என் மலர்tooltip icon

    விருதுநகர்

    நரிக்குடி அருகே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    காரியாபட்டி:

    நரிக்குடி அருகே மறையூர், சேதுராயனேந்தல், நெடுகனேந்தல், மாயலேரி ஆகிய கிராமங்களில் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

    தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதனால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து, மழைநீரில் மூழ்க ஆரம்பித்து விட்டன.

    மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இதுகுறித்து மறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட மறையூர், சேதுராயன், ஏந்தல், நெடுகநேந்தல்மாரி ஆகிய கிராமங்களில் நெற்பயிர்கள் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டு மிகவும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

    நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்ததை பற்றி வேளாண்மை துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று மனுவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளின் நலன் கருதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகாசி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகாசி:

    சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட எஸ்.என்.புரம். பஞ்சாயத்தில் ஸ்டேட் பாங்க் காலனி உள்ளது.

    இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு போதிய தார் சாலைகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து நகர பகுதிக்கு வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    இதனால் மழைக்காலங்களில் மண் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் வழுக்கி கீழே விழும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த பகுதியில் உள்ள மண் சாலையை, தார் சாலையாக மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அடிப்படை வசதிகள் இல்லாத இப்பகுதியை சிவகாசி ஒன்றிய அதிகாரிகளும், செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து நிர்வாகத்தினரும் ஸ்டேட் பாங்க் காலனி வந்து ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தங்கும் விடுதியில் பிளஸ்-2 மாணவருடன் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் குருவராஜா தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன ராஜா (வயது 55). இவர் குவைத், மஸ்கட் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்த்து தற்போது கோவையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    இவரது மனைவி கலாவதி (48), மகன் சித்தார்த் (17). இவர் கோவையில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    மகன் அங்குள்ள பள்ளியில் படித்து வந்ததால் ஜனார்த்தனன் கோவையிலேயே மனைவி, மகனுடன் தங்கினார்.

    நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும் ராஜபாளையம் வந்து அங்கு காமராஜர் நகர் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள்.

    இரவு சுமார் 11 மணியளவில் ஜனார்த்தனன், தனது நண்பர் ஒருவரிடம் தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு தானும் அங்கு விரைந்து வந்தார்.

    போலீசார் கதவை திறந்து பார்த்தபோது, ஜனார்த்தன ராஜா மற்றும் சித்தார்த் ஆகியோர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர். கலாவதி இறந்துகிடந்தார்.

    உயிருக்கு போராடிய தந்தை, மகன் 2 பேரையும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜனார்த்தனன், சித்தார்த் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    போலீஸ் விசாரணையில் 3 பேரும் அமோனியம் சல்பேட் என்ற வி‌ஷ மருந்தை உட்கொண்டு இறந்தது தெரியவந்தது.

    3 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. கடன் தொல்லையால் அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

    3 பேரும் தற்கொலை செய்த அறையில் கடிதம் சிக்கியது. அதில், “நாங்கள் கடவுளிடம் செல்கிறோம். லேப்டாப், செல்போன்களையும், உடல்களையும் உறவினர்களிடம் ஒப்படைத்து விடவும். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் அல்ல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இது குறித்து உறவினர்களிடம் ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொங்கல் விடுமுறையில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பு இல்லை என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    விருதுநகர்:

    அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். என்ற புனிதர் ஆரம்பித்த கட்சி அ.தி.மு.க., மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வார்த்து எடுக்கப்பட்டு இன்றைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருகிறது.

    இவர்களின் பின்னால் இந்த இயக்கம் வலுவோடும், பொலிவோடும் செயல்பட்டு வருகிறது. இவர்கள் தலைமையில் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நிற்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    என்னைப்பற்றி சிறிதாக ஒரு செய்தி கிடைத்தால் அதைக்கூட ஊதி பெரிதாக்கி விடும் நடைமுறை சமூக ஊடகங்களால் பின்பற்றப்படுகிறது. டி.டி.வி. தினகரன் வைத்திருப்பது தனி அமைப்பு. அவர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்து தனிச்சின்னம் வாங்கியுள்ளார். அ.தி.மு.க.வுடன், அ.ம.மு.க. இணைவது குறித்து வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை.

    வரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனியாக தேர்தலை சந்தித்தால் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக கமல்ஹாசன் கட்சி நடத்தி வருகிறார். பிக்பாஸ் போன்று கட்சியை நடத்துகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும்தான் போட்டி. இதில் மாபெரும் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். கூட்டணி பற்றி முடிவு எடுக்க முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சருக்கும் பொதுக்குழு அதிகாரம் வழங்கியுள்ளது. அதை நோக்கிதான் நாங்கள் பயணித்து வருகிறோம்.

    ஒரு நிகழ்ச்சிக்கு நான் சென்றபோது தலைக்கு நேராக பலூன் தொங்கிக் கொண்டிருந்தது. போட்டோ எடுப்பதற்கு இடையூறாக இருக்கும் என்பதால்தான் பலூனை தட்டிவிட்டேன். அதனை மு.க.ஸ்டாலின் கேலி பேசி வருகிறார். பலூன் உடைப்பதில் தவறு இல்லை. தி.மு.க.வினர் போன்று யாருடைய பல்லையும் உடைத்தால்தான் தவறு.

    தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி மீது எவ்வித வெறுப்பும் கிடையாது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். இவர்கள் பிரசாரத்திற்கு மக்கள் அலைஅலையாக திரள்கின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக ஆட்சிக்கட்டிலில் அமருவார். சிவகாசி உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளேன். மேலும் தொடர்ந்து மாவட்ட மக்களுக்காக நான் உழைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ பரிசோதனை மாவட்டத்தில்நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 74 ஆயிரத்து 746 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16466 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது 16157 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.2758 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை 79 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வீடுகளில் யாரும் தனிமைப் படுத்தப் படவில்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 16472 ஆக உயர்ந்துள்ளது. 1235 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் செய்யப்பட்ட நிலையில் 2700-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனைமுடிவுகள் அறிவிக்கப்படாதநிலைஇருந்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் தாமதமாகவே வெளியிடப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    சிவகாசி அருகே வாலிபர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சிவகாசி:

    சிவகாசி ஓடை தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மகன் பாண்டியராஜன் (வயது 33). திருமணம் செய்து கொள்ளாத இவர் வேலைக்கு செல்லாமல் கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்தி வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் வேலைக்கு செல்ல வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாண்டியராஜன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பாண்டியராஜன் அண்ணன் காளிராஜன் சிவகாசி டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 230 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 511 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,459 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.

    16,145 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,468 ஆக உயர்ந்துள்ளது. 1,825 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 84 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 1,587 பேருக்கு மருத்துவ சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் 1,800-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.

    தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் தாமதமாகும் நிலையே இருந்து வருகிறது. நேற்று மேலும் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ள நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 230 ஆக உயர்ந்துள்ளது.
    வத்திராயிருப்பு அருகே தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.

    இந்தநிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள மாத்தூர் ரெங்க பாளையத்தில் பெய்த தொடர்மழையினால் 10 ஏக்கருக்கும் மேலான நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் நாங்கள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை நஷ்டத்தை சந்தித்து உள்ளோம்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தாயில்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாயில்பட்டி:

    ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, கிருஷ்ணாபுரம் பகுதியில் ரோந்து பணிக்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள விளக்கு பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டு இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அன்பின் நகரத்தை சேர்ந்த ஜீவானந்தம் (வயது50) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    விருதுநகர் அருகே கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    சிவகாசி ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). சிவகாசியில் தனது குடும்பத்தாருடன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இவர் பின்பு தனக்கு தெரிந்த சிவகாசி, தளவாய்புரம், அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த நபர்களிடம் கடன் பெற்று தனியாக வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் வியாபாரி கணேசன் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரால் கடனுக்கு வட்டியும், அசலும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடன் கொடுத்த சிலர் கூடிப்பேசி கணேசனின் குடும்பத்தாரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கணேசனின் மனைவி உரிய நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று கணேசன் இதுகுறித்து மனு கொடுக்க தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். இவரது மனைவி மனு கொடுக்க உள்ளே சென்றபோது இவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

    இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் கணேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து ெகாண்டே செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

    வாகனங்களில் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில்லை. ஆதலால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

    இந்த விபத்துகளில் ஒரு சிலர் காயமும், ஒரு சிலர் இறப்பையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். சிலர் தங்களது கால், கைகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். காரில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இந்த விதிமுறைகளை ஒரு சிலர் தான் பின்பற்றுகின்றனர்.

    வாகன விபத்துகளை தடுப்பது குறித்து மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், ஊர்வலங்களும் நடைபெற்று வந்தால் மக்கள் அதை கண்டு கொள்வதில்லை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன்் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த விபத்துகளில் 129 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    62 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இவர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாததால் விபத்துகள் தினமும் நடக்கின்றன.

    விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, வாகன உரிமங்களை ரத்து செய்வது என என்ன தான் தண்டனை விதித்தாலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எது எப்படி இருந்தாலும் இனியாவது விபத்துகளை குைறக்க போக்குவரத்து விதிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நடப்பு நிதியாண்டில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சிறப்பு வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பு நிதியாண்டில் கால்களில் முழுமையாக வலுவில்லாத, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இதனை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

    கால்களில் முழுமையாக வலுஇல்லாத முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

    விண்ணப்பப் படிவத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ வருகிற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடைய வேண்டுகிறேன்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    ×