என் மலர்tooltip icon

    விருதுநகர்

    பெட்ரோல் பங்க்கில் பணப்பையை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட வந்துள்ளனர். அங்கு பெட்ரோல் பங்க்கில் விற்பனையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த கரியனேந்தல் கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜனிடம் அவர்கள் ரூ.100-க்கு பெட்ரோல் போட்டனர். அவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டு கொண்டு இருந்த போது நைசாக அங்கு பம்பில் வைத்திருந்த பணப்பையை மற்றொரு வாலிபர் திருடி கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறினார். இதை கவனித்த சுந்தரராஜன், திருடன், திருடன் என சத்தம் போட்டார். உடனே சக ஊழியர்கள், பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் திருடிய பையில் பெட்ரோல் விற்பனை செய்த பணம் 7 ஆயிரம் இருந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காரியாப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த வெற்றிவேல்(வயது 21), அழகர் என்கிற பெரியசாமி(22) என தெரிய வந்தது. பெட்ரோல் பங்க் விற்பனையாளர் சுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    சிவகாசி அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள கொத்தனேரி பஸ் நிறுத்தம் அருகில் எம்.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு பெட்டிக்கடையில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அந்த பெட்டிக்கடையில் சோதனை செய்த போது அங்கு 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக முத்து (வயது 45), நாகராஜ் (50) ஆகியோரை கைது செய்தனர். கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை, கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தை அமாவாசை வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதைெயாட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    இதனால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    தை அமாவாசைக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வத்திராயிருப்பு வழியாக உள்ள தாணிப்பாறை மலைப்பாதை, மற்றும் மதுரை மாவட்டம் பேரையூர் வாழைத்தோப்பு மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    நீர்ஓடைப்பகுதிகளில் வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் பக்தர்களின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
    விருதுநகரில் சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. தொண்டர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். அவர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் போஸ்டர் அடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    விருதுநகர்:

    பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையானது முதல் அ.தி.மு.க.வில் பலரும் அவருக்கு மறைமுக மற்றும் நேரடி ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து தங்கும் விடுதிக்கு சென்ற சசிகலாவின் காரில் அ.தி.மு.க. கொடியும் கட்டப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக போலீசில் புகார் கூறப்பட்ட போதிலும் அவர்தான் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர். எனவே கட்சி கொடி காரில் பறக்க விடப்பட்டது தவறு இல்லை என அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.

    வருகிற 8-ந்தேதி சசிகலா தமிழகம் வருவார் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையில் அ.தி.மு.க.வில் சிலரும் சசிகலாவை வரவேற்று மற்றும் ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டிய வண்ணம் உள்ளனர்.

    மதுரை, தேனி, திருச்சி என பல்வேறு ஊர்களிலும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது கட்சி தலைமை மேல் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் விருதுநகரில் சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. தொண்டர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். அவர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் போஸ்டர் அடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    விருதுநகர் சென்னல் குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் எரணன், செல்லப்பாண்டி, மகேந்திரன் ஆகியோர் படம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டையுடன் இந்த போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.

    அதில், கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே வருக, வருக, அடிமட்ட தொண்டரும் முதல்வராகலாம் என்ற நிலையை உருவாக்கி... சுய நலம் இல்லாமல் கழகத்தை காத்து இக்கழகம் இன்னும் நூற்றாண்டுக்காலம் ஆட்சி அமைத்து அம்மாவின் கனவை நினைவாக்க வருகை தரும் கழக பொதுச்செயலாளர் தியாக தலைவியே... தொண்டர்களை காக்க... வருக தாயே... என வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இதுவரை சசிகலாவை வரவேற்று பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் முதல் முறையாக உறுப்பினர் அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது அ.தி.மு.க.வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் கன மழையால் பயிர் சேதம் அடைந்த பகுதிகளை மத்திய குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
    விருதுநகர்:

    தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் சேதம் அடைந்த நெல், மக்காச்சோளம், சோளம், பருத் தி உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். தொடர் மழை காரணமாக இம்மாவட்டத்தில் திருச்சுழி, வத்திராயிருப்பு, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

    பயிர் சேதங்கள் குறித்து வருவாய்த்துறை மற்றும் விவசாயத் துறையினர் கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் விவசாயிகள் மத்திய குழுவினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மத்திய குழுவினர் நேற்று தென் மாவட்டங்களில் பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் மத்திய பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் டாக்டர் ஜெகநாதன் தலைமையில் டெல்லி உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அக்தோஷ் அக்னி ஹோத்திரி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை எண்ணெய் வித்து வளர்ச்சி இயக்குனர் டாக்டர் மனோகரன், மத்திய செலவினத்துறை நிதியமைச்சக துணை இயக்குனர் மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இக் குழுவினர் அருப்புக்கோட்டை யூனியன் பகுதியில் உள்ள செங்குளம், கீழ்குடி, மறவர்பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் கண்ணன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் சேதம் அடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் பாதிப்படைந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை மத்திய குழுவிடம் வழங்கினர். மனுக்களை பெற்ற மத்திய குழுவினர் இது குறித்து ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இம்மாவட்டத்தில் நெல் 5370 எக்டேர் நிலப்பரப்பிலும், சிறுதானியங்கள் 1113 எக்டேர் நிலப்பரப்பிலும் சேதமடைந்துள்ளது. பருப்பு வகைகள் 2107 எக்டேரிலும், மக்காச்சோளம் 2968 எக்டேரிலும், பருத்தி 2127 எக்டேர் நிலப்பரப்பிலும் சேதமடைந்துள்ளது. ஆக மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 202 எக்டேர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 11 ஆயிரத்து 556 எக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்து மத்திய குழுவிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக அருப்புக்கோட்டை யூனியன் கீழ்குடியில் பயிர்ச்சேதம் குறித்து அமைக்கப்பட்டிருந்த செயல்விளக்க கண்காட்சியினை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் வி.நாங்கூர், புதுக்குளம், அல்லிகுளம், ஆலப்பேரி, கல்யாண சுந்தரபுரம், பரளச்சி ஆகிய கிராமங்களில் நெல், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், மிளகாய், மல்லி ஆகிய பயிர்கள் சேதம் அடைந்தது குறித்து மத்திய குழுவினர் பார்வையிட்ட போது விவசாயத் துறை அலுவலர்கள் பாதிப்பின் தன்மை குறித்து மத்திய குழுவிடம் விளக்கமளித்தனர்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
    அருப்புக்கோட்டை அருகே துப்புரவு தொழிலாளி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து மனைவி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்னம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 44). இவர் புதூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக இருந்தார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று மனோகரன் அரசு பஸ்சில் அருப்புக்கோட்டைக்கு வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு வந்து மனோகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் மனோகரனின் மனைவி அம்பிகா, கணவரின் உடலை வாங்க மறுத்து 5-வது நாளாக ஆஸ்பத்திரியில் தனது குழந்தைகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அவர் கூறுகையில், எனது கணவர் சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன்பின் அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் எனது கணவரின் இறப்புக்கு உரிய காரணத்தை கண்டறியும் வரை உடலை வாங்க மாட்டேன என கூறினார். 

    வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒ.மேட்டுபட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    சாத்தூர்:

    சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு முரளிதரன் (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மகனுக்கு திருமணம் ஆகாத நிலையில் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். முரளிதரன் கேட்டரிங் படித்து உள்ளார்.

    வேலை கிடைக்காத காரணத்தால் சாத்தூரில் லாரி கிளீனிராக வேலை பார்த்து வந்தார். முரளிதரனுக்கு சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது .

    இதனால் மன வேதனை அடைந்த முரளிதரன் சாத்தூரில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி சரக ரெயில்வே போலீசார் முரளிதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சரக ரெயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒ.மேட்டுபட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தாயில்பட்டி:

    தாயில்பட்டி பவுன் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 45). இவர் தாயில்பட்டியில் இருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இவர் நேற்று அதிகாலையில் வழக்கம் போல் தனது தோழி ஒருவருடன் நடைபயிற்சி சென்றார். அப்போது பின்னால் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென அவர்கள் இருவரின் முகத்திலும் ஏதோ திரவத்தை ஊற்றி அவர்களின் கவனத்தை திசை திருப்பினர்.

    பின்னர் செண்பகவள்ளியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செண்பக வள்ளி வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். செண்பகவள்ளியின் தோழி நகை ஏதும் அணிந்து செல்ல வில்லை. அவரும் நகை அணிந்திருந்தால் அதனையும் கொள்ளையர்கள் பறித்துச் சென்றிருப்பார்கள்.

    இந்த நகை பறிப்புச் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நரிக்குடி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    காரியாபட்டி:

    நரிக்குடியில் இருந்து மானூர் செல்லும் சாலையில் ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது.

    இங்கு மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லும்போது பாலத்தில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றி விடுகின்றனர்.

    இந்தநிலையில் தற்போது இந்த பகுதியில் மழை பெய்யவில்லை. இருப்பினும் கால்வாயில் செல்லும் தண்ணீர் கசிந்து பாலத்தில் தேங்கி நிற்கிறது.

    இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். நரிக்குடியில் இருந்து இந்த வழியாக மானூர், உழக்குடி, திருமாணிக்கனேந்தல், அத்திகுளம் பகுதி பொதுமக்கள் சென்று வருகின்றனர். மழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்குவதால் இவர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே இந்த பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகரை சேர்ந்த இளம்பெண்ணை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தனியார் வங்கி ஊழியரான கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
    விருதுநகர்:

    விருதுநகர் முத்துராமன் பட்டி குல்லூர் சந்தை ரோட்டை சேர்ந்தவர் அபிநயா (வயது 28). இவருக்கும் மன்னார்குடியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் மகேஸ்வரன் (36) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்தின்போது 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருமணம் முடிந்த பின்பு அபிநயா, தனது கணவருடன் அவர் வேலை பார்த்த நாகர்கோவிலில் தனிக்குடித்தனம் நடத்தி உள்ளார்.

    இந்தநிலையில் அங்கு வந்த மகேந்திரனின் தாயார், சகோதரர், சகோதரி மற்றும் உறவினர்கள் மகேஸ்வரனின் மைத்துனரின் கடனை தீர்ப்பதற்காக அபிநயாவிடம் அவரது நகைகளை தருமாறு கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

    அபிநயா முதல் பிரசவத்திற்காக விருதுநகரில்உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் குழந்தை பிறந்துள்ளது இதனைத்தொடர்ந்து மகேஸ்வரன் அபிநயாவை மன்னார்குடிக்கு மாறுதல் கிடைத்தவுடன் அழைத்துச் செல்வதாக கூறி உள்ளார்.

    அபிநயாவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு 2-வது குழந்தை பிறந்துள்ளது. 2 குழந்தைகளுக்கும் அபிநயாவின் பெற்றோர் 11 பவுன் நகை போட்டுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து விருதுநகர் வந்த மகேஸ்வரன் மற்றும் அவரது உறவினர்கள் அபிநயாவிடம் நகைகளை தருமாறு மீண்டும் கேட்டுள்ளனர்.

    மேலும் தன்னுடன் மன்னார்குடிக்கு வந்தால் அபிநயா, பெற்றோருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று தகராறு செய்தததுடன் அபிநயாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அபிநயாவின் பெற்றோர் மகேஸ்வரனையும், அவரது உறவினர்களையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். இதனை தொடர்ந்து மகேஸ்வரன், அபிநயாவையும் குழந்தைகளையும் அழைத்துச்செல்ல வரவில்லை.

    இந்தநிலையில் அபிநயாவிடம் மகேஸ்வரனின் உறவினரான விருதுநகரை சேர்ந்த மாரிக்கனிஎன்பவர் மகேஸ்வரனுக்கு 2-வது திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து அபிநயா விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரன் மற்றும்அவரது உறவினர்கள் கூடுதல் நகை மற்றும் பணம் நகை கேட்டு சித்ரவதை செய்தததாக புகார் கொடுத்ததின் பேரில் போலீசார், மகேஸ்வரன், அவரது தாயார் ராமேஸ்வரி (55), உறவினர்கள் சித்ரா(40), நாகேந்திரன் (38), ரோகிணி (37) மற்றும் விருதுநகரை சேர்ந்த உறவினர் மாரிக்கனி ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    பழைய ஓய்வூதிய திட்டத்ைத அமல்படுத்த வலியுறுத்தி ராஜபாளையத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள ஜவகர் மைதானம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி மற்றும் சரண்டர் உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

    தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 20 அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
    விருதுநகரில் குடிநீர் வினியோகம் செய்ய இயலாத நிலை நீடிக்கும் போது குடிநீர் வீணாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் நகராட்சி பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ஆனைக்குட்டம் அணைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குடிநீர் பெறப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த நீர் ஆதாரங்களில் இருந்து கிடைக்க வேண்டிய அளவிற்கு குடிநீர் கிடைக்காத நிலையில் விருதுநகர் பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் வினியோகம் செய்யப்படாதநிலை நிலவுகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் நகர மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்ய தயாராக இருந்தாலும் நீர் ஆதாரம் இல்லாத நிலையில் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையே தொடர்கிறது.

    குடிநீர் வினியோக திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தபோதிலும் அதற்கான நடவடிக்கைகளை செய்ய தமிழக அரசு தான் நிதி உதவி செய்ய வேண்டிய நிலையும் உள்ளது.

    இந்தநிலையில் ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் இருந்து நகருக்கு குடிநீர் வரும் பகிர்மான குழாயில் டி.டி.கே. ரோடு அருகே குடிநீர்வீணாகி வருகிறது.

    அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் குழாயிலிருந்து அருவியென கொட்டும் குடிநீரில் குளித்து மகிழ்ந்தாலும் வீணாகும் குடிநீர் நகர மக்களின் வேதனையை அதிகரிக்கும் நிலை உள்ளது. ஆனால் நகர்ப்பகுதியில் அனைவரும் பார்க்கும் நிலையில் உள்ள குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி வீணாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.

    நகராட்சியில் குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ளும் ஊழியர்கள் காலை நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டால் குடிநீர் வீணாவது உடனடியாக தடுக்கப்பட வாய்ப்பு ஏற்படும்.

    எனவே நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் தண்ணீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு நகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ×