என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
    • சட்டசபை கட்டிடம் 6 மாடி, தலைமை செயலகம் 5 மாடி கொண்டதாக அமைக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் புதிய சட்டசபை வளாகம் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளா கத்தில் கட்டப்பட உள்ளது.

    மத்திய அரசின் நிதி ரூ.440 கோடியில் தலைமை செயலகத்துடன் இணைந்த புதுவை சட்டசபை வளாகம் அமைய உள்ளது. இதற்காக கட்டிட வடிவமைப்பை டெல்லியை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.

    ஏற்கனவே 2 முறை கட்டிடத்தின் வெளித் தோற்றம், உள்தோற்ற வரைபடத்தை நிறுவனத்தின் அதிகாரிகள் புதுவைக்கு வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் விளக்கினர்.

    இதில் சில மாற்றங்களை செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தர விட்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் வரைபடத்தை 3டி படக்காட்சியின் மூலம் விளக்கினர். அப்போதும் சில திருத்தங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற வரைபடம் வருகிற 30-ந் தேதி இறுதி செய்யப்பட்டு விடும். மத்திய அரசின் அனுமதி பெறப்படும். ஜூலை 15-ந் தேதிக்குள் டெண்டர் விடும் நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

    புதுவை சட்டசபை வளாகம் 18 மாதங்களில் கட்டப்படும். புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வளாகமாக இது அமையும். தலைமை செயலகத்துடன் ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் கட்ட மத்திய அரசு ரூ.440 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

    இதில் ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்படும். சட்டமன்ற மைய கூட்ட அரங்கில் 60 எம்.எல்.ஏ.க்கள் அமரும் வகையில் அமைக்கப்படும்.

    தலைமை செயலகத்தையும், சட்டசபையையும் இணைக்கும் வகையில் முதல்மாடி இணைக்கப்படும். ஒட்டுமொத்தமாக 15 ஏக்கரில் சட்டசபை வளாகம் அமைக்கப்படும். சட்டசபை கட்டிடம் 6 மாடி, தலைமை செயலகம் 5 மாடி கொண்டதாக அமைக்கப் படும்.

    ஒருங்கிணைந்த வளாகத்தில் ஹெலிபேடு தளமும் அமைக்கப்படும். புதிய சட்டசபை மின்னணு முறையில் பதிவு செய்யும் வகையில் காகிதமில்லா சட்டசபையாக அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள் ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • சவ ஊர்வலத்தில் பலரும் இருக்கும் போது ராஜி எங்களை தாக்கி அவமானப்படுத்தினார்.இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை தியாகு முதலியார் நகர் குடியிருப்பை சேர்ந்த வர் ராஜி (32).

    லாரி டிரைவரான ராஜி மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தேங்காய்திட்டில் நடந்த உறவினரின் இறுதிச் சடங்கில் ராஜி பங்கேற்று பட்டாசு வெடித்து சென்றார்.

    அப்போது அவருக்கும், ஹரி, நிர்மல் ஆகியோர் இடையே பட்டாசு வெடிப்பதில் மோதல் ஏற்பட்டது. இறுதிச்சடங்கு முடிந்து வீடு திரும்பிய ராஜூவை பின்தொடர்ந்து வந்த கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்தது.

    குடியிருப்புகள் நிறைந்த மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வீடு புகுந்து வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் இறுதி ஊர்வலத்தில் ராஜூவிடம் பட்டாசு கேட்டு தகராறு செய்த நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    அதோடு அவர்களுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த வர்கள், உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் தேடினர்.

    நிர்மல், ஹரி, பிரகாஷ், ரெனி, மோகன்ராஜ், ரஞ்சித் ஆகியோரும், வெடிகுண்டு கொடுத்த லோகபிரகாஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலை யாளிகள் போலீசாரிடம் கூறியிருப்பதாவது:-

    சவ ஊர்வலத்தில் பலரும் இருக்கும் போது ராஜி எங்களை தாக்கி அவமானப்படுத்தினார்.இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    திருப்பி தாக்க முயன்ற போது எங்களை மற்றவர்கள் தடுத்து விட்டனர். ஆனாலும் எங்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. ராஜியை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.

    அதற்காக எங்களின் நண்பர்கள் உதவியை நாடினோம். அவர்கள் எங்களுக்கு கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை கொடுத்தனர். அதன் மூலம் ராஜியை வெடிகுண்டு வீசி கொலை செய்தோம் என்று போலீசாரிடம் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படு கிறது.

    இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு விதமான யோகா பயிற்சினை செய்தனர்.
    • யோகா ஆசிரியர் செந்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விழாவை சிறப்பித்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் சார்பில் சர்வதேச யோகா தினவிழா நிகழ்ச்சி புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு விதமான யோகா பயிற்சினை செய்

    தனர். நிகழ்ச்சியை பள்ளியின் மேலாண் இயக்குநர் கிரண்குமார் தொடங்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் எழிலரசி மற்றும் தலைமை ஆசிரியை உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    யோகா ஆசிரியர் செந்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விழாவை சிறப்பித்தார். ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் செய்தனர்.

    • பல லட்சம் மதிப்பிலான காப்பர் வயர், ட்ரான்ஸ்பார்மர் ஆயில் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமப் பகுதிகளில் தொடர் மின்வெட்டு, குறைந்த அழுத்த மின்சாரம் வந்த நிலையில் அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமாரிடம் மனு அளித்தனர்.

    இந்நிலையில் புதுவை மின்துறை சார்பில் அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணி முழுவதும் முடிந்த நிலையில் மின்சார வயரை மட்டும் இணைக்கும் பணி மட்டும் நிலுவையில் இருந்தது.

    இந்நிலையில் அந்த புதிய டிரான்ஸ் பார்மரில் மர்ம நபர்கள் பல லட்சம் மதிப்பிலான காப்பர் வயர், ட்ரான்ஸ்பார்மர் ஆயில் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து மின்துறை இளநிலை பொறியாளர் செல்வராஜ் ரூ.3.65 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருட்டுபோனதாக வில்லியனூர் போலீசில் புகார்செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

    • புதுவை பெண் வேளாண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு
    • கூடப்பாக்கத்தில் உள்ள தனது பண்ணைத் தோட்டத்தில் புதிய மிளகு ரகங்களை பதியம் போட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேளாண் விஞ்ஞானி லட்சுமி.

    தோட்ட பயிர்களில் பல உயர்ரகங்களை கண்டறிந்து நவீன வேளாண்மையில் பல புதுமைகளை புகுத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக, அவரின் தந்தையும் பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் அறிஞருமான வெங்கடபதியும் ஆலோசனை வழங்கி வருகிறார்.

    அவரது வழிகாட்டுதலின் படி மலைபிரதேசங்களில் மட்டும் விளையக்கூடிய மிளகு ரகங்களை சமவெளி பகுதிகளில் பயிரிடும் வகையில் புதிய ரகத்தை பெண் வேளாண் விஞ்ஞானி லட்சுமி கண்டு பிடித்துள்ளார்.

    சமவெளிகளில் கொடியாகவும், செடியாகவும் அதிக மகசூல் தரும் புதிய மிளகு ரகத்தை கண்டறிந்து, அனைத்து பருவங்களிலும் பயிரிடும் வகையில் லட்சுமி அறிமுகம் செய்துள்ளார். இதற்காக, கூடப்பாக்கத்தில் உள்ள தனது பண்ணைத் தோட்டத்தில் புதிய மிளகு ரகங்களை பதியம் போட்டுள்ளார்.

    வழக்கமான மிளகு கொடிகள் 40 அடி உயரம் வரை வளரும் 25 அடிக்கு பிறகு தான் மிளகை தரும். அதற்கு 4 ஆண்டுகள் ஆகும். மிளகை சமவெளிப் பகுதிகளில் பயிரிடும் வகையில் செடிகளுக்கு இலை வழியாக நுண்ணூட்ட சத்துகளை வழங்க வேண்டும்

    அதிகபட்சம் 12 அடி உயரம் வளரும் புதிய ரக மிளகை கீழே இருந்து அறுவடை செய்யலாம்.

    இந்த கொடிகள், கிளை–களாக பரவாமல் ஒரே நேராக வளர்ந்து செல்வதால் கொத்துக்கொத்தாக அதிக காய்கள் பிடிக்கும். செடியின் அடிப்பகுதியி–லிருந்து மேல் பகுதி வரை காய்கள் இருக்கும். ஒரு கிலோ பச்சை மிளகை அறுவடை செய்து காய வைத்தால் 300 கிராம் காய்ந்த மிளகு கிடைக்கும். இந்த புதிய தொழில் நுட்பத்தில், அறுவடைக்கான 40 சதவீதம் செலவை குறைக்க முடியும்.

    ஒரு ஏக்கரில் 2 ஆயிரத்து 700 செடிகளை நடவு செய்யலாம். அதிகபட்சம் 5 அடி உயரத்திலேயே இந்தச் செடிகள் வளர்ந்து காய் காய்க்கும். இந்த மிளகு செடிகள் ஆண்டு முழுவதும் காய்க்கும் திறனுடையது. ஒரு செடி நடவு செய்த 6 மாதங்களில் காய் காய்க்கத் தொடங்கும். 3-வது ஆண்டில் 1½ கிலோவில் தொடங்கி 3 கிலோ வரை மிளகு காய்க்கும்.

    • 1-ந்தேதி தேரோட்டம்
    • முருகன் வள்ளி தெய்வானை தெப்பல் உற்சவமும், 3-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது.

    புதுச்சேரி:

    பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வேதாம்பிகை சமேத மூலநாதர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    இதுபோல் இந்த ஆண்டு 10 நாள் பிரம்மோற்சவ விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு,   6 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிடாரி அம்மன் குதிரை வாகன வீதியுலா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து  4 மணிக்கு பாலவிநாயகர், மூலநாதர், வேதாம்பிகை அம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    பிறகு காலை 6 மணிக்கு கொடி மரத்திற்கு கலச அபிஷேகம், சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் விமர்சையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ பாகூர் தாசில்தார் பிரித்விராஜ் மற்றும் சிவ பக்தர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பிரமோற்சவ விழாவில் தினமும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. இதனைத் தொடர்ந்து வருகிற 29-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், ஜூலை 1-ந் தேதி தேர் திருவிழா, 2-ந் தேதி முருகன் வள்ளி தெய்வானை தெப்பல் உற்சவமும், 3-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், அர்ச்சகர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • அதோடு வேலாயுதத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு முருகன் அங்கிருந்து சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பம் ஐம்பொன் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். (வயது 50) இவர் மொபட் மூலம் டீ வியாபாரம் செய்து வருகிறார்.

    அதுபோல் நேற்று காலை வேலாயுதம் வியாபாரத்துக்கு செல்ல முத்தியால் பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் மொபட்டுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தார். அப்போது முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி வேலாயுதத்தை தாக்கினார்.

    மேலும் மொபட்டையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினார். அதோடு வேலாயுதத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு முருகன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த வேலாயுதம் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து வேலாயுதத்தின் மனைவி கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
    • தொகுதி பொறுப்பாளர்கள் மாணவ-மாணவியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி யூனியன் பிரதேச பொதுநல சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதிக்குட்பட்ட தேங்காய் திட்டு, முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், வீராம்பட்டினம், மணவெளி, நோனாங்குப்பம்,தவளக்கு ப்பம், அபிஷேகப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 2022-2023-ம் ஆண்டு அரசு பள்ளியில் பயின்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு யூனியன் பிரதேச பொதுநல சங்க தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மதிஒளி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் புத்துப்பட்டான் வரவேற்புரையாற்றினார்.

    சங்க ஆலோசகர்களான தொழிலதிபர் அசோக் ராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுரேஷ், சட்ட ஆலோசகர் வக்கீல் ஆறுமுகம், தாகூர் அரசு கல்லூரி பேராசிரியர் டாக்டர் பாலமுருகன், உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், பாஸ்கோ துணை பொது மேலாளர் தினகரன், கோவிந்தசாமி, மாநில செயலாளர் கனகராஜ் பொருளாளர் சபாபதி மற்றும் அரியாங்குப்பம் மணவெளி தொகுதி தலைவர்கள் தங்கரத்தினம், வைத்தியநாதன், பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், சசிகுமார், தர்மா என்ற ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    முடிவில் மாநில துணைத்தலைவர் பூபாலன் நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில, தொகுதி பொறுப்பாளர்கள் மாணவ-மாணவியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
    • ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பர்மிட் நிபந்தனைகளை மீறிய தற்காக வாகன அனுமதி இடை நிறுத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்துத்துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை புஸ்சி வீதியில் பஸ், ஆட்டோ மோதிய விபத்தில் 2 சிறுமிகள் படுகாயமடைந்தனர். ஆட்டோவில் இருக்கை அளவை விட அதிக மாணவர்கள் ஏற்றப்பட்டுள்ளனர். போக்குவரத்துத்துறை பர்மிட் வழங்கும்போது வாகன இருக்கை அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.

    3 சக்கர வாகனங்களில் ஓட்டுநர் உட்பட 4 பேர் பயணிக்க அனுமதிக்க ப்படுகிறது. பள்ளி சிறு வர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ மற்றும் பிற போக்குவரத்து வாகனங்களின் உரிமை யாளர்கள் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பதிவு செய்யப்பட்ட இருக்கையின் ஒன்றரை மடங்கிற்கு மேல் ஏற்றக்கூடாது. அதாவது ஆட்டோவில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் எனில் 5 பேரும், 12 வயதுக்கு மேற்பட்டவர் எனில் 3 பேர் மட்டுமே ஏற்ற வேண்டும்.

    பதிவு செய்த இருக்கை களை விட அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் போக்கு வரத்து வாகனம் ஓட்டுபவர், காரணமானவர் அல்லது அனுமதிப்பவர் சட்ட ப்படி தண்டிக்கப்படுவர். ஒவ்வொரு அதிக பயணிகளுக்கும் ரூ.200, பர்மிட் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பர்மிட் நிபந்தனைகளை மீறிய தற்காக வாகன அனுமதி இடை நிறுத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.

    போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் பர்மிட் வைத்திருப்போர் அனு மதித்த அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டாம். தவறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டி.ஜி.பி.க்கு பிரியாவிடை அணிவகுப்பு கொடுக்கப்பட்டது.
    • வழக்கத்துக்கு மாறாக போலீசாருக்கு இந்தியில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து கோரிமேடு போலீஸ் மைதானத்தில், அவருக்கு விடைகொடுக்கும் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் மற்றும் ஏ.டி.ஜி.பி, சீனியர் எஸ்.பி.க்கள் மற்றும் எஸ்.பி.க்கள் என போலீஸ் துறை அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    இதில் டி.ஜி.பி.க்கு பிரியாவிடை அணிவகுப்பு கொடுக்கப்பட்டது. இந்த அணிவகுப்பிற்கு காரைக்கால் சீனியர் எஸ்.பி. மணிஷ் தலைமை வகித்தார். வழக்கமாக அணிவகுப்பில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) ஆங்கிலத்தில் வழங்கப்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக போலீசாருக்கு இந்தியில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) வழங்கப்பட்டது.

    இவ்விவகாரம் போலீஸ் துறை வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.
    • வியாபாரம் நடைபெறாததால் ஒரு சில கடைகள் மூடியே கிடக்கின்றன.

    புதுச்சேரி:

    புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.என் குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இப்பணிக்காக சாலை ஓரம் இருந்த ஆயிரக்கணக்கான கடைகள் அகற்றப்பட்டன.

    இந்நிலையில் அரியூர், கண்டமங்கலம், திருவாண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு ஆகிய ஊர்களில் சர்வீஸ் சாலைகள் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது.

    இதனால் சாலைகளில் இருபுறமும் உள்ள கடைகளில் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலைகளில் 5 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது திருவண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு மேம்பாலங்களில் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதனால் திருவாண்டார் கோவில், திருபுவனை மதகடிப்பட்டு பகுதியில் பாலங்கள் தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்தில் மட்டுமே பஸ்கள் நின்று செல்வதால் அங்கு சென்று பொதுமக்கள் பயணித்து வருகிறார்கள்.

    இதனால் இடையில் உள்ள ஓட்டல்கள், துணிக்கடைகள், மெடிக்கல், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பாத்திர கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மதுபான கடைகள் என பல்வேறு வியாபார கடைகள் பாதிக்கப்பட்டு, முற்றிலும் வியாபாரத்தை இழந்துள்ளனர்.

    கடைகளுக்கு வாடகை கூட தர முடியாத நிலையில் வியாபாரிகள் தற்போது உள்ளனர். வியாபாரம் நடைபெறாததால் ஒரு சில கடைகள் மூடியே கிடக்கின்றன.

    அதோடு சாலை போடும் பணிகளால் தூசி, மண் உள்ளிட்ட குப்பைகள் கடைகளில் உள்ள பொருட்களில் படிவதால் தினந்தோறும் பொருட்களை சுத்தம் செய்வதற்கே நேரம் சரியாக உள்ளது என்று, வியாபாரிகள் புலம்பி வருகிறார்கள்.

    • மின்துறை எச்சரிக்கை
    • தங்களுடைய மின் கட்டண நிலுவையை பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்தவேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மின்துறை வடக்கு கோட்டத்திற்கு கீழ் இயங்கும் வில்லியனூர், பூமியான் பேட்டை, லாஸ்பேட்டை, கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனூர், காட்டேரிக்குப்பம் ஆகிய மின் அலுவலகத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண நிலுவையை பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்தவேண்டும்.

    கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இந்த தகவலை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×