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி பழனியம்மாள் (வயது75). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் பன்னீர்செல்வம் (55), ரவி (51) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 4 பேருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
ரவி புதுவை காவல் துறையில் ஸ்பெஷல் பிராஞ்சு பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோபால் இறந்து விட்டதால் பழனியம்மாள் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவ்வப்போது அவரது மகன்கள் மற்றும் மகள்கள் பார்த்து விட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர். பழனியம்மாள் எப்போது தனது கழுத்தில் 4 பவுன் செயினும், கைகளில் 4 பவுன் வளையலும் அணிந்திருப்பார்.
இந்த நிலையில் நேற்று இரவு பழனியம்மாள் சாப்பிட்டு விட்டு வீட்டில் கதவை உள்பக்கமாக பூட்டாமல் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து அங்கு தூங்கி கொண்டிருந்த பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர். பழனியம்மாள் அதனை தடுக்க முயன்ற போது கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. ஆனாலும் மர்மநபர்கள் பழனியம்மாளிடமிருந்து செயினையும், கையில் அணிந்திருந்த தங்க வளையல்களையும் பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுபற்றி பழனியம்மாள் அருகில் வசிக்கும் தனது மகன் ரவிக்கு போன் செய்தார். ஆனால் கழுத்தில் படுகாயமடைந்ததால் அவரால் சரியாக பேசமுடியவில்லை. ஏதோ விபரீதம் நடந்திருப்பதை அறிந்த ரவி உடனே தனது தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு தாய் பழனியம்மாள் கழுத்தில் படுகாயத்துடன் மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டார்.
பின்னர் உடனடியாக அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து அனுமதித்தார். பழனியம்மாளுக்கு மூச்சு குழாயில் படுகாயம் ஏற்பட்டதால் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ரவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர் களை வரவழைத்தனர். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். போலீஸ்காரரின் வீட்டில் மர்ம நபர்கள் துணிகரமாக புகுந்து அவரது தாயாரை தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
- புதுயைில் நீட் தேர்வினை 6,200 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
புதுச்சேரி:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி 5,20 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் தேர்வு எழுதினர். புதுயைில் நீட் தேர்வினை 6,200 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா, தி ஸ்டடி, வில்லியனுர் ஆச்சாரியா, விவேகானந்தா, மணக்குள விநாயகர் கல்லூரி உள்பட 8 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களில் காலை 11.40 மணி முதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1,30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் சென்றுவிட்டனர்.
மாணவர்களின் ஹால் டிக்கெட், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டது. அப்போது பல மாணவர்கள் ஆதார் கார்டில் பழைய புகைப்படங்களை மாற்றாமல் வைத்திருந்தனர். பலர் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படங்கள் இருந்ததால், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க மறுக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் பிளஸ்-2 4 தேர்வு அடையாள அட்டையை காட்டியதால் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்படி கொண்டு வராதவர்களி்டம் அவர்களுடன் வந்தவர்களை வீட்டிற்குள் சென்று எடுத்து வருமாறு அறிவுறுத்தினர்.
தேர்வு எழுத வந்த மாணவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது.
- புதுவை வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்.
- சில நாட்களில் தூங்காமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்
புதுச்சேரி:
வைத்திக்குப்பத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். புதுவை வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். மீனவர். இவரது மனைவி சுமதி (வயது45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக சுமதி மனநிலை பாதிக்கப்பட்டு அந்த வழியாக செல்பவர்களை திட்டுவது, தூக்கத்தில் சத்தம் போடுவது, சில நாட்களில் தூங்காமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் சுமதி வீட்டில் மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதியின் தம்பி சத்யராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதுமுதல் சுமதியும் தற்கொலை செய்துகொள்ள போவதாக அடிக்கடி குடும்பத்தினரிடம் கூறி வருவார். இந்த நிலையில் சம்பவத்தன்று குமார் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த வேலையில் சுமதி மனநோய்க்கு வைத்திருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் . உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது கணவர் குமார் கொடுத்த புகாரின் பேரில் சோலைநகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மாட்டுக்காரன் சாவடியில் பிரசித்தி பெற்ற பாலமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
- இக்கோவிலில் 14-ம் ஆண்டு உற்சவ விழா நடந்தது.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மாட்டுக்காரன் சாவடியில் பிரசித்தி பெற்ற பாலமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 14-ம் ஆண்டு உற்சவ விழா நடந்தது. ஊரணி பொங்கலிட்டு ஊர்வலமாக வந்த பெண்கள் பால முத்துமாரியம்மன் கோவிலில் வழிபட்டனர். தொடர்ந்து செடல் உற்சவம், சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு தீபாரதனைகள் அபிஷேகங்கள் நடந்தது.
இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் நிர்வாகி குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை மாணவர் தின விழாவாக கொண்டாடப்பட்டது.
- விழாவில் விரிவுரையாளர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார்
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை மாணவர் தின விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் விரிவுரையாளர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியை சாமுண்டீஸ்வரி சிறப்புரை ஆற்றினார். தமிழாசிரியர் பாலச்சந்தர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை என் .எஸ் .எஸ் திட்ட அலுவலர் விரிவுரையாளர் முத்துக்குமார், ஓவிய ஆசிரியர் ராஜாக்கண்ணு உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ், சித்தானந்தம் ஆகியோர் செய்து இருந்தனர்.
- முதியோர் உதவி தொகை பெறும் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்.
- வங்கிகள் அலட்சியமாக செயல்பட்டதால் பல ஆயிரக்கணக்கான பயனாளிகளின் ஆதார் எண் இணைக்கப்படாமல் விடுப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயகௌகுமார் ஆகியோருக்கு நேரு எம்.எல்.ஏ., அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
முதியோர் உதவி தொகை பெறும் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும். ஆனால் வங்கிகள் அலட்சியமாக செயல்பட்டதால் பல ஆயிரக்கணக்கான பயனாளிகளின் ஆதார் எண் இணைக்கப்படாமல் விடுப்பட்டுள்ளது.
இதனால் உதவித்தொகை கிடைக்காமல் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர், விதவைகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.பாதிக்கப்பட்ட முதியோர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையிலும், எம்.எல்.ஏ.,க்களிடமும் புகார் செய்கிறார்கள். இதற்கு தீர்வு காண மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலம் தொகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து விடுப்பட்டவர்களுக்கு வங்கி கணக்கில் ஆதார் இணைக்கும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு நேரு எம்.எல்.ஏ., மனுவில் கூறியுள்ளார்.
- புதுவை வேலைவாய்ப்பு அலுவலகம் வளாகம் முன்பு நடைபெற்றது.
- சுவர் ஓவிய திறப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி சார்பில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் புதுவை வேலைவாய்ப்பு அலுவலகம் வளாகம் முன்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுவை அரசு கொறடாவும், இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.டி. ஆறுமுகம் கலந்து கொண்டு சுவர் ஓவிய திறப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ், தட்டாஞ்சாவடி அளவிலான வசந்தம் வண்ணமலர்கள் கூட்டமைப்பு மற்றும் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






