என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சேதராப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலை ஓரத்தில் தனியார் கட்டிடத்தின் எதிரே பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • அந்தப் பகுதியில் டீ வியாபாரம் செய்து வரும் இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து இந்த கடையில் பிரச்சினை செய்து வந்ததும்.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு அருகே உள்ள அச்சரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவரது மனைவி ஜெயந்தி. இவர்கள் சேதராப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலை ஓரத்தில் தனியார் கட்டிடத்தின் எதிரே பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    வழக்கம்போல் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு சென்ற இவர்கள் காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடை முழுவதும் எரிந்து சாம்பலாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்தப் பகுதியில் டீ வியாபாரம் செய்து வரும் இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து இந்த கடையில் பிரச்சினை செய்து வந்ததும். இரவு அந்த வாலிபர் சேகர் மற்றும் ஜெயந்தியிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டதும் இதன் காரணமாக பழக்கடைக்கு அவர் தீவைத்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    ஏற்கனவே சேகர் அதே ரோட்டில் பழக்கடை நடத்தி வந்த போது அந்த கடையை சில மாதங்களுக்கு முன்பு இதே போல் நள்ளிரவில் மர்ம நபர்கள் எரித்து சேதப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பத்துக்கண்ணு சந்திப்பில் வாய்க்கால் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்ததில் எலக்ட்ரீஷியன் பலியானார்.
    • ஒரு சிறிய பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விடூர் அணையில் இருந்து ஊசுடேரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் கட்டையில் மோதி கவிழ்ந்தது.

    புதுச்சேரி:

    பத்துக்கண்ணு சந்திப்பில் வாய்க்கால் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்ததில் எலக்ட்ரீஷியன் பலியானார்.

    புதுவை ரெட்டியார்பா ளையம் மரியாள்நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் தமிழ்வேந்தன்(வயது35). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வேலை விஷயமாக தமிழ்வேந்தன் மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் அருகே உள்ள ராமநாதபுரத்துக்கு சென்றுக்கொண்டிருந்தார். பத்துக்கண்ணு சந்திப்பில் ஒரு சிறிய பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விடூர் அணையில் இருந்து ஊசுடேரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் கட்டையில் மோதி கவிழ்ந்தது.

    இதில் தமிழ்வேந்தனுக்கு மார்பு எலும்பு நொறுங்கி போனது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்வேந்தன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    • சம்பவத்தன்று இரவு சரண்யா வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி விட்டு குழந்தைகளுடன் தூங்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வில்லியனூர் அருகே ஆரியபாளையம் சாம்பவி நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பன்னீர்செல்வம் சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வார விடுமுறையில் வீட்டுக்கு வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு செல்வார். மற்ற நாட்களில் சரண்யா தனது குழந்தைகளுடன் தனியாக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு சரண்யா வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி விட்டு குழந்தைகளுடன் தூங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு சரண்யா அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோக்கள் திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்த நிலையில் அதில் வைத்திருந்த 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கபட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மொத்த மதிப்பு ரூ.5லட்சம் ஆகும்.

    இதுகுறித்து சரண்யா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்ப வங்கள் அதிகரித்து வருகிறது.
    • உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு ட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுகின்றன.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்ப வங்கள் அதிகரித்து வருகிறது. ஒருநாளைக்கு 2-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருட்டு போகின்றன.

    குறிப்பாக உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு ட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுகின்றன.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள் திருடுபவர்களை கண்டு பிடித்து அவர்களிடமிருந்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி மேற்பார்வையில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் அடையாளம் தெரியவந்தது. இதனடிப்படையில் புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய பண்ருட்டி திடீர்குப்பத்தை சேர்ந்த வல்லரசு (22) மற்றும் பண்ருட்டி முருங்கப்பாக்கம் ரோட்டை சேர்ந்த சுபாஷ்(22) ஆகிய 2 பேரை கடந்த 2-ந் தேதி கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஹரி என்ற சஞ்சய்(20) என்பவரை கடந்த 19-ந் தேதி உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து ஜெயிலில் அடைக்கப்பட்ட சஞ்சயை காவலில் எடுத்து விசாரிக்க உருளையன்பேட்டை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சஞ்சயை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வல்லரசு, சுபாஷ் ஆகியோருடன் சேர்ந்த சஞ்சய் கடந்த 3 ஆண்டுகளாக புதுவையில் பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் இந்த திருட்டில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமணி, சூர்யா ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சஞ்சய் தெரிவித்தான். இதையடுத்து சஞ்சய் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுவையில் திருடப்பட்ட 50 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • பட்ஜெட் உரையில் வணிக வளர்ச்சிக்காக எந்த திட்டமும் இல்லை.
    • அபரீதமான தொகையை வரியாக பெறும் மத்திய அரசு சொற்பமான பங்கை மட்டுமே புதுவைக்கு கொடுக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:-

    பட்ஜெட் உரையில் வணிக வளர்ச்சிக்காக எந்த திட்டமும் இல்லை. வணிகத்தை நம்பி இருந்தோர் எல்லாம் நலிந்த நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கி உள்ளது. பால் பொருட்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் புதுவையின் வணிக வளர்ச்சி மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

    அபரீதமான தொகையை வரியாக பெறும் மத்திய அரசு சொற்பமான பங்கை மட்டுமே புதுவைக்கு கொடுக்கிறது. புதுவை தனது வருமானத்தை தொடர்ந்து இழந்து வருகிறது. எனவே வணிக நிலவரம் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். ரேஷன் கடைகள் திறந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். துறைமுகத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.300, ரூ.400 கோடி வருமானம் கிடைக்கும்.

    ஸ்பின்கோ மில்லையாவது தொடர்ந்து இயக்க வேண்டும். மத்திய அரசிடம் கையேந்தாமல் சொந்த காலில் நிற்க, வல்லுனர் குழுவை அமைத்து வருவாயை பெருக்க வழிகாண வேண்டும். புதுவையை வாழ வைக்க, பொருளாதாரத்தை பெரிய அளவில் உயர்த்த, சுற்றுலா, தொழில்துறை, வியாபாரத்தில் என்னென்ன செய்யலாம் என்பதில் கருத்தை அறிய குழு அமைக்க வேண்டும்.

    தன்னிறைவு பெற்று, மத்திய அரசில் கையேந்தாத நிலைக்கு புதுவையை கொண்டு சென்றால்தான் நல்ல பட்ஜெட்டை போட முடியும்.

    இவ்வாறு, அவர் பேசினார்.

    • கடலில் நாளுக்கு நாள் சேர்ந்து வரும் குப்பைகளால் மீனை விட அதிகமாக நெகிழி இருக்கும்.
    • புதுவை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடலோர தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலில் நாளுக்கு நாள் சேர்ந்து வரும் குப்பைகளால் மீனை விட அதிகமாக நெகிழி இருக்கும். இது நல்லது அல்ல. அதனால் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற ஒரு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி உள்ளார். மத்திய மந்திரி சென்னையில் இருந்தபோதுகூட மகாபலிபுரம் கடற்கரையில் நெகிழிகளையும் அப்புறப்படுத்தினார்.

    அவர் புதுவை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. கடலில் ஐஸ்கிரீம் கப், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் காணப்படுகிறது, கடற்கரையை விழிப்புணர்வுக்காக தூய்மைப்படுத்த முடியும்.

    இந்த பொருட்களை கடலுக்குள் எறியக்கூடாது என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த பூமி பந்தையும், கடலையும் பாது காப்பதில் அனைவருக்கும் கடமை இருக்கிறது என்பதை உணர்ந்து, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நாமும் பிளாஸ்டிக் பொருட்களை கடலுக்குள் எறியாமல் இருப்போம். தூய்மையான புதுவையை நாம் உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சாகர்மாலா திட்டத்தில் புதுவை துறைமுகத்தில் நடைபெறும் தூர்வாரும் பணியில் முறைகேடுகள் நடக்கிறது.
    • ஒரு நாளைக்கு 4 கி.மீ. தூரம் 7 லட்சம் கன அடி மண் அள்ள வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் தி.மு.க.

    எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி பேசியதாவது:-

    சாகர்மாலா திட்டத்தில் புதுவை துறைமுகத்தில் நடைபெறும் தூர்வாரும் பணியில் முறைகேடுகள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அமைச் சரோ, அதிகாரிகளோ ஆய்வு செய்வதில்லை. இதை பயன்படுத்தி ஒப்பந்தப்படி மணல் அள்ளுவது கிடையாது. 2 டிரெட்ஜிங் எந்திரம் மூலம் தூர்வார வேண்டும். ஆனால் ஒரு எந்திரம் மட்டுமே மணல் அள்ளுகிறது.

    மணல் அள்ளுவதை கணக்கிடும் கருவியும் கிடையாது. அதோடு ஒரு நாளைக்கு 4 கி.மீ. தூரம் 7 லட்சம் கன அடி மண் அள்ள வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது.

    கடலில் அள்ளப்பட்டு, கொட்டப்படும் மணல் கொள்ளை யடிக்கப்படுகிறது. எனவே தூர்வாரும் பணி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். சாகர்மாலா திட்டத்துக்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்க ப்படுவதை அரசு தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • விநாயகர் சதுர்த்தியை யொட்டி மாணவர்களுக்கு விநாயகர் சிலைகளை உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மாணவர்களுக்கு விநாயகர் சிலைகளை உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் அளித்தார்.

    இதன் பயனாக பள்ளியில் உள்ள பயனற்ற செய்தி தாள் மற்றும் காகிதங்களை கொண்டு விநாயகர் சிலைகளை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

    அவர்கள் பயனற்ற காகிதங்களை குப்பையில் போடாமல் 20 கிலோ காகிதத்தில் 4 ½அடி உயரத்தில் ரசாயனம் கலக்காமல் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர்.

    ஒரு வார காலத்தில் 10 மாணவர்கள் இந்த சிலையை உருவாக்கியுள்ளனர்.

    • அனைத்து அரசு துறைகளிலும் குறைந்தபட்சம் ஒரு சட்ட ஆலோசகரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
    • 15 சட்ட உதவியாளர்களை 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

    அசோக்பாபு(பா.ஜனதா):- அனைத்து அரசு துறைகளிலும் குறைந்தபட்சம் ஒரு சட்ட ஆலோசகரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

    அமைச்சர் லட்சுமிநாராயணன்:- ஏற்கனவே அரசு துறைகளில் 9 சட்ட அதிகாரிகள் உள்ளனர். மேலும் 15 சட்ட உதவியாளர்களை 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அசோக்பாபு:- அரசு துறைகளில் வழக்குகள் அதிகமாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு துறைக்கும் தனியாக சட்ட ஆலோசகர் தேவைப் படுகிறது. இதை நேர்முக தேர்வு மூலம் வக்கீலை தேர்வு செய்வது சரியான நடைமுறையல்ல.

    லட்சுமிநாராயணன்:- ஐகோர்ட்டு சட்ட அதிகாரிகளை தேர்வு செய்ய சில விதிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன்படி தான் நேர்முகத்தேர்வு நடத்துகிறோம். இருப்பினும் முதல்-அமைச்சருடன் கலந்துபேசி தளர்வுகளை ஏற்படுத்தலாம்.

    நேரு:- அரசு சொத்துக்களை சிலர் அபகரித்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக நடவடி க்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. விரைவாக சட்ட ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.

    அசோக்பாபு:- ஆட்சி அமைந்து 15 மாதம் ஆகிவிட்டது. இன்னும் அரசு வக்கீல், அரசு பிளீடர் நியமிக்கவில்லை. கடந்த ஆட்சியில் உள்ளவர்களே தொடர்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வக்கீல்களை மாற்றுவதுதான் வழக்கம். எனவே உடனடியாக புதிய வக்கீல்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

    • விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அப்பம்பட்டு கிராமத்தில் 1970-ல் சையது அப்துல் கபார் என்ற சிறு வியாபாரி வீட்டில் முட்டை மிட்டாய் தயார் செய்து சிறிய அளவில் விற்பனை செய்து வந்தார்.
    • செஞ்சி பகுதியில் வணிகக் குறியீடாக முட்டை மிட்டாய் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அப்பம்பட்டு கிராமத்தில் 1970-ல் சையது அப்துல் கபார் என்ற சிறு வியாபாரி வீட்டில் முட்டை மிட்டாய் தயார் செய்து சிறிய அளவில் விற்பனை செய்து வந்தார்.

    அல்வா, அசோகா, பால்கோவா, போன்ற வடிவில் தனித்துவமான பிரவுன் நிறத்தையும் தன்னி–கரில்லா சுவையையும் கொண்டது முட்டை மிட்டாய். செஞ்சி கூட்ரோட்டில் சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கடை திறக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவை பெற்றது.

    செஞ்சி பகுதியில் வணிகக் குறியீடாக முட்டை மிட்டாய் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. செஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், உளுந்தூர்பேட்டை, சென்னையில் ராயப்பேட்டை, முகப்பேர் மேற்கு, விருகம்பாக்கம், அண்ணா நகர், மாயாஜால் (ஈ.சி.ஆர்) ஆகிய இடங்களிலும் சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் கிளைகளை உருவாக்கி வாடிக்கையாளர்களின் வர–வேற்பேப்பை பெற்றுள்ளது.

    52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சையத் ஸ்வீட்ஸின் முட்டை மிட்டாய் புதிய கிளை புதுவை முத்தியால்பேட்டை வள்ளி மோட்டார்ஸ் எதிரில் திறக்கப்பட உள்ளது.

    இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையேற்று கடையை திறந்து வைக்கிறார்.

    இந்நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார், அகில இந்திய வணிகர் சம்மேளன முதன்மை துணைத் தலைவரும் புதுவை வணிகர் கூட்டமைப்பு தலைவரும் உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவசங்கர், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ், புதுவை மாநில ஹோட்டல் சங்கத் தலைவர் ஜனாப். ஹாஜி.அப்துல் சுபான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் புதுவை, தமிழக வணிகர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், பொது மக்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரையும் சையது ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனர் சைய்யது உஸ்மான் மற்றும் குடும்பத்தினர் வரவேற்கின்றனர்.

    • புதுவை அரசுக்கு ஏற்கனவே 9 ஆயிரத்து 859 கோடி கடன் உள்ளது.
    • பட்ஜெட்டில் மாநில வருமானத்துக்கு எந்த அறிவிப்பும் இல்லை. மாநில அந்தஸ்து பற்றிய தகவலும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் பேசியதாவது:-

    புதுவை அரசுக்கு ஏற்கனவே 9 ஆயிரத்து 859 கோடி கடன் உள்ளது. இந்நிலையில் புதிதாக ரூ.ஆயிரத்து 889 கோடி கடன் பெறப்போவதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடன் சுமையை புதுவை அரசு சமாளிக்குமா? பட்ஜெட்டில் மாநில வருமானத்துக்கு எந்த அறிவிப்பும் இல்லை. மாநில அந்தஸ்து பற்றிய தகவலும் இல்லை.

    நிதி அயோக்கிலும் புதுவை இடம்பெறவில்லை. லேப்டாப், சைக்கிள் அறிவிப்புகள் காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கோப்புகள். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும். காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கும் திட்டமும் காங்கிரஸ் அரசில் அறிவித்த திட்டம். மேம்பாலங்கள் அறிவிக்கப்பட்டாலும் அதற்கு நிதி ஒதுக்கவில்லை.

    தியாகிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தரப்போவதாக அறிவித்துள்ளீர்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டாகிவிட்டது. எத்தனை தியாகிகள் உயிருடன் உள்ளார்கள். இந்த அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது.

    சட்டசபை கட்டும் அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. மின்துறை தனியாருக்கு தாரைவார்க்க ஏதுவாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுபோல தெரிகிறது. மின்துறையில் ஆட்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். லாஸ்பேட்டையில் துணைமின்நிலையம் அமைக்க வேண்டும். பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு 4மாதம் சம்பள பாக்கி உள்ளது.

    இந்நிலையில் அவர்களை பணிநிரந்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது கேலிக்கூத்தானது. பாப்ஸ்கோ நிறுவனத்தை குடிமைப்பொருள் வழங்கல்துறையின் கீழ் கொண்டுவந்து அந்நிறு வனத்தை செம்மையாக நடத்த அரசு முயற்சிக்க வேண்டும்.

    லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும். காவல்நிலையங்களில் கட்ட பஞ்சாயத்து பெருகிவிட்டது. கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. நிலத்தடி நீரை உறிஞ்சும் மதுபான ஆலைகளுக்கு எப்படி அனுமதி வழங்குகிறீர்கள்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 2 முட்டைகள் சத்துணவுடன் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
    • பள்ளி திறந்து 3 மாதமாகியும் மாணவர்களுக்கு இதுவரை முட்டை வழங்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் எதிர்கட்சித்தலைவர் சிவா பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கி வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 2 முட்டைகள் சத்துணவுடன் வழங்கப்பட்டு வருவது வழக்கம். ஆனால் பள்ளி திறந்து 3 மாதமாகியும் மாணவர்களுக்கு இதுவரை முட்டை வழங்கவில்லை.

    முட்டை கொள்முதல் பெற இ டெண்டர் முறை கொண்டு வரப்பட்டதால், 12 ஆண்டுகளாக ஒப்பந்தம் பெற்றவர்கள் இ டெண்டரில் கலந்து கொள்ள முடியாமல் போனது. முட்டை இதுவரை கொள்முதல் செய்யவில்லை. இதனால் புதுவையில் 53 ஆயிரம், காரைக்காலில் 28 ஆயிரம், மாகியில் 3 ஆயிரத்து 500, ஏனாமில் 4 ஆயிரத்து 500 மாணவர்கள் உட்பட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 89 ஆயிரம் ஏழை, எளிய மாணவர்கள் முட்டை–யில்லாமல் மதிய உணவு பெற்று வருகின்றனர்.

    எனவே இடெண்டர் முறையை தவிர்த்து பழைய நிலையில் நடைமுறையில் இருந்த லிமிடெட் டெண்டர் முறையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் முட்டை கொள்முதல் செய்து ஏழை, எளிய மாணவர்களுக்கு முட்டை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், முட்டை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதில் உள்ள சி க்கலை தீர்த்து மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    ×