என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.கே. ரோடு அருகே குடிநீர்வீணாகி செல்வதையும், அதில் குழந்தைகள் குளித்து மகிழ்வதையும் படத்தில் காணலாம்.
    X
    டி.டி.கே. ரோடு அருகே குடிநீர்வீணாகி செல்வதையும், அதில் குழந்தைகள் குளித்து மகிழ்வதையும் படத்தில் காணலாம்.

    குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை தேவை - விருதுநகர் நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தல்

    விருதுநகரில் குடிநீர் வினியோகம் செய்ய இயலாத நிலை நீடிக்கும் போது குடிநீர் வீணாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் நகராட்சி பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ஆனைக்குட்டம் அணைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குடிநீர் பெறப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த நீர் ஆதாரங்களில் இருந்து கிடைக்க வேண்டிய அளவிற்கு குடிநீர் கிடைக்காத நிலையில் விருதுநகர் பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் வினியோகம் செய்யப்படாதநிலை நிலவுகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் நகர மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்ய தயாராக இருந்தாலும் நீர் ஆதாரம் இல்லாத நிலையில் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையே தொடர்கிறது.

    குடிநீர் வினியோக திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தபோதிலும் அதற்கான நடவடிக்கைகளை செய்ய தமிழக அரசு தான் நிதி உதவி செய்ய வேண்டிய நிலையும் உள்ளது.

    இந்தநிலையில் ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் இருந்து நகருக்கு குடிநீர் வரும் பகிர்மான குழாயில் டி.டி.கே. ரோடு அருகே குடிநீர்வீணாகி வருகிறது.

    அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் குழாயிலிருந்து அருவியென கொட்டும் குடிநீரில் குளித்து மகிழ்ந்தாலும் வீணாகும் குடிநீர் நகர மக்களின் வேதனையை அதிகரிக்கும் நிலை உள்ளது. ஆனால் நகர்ப்பகுதியில் அனைவரும் பார்க்கும் நிலையில் உள்ள குழாயிலிருந்து குடிநீர் வெளியேறி வீணாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.

    நகராட்சியில் குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ளும் ஊழியர்கள் காலை நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டால் குடிநீர் வீணாவது உடனடியாக தடுக்கப்பட வாய்ப்பு ஏற்படும்.

    எனவே நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் தண்ணீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு நகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×