என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் அ.தி.மு.க.வினர் ஒட்டியுள்ள போஸ்டர்.
    X
    விருதுநகரில் அ.தி.மு.க.வினர் ஒட்டியுள்ள போஸ்டர்.

    சசிகலாவுக்கு ஆதரவாக உறுப்பினர் அட்டையுடன் அ.தி.மு.க.வினர் போஸ்டர்

    விருதுநகரில் சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. தொண்டர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். அவர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் போஸ்டர் அடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    விருதுநகர்:

    பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையானது முதல் அ.தி.மு.க.வில் பலரும் அவருக்கு மறைமுக மற்றும் நேரடி ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் இருந்து தங்கும் விடுதிக்கு சென்ற சசிகலாவின் காரில் அ.தி.மு.க. கொடியும் கட்டப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக போலீசில் புகார் கூறப்பட்ட போதிலும் அவர்தான் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர். எனவே கட்சி கொடி காரில் பறக்க விடப்பட்டது தவறு இல்லை என அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.

    வருகிற 8-ந்தேதி சசிகலா தமிழகம் வருவார் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையில் அ.தி.மு.க.வில் சிலரும் சசிகலாவை வரவேற்று மற்றும் ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டிய வண்ணம் உள்ளனர்.

    மதுரை, தேனி, திருச்சி என பல்வேறு ஊர்களிலும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது கட்சி தலைமை மேல் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் விருதுநகரில் சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. தொண்டர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். அவர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் போஸ்டர் அடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    விருதுநகர் சென்னல் குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் எரணன், செல்லப்பாண்டி, மகேந்திரன் ஆகியோர் படம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டையுடன் இந்த போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.

    அதில், கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே வருக, வருக, அடிமட்ட தொண்டரும் முதல்வராகலாம் என்ற நிலையை உருவாக்கி... சுய நலம் இல்லாமல் கழகத்தை காத்து இக்கழகம் இன்னும் நூற்றாண்டுக்காலம் ஆட்சி அமைத்து அம்மாவின் கனவை நினைவாக்க வருகை தரும் கழக பொதுச்செயலாளர் தியாக தலைவியே... தொண்டர்களை காக்க... வருக தாயே... என வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இதுவரை சசிகலாவை வரவேற்று பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் முதல் முறையாக உறுப்பினர் அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது அ.தி.மு.க.வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×