என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சி.சி.டி.வி.யில் பதிவான காட்சியை வெளியிட்டு போலீசார் தேடுதல்
    • கடற்கரை பகுதியில் யமாஹா பைக்கை டிப் டாப் நபர் திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சி சிக்கியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக யமாஹா பைக்கை குறிவைத்து திருடுவது அதிகரித்தது.

    ஆனால், திருடர்கள் சிக்கவில்லை. இந்த நிலையில் கடற்கரை பகுதியில் யமாஹா பைக்கை டிப் டாப் நபர் திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சி சிக்கியுள்ளது.

    இதில் புதுவை கடற்கரையை யொட்டிய சாலையில் டிப் டாப் நபர் ஒருவர் கூலாக நடந்து சென்றுஅங்கு நிறுத்தபட்டிருந்த யமாஹா பைக்கை திருடி செல்கிறார். இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.

    இந்த காட்சியை போலீசார் வெளியிட்டு, டிப் டாப் நபரை ஒதியஞ்சாலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தமிழிசைக்கு நாராயணசாமி கண்டனம்
    • கவர்னர் வந்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

    புதுச்சேரி:

    புதுவை ஜெயராம் ஓட்டலில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சித்தலைவர் சிவா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், திராவிடர் கழகம் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அமைப்பினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், கவர்னர் தமிழிசையின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: -

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, தேவையான நிதியை கொடுத்து ஜிப்மரை சிறப்பாக நடத்தி வந்தோம். தற்போது ஜிப்மர் தரம் குறைந்துள்ளது. தகுதியான மருத்துவர்கள் இல்லை.

      நோயாளிகளை கவனிப்பதற்கு தேவையான மருத்துவர்கள் இல்லை. யார் சிகிச்சைக்கு சென்றா லும், குடும்ப அட்டையை காண்பியுங்கள் என்று கேட்கும் நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படு வதாலும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கொடுக்காததாலும், இதனை கண்டித்து நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் மக்கள் பிரச்னையை பற்றி திருமா வளவன், ரவிக்குமார் ஆகி யோர் பேசினர்.

    ஆனால், கவர்னர் தமிழிசையோ ஆவேசமாக பேட்டி கொடுத்துள்ளார். ஜிப்மர் நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. எல்லா மருத்துவ உபகரணங்களும் உள்ளது. பெங்களூருக்கு இணையாக மருத்துவம் கொடுக்கப்படுகிறது.

    ஏழை நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை. ஆனால், விமர்சனம் செய்கிறார்கள். விழுப்புரம் எம்.பிக்கு புதுவையில் என்ன வேலை என்று பேசியுள்ளார்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கான நிதி பாராளுமன்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. அதற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு விழுப்புரம் எம்.பியும் கையெழுத்து போட்டுள்ளார்.

    மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள ஜிப்மரை கண்காணிக்கும் பொறுப்பு அனைத்து எம்பிக்களுக்கும் உண்டு. விவரம் தெரியாமல் கவர்னர் பேசியது வேதனை தருகிறது. ஒரு எம்.பியை தரம் தாழ்ந்து பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஒரு தவறை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் வேலை. அப்படி சுட்டிக்காட்டும் போது, தவறை சரி செய்ய வேண்டும்.

    இதற்கு ஜிப்மர் நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். கவர்னர் வந்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தை பற்றி எம்.பி பேசுவதை கவர்னர் கொச்சைப்படுத்தி பேசுகிறார். கவர்னர் அனைத்திலும் மூக்கை நுழைக்கிறார்.

    கவர்னர் தமிழிசை புதுவை மாநில பா.ஜனதா செயலாளராக செயல்படுகிறார். ஜிப்மரை பற்றி பேசுவதற்கு எங்களுக்கும் விழுப்புரம் எம்.பிக்கும் உரிமை உண்டு. தேவையில்லாத கருத்துகளை கூற கூடாது. வெளியில் பேச வேண்டும் என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேட்டி கொடுங்கள். ஜிப்மர் நிர்வாகம், கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமாவளவன் எம்.பி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • குற்றச்சாட்டுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா பட்டியலின அணி சார்பில் தலைவர் தமிழ் மாறன் தலைமையில் போலீஸ்துறை சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி நாரா சைதன்யாவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போராட்டம் செய்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொச்சைப்படுத்தும் விதத்தில் அவதூறு பரப்பும் விதத்திலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    பிரதமரின் புகழை குறைத்து அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்ததிய திருமாவளவன் எம்.பி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனு அளித்தபோது மாநிலத் துணைத் தலைவர்கள் எஸ்.கே.சி கஜேந்திரன், சுப்பிரமணி, ராஜேஸ்வரி, மாநில செயலாளர்கள் அருள், ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் கலை மாமணி தட்சிணாமூர்த்தி, காமாட்சி, சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர் அருள், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் காத்தவராயன்,

    நகர் மாவட்ட தலைவர் வெற்றிவேல், வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ணரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    • பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • புஷ்பா, சரளா, அமலா, உமா, பிலோமினா, சந்திரா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

     புதுச்சேரி:

    புதுவை மாநிலம் உழவர்கரை சட்டமன்றத் தொகுதியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் தலைமை தாங்கி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சி யில் மாநில இணை செயலாளர் ரகுபதி, தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், உழவக்கரை தொகுதி செயலாளர் கலியமூர்த்தி, மீனன், ஜில்பர், ஆரோக்கி யதாஸ், லூர்து, பாலா, புஷ்பா, சரளா, அமலா, உமா, பிலோமினா, சந்திரா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர் பெருமக்களிடம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கல்வி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் விருப்ப மில்லாமல் புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் கல்வித் திட்டத்தை அமல்படுத்த அவசரகதியில் தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பள்ளி கல்வித்துறை செயல் கண்டனத்துக்குரியது.

    புதுவை அரசானது தற்போது தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி வருகிறது திடீரென மத்திய அரசின் பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவெடுத்து அதற்கான பணியினை அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் ஈடுபடுத்தி செயல்பட வைக்கிறது. ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக மத்திய அரசின் பாடத்திட்டத் திற்கு மாறுவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படு த்துவது மிகுந்த கண்டனத்து க்குரியது. மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு மாறுவதற்கு பதிவு செய்திட ஓரிரு தினங்களை கொடுத்து கால அவகாசம் கொடுக்காமல் அவசரகதியாய் ஒரு குழு கூட்டம் மட்டும் நடத்தி தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

    இது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களிடம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.கல்வி அமைச்சரை திருப்தி ப்படுத்து வதற்காக இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

    கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியது பள்ளிக் கல்வித் துறையின் வேலை. ஒரு குறுகிய அதிகாரம் கொண்ட தலைமை ஆசிரி யர்களை நெருக்கடி கொடுத்து இயக்குனர் செயல்பாடு அமைந்து ள்ளதாக தெரிகிறது. எந்தவிதமான தரவுகள் இல்லாமல் மத்திய அரசின் பள்ளி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
    • 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை தாகூர் கல்லூரி விளையாட்டு மைதா னத்தில் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு கஞ்சா விற்பனை செய் யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் லாஸ்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா தலை மையில் போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்ப னையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் விழுப்புரம் மாவட்டம் ராவுத்தான்குப்பம் கோபிநாத் (வயது 24), சந்தோஷ் (21), மனோஜ் (23), தினேஷ் சர்மா (25) என்பது தெரியவந்தது. இதைய டுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்க ளிடம் இருந்து 17 கஞ்சா பொட்டலங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    புதுச்சேரி:

    ஆரோவில் போலீஸ் நிலையத்தில் பால் விற்பனை டீலர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டம் சேர்ந்தவர் சுப்பராயன் (வயது 52) இவர் கடலூர் மாவட்டம் வடலூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தனியார் பால் பண்ணை மூலம் பால் வாங்கி திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வானூர் இரும்பை கிளியனூர் ஆரோவில் பகுதியில் விற்பனை செய்து வந்தார்.

    அதற்காக வடலூர் பால் கம்பெனி உரிமையாளரிடம் ரூ.3 லட்சத்து 89 ஆயிரம் டெபாசிட் தொகையாக செலுத்தியுள்ளார்.

    சம்பந்தப்பட்ட கம்பெனியின் பால் சரியில்லை என வாடிக்கையாளர்கள் சுப்புராயனிடம் புகார் தெரிவிக்கவே அங்கு பால் வாங்க சுப்புராயன் தவிர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் பால் விற்பனையில் ஆர்வம் கொண்ட சுப்பராயன் கடந்த 2 நாட்களாக வேறு ஒரு கம்பெனி மூலம் பாலை கொள்முதல் செய்து திருச்சிற்றம்பலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் பாலை விநியோகம் செய்து வந்துள்ளார்.

    இதனை அறிந்த பழைய பால் கம்பெனி உரிமையாளர் இன்று காலை சுப்பராயனுக்கு போன் செய்து மிரட்டி உள்ளார் மேலும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் இன்று காலை திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு வந்து சுப்பராயனின் பால் ஏற்றி வந்த வாகனத்தை கடத்தியுள்ளனர்.

    மேலும் பால் வாகனத்தில் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பாலை சாலையில் கொட்டி உள்ளனர். இதனை தட்டி கேட்ட சுப்பராயனை அந்த கும்பல் தாக்கியுள்ளது.

    இதுகுறித்து சுப்பராயன் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பெட்ரோல் கேன் உடன் இன்று காலை சுப்புராயன் ஆரோவில் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள டி.எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    தேசிய தேர்வு முகாம் மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு இன்று மதியம் நடக்கிறது.

    தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

    புதுவையில் காலாப்பட்டு ஸ்டெடி பள்ளி, வில்லியனூர் ஆச்சார்யா, தேங்காய்திட்டு ஆச்சார்யா. முத்தியால்பேட் வாசவி, ஊசுடு பாரத் வித்யாஷ்ரம், குளூனி சி.பி.எஸ்.இ. விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரம் ஆகிய 8 மையங்களில் நீட் தேர்வுக்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

    புதுவையில் 5,758 மாணவ-மாணவிகள் எழுத தயாராகி கொண்டிருந்தனர். தேர்வு மையத்துக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    மதியம் 2 மணிக்கு தேர்வு எழுத மாணவர்கள் தயராகினர்.

    இந்த நிலையில் நீட் தேர்வுக்கு பயந்து புதுவையில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    புதுவை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோ தெரபிஸ்டாக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாட்டால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    துரைராஜ் தற்போது பாலாஜி நகரில் தனியாக வசித்து வருகிறார். பரிமளம் மகன் ஹேமச்சந்திரன் (வயது18) மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். ஹேமசந்திரன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    இன்று மதியம் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் ஹேமசந்திரன் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பரிமளம் கதறி அழுதார். அவரது கதறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    ஹேமச்சந்திரன் கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதினார். இதில் குறைந்த அளவிலான மதிப்பெண் பெற்றார். இந்தாண்டு அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று இன்று நீட் தேர்வுக்கு ஆர்வமாக படித்து வந்தார்.இன்று தேர்வு எழுதவும் தயாராகி வந்தார்.

    இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மூல நட்சத்திர நாள் அன்றும் பாலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
    • பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த பஞ்சவடீயில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.

    கோவிலில், ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மூல நட்சத்திர நாள் அன்றும் பாலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், இன்று 7-ந் தேதி நடக்க இருந்த பாலாபிஷேகம், நிர்வாக காரணங்களால் ஆஞ்சநேயரின் மூல நட்சத்திர தினமான, நாளை மறுநாள் (9-ந் தேதி) நடக்கிறது.

    அன்று மாலை 5 மணிக்கு வழக்கம் போல் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது.

    • வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
    • இலவம் பஞ்சுகளை மரத்தில் இருந்து பறித்து எடுத்துச் செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    தற்போது திருபுவனை மற்றும் மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் இலவம்பஞ்சு மரங்களில் இலவம்பஞ்சு காய்ந்து வெடித்து சிதறுகிறது.

    இதனால் பெரும்பாலும் சாலை ஓரங்களில் இலவம்பஞ்சு மரங்கள் அதிக அளவில் இருப்பதால் பஞ்சுகள் வெடித்து வாகன ஓட்டிகளின் கண்களில் படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதனை அப்புறப்படுத்தும் விதமாக பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த தலையணை மெத்தை தயாரிக்கும் தொழிலாளர்கள் திருபுவனை சுற்றுவட்டார பகுதிகளில் இலவம் பஞ்சுகளை மரத்தில் இருந்து பறித்து எடுத்துச் செல்கின்றனர்.

    இதனால் பஞ்சுகள் வெடித்து பறக்கும் நிகழ்வு குறையும் மேலும் வாகன ஓட்டிகள் எந்தவித சிரமமின்றி வாகனங்களில் சென்று வரலாம் மேலும் தங்கள் பகுதிகளில் இலவம்பஞ்சு மரங்களால் தொந்தரவு ஏற்பட்டால் இவர்களை தொடர்பு கொண்டால் அதனை முற்றிலுமாக அப்புறப்படுத்தி தருகின்றனர்.

    இலவம் பஞ்சு தேவையான தொகை யையும் மரத்தின் உரிமையாளர்களுக்கு அளிக்கின்றனர்.

    • கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்தனர்.
    • புதுவை அனைத்து தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

    இந்த திரைப்படத்தை தடை செய்ய கோரி தமிழகம், கேரளாவில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில்

    புதுவை தி சினிமா புரோவிடன்ஸ் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில்  10.15 மணிக்கு மட்டும் ஒரு காட்சி திரையிடப்பட்டது.

    இதனால் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரமேசு தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் இளங்கோவன், காமராஜ், மணிபாரதி, கோகுல் வேலவன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவுரி தேவிகா திருக்குமரன் முன்னிலை வகித்தார்.

    நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன், கடலூர் மாவட்ச் செயலாளர் சாமிரவி, விழுப்புரம் தொகுதி செயலாளர் விக்ரம் , மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் விசயலட்சுமி, தமிழ்த்தேசிய பேரியக்கம் மாநில செயலாளர் வேல்சாமி, தமிழர்களம் அழகர் புதுவை அனைத்து தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் போலீசார் தடுப்பை மீறி வணிக வளாகத்தின் உள்ளே சென்று ஆர்ப்பா ட்டம் செய்ய முயன்றதால் போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது செய்தனர். பின்னர், நள்ளிரவு 12.45 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

    • பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.
    • சாதி,மதம் பாராமல் உருவாகும் கல்லூரி கால நட்பு இறுதி வரை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் ஆண்டு கலாச்சார மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்து வரவேற்று பேசினார். மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சதீஷ், பேசியதாவது:- எல்லோருக்கும் கல்லூரி மாணவ பருவம் ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்றும் வாழ்வின் எந்த நிலையிலும் அது இனிமையான நினைவை தரும் என்றும் குறிப்பிட்டார். சாதி,மதம் பாராமல் உருவாகும் கல்லூரி கால நட்பு இறுதி வரை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    எம்.ஐ.டி போன்ற சிறந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரி நாட்களில் தீயவை தவிர்த்து, பாடத்திட்டம் தாண்டிய செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, வாழ்வில் உத்வேகம் தரும் முன்மாதிரியாக விளங்கும் சிறந்த மனிதர்களை பின்பற்றி உன்னத நிலை அடைந்து, பெற்றோர்களை போற்றி அரவணைத்து, ஆசிரியர்களை மதித்து பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில், தேசிய அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவ மாணவிகள் மற்றும் மில்லெட் குக்கிங் போட்டியில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பாராட்டு பெற்றனர். கல்லூரி கலாச்சார குழு மற்றும் மகளிர் அதிகாரம், மேம்பாட்டு குழு பேராசிரியர் உறுப்பினர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். விழாவின் முடிவில், கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று நிகழ்த்திய பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    விழாவில், மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த கல்வி நிறுவன இயக்குனர்கள், முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×