என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதிய சட்டமன்ற கட்டிட வடிவமைப்புக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
- அவரது ஆலோசனை அடிப்படையில் கட்டிட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படும்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் தற்போது இயங்கும் சட்டமன்ற வளாகம் பழமையான கட்டிடம் என்பதாலும் இட
நெருக்கடியாலும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
புதுவை ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் அருகில் சுமார் 15 ஏக்கரில் தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டமன்ற வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அங்கு தரைத்தளம் உள்ளிட்ட 6 தளங்களைக் கொண்ட புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ளது.
அதற்காக மத்திய அரசு ரூ.440 கோடி அளிக்க கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிப்பில் டெல்லியை சேர்ந்த தனியார் வடிவமைப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த மாதம் சட்டமன்ற வெளிப்புற தோற்றம் குறித்து முதல்- அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்க ளிடம் தனியார் நிறுவனத்தினர் விளக்கினர். அப்போது சில விளக்கங்களை கேட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி சில மாற்றங்களை செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கட்டிட உள்புற வடிவமைப்பு மாதிரியை முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரிடம் தனியார் நிறுவனத்தினர் மின்னணு திரையில் காட்சிப்படுத்தி விளக்கினர். இதில் சில மாற்றங்களை செய்ய முதல்-அமைச்சர் அறிவுருத்தினார்.
புதுவை பொதுப் பணித்துறை முதன்மைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, பொறியாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபற்றி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியதாவது:-
புதிய சட்டமன்ற கட்டிடங்கள் எண்ணிக்கை, அறைகளின் மாதிரி வடிவம், வளாகத்தில் அமையும் கட்டிடத் தொகுப்புகள் விவரம் ஆகியவற்றை பார்வையிட்டோம். அப்போது அறைகளில் சில மாற்றங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி சுட்டிக்காட்டினார். அவரது ஆலோசனை அடிப்படையில் கட்டிட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படும்.
ஓரிரு நாளில் கட்டிட வடிவமைப்பு பணி நிறைவடைந்து கருத்துரு தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






