என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சாதனை படைத்த மாணவனை பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • இந்த மாணவன் 75 நாடுகளின் கொடிகள் மற்றும் 75 வெவ்வேறு படங்களின் பெயர்களை 4 நிமிடம், 30 வினாடிகளில் கூறி சாதனை படைத்துள்ளான்.

    புதுச்சேரி:

    மொளப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் யூ.கே.ஜி. வகுப்பில் படிக்கும் 4 வயது மாணவன் இனியவன் படங்களை பார்த்து பெயர்களை கூறும் திறனில் வெற்றி பெற்று இந்தியா புக் ஆக் ரெக்கார்ட்ஸ்-2022 சாதனையாளர் விருது பெற்றுள்ளான். இந்த மாணவன் 75 நாடுகளின் கொடிகள் மற்றும் 75 வெவ்வேறு படங்களின் பெயர்களை 4 நிமிடம், 30 வினாடிகளில் கூறி சாதனை படைத்துள்ளான்.

    இதனையடுத்து சாதனை படைத்த மாணவனை பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு, நாலெஜ் என்ஜினீயரிங் அமைப்பின் நிறுவனர் ஷெரிபா ஆகியோர் மாணவனுக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-2022 சாதனையாளர் விருதினை வழங்கி பாராட்டினர். முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு சாதனை மாணவனையும், பள்ளி ஆசிரியர்களையும் பாராட்டி சிறப்புரையாற்றினார். மொளப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியின் பொறுப்பாசிரியர் தமிழரசன் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர் ராஜசேகரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    • கோவில் அர்ச்சகரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக அரசு ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • குரும்பாப்பேட்டில் உள்ள கோவிலில் நிர்வாகியாகவும், அர்ச்சகராகவும் உள்ளார்.

    புதுச்சேரி:

    கோவில் அர்ச்சகரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக அரசு ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி(வயது56). இவர் குரும்பாப்பேட்டில் உள்ள கோவிலில் நிர்வாகியாகவும், அர்ச்சகராகவும் உள்ளார். கடந்த ஆண்டு புதுவை காமாட்சியம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வந்த மரினா கோல்டு மார்ட் என்ற நிறுவனம் தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அந்த பணத்துக்கு அதிக வட்டி தருவதாகவும் அந்த வட்டிக்கு பணமாகவோ அல்லது நகையாகவோ பெற்றுக்கொள்ளலாம் என கவர்ச்சிக்கரமான அறிவிப்பு வெளியிட்டதால் பாலாஜி அந்த நிறுவனத்தில் ரூ.10½ லட்சம் முதலீடு செய்தார்.

    அந்த நிறுவனத்தை ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் ஆப்ரேட்டராக பணிபுரியும் கணேசன் மற்றும் கருணாநிதி ஆகியோர் நடத்தி வந்தனர். கலெக்சன் ஏஜெண்டாக ரூபேஷ்குமார் இருந்து வந்தார்.

    தொடக்கத்தில் அந்த நிறுவனம் பாலாஜிக்கு வட்டி பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தி வந்தது. அதன்பிறகு அந்த நிறுவனம் வட்டி பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வில்லை. சுமார் ரூ.4 லட்சம் வரை பாலாஜிக்கு அந்த நிறுவனம் கொடுக்க வேண்டியது இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பாலாஜி அந்த நிறுவனத்துக்கு சென்றார். ஆனால் அந்த நிறுவனம் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த நிறுவனத்தை நடத்தி வந்த கருணாநிதி, கணேசன் மற்றும் கலெக்சன் ஏஜெண்டு ரூபேஷ்குமார் ஆகிய 3 பேரை பாலாஜி சந்தித்து கேட்ட போது அந்த பணத்தை ஒரு மாதத்தில் கொடுத்து விடுவதாக உறுதி அளித்தனர்.

    ஆனால் ஒரு மாதத்துக்கு பின்னரும் அவர்கள் அந்த பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பாலாஜி பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மோசடி செய்த கருணாநிதி, கணேசன் மற்றும் ரூபேஷ்குமார் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 3 பேரும் போலீசில் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • புதுவை முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அறிவழகி. நுண்கலைஓவியத்தில் பட்டம் பயின்றவர்.
    • ஒவியர் அறிவழகி தேச தலைவர்களின் பிறந்தநாளில் அவர்களது உருவத்தை ஒவியமாக வரைவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அறிவழகி.

    நுண்கலைஓவியத்தில் பட்டம் பயின்றவர். ஒவியர் அறிவழகி தேச தலைவர்களின் பிறந்தநாளில் அவர்களது உருவத்தை ஒவியமாக வரைவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    ஏற்கனவே மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஜெயலலிதா, முதல்-அமைச்சர் ரங்கசாமி, மதர் தெரேசா, பெரியார், மகாகவி பாரதியார், இந்திராகாந்தி ஆகியோர் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

    இந்த நிலையில் காமராஜரின் பிறந்தநாளை யொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஓவியர் அறிவழகி 6 அடி உயரம் 4 அடி அகலத்தில் 4 கிலோ கோலமாவை கொண்டு காமராஜரின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார்.

    5 மணி நேரத்தில் ஒவியத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

    காமராஜர் ஓவியத்தை பொதுமக்கள் பார்த்து அறிவழகிக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வாணரப்பேட்டை பகுதியில் உள்ள உப்பனாரு வாய்க்கால் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
    • இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வாணரப்பேட்டை பகுதியில் உள்ள உப்பனாரு வாய்க்கால் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணி விவரங்களை கேட்டறிந்த கென்னடி எம்.எல்.ஏ. பணியை விரைந்து முடிக்குமாறும், தரமான வகையில் கரையை சீரமைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியின் போது உப்பளம் தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, துணை செயலாளர் மார்டின் பாபு , மாநில தி.மு.க. மீனவரணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞர் அணி தி.மு.க. துணை அமைப்பாளர் ஆரோக்கியராஜ், மாநில தி.மு.க. மீனவரணி துணை அமைப்பாளர் வினாயக மூர்த்தி, மாயவன் , வி.சி.க. ஜெசீர், தப்பு என்ற இருதயராஜ், வட்டார காங்கிரஸ தலைவர் லட்சுமணன், மோரிஸ் , அபிபுரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் ரேஷன்கடைகள் மூலம் மூலமாக அரிசி உள்பட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • கரீப்கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இரட்டை அவியல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி, ஜூலை 16-

    புதுவையில் ரேஷன்கடைகள் மூலம் மூலமாக அரிசி உள்பட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்பின் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப் பட்டதால் ரேஷன்கடைகள் மூடப்பட்டன. இதனால் ரேஷன்கடை ஊழியர்கள் சம்பளமின்றி தவிக்கின்றனர். கரீப்கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இரட்டை அவியல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இவைகளை ரேஷன்கடைகள் மூலம் வழங்காமல் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் புதுவை குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் டெல்லியில் நடந்த நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் சார்பில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் புதுவை மக்க ளுக்கு பணத்துக்கு பதிலாக அரிசி வழங்க வேண்டும்.

    ரேஷன்கடைகளை திறக்க வேண்டும். மக்களுக்கு ஒற்றை அவியல் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளித்தார்.

    இதன் விளைவாக பொது விநியோக முதன்மை ஆலோசகர் பங்கஜ்மிஸ்ரா தலைமையில் ஒன்றிய அதிகாரிகள் புதுவைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பிறகு சட்டசபையில் அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் பணத்துக்கு பதில் அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர். கூட்டத்தில் புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • நடுக்கடலில் மூழ்கி பலியான என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் உடல் கரை ஒதுங்கியது.
    • தனியார் என்ஜினீரியங் கல்லூரியில் படித்து வந்தார்.

    புதுச்சேரி:

    நடுக்கடலில் மூழ்கி பலியான என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் உடல் கரை ஒதுங்கியது.

    புதுவை மடுவுப்பேட் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகன் விக்கி என்ற விக்னேஷ் (வயது19). இவர் மூலக்குளத்தில் உள்ள தனியார் என்ஜினீரியங் கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய கல்லூரி நண்பர் டேனியல். இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாளாகும்.

    இதையடுத்து டேனியல் தனது பிறந்தநாளை நடுக்கடலில் கொண்டாட திட்டமிட்டார். அதன்படி சோலைநகர் பகுதியை சேர்ந்த நண்பர் மாதேஷ் உள்பட 12 பேருடன் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து ஒரு பைபர் படகில் கடலுக்கு சென்றனர்.

    நடுக்கடலில் படகை நிறுத்தி அவர்கள் கேக்வெட்டி மது அருந்தி பிறந்தநாளை கொண்டா டியதாக கூறப்படுகிறது.

    அப்போது உற்சாக மிகுதியில் மாதேஷ், விக்னேஷ் உள்பட 3 பேர் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 3 பேரும் கடலில் மூழ்கினர். இதனை பார்த்து மற்ற நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாதேஷ் மற்றும் ஒருவரை மீட்டனர். ஆனால் விக்னேசை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் ரோந்து படகில் சென்று விக்னேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதில் பலன் கிடைக்கவில்லை. விக்னேஷ் கடல் அலையில் சிக்கி இறந்திருக்கலாம் என கருதப்பட்டதால் அவரது உடலை நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. ஆனால் உடல் கிடைக்கவில்லை

    இந்தநிலையில் இன்று காலை புதுவை தலைமை செயலகம் எதிரே விக்னேஷ் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விக்னேசை நம்பிய அவரது குடும்பத்தினர் இருந்த நிலையில் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் கடலில் மூழ்கி பலியானதால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    • துத்திப்பட்டு மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • இந்நிகழ்ச்சியில் நட்சத்திர கிரிக்கெட் அணிகளின் மேலான இயக்குனர் நடிகை நிரோஷா, நடிகர் ம.கா.பா உள்ளிட்ட 6 அணிகளை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    துத்திப்பட்டு மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுவை துத்திப்பட்டு சி.ஏ.பி. மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்-நடிகைகள் பங்கேற்கும் 2 நாள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. கிரிக்கெட் போட்டியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நட்சத்திர கிரிக்கெட் அணிகளின் மேலான இயக்குனர் நடிகை நிரோஷா, நடிகர் ம.கா.பா உள்ளிட்ட 6 அணிகளை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். தொடங்கிய இந்த போட்டி இரவு முடிவடைகிறது.

    பொதுமக்கள் காண்பதற்கு ஏற்கனவே டிக்கெட் விலை நிர்ணயம் செய்து இருந்த நிலையில் இந்த கிரிக்கெட் இலவசமாக பார்க்கலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிபூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.
    • கட்சியில் நாராயணசாமியின் தலையீடை அனுமதிக்கக்கூடாது என காங்கிரசில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிபூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும். கட்சியில் நாராயணசாமியின் தலையீடை அனுமதிக்கக்கூடாது என காங்கிரசில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    ஒத்த கருத்துடைய நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்று கட்சித்தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர். அவர்களை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளனர்.

    இதனிடையே முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக மற்றொரு பிரிவினர் களம் இறங்கியுள்ளனர். கோஷ்டி பூசலுக்கு முன்னாள் அமைச்சர்கள்தான் காரணம் எனவும், அவர்கள் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாராயணசாமிக்கு எதிரான அணியினர் பெங்களூருவில் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவை சந்தித்தினர். புதுவை காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, சிவசண்முகம், செயலாளர்கள் மு.ப.சரவணன், பி.எம்.சரவணன், சூசைராஜ், மாவட்ட தலைவர் ரமேஷ், பிராச்சாரக்குழு தலைவர் திருநாவுக்கரசு, தாழ்த்தப்பட்டோர் அணி தலைவர் வீரமுத்து, சேவாதள் தலைவர் குலசேகரன், வட்டாரத்தலைவர் குமரன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

    அப்போது பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் 2021 தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் சந்திக்க முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர்தான் காரணம். இதை எங்களால் நிரூபிக்க முடியும். புதுவையில் நாளுக்கு நாள் காங்கிரஸ் தேய்ந்துகொண்டிருக்கிறது.

    தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் கட்சி மேலிட தலைவர்கள் ஒப்புதல் அளித்தபடி மாநில தலைவர் மாற்றப்படவில்லை. புதுவை மக்களின் ஆதரவையும், பெரும்பாலான கட்சியினர், தொண்டர்களின் ஆதரவையும் நாராயணசாமி இழந்துவிட்டார். புதுவை காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளில் இருந்து அவரை விலக்கி வைக்க வேண்டும். புதுவைக்கு புதிய மாநில தலைவரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

    மனுவை ஏற்றுக்கொண்ட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், ராகுல்காந்தியை சந்திக்க விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.

    • புதுவையில் இருந்து அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    • டிப்-டாப் உடை அணிந்த 2 பெண்கள் பயணிகளை போல் மது பாட்டில்களை பைகளில் வைத்து இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    கோரிமேடு அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் இயங்கி வரும் பட்டானூர் மதுவிலக்கு சோதனை சாவடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது டிப்-டாப் உடை அணிந்த 2 பெண்கள் பயணிகளை போல் மது பாட்டில்களை பைகளில் வைத்து இருந்தனர். அவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கி சோதனை செய்தபோது 2 பெண்களும் 86 புல் மது பாட்டில்களை வைத்திருந்தனர்.

    அவர்களுடன் நடத்திய விசாரணையில் திரு வண்ணாமலை மாவட்டம் பவுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வள்ளி (வயது 50), முருகன் மனைவி பூமாதேவி (40), என்பதும் இவர்கள் புதுவையில் இருந்து மது பட்டில்களை திருவண்ணாமலைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் 2 பெண்களையும் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமியிடம் ஒப்படைத்தார்.

    மது பாட்டில் கடத்திய 2 பெண்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • புதுவை பேட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மேலும் மாணவர் தினத்தையொட்டி பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை பேட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் லட்சுமிதத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் குறித்த பேச்சு மற்றும் கவியரங்கத்தில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் மாணவர் தினத்தையொட்டி பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் தாளாளர் பிரடெரிக் நினைவு பரிசு வழங்கினார். விழாவில் பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜீட்டா பிரடெரிக், பள்ளி முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாணவி வெண்மதி தொகுத்து வழங்கினார். மாணவன் கதிரவன் உறுதி மொழி ஏற்க, மாணவி நவ்யா தர்ஷினி வரவேற்றார். முடிவில் மாணவர் சர்வேஷ் நன்றி கூறினார்.

    • புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் கூட்டம் குயவர்பாளையத்தில் நடந்தது
    • பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். முத்துக்கண்ணு உலக அரசியல் குறித்தும் லெனின் புதுவை அரசியல் நிலவரம் குறித்தும் பேசினர்.

    புதுச்சேரி:

    புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் கூட்டம் குயவர்பாளையத்தில் நடந்தது. நிர்வாகக் குழு உறுப்பினர் சூர்யமூர்த்தி வரவேற்றார். பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். முத்துக்கண்ணு உலக அரசியல் குறித்தும் லெனின் புதுவை அரசியல் நிலவரம் குறித்தும் பேசினர்.

    இக்கூட்டத்தில், புதுவையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்ப ட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் புதுவை அரசை வன்மையாக கண்டிக்கும் வகையில் ஒத்த கருத்துடைய இயக்கங்களோடு இணைந்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நிர்வாக்குழு உறுப்பினர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். முடிவில் மூத்த உறுப்பினர் கோபிநாதன் நன்றி கூறினார்.

    • மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா
    • புதுவை அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று புதுவை அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    மேலும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் நேரு, ரமேஷ் ஆகியோரும் மாலை அணிவித்தனர். 

    புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தி–நாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ரகுமான் மற்றும் காங்கிரசார் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    முன்னதாக கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    ×