என் மலர்
புதுச்சேரி
- முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
- இந்தியா கூட்டணியில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான். இந்த முடிவுகள் பிரதமர் மோடியை ஆடச்செய்திருக்கிறது.
புதுச்சேரி:
விழுப்புரம் தென்கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவனின் 60 வயது நிறைவு விழாவில் புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்து கொண்டு பாடுபட்டு கொண்டி ருப்பவர் திருமாவளவன். மதச்சார்பற்ற கூட்டணிகளை ஒருங்கிணைத்து இந்தியா என்ற கூட்டணியாக மாற்ற பாடுபட்ட முக்கிய 2 தலைவர்களில் ஒருவர்
தி.மு.க. முதல்-அமைச்சர் ஸ்டாலின், மற்றொருவர் திருமாவளவன். இவர்கள் இருவரும் மேற்குவங்க முதல்வர், பீகார் லல்லுபிரசாத் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்கள். மற்ற தலைவர்களும் சந்தித்தித்து ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இநத 2 தலைவர்களின் முயற்சியால் இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உருவாகியுள்ளது.
எப்போதும் ஆவேசமாக பேசும் பிரதமர் மோடி இப்போது வசைபாடும் மோடியாக மாறிவிட்டார்.
அதற்கு காரணம் பெங்களூரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான். இந்த முடிவுகள் பிரதமர் மோடியை ஆடச்செய்திருக்கிறது.
சமூக நீதி, தனிமனித சுதந்திரம், பேச்சுரிமை, அம்பேத்கரின் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காக்க அவரது பேச்சு இருக்கும். தனது கொள்கையில் இருந்து எப்போதும், என்றும் மாறாத தலைவர் திருமாவளவன், தமிழகம், புதுவையை பிரித்து பார்க்காத தலைவர் திருமாவளவன். மோடிக்கு என் மீது மிகுந்த பாசம் உண்டு.
ஏனென்றால் நரேந்திரமோடி சிபிஐ, உளவுத்துறையை அனுப்புகிறார் ஏன் நீங்கள் பயப்படுவதில்லை என்று கேட்டனர். நானும் சி.பி.ஐ அமைச்சராக இருந்துள்ளேன். நான் மோடியையும் பார்ப்பேன். அவரது தாத்தாவையும் பார்ப்பேன் என்றேன். மாநிலம் மற்றும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தாழ்த்தப் பட்டவர்கள், சிறுபான்மையினரை குறி வைக்கின்றனர்.
தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். மோடி இதை கண்டுகொள்வதில்லை. மோடியின் ஆட்சியில் வளர்ச்சி இல்லை. பொருளாதாரம் இல்லை. ஆனால் அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு அதிகாரம் துஷ்பிரோயகம் செய்து இந்த நாட்டில் மோடி ஆட்சியை நடத்திகொண்டு இருக்கிறார். இப்பொழுது நாட்டில் மாற்றம் வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு
- மளிகை கடை, டீ கடை, துணிக்கடை திறப்பு விழாக்களுக்கு தலைமை ஏற்கும் முதல்- அமைச்சர், கீழூர் சென்று கொடியேற்றாதது விந்தையாக உள்ளது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆகஸ்டு 16-ம் நாள் புதுவையின் சுதந்திரத்திற்கும் இந்திய யூனிய னோடு சேர்ந்து யூனியன் பிரதேசமாக மாறியதற்கும் வித்திட்ட நாள். புதுவை மண்ணின் மைந்தர்கள் அனைவரும் போற்றிப் புகழ வேண்டிய ஒரு நாள். அந்த நாளை புதுவை சட்டபூர்வபரிமாற்ற நாள் விழாவாக வாக்கெடுப்பு நடந்த கீழூரில் புதுவை அரசு கொண்டாடு கிறது.
அந்த நாளில் தேசியக் கொடி ஏற்றி தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் அங்கு நடந்தவிழாவில் கலந்து கொண்டு கொடியேற்றவில்லை.
கீழூரின் வரலாற்று முக்கியத்துவத்தை முதல்- அமைச்சர் உணரவில்லையா? மளிகை கடை, டீ கடை, துணிக்கடை திறப்பு விழாக்களுக்கு தலைமை ஏற்கும் முதல்- அமைச்சர், கீழூர் சென்று கொடியேற்றாதது விந்தையாக உள்ளது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது கடமையிலிருந்து தவறி உள்ளார். இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய முதல்-அமைச்சர் கீழூரிலும் கொடியேற்றி புதுவைக்கும், அதன் சுதந்திரத்திற்கும் மரியாதை செய்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் கீழூருக்கு முக்கியத்துவம் அளித்து அதனை வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கி அரசு செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஆதிமலர் இல்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் பரசுராமபுரம் பாரதிதாசன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஆதிமலர் (வயது 47) இவரது கணவர் இறந்து விட்டதால் தனது இளைய மகள் கல்பனா பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை ஆதிமலர் வீட்டு வாசலில் கோலம் போடச்சென்றார். ஆனால் அதன் பிறகு அவரை காணவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஆதிமலர் இல்லை.
இதையடுத்து கல்பனா தனது தாய் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பேச்சு வார்த்தைக்கு பாட்டாளி தொழிற்ச ங்கத்தை அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- எம்.ஆர்.எப்.தொழிற்சங்க தலைவர் விஜயன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பண்டாரி நாதன்,ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கத்தில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த நிலையில் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் எம்.ஆர்.எப்.தொழிற்சங்க கவுரவ தலைவரும் மாநில துணை அமைப்பாளருமான நெட்டப்பாக்கம் புருஷோ த்தமன் முன்னிலையில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் மற்றும் குழு மேலாளர் மற்றும் தயாரிப்பு மேலாளர் ஆகியோரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலையில் 4 ஆண்டு களுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை யை உடனே தொடங்க வேண்டும். பேச்சு வார்த்தைக்கு பாட்டாளி தொழிற்ச ங்கத்தை அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது எம்.ஆர்.எப்.தொழிற்சங்க தலைவர் விஜயன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பண்டாரி நாதன்,ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- மாநில துணை தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாள ருமான தேவதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- ஜெரால்டு, ராஜ்மோகன், சண்முகம், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியோர் இணைந்தனர்.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவல கத்தில் நடந்த இணைப்பு விழாவிற்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாள ருமான தேவதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
வக்கீல் பிரிவின் தலைவர் மருது பாண்டியன் முன்னிலை யில் ராஜ் பவன் தொகுதியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி சித்தானந்தம் தலைமையில் காங்கிரசில் இணைந்தனர். காமராஜர் நகரை சேர்ந்த தொழிலதிபர் பரந்தாமன் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
விழாவில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, மாநில காங்கிரஸ் பொதுச்செ யலாளர் திருமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாபுலால்,வக்கீல்கள் ராமலிங்கம், கோவிந்தராசு, மாவட்டத் தலைவர் வேல்முருகன் வட்டாரத் தலைவர்கள் ராஜா, ஜெரால்டு, ராஜ்மோகன், சண்முகம், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரெயில்வே ஊழியர் இது பற்றி ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை விழுப்புரத்துக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் ரெட்டியார் பாளையம் வயல்வெளி நகரில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்து சென்ற போது ரெயில் பெட்டியில் இருந்து ஒரு பயணி எதிர்பாராத விதமாக தவறி கிழே விழுந்தார்.
சுமார் 55 மதிக்கத்தக்க அந்த பயணி தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அந்த ரெயில்வே கேட்டில் பணியிலிருந்த ஊழியர் கோலியிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ரெயில்வே ஊழியர் இது பற்றி ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயிலில் தவறி விழுந்து இறந்த அந்த முதியவர் காட்பாடிக்கு ரெயில் டிக்கெட் எடுத்து இருந்தார். எனவே அவர் காட்பாடி பகுதியை சேர்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.
- புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும்.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரிக்கு ரெயில் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் புதுவை ரெயில்நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரி ரெயில்நிலையம் அழகுற மேம்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.
இந்த பட்டியலில் தற்போது புதுவையும் இடம்பெற்றுள்ளது. புதுவையிலிருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை திருப்பதி இடையிலான 340 கிமீ தூரத்துக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும். இந்த ரெயில் புதுவை, விழுப்புரம் சந்திப்பு, மதுராந்தகம், சென்னை சென்ட்ரல், அரக்கோணம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
புதுவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில்சேவை வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
- 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.
- தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்துதல் மற்றும் மாதிரி கிராமம் ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழில்நுட்பத்துறை செயலர் மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறை செயலர் நெடுஞ்செழியன், மாவட்ட கலெக்டர் வல்லவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
புதுச்சேரியில் தொழில் நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். ஸ்கில்டா மூலமாக 4,000 தொழிற்கல்வி மாணவர்கள் மற்றும் பிற கல்லூரிகளை சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.
இளநிலை கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.
இது மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலில் அதற்கான திட்டம் வகுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் விதமாக புதுச்சேரியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
- புதுச்சேரி, தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் இருந்து 28 அணிகள் பங்கு பெற்று விளையாடின.
- பா.ஜனதா பிரமுகர்கள் டி. எம். வருண், முருகன் என்கிற பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை கால்பந்து நண்பர்கள் கழகம் சார்பில் நடத்திய 21-ம் ஆண்டு சுதந்திர தின கால்பந்தாட்ட போட்டிகள் புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் இருந்து 28 அணிகள் பங்கு பெற்று விளையாடின. போட்டிகள் அனைத்தும் நாக்கவுட் முறையில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் புதுச்சேரி பி.கே. பிரதர்ஸ் அணியும் விளையாடின.
இதில் 2 அணிகளும் போட்டி நேரத்தில் சமநிலையில் இருந்ததால் டை பிரேக்கர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் திருச்சி சென் ஜோசப் கல்லூரி அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றனர். பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் விவிலியன் ரிச்சர்ட் ஜான்குமார், வி.பி. ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசினை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா பிரமுகர்கள் டி. எம். வருண், முருகன் என்கிற பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- 500-க்கும் மேற்பட்ட போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.
புதுச்சேரி:
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.
அதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் , கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமானந்தன், தனி அதிகாரி சுரேஷ், பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்ட வீராம்பட்டினம் கிராம முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்
டனர். தேரோட்டத்தை யோட்டி அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.
மேலும் அப்பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் புறக்காவல் நிலையம் கழிப்பிட வசதி குடிநீர் வசதி ஆம்புலன்ஸ் வசதி தீயணைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கோவிலுக்கு வருபவர்கள் வீராம்பட்டினம் ரோடு வழியாக செல்லவும், கோவிலில் இருந்து வருபவர்கள் சின்னவீராம்பட்டினம வழியாக மணவெளி வழியாக கடலூர் - பாண்டி ரோட்டில் செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
- பெண்கள் காப்பக்கத்தில் ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி தலைவர் சீனிவாசன் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
- அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி மணவெளியில் உள்ள அரிச்சுவடி மனநல மையத்தில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆண்கள் காப்பகத்தில் டாக்டர் அரவிந்தன் தேசியக்கொடி ஏற்றினார். பெண்கள் காப்பக்கத்தில் ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி தலைவர் சீனிவாசன் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
மேலும் நோயாளிகளுக்கு கேக் வெட்டி வழங்கப்பட்டது. மன நோயாளிகள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் கலை
நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி முன்னாள் தலைவர் சதீஷ் குமார், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் டாக்டர் சத்தியவண்ணன், ஜெயக்குமார், வக்கீல் பரிமளம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் அரிச்சுவடி டிரஸ்டி அரசமாதேவி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
- புதுவை அ.தி.மு.க. அறிவிப்பு
- அ.தி.மு.க. தொண்டர்கள் மீது தாக்குதல்களை நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்வரும் 20-ந் தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநாட்டை நடத்தும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பை செயல்படுத்த தொண்டர்கள் மாநாட்டு பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. இந்த மாநாட்டை கண்டு பயந்து ரத்து செய்ய முடியாத நீட் தேர்வு பிரச்சினைக்காக உண்ணாவிரதம் என்ற அறிவிப்பை தி.மு.க. அறிவித்திருக்கிறது.
மாநாட்டிற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கட்சி தொண்டர்கள் அலை அலையாக வரும் போது தி.மு.க.வினர் உண்ணாவிரதம் என்கின்ற பெயரில் ஆங்காங்கே தி.மு.க. குண்டர்களை வைத்து அ.தி.மு.க. தொண்டர்கள் மீது தாக்குதல்களை நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மதுரை மாநாடு வருகிற 20-ந் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி 3 மாதத்திற்கு முன்பே அறிவித்தார். நேற்றைய தினம் அதே நாளில் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் என அறிவித்திருப்பது அநாகரீக செயலாகும்.
பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு உச்சநீதிமன்றம் இறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் நீட் தேர்வை ரத்து செய்வோம் தி.மு.க. தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றது.
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த பிறகு 2021 செப்டம்பர் மாத்த்தில் நீட் தேர்வு ரத்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 5.5.2022 அன்று கவர்னர் ஜனாதிபதிக்கு அந்த தீர்மானத்தை அனுப்பியுள்ளார்.
இது சம்பந்தமாக நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தி.மு.க, காங்கிரஸ் எம்.பி.க்களும் வாய்திறக்காத நிலையில் தற்போது தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த நீட் சம்பந்தமாக உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுமானால் அதற்கு முழு பொறுப்பும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஏற்க வேண்டும்.
தலைமை கழகத்தின் அனுமதி பெற்று நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட தி.மு.க.வை வலியுறுத்தி இன்னும் ஒரிரு நாளில் அ.தி.மு.க. சார்பில் புதுவையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். எனவே உடனடியாக நீட் தேர்வு ரகசியத்தை தி.மு.க. வெளியிட வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.






