என் மலர்
புதுச்சேரி
- புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான்.
- பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையை சேர்ந்த ரவுடிகள் தமிழக பகுதிகளில் சென்று கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி கண்மூடி உள்ளார்.
என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து குவிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கோவில் சொத்துக்களை எம்.எல்.ஏ.க்கள் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா 40 சதவீதம் ஊழலில் கமிஷன் பெற்றனர். புதுவையில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீத கமிஷன் பெறுகின்றனர். இது வரும்காலத்தில் 40 சதவீதமாக உயரும்.
கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் மற்றும் புதுவை விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதை புதுவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடிதான் நிதி அளிக்கப்பட்டது என்றும், தற்போது ரூ.2½ லட்சம் கோடி பா.ஜனதா ஆட்சியில் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்திலிருந்து பெறப்படும் நிதியை திருப்பித்தந்துவிட்டு மந்திரி அமித்ஷா மார்தட்டியுள்ளார். குஜராத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற நிதி வழங்குவதாக கூறி வருகின்றனர்.
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என முதுகெலும்பு உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள கைகட்டி சேவகம் செய்கிறார்.
புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான். பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். புதுவை மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமிழகத்திலும், புதுவையிலும் பா.ஜனதாவுக்கு முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
- பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட தேத்தம்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரை சாலையை புதுவை அசோக் பாபு எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் வாய்க்கால் வசதி மேம்படுத்துதல் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருக்கனூர் தேவநாதன் நகரில் வெங்கடேசன் எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உட்புற சாலைகளுக்கு வாய்க்கால் வசதி மற்றும் சாலையை மேம்படுத்துதல் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரு பணிகளையும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
- அவரது ஆலோசனை அடிப்படையில் கட்டிட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படும்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் தற்போது இயங்கும் சட்டமன்ற வளாகம் பழமையான கட்டிடம் என்பதாலும் இட
நெருக்கடியாலும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
புதுவை ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் அருகில் சுமார் 15 ஏக்கரில் தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டமன்ற வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அங்கு தரைத்தளம் உள்ளிட்ட 6 தளங்களைக் கொண்ட புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ளது.
அதற்காக மத்திய அரசு ரூ.440 கோடி அளிக்க கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிப்பில் டெல்லியை சேர்ந்த தனியார் வடிவமைப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த மாதம் சட்டமன்ற வெளிப்புற தோற்றம் குறித்து முதல்- அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்க ளிடம் தனியார் நிறுவனத்தினர் விளக்கினர். அப்போது சில விளக்கங்களை கேட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி சில மாற்றங்களை செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கட்டிட உள்புற வடிவமைப்பு மாதிரியை முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரிடம் தனியார் நிறுவனத்தினர் மின்னணு திரையில் காட்சிப்படுத்தி விளக்கினர். இதில் சில மாற்றங்களை செய்ய முதல்-அமைச்சர் அறிவுருத்தினார்.
புதுவை பொதுப் பணித்துறை முதன்மைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, பொறியாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபற்றி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியதாவது:-
புதிய சட்டமன்ற கட்டிடங்கள் எண்ணிக்கை, அறைகளின் மாதிரி வடிவம், வளாகத்தில் அமையும் கட்டிடத் தொகுப்புகள் விவரம் ஆகியவற்றை பார்வையிட்டோம். அப்போது அறைகளில் சில மாற்றங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி சுட்டிக்காட்டினார். அவரது ஆலோசனை அடிப்படையில் கட்டிட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படும்.
ஓரிரு நாளில் கட்டிட வடிவமைப்பு பணி நிறைவடைந்து கருத்துரு தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கோர்ட்டு உத்தரவின் படி நடவடிக்கை
- கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நீதிபதி இளவரசன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு பிளம்பராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு 2017-ம் ஆண்டு வழக்கு தொடுத்த நபருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஆனால் இந்த உத்தரவை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் செயல்படுத்தவில்லை.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி புதுவை 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றாத அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நீதிபதி இளவரசன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் கோர்ட்டு அபினாக்கள் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்றனர். அங்குள்ள ஜெனரேட்டர், கார், ஜீப், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தாத வகையில் அதன் மீது நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.
இதனை பார்த்து அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் தொடர் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.
- இடமாற்றத்தை ஏற்கக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.
புதுச்சேரி:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரிய மார்க்கெட் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக பெரியமார்க்கெட்டை தற்காலிகமாக ரோடியர் மில் திடலுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அங்குள்ள வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் தொடர் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.
இதனிடையே காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று மார்க்கெட் இடமாற்றம் குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்டனர். இதில் காய்கறி வியாபாரிகள், பூ வியாபாரிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பெரும்பாலான வியாபாரி கள், இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடன் பெற்று தொழில் செய்வதாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தற்காலிக கடைகளில் பொருட்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் தெரிவித்தனர்.
மேலும் அரசால் திட்ட மிட்டபடி குறித்த காலத்திற்குள் புதுப்பித்து தர முடியாது. ஏற்கனவே இடிக்கப்பட்ட நெல்லித்தோப்பு பணிகள் தொடங்கப்படவே இல்லை. அண்ணா திடல் பணி முடிவடையவில்லை.
எனவே வருடக்கணக்கில் தற்காலிக இடத்தில் மார்க்கெட் இருக்க வேண்டியதிருக்கும். எனவே இடமாற்றத்தை ஏற்கக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.
- லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கோப்பை வழங்கினார்
- இதற்கான ஏற்பாடுகளை பி.ஆர், மற்றும் யு.எல்.கே. பிரதர்ஸ் விளையாட்டு குழு பாபு தலைமையில் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி சார்காசிமேடு கிராமத்தில் கபடி போட்டி தொடங்கியது. துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் புதுவை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 அணிகள் பங்கேற்றன.
முதல் இடத்தை சார்காசிமேடு அணியும், 2-வது இடத்தை பாக்கம் கூட்ரோடு அணியும், 3-வது இடத்தை பாகூர் அணியினர் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கினார்.
மேலும் கிராமத்தில் உள்ள 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவித்து பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பி.ஆர், மற்றும் யு.எல்.கே. பிரதர்ஸ் விளையாட்டு குழு பாபு தலைமையில் செய்திருந்தனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மாநாட்டில் தமிழக செய்தி மற்றும் விளம்ப ரத்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார்.
புதுச்சேரி:
உலக தமிழ்க்காப்பு கூட்டியக்கம் சார்பில் கல்வி கூடங்களில் தமிழ் ஆட்சி அலுவலக மொழி யாகத்தமிழ், திருக்கோவில்களில் தமிழ், நீதிமன்றங்களில் தமிழ் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் எழுச்சி மாநாடுகளை நடத்தி வருகிறது.
அதன்படி சேலம், நாமக்கல் மாவட்டங்களின் மாநாடு ராசிபுரத்தில் நடந்தது. மாநாட்டில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டார்.
மேலும் மாநாட்டு தலைவரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சுப்பிரமணியன் பேசினார்.
நிகழ்ச்சியில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிறவை ஆதினம் குமரகுருபர அடிகளார், உலக தமிழ்க்காப்பு கூட்டியக்கம் நிர்வாகிகள் துரைசாமி, அப்பாவு, புலவர் ரவீந்திரன், கவிஞர் இள.மணி மற்றும் வாசகர் வட்ட செயலாளர் மணிமாறன் சம்பத்குமார், வக்கீல் பரிமளம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
- தொழில்நுட்ப தொடுதிரை கணினி இயங்கி வந்தது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக இவை இயங்காமல் உள்ளது.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் வட்டாட்சியர் அலுவலகங்கள், துணை மாவட்ட ஆட்சியர் அலுவல கங்கள், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலகம் போன்றவற்றில் தகவல் தொழில்நுட்ப தொடுதிரை கணினி இயங்கி வந்தது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக இவை இயங்காமல் உள்ளது.
இந்த தகவல் தொடுதிரை கணினிகளை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பொது தகவல் தொடுதிரை கணினிகளையும் மக்கள் நலன் கருதி உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீர் செய்து அல்லது புதியதாக அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை என்ற முகவரிக்கு ஜூலை 31-ந் தேதிக்கு முன்பாக சமர்பிக்க வேண்டும்.
- அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு தகுதியான வர்களை தேர்வு செய்து பரிந்துரை செய்யும்.
புதுச்சேரி:
புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசின் உயர் விருதான பத்ம விருதுகள் 1954-ம் ஆண்டு தோற்று விக்கப்பட்டு, பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ என 3 வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
2024 குடியரசு தின விழாவில் அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுக்கான தகுதியாளர்கள் தேர்வு நடக்கிறது. தகுதியானர்கள் தேவையான ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி, விளம்பரத்துறை, 18 பெல்காம் வீதி புதுவை என்ற முகவரிக்கு ஜூலை 31-ந் தேதிக்கு முன்பாக சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் புதுவை மாநிலத்தை சேர்ந்த வராக இருக்க வேண்டும். அரசின் இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்யலாம். அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு தகுதியானவர்களை தேர்வு செய்து பரிந்துரை செய்யும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குரும்பாபட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
- அமைச்சர் சாய்.ஜெ சரவணன்குமார், சிவசங்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு அதிநவீன கண்காணிப்பு கேமராவை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி குரும்பபட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு மற்றும் ஸ்ட்ரைவ் நிறுவனம் சார்பில், ஊசுடு தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச கணினி வழங்கும் விழா மற்றும் குருமாம்பேட் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், மக்கள் பயன்பாட்டிற்காக அதிநவீன கண்காணிப்பு கேமரா அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி குருமாம்பேட் சமுதாய நலக்கூடத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைவர் குணசேகரன், செயலாளர் மோகன், புரவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ சரவணன்குமார், சிவசங்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு அதிநவீன கண்காணிப்பு கேமராவை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
மேலும் ஊசுடு தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச கணினிகளை வழங்கி சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ட்ரைவ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் , புதுவை வணிகர் கூட்டமைப்பு தலைவர் பாபு, பொதுச்செயலாளர் முருக பாண்டியன், கூட்டமைப்பின் துணைத் தலைவர் பிரபாகர், பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- குழந்தைகளுக்கு உணவும், செவித்திறன் குறைந்த மாற்று திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவியும் வழங்கினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணா நிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உப்பளம் தொகுதி தி.மு.க. பிரமுகர் நோயல் ஏற்பாட்டின் பேரில் புதுவை கிருஷ்ணாநகரில் உள்ள ஜாலிஹோம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவும், செவித்திறன் குறைந்த மாற்று திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவியும் வழங்கினார்.
இதில் தி.மு.க. தொகுதி செயலாளர் சக்தி, நிர்வாகிகள் ராகேஷ், செல்வம், மரி, பஸ்கல், ரகுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மணிகண்டன் சில நாட்கள் கழித்து அழைத்து வருவதாக தந்தையிடம் தெரிவித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே அரியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பலராமன் (வயது64). இவருக்கு செல்வி என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகன் மற்றும் வள்ளி மற்றும் துர்கா ஆகிய மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வி தனது இளையமகள் துர்கா வீட்டுக்கு சென்றிருந்தார். பலராமன் தனது மனைவி செல்வியை வீட்டுக்கு அழைத்து வருமாறு மகனிடம் கூறி வந்தார்.
அதற்கு மணிகண்டன் சில நாட்கள் கழித்து அழைத்து வருவதாக தந்தையிடம் தெரிவித்தார். ஆனால் இதனை பலராமன் ஏற்காமல் மன வருத்தத்துடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டு வராண்டாவில் பலராமன் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.வெளியில் சென்றிருந்த மணிகண்டன் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பலராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






