என் மலர்
புதுச்சேரி
- புதுவை சண்முகாபுரம் நேத்தாஜி வீதியில் வசித்து வருபவர் பாபு.
- பாபு தனது பழுதான மொபட்டை நிறுத்தியிருந்தார்.
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் பிரியதர்ஷினி நகர் நேத்தாஜி வீதியில் வசித்து வருபவர் பாபு. இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சண்முகாபுரம் வி.பி.சிங் நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.
அப்போது அந்த வீட்டின் எதிரே உள்ள காலி மனையில் பாபு தனது பழுதான மொபட்டை நிறுத்தியிருந்தார். ஆனால் வீட்டை காலி செய்த பின்னரும் அந்த மொபட்டை எடுத்து செல்லவில்லை. இதையடுத்து கிருஷ்ணகுமார் அந்த மொபட்டை எடுத்து செல்லும்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாபுவிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் பாபு மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் மொபட் நிறுத்தியிருந்த இடத்துக்கு சென்ற போது அங்கு மொபட்டை கிருஷ்ணகுமார் கீழே தள்ளிவிட்டதை கண்டனர். இதனை பாபு தட்டிக்கேட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் மேட்டுப்பாளையம் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை தவளக்குப்பம் அருகே அபிஷேகபாக்கம் புதுநகரை சேர்ந்தவர் பிரபுதாஸ்
- புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்
புதுச்சேரி:
புதுவை தவளக்குப்பம் அருகே அபிஷேகபாக்கம் புதுநகரை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அபிஷேகப்பாக்கம்-உருவையாறு ரோட்டில் செல்போனில் பேசியபடியே வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அங்குள்ள கருமகாரிய கொட்டகை அருகே வந்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பிரபுதாசை தடுத்து நிறுத்தி வில்லியனூருக்கு வழி கேட்டனர்.
பிரபுதாஸ் வழி சொல்லிக்கொண்டிருந்த போது திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி பிரபுதாசிடம் செல்போனை கொடுத்து விடு இல்லையென்றால் வெட்டி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன பிரபுதாஸ் செய்வதை அறியாமல் தவித்தார். உடனே அந்த கும்பல் பிரபுதாசிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டது.
இதையடுத்து செல்போனை பறிகொடுத்த பிரபுதாஸ் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து செல்போனை பறித்து சென்ற கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- புதுவை முத்தியால்பேட்டை தெபேஸ்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்ராஜ்.
- கூலி தொழிலாளி மரிஜோஸ்பின் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை தெபேஸ்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்ராஜ். கூலி தொழிலாளி மரிஜோஸ்பின் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக லாரன்ஸ் ராஜ் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து வந்தார். இதனை அவரது மனைவி மரிஜோஸ்பின் தட்டிக்கேட்ட போது 2 முறை லாரன்ஸ்ராஜ் தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து மரிஜோஸ்பின் புதுவை நேரு வீதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று லாரன்ஸ்ராஜ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி மரிஜோஸ்பின் இப்படி வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து விட்டு வருகிறீர்களே என்று கண்டித்தார். பின்னர் மரிஜோஸ்பின் சமையல் அறைக்கு சென்று சமையல் செய்து கொண்டிருந்தார்.
மனைவி கண்டித்ததால் மனமுடைந்த லாரன்ஸ்ராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து படுக்கை அறைக்கு சென்று மின்விசிறியில் துப்பட்ட வால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தொழில் முனைவுக்கான மாறுதல் என்ற தலைப்பில் உரையாற்றினர்.
- கல்லுாரி முதல்வர் மலர்கண் வரவேற்றார்.
புதுச்சேரி:
சி.ஐ.ஐ., அங்கமான 'யங் இந்தியன்ஸ் ஜி 20' இளையோர் உச்சி மாநாடு டெல்லியில் நாளை மறுநாள் 13-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. இதன் முன்னோட்டமாக எம்.ஐ.டி. கல்லுாரியில் மாநாடு நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் மலர்கண் வரவேற்றார்.
ஸ்டார்ட் அப் இந்தியா குறித்து சி.ஐ.ஐ., தலைவர் ஜோசப் ரோஜாரியா, அடல் இன்குபேஷன். தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணுவர்தன் ஆகியோர் பேசினர். ஹாப்ஸ்டிக் டெக்னலா ஜிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ண பிரதாப், பல்ஸ்பே நிறுவன மேலாண் இயக்குநர் சிதம்பர ராஜா ஆகியோர், வேலை தேடுதலில் தொழில் முனைவுக்கான மாறுதல் என்ற தலைப்பில் உரையாற்றினர்.
இந்திய டிஜிட்டல் புரட்சி குறித்து ட்விலைட் ஐ.டி. சொல்யூஷன்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி திருவேங்கடம் கிருஷ்ணசாமி, செமூரியா இன்க் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் சாமுவேல் ஆகியோர் உரையாற்றினர். மணகுள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினர்.
துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளா ராஜராஜன் முன்னிலைவகித்தனர். பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த இளம் சாதனை யாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிகப்பட்டது.
ஏற்பாடுகளை சி.ஐ.ஐ., ஓய்20 சேர்மத் திலீப், இணை சேர்மன் ஆனந்த கிருஷ்ணன் எம்.ஐ.டி., கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார்,மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.
- சமூக விரோதிகள் தொடர்ந்து எந்தவித அச்சமும் இன்றி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அரசுத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் போலி மோசடி பத்திர பதிவுகள் மூலம் சில முக்கிய அதிகாரிகளின் துணையோடு சில ஆண்டுகளாக மீண்டும் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் இடங்கள், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளை சமூக விரோதிகள் தொடர்ந்து எந்தவித அச்சமும் இன்றி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தடுக்க வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மோசடி பத்திரப்பதிவு மூலம் நில அபகரிப்பு நடைபெறுவதில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஆனால் அவர்களை எல்லாம் கைது செய்ய நடவடிக்கையை மேற்கொ ள்ளாமல் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் பெறுவதற்கு வசதி செய்து கொடுத்து ள்ளனர். துறை ரீதியான நடவடிக்கையும் அவர்கள் மீது இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
தற்பொழுது போலி பத்திரம் பதிவு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள முக்கிய குற்றவாளி கிருஷ்ணா நகரில் கோவில் நிலத்தை மோசடியாக பதிவு செய்து ள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரில் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூன்மாதம் 15-ந் தேதி வழக்கு பதியப்பட்டது. ஆனால் அது தொடர்பான மேல் நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநில புதிய டி.ஜி.பி. பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வுகள் செய்வதும், கஞ்சாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மிகவும் பாராட்டுக்குரியது.
அதேபோல் கிருஷ்ணா நகரில் போலி பத்திர பதிவு செய்த கோவில் நிலத்தை டி.ஜி.பி. ஆய்வு செய்து தேவையான விசாரணை மேற்கொள்ள லாஸ்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் புதுவை அரசு மற்றும் கவர்னர் இது போன்ற மோசடி போலி பத்திர பதிவுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்கள் முதுநிலை படிப்பில் சேர புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- புதுவையை சேர்ந்த 499 பேர், வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
புதுச்சேரி:
மத்திய சுகாதார அமைச்சகம் எம்.பி.பி.எஸ். இன்டர்ன்ஷிப் கட் ஆப் தேதியை ஆகஸ்ட்டு 11-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. இதையடுத்து இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்கள் முதுநிலை படிப்பில் சேர புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று 11-ந் தேதி முதல் 13-ந் தேதி மாலை 6 மணி வரை எம்.டி, எம்.எஸ். படிப்புகளுக்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே எம்.டி, எம்.எஸ். முதுநிலை படிப்புகளுக்கு புதுவையை சேர்ந்த 499 பேர், வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.
- விழுப்புரம் -நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது.
- மண் பாதையில் டேங்கர் லாரியும் மினி வேனும் அடுத்தடுத்து பழுதாகி போனது.
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே நவம்மாள் காப்பேர் பகுதியில் தற்பொழுது விழுப்புரம் -நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் ஒரு வழி பாதை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை மண் பாதையில் டேங்கர் லாரியும் மினி வேனும் அடுத்தடுத்து பழுதாகி போனது.
இதனால் அங்கு ஒரு வழிப்பாதை என்பதால் புதுச்சேரியில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் சாலையிலேயே அணிவகுத்து நின்றது இதனால் கல்லூரி செல்லும் பேருந்துகள் பள்ளி செல்லும் வாகனங்கள் பணிக்கு செல்வோரின் இரு சக்கர வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் சாலையிலேயே நின்றதால் போக்கு வரத்து ஸ்தம்பித்தது.
இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழுதான வாகனங்களை அப்புறப்படுத்தி மற்ற
வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்தனர் இதனால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மீன்பிடி கோடை சந்திப்பு மகாபலிபுரத்தில் நடந்தது.
- மீனவ பயனாளிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
தேசிய மீன் விவசாயிகள் தினத்தையொட்டி மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மீன்பிடி கோடை சந்திப்பு மகாபலிபுரத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் புதுவை அரசின் பிரதிநிதியாக அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்று பேசியதாவது:-
புதுவையில் அரசு நல திட்டங்களுக்கு மீனவ பயனாளிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதனை நீக்க வேண்டும்.
டி.ஆர்.பட்டினத்தில் மீன் இறங்கு மையம், ஆற்று முகத்துவாரம் சுகாதாரமாக இருக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காரைக்காலில் தற்போதுள்ள மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். காரைக்கால் மேடு, பட்டினச்சேரியில் மீன் இறங்கு துறையை கையாளவும், மீன்பிடி கைவினை பொருட்கள் பாதுகாப்பாக நங்கூர மிடவும் கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும்.
புதுவை, காரைக்கால் சுனாமி குடியிருப்புகளில் சாலை, வடிகால், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். காரைக்கால் வடக்கு கடற்கரை, மாகி கட ற்கரையில் உள்ள பாதுகாப்பு சுவர்களை பலப்படுத்த வேண்டும். மாகி துறைமுகத்தில் விடு பட்ட பணிகளை நிறைவு செய்ய 100 சதவீத நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் காரைக்கால் மீனவர்களின் படகுகள், வலைகளை இலங்கை அரசு நாட்டுடமை ஆக்குகிறது. மத்திய அரசு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு கடன் அட்டை மூலம் வட்டியின்றி கடன் வழங்க வேண்டும். புதுவை யூனியன் பிரதேசம் முழுவதும் கடல் அரிப்பை தடுக்க உடனடியாக வடக்கு தெற்காக பாதுகாப்பு சுவர் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகும் லேசாக தூரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
- பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் அப்பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் புதுச்சேரியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை வானில் கரு மேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தோன்றி குளிர்ந்த காற்று வீசியது.
தொடர்ந்து 6 மணிக்கு மேல் இடி-மின்னலுடன், மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகும் லேசாக தூரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
கன மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்டது. 2 மணி நேரம் பெய்த மழையால் நகரின் பிரதான சாலைகளான புஸ்சி வீதி, காந்தி வீதி, சின்னசுப்புராயப் பிள்ளை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனங்கள் மழை நீரில் தத்தளித்தப்படி மெதுவாக ஊர்ந்து சென்றன. கடற்கரை சாலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீரில் சுற்றுலா பயணிகள் சிலர் ஆனந்த குளியல் போட்டனர்.
நகரின் பல வீதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின.
அதுபோல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் அப்பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அப்போது மின் நிறுத்தம் செய்யப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மரக்கிளைகளை அகற்றினர்.
அதுபோல் மின்துறை ஊழியர்களும் அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைத்தனர். மழை நின்ற பிறகு மின் விநியோகம் செய்யப்பட்டது.
இன்று காலையிலும் லேசாக தூரல் மழை பெய்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.8 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டினார்.
- வாலிபர் தொடர்ந்து பணம் கேட்டு பெண்ணிடம் தொந்தரவு செய்து வந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான 31 வயது பெண்ணின் செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'இன்ஸ்டாகிராம்' மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. எதிர்முனையில் செய்தி அனுப்பிய நபர், அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பினார்.
மேலும் அந்த நபர், உனது ஆபாசபடம் நிறைய இருப்பதாகவும், அதனை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.8 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பயந்து கணவரிடம் அதனை தெரிவிக்காமல் அந்த நபருக்கு ரூ.8 ஆயிரத்தை அனுப்பி வைத்தார்.
ஆனால் அந்த நபர், தொடர்ந்து பணம் கேட்டு அந்த பெண்ணிடம் தொந்தரவு செய்து வந்தார். இதையடுத்து அந்த பெண் தனது கணவரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதுகுறித்து பெண்ணின் கணவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர் சென்னையை சேர்ந்த பட்டதாரி வாலிபர் விக்னேஷ் (வயது26) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- காட்டேரிக்குப்பம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் 100 நாள் வேலை திட்டப் பணிக்காக லிங்கா ரெட்டிப் பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பொது மக்கள் இன்று காலை வேலைக்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்த காட்டேரிக்குப்பம் கிராம பொதுமக்கள் எங்கள் ஊர் ஏரியில் நீங்கள் எப்படி வந்து வேலை செய்யலாம் என கேட்டு அவர்களை வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பின ருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காட்டேரிக்குப்பம் கிராம மக்கள் அங்குள்ள கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதனால் சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக காட்டேரிக்குப்பத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- போலீசில் புகார் தெரிவித்ததால் ஆத்திரம்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் முன் ஜாமீன் பெற்று விட்டனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் துறைமுக ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் (வயது 29). இவர் கப்பலில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார்.
தற்போது 5 மாத விடு முறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருடன் வேலை செய்யும் ஊழியர் ஞானேஸ்வரனும் விடுமுறையில் வந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோவில் குளத்திற்கு அருகே கவுதம்ராஜ் நின்று கொண்டி ருந்த போது அவரை ஞானேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் கையாளும் தடியாலும் தாக்கினர்.
இது சம்பந்தமாக கவுதம்ராஜ் அரியாங்குப்பம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் முன் ஜாமீன் பெற்று விட்டனர். பிறகு கோர்ட்டு மூலம் தினம்தோறும் கையெழுத்திட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தேரோடும் வீதியில் நின்று கொண்டிருந்த கவுதம்ராஜை ஞானேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் வசந்தகுமார், யுனதன் ஆகிய 3 பேர் சேர்ந்து, உன்னை எவ்வளவு அடித்தாலும் போலீசில் புகார் தெரிவித்தாலும் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது. போலீசில் புகார் தெரிவித்தால் நாங்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுவோம் என கூறி கையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர்.
இது சம்பந்தமாக மீண்டும் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் கவுதம்ராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரன், வசந்தகுமார், யுனதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.






