என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தணிக்கை அதிகாரி ஜெகன்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தணிக்கை செய்தனர்.
    • அறநிலையைத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் தணிக்கை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 243 கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

    இதன் மூலம் வரும் வருமானம் மற்றும் கோவில் உண்டியல்கள் மூலம் வரும் வருமானம் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்ய கணக்கு மற்றும் கருவூலத்துறையில் கோவில் தணிக்கை பிரிவு செயல்பட்டு வருகிறது.

    கோவில்கள் தணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விண்ணப்பித்து தகவல் கேட்டபோது 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது தெரியவந்தது. இதுதொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் தணிக்கை அதிகாரி ஜெகன்நாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தணிக்கை செய்தனர். மணக்குள விநாயகர் கோவில் தங்க பொருட்கள், வெள்ளி பொருட்கள், கோவில் சிலைகள், வருவாய் உள்ளிட்ட கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து அறநிலையைத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் தணிக்கை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த பாலத்தின் உட்புறத்தில் 2 பக்கங்களிலும் இரு சக்கர வாகனங்கள் தள்ளுவண்டிகள் சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் புதுவையில் இருந்து திருக்கனூர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் தற்பொழுது சென்று வருகிறது.

    இந்த பாலத்தின் உட்புறத்தில் 2 பக்கங்களிலும் இரு சக்கர வாகனங்கள் தள்ளுவண்டிகள் சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர்களிலிருந்து வரும் பஸ்கள் இந்த மேம்பாலத்தின் உட்பகுதியிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு ஏற்றியும் செல்கின்றனர்.

    இதனால் மிகுந்த வாகன நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறுவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு அதிக அளவில் பஸ்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருக்கின்றன.

    பெரும்பாலும் மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை அதிக அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தே செல்கின்றன. இது குறித்து பொதுமக்கள் வில்லியனூர் போக்குவரத்து போலீசாரி டமும் திருபுவனை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில நேரங்களில் ஒரு சில போலீசார் மட்டுமே நீண்ட நேரத்திற்கு பிறகு அப்பகுதிக்கு வருகின்றனர்.

    அவர்களால் உடனடியாக போக்குவரத்தை சரி செய்ய முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் அதிக அளவில் மாலை நேரங்களில் போலீசாரை நியமித்து பாலத்தில் உட்பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் வாகனங்களை அப்புற ப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு அங்குள்ள கங்கா பவானி அம்மன் கோவில் குளத்தின் அருகில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த குடிநீர் கடந்த சில வாரங்களாக கலங்களா கவும், உவர்ப்பு சுவையுடனும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் குடிநீர் சுவையற்ற நிலையில் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    குறிப்பாக கங்கா பவானி அம்மன் கோவில் குளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தண்ணீர் முழுவதையும் இறைத்து மீன்பிடிக்கப்பட்டது. இதையடுத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் போடப்பட்ட போர்வெல்லில் இருந்து அந்த குளத்துக்கு தண்ணீர் விடப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, கிருமாம்பாக்கம் பேட் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க 2 போர்வெல்கள் அமைக்கப்பட்டது.

    அதில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் தரமில்லாததால் அந்த போர்வெல்லில் இருந்து குடிநீர் எடுப்பது கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் ஒரே ஒரு போர்வெல்லில் இருந்து மட்டும் தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் நன்றாக இருந்தது என தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் பொதுமக்கள் பல நாட்களாக தரம் குறைந்து விட்டதாக கூறுகிறார்கள். இந்தநிலையில் இன்று அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சோதனை செய்து விட்டு சுத்திகரிப்பு குடிநீர் வழங்கு வதை நிறுத்தியுள்ளனர்.

    இதனால் இன்று மாலை முதல் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 100சதவீதம் தரமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இந்து முன்னணி அமைப்பாளர் முருகையன் தலைமையில் 9 பேர் காமராஜ் சிலை முன்பு கூடினர்.
    • காதலர் தின வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தன.

    புதுச்சேரி:

    புதுவையில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் காமராஜர் சிலை சந்திப்பில் இன்று போராட்டம் நடத்தினர்.

    இந்து முன்னணி அமைப்பாளர் முருகையன் தலைமையில் 9 பேர் காமராஜ் சிலை முன்பு கூடினர். அப்போது எதிரில் உள்ள தனியார் நகைக்கடையில் காதலர் தின வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தன. அதன் எதிரே சென்று இந்து முன்னணியினர் கோஷமிட்டனர்.

    காதலர் தினத்தை வணிகர்கள் ஊக்கப்படுத்தக்கூடாது என கூறி அவர்கள் கோஷமிட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது காதலர் தின வாழ்த்து அட்டையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து முருகையன் உட்பட 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • புதுவையில் பேனர்-கட் அவுட்டுகள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
    • புதுவையில் பேனர், கட் அவுட்டுகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.

    புதுச்சேரி:

    புதுவையில் பேனர்-கட் அவுட்டுகள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    புதுவையில் பேனர்- கட் அவுட் வைக்க தடை சட்டமும் அமலில் உள்ளது. இருப்பினும் புதுவையில் பேனர், கட் அவுட்டுகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.

    இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டரை கண்டி த்தும், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கோரியும் சமூக அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

    இதன்படி தந்தை பெரியார் திராவிட கழகம் சிந்தனையாளர் பேரவை, அண்ணா பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட 10-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் ராஜீவ் காந்தி சிலை அருகே திரண்டனர்.

    மக்கள் வாழ்வுரிமை ஜெகநாதன், அண்ணா பேரவை சிவஇளங்கோ, திராவிடர் விடுதலை கழகம் லாகு அய்யப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், சிந்தனையாளர் பேரவை கோ.செல்வம், தலித் சிறுத்தைகள் அறிவுமணி, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், ராஜா, எஸ்.டி.பி.ஐ. பரக்கத்துல்லா, நாம் தமிழர் கட்சி ரமேஷ் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அவர்களை போலீசார் வழுதாவூர் சாலையில் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    • புதுவை காமராஜர் நகர் சவுந்தரராஜன் வீதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ
    • இவர் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் நகர் சவுந்தரராஜன் வீதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார்.

    3 ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய செல்போனில் தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ் சத்யம் என்பவர் தொடர்பு கொண்டார். அப்போது அவர் எலக்ட்ரானிக் பொருட்களை குறைந்த விலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து ராஜேந்திரன், அவரது மனைவி தேன்மொழி ஆகியோரும் சுபஸ்ரீயுடன் தொடர்பு கொண்டு அடுத்தடுத்து பேசியுள்ளனர், இதனை நம்பிய சுபஸ்ரீ ரூ.15 லட்சம் அவரது வங்கி கணக்கில் இருந்து அனுப்பியுள்ளார்.

    ஆனால், அவர்கள் கூறியது போல எலக்ட்ரானிக் பொருட்களை அனுப்பவில்லை. அவர்கள் பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சுபஸ்ரீ பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் சத்யம், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி தேன்மொழி ஆகிய 3 பேரையும் தேடிவருகின்றனர்.

    • பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது.
    • அறிவியல் பட்டதாரி ஆசிரியை பிரபாவதி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் மஞ்சுளா தலமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கிளாடின் கிரேஸ் மெக்பர்லேன், விலங்கியல் விரிவுரையாளர் லோகேஸ்வரி முன்னிலை வகித்தனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியை பிரபாவதி வரவேற்றார்.

    பேராசிரியர் வெற்றிவேல் நீர்ப் பாதுகாப்பும் எதிர்கால அவசியமும் என்னும் தலைப்பில் நோக்கவுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    நீர் மேலாண்மை மிகவும் அவசியமாக இருந்து வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மத்திய அரசு அனைத்து கிராமத்தில் உள்ள வீடுகளுக்கும் 100 சதவீத பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு நபர் 55லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவது அதிகபட்சமாக நிர்ணயித்துள்ளது. ஆனால் நமது பகுதிகளில் ஒரு நபர் 100லிட்டரில் இருந்து 200 லிட்டர் வரை செலவு செய்கின்றனர்.

    இதனால் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். வீடுகள் மற்றும் தெருக்களில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாயை மூடி வைக்கவேண்டும்.

    சிக்கனமாக பயன்படுத்தி எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுபாடு இன்றி கிடைக்க அனைவரின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. விவசாயம் சார்ந்த தொழிலிலும் நவீன முறையை பயன்படுத்தி தண்ணீர் சேகரிக்க வேண்டும். நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் ரவி, வானவில் ஆனந்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனியன், அரவிந்தர் சொசைட்டி பொறுப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர்.

    மாணவி அன்புமதி நீருக்கான உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். முடிவில் கணித பட்டதாரி ஆசிரியர் அருளரசன் நன்றி கூறினார்.

    • காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடப்பயணம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது.
    • புதுவை மாநிலத்திற்கு ஏராளமான திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடப்பயணம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது.

    கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கி பேசியதாவது:-

    புதுவை மாநிலத்திற்கு ஏராளமான திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. மத்திய பல்கலைக்கழகம், புதுவை அரசு பொறியியல் கல்லூரி போன்ற பல்வேறு திட்டங்களையும் புதுவையில் ஏராளமான தொழிற்சாலை களும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்க ப்பட்டது. தற்போது தொழிற்சாலைகள் இல்லாத மாநிலமாக புதுவை இருந்து வருகிறது.

    அதிக அளவில் குற்றங்கள் நடக்கக்கூடிய மாநிலங்களாக புதுவை மாநிலம் உள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் 67.90 சதவீதம் பேர் லஞ்சம் வாங்குவதாக ஆய்வு அறிக்கை கூறப்படுகிறது.

    எனவே இந்த அரசு மக்களுக்கு எவ்வித திட்ட ங்களையும் செய்யவில்லை. தற்போதைய கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. பல திட்டங்களை கொண்டு வந்ததாக கூறி வருகிறார். நானும் தற்போதைய எம்.எல்.ஏ.வும் நேருக்கு நேராக அமர்ந்து விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன் இந்த ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்களா?

    குறிப்பாக சாலை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை எந்த திட்டத்தையும் இந்த அரசு செய்யவில்லை அப்படி செய்தார்கள் என நேருக்கு நேராக என்னிடம் நிருபித்தால் எனது மீசையை எடுத்து விடுகிறேன்.

    எனவே அடுத்த ஆண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம். மேலும் புதுவையில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி வரும்.எனவே இப்பகுதி மக்கள் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அனுமதி கிடைத்தும் ஏன் பணிகள் தொடங்கப்படவில்லை என்று அதிகாரியிடம் கேட்டார்.
    • பாலங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட உடையார்த் தோட்ட த்தில் சமுதாயநலக்கூடம் கட்டும் பணியினை உடனே தொடங்கி சிறப்பான முறையில் கட்டித்தர வேண்டும் என்றும் ராசுஉடையார்தோட்டம், பிரான்சுவா தோப்பிலும் கழிப்பிடத்தை நவீனமாக்கும் பணிகளை தொடங்கி வைக்கவேண்டும் என்றும் அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. கூறினார்.

    மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் அனுமதி கிடைத்தும் ஏன் பணிகள் தொடங்கப்படவில்லை என்று அதிகாரியிடம் கேட்டார்.

    கோலாஸ் நகர்,ராசு உடையார் தோட்டத்தில் உள்ள ப வடிவ வாய்க்காலை தூர்வாரி அதனை புதுப்பித்து மக்கள் தொந்தரவு இல்லாத நடைபாதையை பயன்படுத்தும் படி அதனை சீரமைக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    நகராட்சி மூலம் நடக்க இருக்கும் அனைத்து பணிகளையும் மிக விரைவில் செய்து கொடுக்கும்படியும் மேலும் ராசு உடையார் தோட்டத்திற்கு போடப்படும் பாலங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    வீரர்வெளி, பெரிய ப்பள்ளி ரெயில்வே பாலம் வழியாக உப்பனாறு செல்லும் வாய்கால்களையும் தூர்வாரி சுத்தம் செய்து தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    • பெரிய விமானங்களையும், கப்பல்களையும் தயாரிக்கும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது.
    • பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்து 3-வதுஇடத்துக்கு முன்னேறியுள்ளது.

    புதுச்சேரி:

    டெல்லியில் நடந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொண்ட புதுவை- தமிழ்நாடு - அந்தமான் இயக்குனரகத்தை சேர்ந்த என்.சி.சி. மாணவ-மாணவிகள் அங்கு நடந்த பல்வேறு போட்டிகளில் 2-வது இடத்தை பெற்றனர். அகில இந்திய என்.சி.சி. போட்டிகளில் கப்பல் படை 7 பதக்கங்களும், தரைப்படை 2 பதக்கங்களும் வென்றன.

    இந்த நிலையில் என்.சி.சி. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு என்.சி.சி. மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். பின்பு அவர் பேசியதாவது:-

    குடியரசு தினவிழா அணிவகுப்பில் 2-வது இடம் பெற்றதற்கு எனது பாராட்டுகள். உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சி தன்னம்பிக்கையையும், கலை, கலாசாரத்தின் மீதான ஆர்வத்தையும் கொடுத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்திலும் என்.சி.சி. மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.

    எனக்கு நீங்கள் தயாரித்த விமானத்தையும், அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கப்பலையும் பரிசாக அளித்துள்ளீர்கள். பொம்மை விமானங்கள், கப்பல்கள் தயாரிப்பது மட்டுமல்ல. பிரதமர் கூறிய சுயசார்பு இந்தியா என்பதன் அடிப்படையில் கப்பல்களும், விமானங்களும் புதுவையில் தயாரிக்கப்பட வேண்டும். அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை.

    இப்போது பெரிய விமானங்களையும், கப்பல்களையும் தயாரிக்கும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது. பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்து 3-வதுஇடத்துக்கு முன்னேறியுள்ளது. சீருடைகள் பெருமைக்காக அணிவது அல்ல. மற்றவர்களை காப்பாற்ற அணிவது என்பதை புரிந்து செயல்படவேண்டும். மாணவர்களுக்கு தேவையான உதவிகளை கவர்னர் மாளிகையும், கல்வித்துறையும் செய்யும். அடுத்த முறை முதல் இடத்தை பிடிக்க வேண்டும்.

    முன்பு ராணுவம், காவல் துறை, என்.சி.சி. போன்றவற்றில் பெண்கள் பங்கேற்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது பாரதி கூறியது போல் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை கொண்டு பெண்கள் மிடுக்காக வரும் போது ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும். அதற்கு ஊக்கம் தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
    • விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரையில் ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக 1200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அபுல்கலாம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி ராஜ், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

    இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் புதுவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சிலம்பாட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

    • தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.
    • மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் மெகா ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.நில பரப்பளவில் சிறிய சுமார் 12 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட புதுவையில் ஏற்கனவே 7 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன.

    இந்தநிலையில் மக்கள் எண்ணங்களுக்கு விரோதமாக, மது ஆறு பெருக்கெடுத்து ஓடும் வகையில், தி.மு.க.வை சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட புதிதாக 6 மதுபான ஆலைகளுக்கும், 200-க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்கள் எனப்படும் கவர்ச்சி நடன பார்களை திறக்கவும் கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதல அமைச்சர் ரங்கசாமி கவர்னர் ஒப்புதலோடு அனுமதி அளித்துள்ளார்.

    புதுவை முதல்-அமைச்சரின் மதுபான கொள்கையை அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் தொழில்துறை பொறுப்பு வகிக்கும் பா.ஜனதா அமைச்சரே மதுபான தொழிற்சாலைகளை திறக்க தேவையான அனைத்து அனுமதியையும் முன்னின்று வழங்க முயற்சிப்பது மாநில மக்கள், தங்களின் மீது வைத்திருந்த மிகப்பெரும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.

    மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் மெகா ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    எனவே,பிரதமர் புதுவை மாநில மக்களின் மீது அக்கறை கொண்டு முதல்-அமைச்சரின் மக்கள் விரோத மதுபான கொள்கையை தடுத்து நிறுத்தி, புதிதாக வழங்கப்பட்ட மதுபான தொழிற்சாலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதுவை மாநில மக்கள், தங்கள் மீதும், தேசிய ஜனநாயக கூட்டணி மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றிட வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கடிதத்தில் கூறியுள்ளார்.

    ×