என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
கோவில் அர்ச்சகரிடம் மோசடி: 3 பேர் கைது
- கோவில் அர்ச்சகரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக அரசு ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- குரும்பாப்பேட்டில் உள்ள கோவிலில் நிர்வாகியாகவும், அர்ச்சகராகவும் உள்ளார்.
புதுச்சேரி:
கோவில் அர்ச்சகரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக அரசு ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி(வயது56). இவர் குரும்பாப்பேட்டில் உள்ள கோவிலில் நிர்வாகியாகவும், அர்ச்சகராகவும் உள்ளார். கடந்த ஆண்டு புதுவை காமாட்சியம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வந்த மரினா கோல்டு மார்ட் என்ற நிறுவனம் தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அந்த பணத்துக்கு அதிக வட்டி தருவதாகவும் அந்த வட்டிக்கு பணமாகவோ அல்லது நகையாகவோ பெற்றுக்கொள்ளலாம் என கவர்ச்சிக்கரமான அறிவிப்பு வெளியிட்டதால் பாலாஜி அந்த நிறுவனத்தில் ரூ.10½ லட்சம் முதலீடு செய்தார்.
அந்த நிறுவனத்தை ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் ஆப்ரேட்டராக பணிபுரியும் கணேசன் மற்றும் கருணாநிதி ஆகியோர் நடத்தி வந்தனர். கலெக்சன் ஏஜெண்டாக ரூபேஷ்குமார் இருந்து வந்தார்.
தொடக்கத்தில் அந்த நிறுவனம் பாலாஜிக்கு வட்டி பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தி வந்தது. அதன்பிறகு அந்த நிறுவனம் வட்டி பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வில்லை. சுமார் ரூ.4 லட்சம் வரை பாலாஜிக்கு அந்த நிறுவனம் கொடுக்க வேண்டியது இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பாலாஜி அந்த நிறுவனத்துக்கு சென்றார். ஆனால் அந்த நிறுவனம் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த நிறுவனத்தை நடத்தி வந்த கருணாநிதி, கணேசன் மற்றும் கலெக்சன் ஏஜெண்டு ரூபேஷ்குமார் ஆகிய 3 பேரை பாலாஜி சந்தித்து கேட்ட போது அந்த பணத்தை ஒரு மாதத்தில் கொடுத்து விடுவதாக உறுதி அளித்தனர்.
ஆனால் ஒரு மாதத்துக்கு பின்னரும் அவர்கள் அந்த பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பாலாஜி பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மோசடி செய்த கருணாநிதி, கணேசன் மற்றும் ரூபேஷ்குமார் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் 3 பேரும் போலீசில் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.






