என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கோவில் நிலம் அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை
- சமூக விரோதிகள் தொடர்ந்து எந்தவித அச்சமும் இன்றி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அரசுத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் போலி மோசடி பத்திர பதிவுகள் மூலம் சில முக்கிய அதிகாரிகளின் துணையோடு சில ஆண்டுகளாக மீண்டும் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் இடங்கள், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளை சமூக விரோதிகள் தொடர்ந்து எந்தவித அச்சமும் இன்றி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தடுக்க வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மோசடி பத்திரப்பதிவு மூலம் நில அபகரிப்பு நடைபெறுவதில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஆனால் அவர்களை எல்லாம் கைது செய்ய நடவடிக்கையை மேற்கொ ள்ளாமல் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் பெறுவதற்கு வசதி செய்து கொடுத்து ள்ளனர். துறை ரீதியான நடவடிக்கையும் அவர்கள் மீது இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
தற்பொழுது போலி பத்திரம் பதிவு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள முக்கிய குற்றவாளி கிருஷ்ணா நகரில் கோவில் நிலத்தை மோசடியாக பதிவு செய்து ள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரில் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூன்மாதம் 15-ந் தேதி வழக்கு பதியப்பட்டது. ஆனால் அது தொடர்பான மேல் நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநில புதிய டி.ஜி.பி. பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வுகள் செய்வதும், கஞ்சாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மிகவும் பாராட்டுக்குரியது.
அதேபோல் கிருஷ்ணா நகரில் போலி பத்திர பதிவு செய்த கோவில் நிலத்தை டி.ஜி.பி. ஆய்வு செய்து தேவையான விசாரணை மேற்கொள்ள லாஸ்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் புதுவை அரசு மற்றும் கவர்னர் இது போன்ற மோசடி போலி பத்திர பதிவுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






