என் மலர்
புதுச்சேரி
- மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மத்திய கல்வி அமைச்சகம் மூலம் ஆண்டுதோறும் “தேசிய நல்லாசிரியர் விருது” வழங்கப்பட்டு வருகிறது.
- 2022-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்க–ளின் பட்டியல் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி:
மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்ப–ணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களை தேர்வு செய்து, மத்திய கல்வி அமைச்சகம் மூலம் ஆண்டுதோறும் "தேசிய நல்லாசிரியர் விருது" வழங்கப்பட்டு வருகிறது.
2022-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்க–ளின் பட்டியல் வெளி–யிடப்பட்டது. அதில், புதுவை முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் அரவிந்த–ராஜாவுக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது' அறிவிக்கப்பட்டது.
தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு, கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து ச்செய்தியில், 2022-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற புதுவையில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதலி யார்பேட்டை, அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டு புதுவை மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் பங்காற்ற வேண்டும். புதுவை மாநிலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை அருகே நோணாங்குப்பத்தில் சுண்ணாம்பு ஆறு படகு குழாம் உள்ளது.
- வார இறுதி நாட்களில் புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை ஆன்மீக நகரமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்டவைகள் உள்ளது. மேலும் புதுவை அருகே ஆரோவில்லில் மாத்ரி மந்திர் உள்ளது. இதனை காண வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மேலும் கடற்கரையை கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
நவநாகரீக உடையணிந்து நகரை சுற்றிவரும் சுற்றுலா பயணிகள் மூலம் ஓட்டல்கள், மதுக்கடைகள், தங்கும் விடுதிகள், நிரம்பி வழிகின்றன. இதனால் புதுவை அரசுக்கு வருமானமும் கிடைக்கிறது.
கடற்கரை மட்டுமின்றி புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பாண்டி மெரினா கடற்கரையையும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகிறார்கள்.
முன்பு இந்த கடற்கரை புதர்கள் மண்டி இருந்தது. தற்போது அவை சீரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான பூங்கா உள்ளது. மேலும் ஏராளமான குடில்களும் தனியார் பங்களிப்புடன் பல்வேறு கடைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நகரப்பகுதிகளில் இருந்து இங்கு செல்ல சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதே போல் சின்ன வீராம்பட்டினத்தில் நீல கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
புதுவை அருகே நோணாங்குப்பத்தில் சுண்ணாம்பு ஆறு படகு குழாம் உள்ளது.
இங்கும் சுற்றுலா பயணிகள் சென்று படகில் பயணம் செய்து கடற்கரையில் உள்ள பேரடைஸ் பீச்சை ரசித்து வருகிறார்கள்.
வார இறுதி நாட்களில் புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நகரின் மையப்பகுதிகளில் நவநாகரீக உடையுடன் வலம் வருகிறார்கள்.
இதனால் வார இறுதி நாட்களில் புதுவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திராகாந்தி சிலை, ராஜூவ் காந்தி சிலை, வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை, கொக்கு பார்க் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை இருப்பதால் சட்டம்-ஒழுங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இன்று இரவு முதல் புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கத்தொடங்கும்.
- அரசு என்ஜினீயரிங் கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
- இதனால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி தரம் உயர்த்தி என்ஜினீயரிங் கல்லூரியாக மாற்றியுள்ளோம்.
புதுச்சேரி:
சுல்தான்பேட்டையில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்விநேரத்தின்போது எதிர்கட்சித்தலைவர் சிவா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்து பேசியதாவது:-
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி தரம் உயர்த்தி என்ஜினீயரிங் கல்லூரியாக மாற்றியுள்ளோம்.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதிகளவில் மாணவிகள் சேர விண்ணப் பித்துள்ளனர். இதனால் சுல்தான்பேட்டையில் அரசு மகளிர் என்ஜினீய ரிங்கல்லூரி அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.
- வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- புதுவையில் கஞ்சா விற்போர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவையில் கஞ்சா விற்போர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும், கஞ்சாவை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. புதுவை நகர பகுதியில் கஞ்சா விற்பனை குறைந்து விட்ட நிலையில் தற்போது கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகூர் அருகே பரிக்கல்பட்டு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோவுக்கும் மேலாக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது.
- இப்போட்டியில் புதுவை சிறுமி அணி 3-ம் பரிசு பெற்றனர்.
புதுச்சேரி:
தேசிய அள்விலான 27-வது சப்-ஜூனியர் டென்னீஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் புதுவை சிறுமி அணி 3-ம் பரிசு பெற்றனர். தொடர்ந்து தேசிய அளவில் 2-வது முறையாக சிறுமியர் அணி 3-ம் பரிசை வென்றனர்.
போட்டி பரிசளிப்பு விழாவின் போது அணியின் மேலாளர் ரத்தின பாண்டியன், பயிற்சியாளர் சவுந்தர்யா, உடற்கல்வி இயக்குனர் சிவராமன், வேல்முருகன், அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் நகையை பறித்து சென்றார்.
- சின்னக்கோட்டக்குப்பம் ரெயின்போ கார்டன் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்
புதுச்சேரி:
லாஸ்பேட்டையில் பட்டப்பகலில் நடந்து சென்ற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் நகையை பறித்து சென்றார்.
புதுவையை அடுத்த தமிழகப்பகுதியான சின்னக்கோட்டக்குப்பம் ரெயின்போ கார்டன் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கலியம்மாள் (வயது 67). ஓய்வு பெற்ற தபால் அதிகாரி. நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் மதியம் லாஸ்பேட்டையில் உள்ள தனது மகளை பார்க்க கலியம்மாள் வீட்டில் இருந்து நடந்து வந்தார்.
சாமிப்பிள்ளை தோட்டம் ஆதிசங்கர் வீதியில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த மர்ம வாலிபர் திடீரென கலியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தான். கலியம்மாள் அதிர்ச்சியடைந்து அலறல் சத்தம் போடுவதற்குள் அந்த வாலிபர் செயினுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டான்.
இதனால் செயினை பறிகொடுத்த கலியம்மாள் இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கடந்த பட்ஜெட்டில் அறிவித்த எதுவும் நிறைவேற்றவில்லை.
- கடந்த பட்ஜெட்டில் 5 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசியதாவது:-
சர்க்கரை என எழுதி சுவைத்து பார்த்தால் இனிக்குமா? அதுபோலத்தான் கடந்த பட்ஜெட்டில் அறிவித்த எதுவும் நிறைவேற்றவில்லை. கடந்த பட்ஜெட்டில் 5 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை. 4 ஆண்டாக ரேஷன்கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. ஸ்பின்கோ ஆலை மூடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் மீதானஅக்கறையை கஞ்சாவை ஒழிப்பதில் காட்டினாலே போதும். பள்ளிகளில் கழிப்பறை, மைதானம், ஸ்மார்ட் வகுப்பு தேவை. காமராஜர் கலைக் கல்லூரியில் பட்டமேற்படிப்பு தொடங்க வேண்டும். கிராம பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. திருபுவனையில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
பொதுப்பணித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி ஆறு, குளங்களை தூர்வார வேண்டும். தொடர் நோய் உள்ளவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். இலவசம் மூலம் மக்களை திருப்திப்படுத்தி ஓட்டு வாங்க வேண்டும் என நினைப்பது தவறான செயலாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவையில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே முதல்-அமைச்சர் ரங்கசாமி தான்.
- ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்ற செயல்படுகிறார்.
புதுச்சேரி:
பட்ஜெட் மீதான விவாதத்தில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுவையில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே முதல்-அமைச்சர் ரங்கசாமி தான். அந்த சாதனையை இனிமேல் யாரும் சமன் செய்ய முடியுமா? என்பது கேள்விக் குறிதான். அதற்காக எனது பாராட்டுக்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்ற செயல்படுகிறார். மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. அவரது நோக்கம் மிகப் பெரியது. அதற்கு தகுந்தார்போல் அவருடைய கூட்டணி கட்சி இல்லை. சபாநாயகரும், உள்துறை அமைச்சரும் அடிக்கடி பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திக்கிறார்கள்.
ஆனால் முதல்-அமைச்சரின் கோரிக்கையான ரூ.2000 கோடி கூடுதல் தொகை, அமைச்சர் லட்சுமி நாராயணன் கேட்ட இழப்பீடு தொகை ஆகியவற்றை வாங்கி கொடுத்து, முதல்-அமைச்சருக்கு உதவிகரமாக இருக்கலாம். ஆனால் இருவரும் மாநிலத்தை கைவிட்டு விட்டார்கள்.
ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ரூ.73,562 கடன் சுமை ஏற்றி இருக்கீறீர்கள். வரியில்லா பட்ஜெட் என்று சொல்லி மின்சார வரி, வீட்டு வரி, சொத்து வரி என பல்வேறு வரிகளைப் போட உள்ளதற்கு முன்னோட்டமா? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். பட்ஜெட்டில் வெறும் 7.37 சதவீதம் நிதி மட்டுமே மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது மத்திய அரசின் ஓரவஞ்சனை.
10 அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் போடாமல் இருப்பது நியாயமா? தாக்கல் செய்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.
இது வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல. இதில் மத்திய அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை. புதுவையில் கவிஞர் பாரதிதாசனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் பெரிய அளவில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவையில் 982 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- புதுவையில் 12பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் 982 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதுவையில் 29, காரைக்காலில் 5, ஏனாமில் 3 பேர் என புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 12பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 230, காரைக்காலில் 55, ஏனாமில் 17 என 302 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 12, காரைக்காலில் 14, ஏனாமில் 2 பேர் என 28 பேர் சிகிச்சையில் குண மடைந்தனர்.
புதுவை டி.என்.பாளையத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஜிப்மரில் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 968 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 20 லட்சத்து 13 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது.
- வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரம் அடைந்து ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை சூறையாடிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- டெல்லியை தலைமையிட மாக கொண்ட ஆன்லைன் வர்த்தக கிளை நிறுவனம் புதுவை லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் தனியார் காம்பளக்சில் இயங்கி வருகிறது.
புதுச்சேரி:
வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரம் அடைந்து ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை சூறையாடிய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்லியை தலைமையிட மாக கொண்ட ஆன்லைன் வர்த்தக கிளை நிறுவனம் புதுவை லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் தனியார் காம்பளக்சில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முரளி என்பவர் பொருட்களை டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களாக முரளி சரியாக வேலைக்கு வராததால் அவரை அந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் முரளி ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று முரளி தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்துக்கு சென்று அங்கிருந்த பொருட்களையும் வாகனங்களையும் அடித்து உடைத்து சூறையாடியதாக தெரிகிறது.
மேலும் இதனை தட்டிக்கேட்ட மற்ற ஊழியர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் பொறுப்பாளர் பராஸ்துஷிர் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நெட்டப்பாக்கம் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
- இந்த நிலையில் மதியம் முத்து கிருஷ்ணன் தனது நிலத்தில் விவசாயம் செய்ய டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
நெட்டப்பாக்கம் அருகே முளப்பாக்கம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது62). விவசாயி. இவரது நிலத்துக்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த பழனிராஜா என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இந்த நிலையில் மதியம் முத்து கிருஷ்ணன் தனது நிலத்தில் விவசாயம் செய்ய டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டார். அப்போது டிராக்டர் பழனிராஜா நிலத்தின் வழியே சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு பழனிராஜா எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் இருவருக்கு வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து இவரும் தனித்தனியே நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருபுவனை பகுதியில் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலையில் 350 தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
- அரசே ஸ்பின்கோ நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசாலை சந்திப்பில் மறியல் செய்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை பகுதியில் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலையில் 350 தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்த ஆலை 3 மாதமாக உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனால் நூற்பாலை தொழிலாளர்கள் உடனடியாக நூற்பாலையை இயக்க வேண்டும். உற்பத்தி செய்து ஆலையில் வைத்திருக்கும் நூலை விற்று தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
அரசே ஸ்பின்கோ நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசாலை சந்திப்பில் மறியல் செய்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






