என் மலர்tooltip icon

    விருதுநகர்

    உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட நிலையில் வேனில் 40 மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது.
    விருதுநகர்:


    விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை சோதனை செய்தபோது வேனில் 40 மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது.

    வேனில் இருந்த விருதுநகர்அல்லம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சீனிவாசன் (வயது 31) மற்றும் சங்கரவேல் (25) ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தியதில் சிவகாசி ஆமத்தூர் பகுதிகளில் ரேஷன் அரிசியை சேகரித்து வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் வேனுடன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். மேலும் வேனில் இருந்த சீனிவாசன் மற்றும் சங்கரவேலை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
    சிவகாசி அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் முத்துரிஷி (வயது 21). இவர் தனது உறவினருடன் வீட்டில் இருந்து சிவகாசிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் வரும் போது அந்த வழியாக வந்த டிராக்டர் ஒன்று முத்துரிஷி வந்த வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சண்முகசுந்தரம் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிராக்டரை ஓட்டி வந்த கீழதாயில்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    திண்டுக்கல்லை சேர்ந்த யோகமுத்து என்பவரின் மகள் திவ்யகுசீலி (வயது 23) என்பவருக்கும், சுக்கிரவார்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த இளம்பெண் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை யோகமுத்து திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து 3 ஆண்டுகளில் இளம்பெண் இறந்து இருப்பதால் இதுகுறித்து சிவகாசி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    சாத்தூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓ.மேட்டுப்பட்டி இந்திரா காலனியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதே கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி (வயது 62) விற்றது தெரியவந்தது. இதையடுத்து 20 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கடித்துவிடக் கூடாது என்பதற்காக சிலை போல் நடித்த சிறுவனுக்கு குரங்கு முத்தம் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
    காரியாபட்டி :

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள எஸ்.மறைக்குளம் கிராமத்தில் ஒரு குரங்கு ஒன்று ஊரில் பலரையும் அச்சுறுத்தி வருகின்றது. இந்தநிலையில் அந்த குரங்கானது தெருவில் வருவோர், போவோரை துரத்தி கடித்து வருவதாகவும், தற்போது வரை 15-க்கும் மேற்பட்ட நாய்களை கடித்து குதறி உள்ளதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.

    இதனால் அப்பகுதியினர் குரங்கை பார்த்தாலே அலறியடித்து ஓடுகின்றனர். இந்தநிலையில் 10 வயது சிறுவன் ஒருவன் பள்ளியின் சுற்றுச்சுவரில் ஏறி விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது திடீரென அந்த குரங்கு அவன் அருகே வந்தது. அப்போது குரங்கு கடித்து விட கூடாது என்பதற்காக சமயோஜிதமாக அந்த சிறுவன் சிலை நடித்து அசைவற்று அமர்ந்திருந்தான்.

    இருப்பினும் குரங்கு அந்த சிறுவனை விடுவதாக இல்லை. அவன் அருகே சென்று சேட்டைகளை செய்தது. தொடர்ந்து, 7 நிமிடங்கள் வரை அந்த சிறுவனை அசைத்தும், முத்தம் கொடுத்தும் பல விதங்களில் தொல்லை கொடுத்தது. ஆனால் அவனோ குரங்கின் சேட்டைக்கு பிடிகொடுக்காமல் சிலை போல் அமர்ந்திருந்தான். சிறிது நேரம் கழித்து குரங்கு தானாக சென்று விட்டது. பின்னர் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. சிறுவனின் புத்திசாலித்தனத்துக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
    சாத்தூர் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    சாத்தூர்:

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சாத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

    இந்தநிலையில் இந்த பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் முதற்கட்டமாக ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    சாத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் புஷ்பா தலைமையில் உதவி தேர்தல் அலுவலர்கள் சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ராஜா ஹுசைன் ஆகியோர் மேற்பார்வையில் 3 நிலையான ஆய்வுக்குழு மற்றும் 3 பறக்கும் படை குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சாத்தூர் சட்டமன்ற தொகுதியான சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் மொத்தம் 283 வாக்குச்சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்கள் பரிசோதனை செய்யப்படுகிறது.

    சாத்தூர் அருகே சிவகாசி ரோட்டில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் லியாகத் அலிகான் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பிதுரை ஆகியோர் கொண்ட குழுவினர் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
    விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் சாத்தூர் ரோட்டில் இ.குமாரலிங்கபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அருகில் கிடந்த அடையாள அட்டையை வைத்து பார்த்தபோது அவர் நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பிரான்சிஸ் கோபி என்பது தெரியவந்தது. இதுபற்றி பாண்டிராஜன் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    சதுரகிரி மலையில் 20 மணி நேரத்துக்கும் மேலாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. ஏராளமான மரங்கள், மூலிகைகள் தீக்கிரையாகின. தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தரிசனம் செய்ய பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் ஒவ்வொரு மாதமும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    மாசி மாத பவுர்ணமியையொட்டி கடந்த 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்றவர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று காலை கோவிலில் இருந்து இறங்கி தாணிப்பாறை அடிவாரம் பகுதிக்கு வந்தனர்.

    இந்த நிலையில் சதுரகிரி மலையில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தவசிப்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு, தீமளமளவென பரவியது.

    இந்த சம்பவத்தில் ஏராளமான மரங்கள், அரிய தாவரங்கள், மூலிகைகள் தீக்கிரையாகின. வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டன.

    சாப்டூர் மற்றும் வத்திராயிருப்பு வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 20 மணி நேரத்திற்கு மேலாக சதுரகிரி மலைப்பகுதியில் எரிந்த தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிவகாசி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    சிவகாசி:

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது.

    இதையடுத்து வெளியூர்களில் இருந்து சிவகாசி வரும் வாகனங்களையும், சிவகாசியில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களை கண்காணிக்கவும், விதிகளை மீறி பணப்பட்டுவாடா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக 3 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

    வணிகவரித்துறை அதிகாரி கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படையில் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், போலீசார் கோவிந்தராஜ், ரம்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இதே போல் ஜெயராஜ் என்ற அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, போலீசார் கணேஷ்குமார், பாண்டிலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஸ்ரீதரன் என்ற அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ், போலீசார் சரவணமுருகன், சாந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள போலீசார் சோதனை சாவடி அருகே நேற்று பறக்கும்படையினர் அந்த வழியாக சென்ற கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதே போல் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை சாவடியிலும், சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளிலும் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி பகுதியில் நேற்று 2-வது நாளாக அரசியல் கட்சியினர் செய்திருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதை நகராட்சி அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தினேஷ்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    இருக்கன்குடி அருகே மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனமாரிமுத்து தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரியம்மன் கோவில் ஆற்றுப்பகுதியில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த பூமிராஜன் (வயது 25) என்பவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களும், ரூ.160-யையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில் நடிகை கவுதமியை வேட்பாளராக பா.ஜனதா மேலிட இணை பொறுப்பாளர் அறிவித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி பா.ஜனதா தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜனதா தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமை தாங்கினார். ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் நடிகை கவுதமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய சுதாகர் ரெட்டி, பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடி வெடுத்துள்ளோம். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் கவுதமி வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவரும் அவர் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    பா.ஜனதாவுக்கு என சில சட்டதிட்டங்கள் உள்ளது. கட்சி தலைமை கூட்டணி கட்சிகளுடன் பேசி எத்தனை தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்? என்பதை பேசி அறிவிக்கும். என்றார்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில் நடிகை கவுதமியை வேட்பாளராக பா.ஜனதா மேலிட இணை பொறுப்பாளர் அறிவித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பின்னர் சுதாகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. கோவைக்கு பிரதமர் வருகையின்போதும், அமித்ஷா மற்றும் நட்டா வரும்போது லட்சக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர். இது பா.ஜனதாவின் நல்ல நிர்வாகத்துக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி ஆகும். தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் எங்களை வெற்றி பெற செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பேன்சி ரக வெடிகள் தயாரித்த பட்டாசு ஆலைக்கு “சீல்” வைக்கப்பட்டதுடன் உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.
    தாயில்பட்டி:

    தாயில்பட்டி அருகில் உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புகனி (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பனையடி பட்டியில் உள்ளது.

    இங்கு அனுமதி இன்றி பேன்சி ரக வெடிகள் தயாரிப்பாக வெம்பக்கோட்டை தாசில்தார் ராஜா உசேனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் மற்றும் பனையடி பட்டி கிராம நிர்வாக அலுவலர் தாழம்பூராஜா ஆகியோருடன் பட்டாசு ஆலையில் சோதனை நடத்தினர்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் சரவெடி மட்டுமே தயாரிக்க வேண்டும். ஆனால் இங்கு பேன்சி ரக வெடிகள் தயார் செய்ததை கண்டு பிடித்தனர்.

    மேலும் பட்டாசு ஆலையில் 11 வயது சிறுமி வேலை செய்வதும் தெரியவந்தது. உடனடியாக ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் தாழம்பூராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் சுப்புகனியை கைது செய்தனர்.

    அத்துடன் பட்டாசு ஆலைக்கு வருவாய் துறை அதிகாரிகள் “சீல்” வைத்தனர். மேலும் பட்டாசு ஆலையில் வைத்திருந்த 10 குரோஸ் கருந்திரி, மணி மருந்து, தயார் செய்யப்பட்ட பேன்சி ரகவெடிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×