என் மலர்tooltip icon

    விருதுநகர்

    தொடர்மழை எதிரொலி காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கடந்த 8 மாதங்களாக கிணறுகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள இந்த பகுதிகளில் ஏராளமான கிணறுகள் உள்ளன.

    இந்த கிணறுகளில் சுமார் 8 மாதமாக தண்ணீர் குறையாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.

    தொடர்மழையினால் மலைப்பகுதியில் உள்ள தண்ணீரானது அடிவார பகுதி வரை வந்தது. இதனால் அடிவாரப்பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பின.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் அடிவார பகுதியில் உள்ள மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் 5 முறை நிரம்பியது. அதேபோல குளங்கள், கிணறுகளும் நிரம்பின.

    இந்த பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிணறுகள் கடந்த 8 மாதமாக வற்றாமல் நிரம்பி வழிகிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியுடன், விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    வத்திராயிருப்பு அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை அடுத்த ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சதுரகிரி. இவரது மகன் சுந்தரமகாலிங்கம் (வயது 22), தேங்காய் உறிக்கும் தொழிலாளி.

    அதே ஊரைச் சேர்ந்தவர் தாமரை (34). இவரும் தேங்காய் உறிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு சுந்தரமகாலிங்கம் கிராமத்துக்கு வந்தபோது அங்கு தாமரை வந்தார்.

    அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த தாமரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுந்தர மகாலிங்கத்தை சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத் திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் சுந்தரமகாலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கூமாபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தாமரையை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அதில், தனது நண்பனின் தங்கையுடன் சுந்தர மகாலிங்கம் தொடர்பு வைத்திருந்தார். இதனை கண்டித்தும் கேட்காததால் நண்பரின் தூண்டுதலின் பேரில் சுந்தரமகாலிங்கத்தை வெட்டிகொலை செய்ததாக தெரிவித்தார்.

    ஆனால் பின்னர், தனது மனைவியுடன் சுந்தரமகாலிங்கம் தவறாக பழகியதால் வெட்டி கொலை செய்ததாக தெரிவித்தார்.

    முன்னுக்கு பின் முரணாக தாமரை பேசி வருவதால் அவர் சொல்வது உண்மைதானா? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 1,437 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 43,518 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 41,575 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 231 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    1,437 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் 1,478 படுக்கைகள் உள்ள நிலையில் 443 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1035 படுக்கைகள் காலியாக உள்ளன.

    சிகிச்சை மையங்களில் 1853 படுக்கைகள் உள்ள நிலையில் 262 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1591 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் குல்லூர்சந்தை அகதிகள் முகாம், லட்சுமி நகர், சூலக்கரை, பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் மல்லி, இளந்திரைகொண்டான், தொம்பக்குளம், கஞ்சநாயக்கன்பட்டி, மகாராஜபுரம், கிருஷ்ணாபுரம், கீழசெவல்பட்டி, பச்சேரி, சிவலிங்கபுரம், செங்கமடை, பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், காரியாபட்டி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 59 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பட்டியலில் 134 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 2.5 ஆகும்.
    விருதுநகரில் தேர்தல் முன்விரோத தகராறில் 6 பேர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிமுக பிரமுகர் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவுக்குட்பட்ட அம்மன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சி என்ற ரவிகாந்த் (வயது 48). தி.மு.க. பிரமுகரான இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா முத்துப்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முத்து இருளாண்டி (52) என்பவருக்கும் தேர்தல் முன்விரோதம் மற்றும் மின்சாரம் எடுப்பது சம்பந்தமாக மோதல் இருந்து வந்தது.

    நேற்று முத்துப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே இரண்டு பிரிவினரும் திடீரென மோதிக்கொண்டனர். அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் 2 தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

    இந்த மோதலில் தி.மு.க.வைச் சேர்ந்த பூச்சி என்ற ரவிகாந்த் மருது (30) ரவி (44) ஆகியோரும் முத்துபட்டியைச் சேர்ந்த முத்து இருளாண்டி அவரது மகன் முத்துராமலிங்கம் (24) கண்ணன் (24) ஆகியோரும் வெட்டு காயம் அடைந்தனர். இரு தரப்பினரும் கமுதி மற்றும் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    மோதல் நடந்த இடம் திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோதல் தொடர்பாக கண்ணன் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதில் கண்ணன் அ.தி. மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு இந்த பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு செல்போன்களை தலைமை ஆசிரியர் வாங்கி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழக பள்ளி கல்வித்துறை கடந்த 14-ந் தேதி முதல் பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி, விலையில்லா பாட புத்தகம் வழங்கல் உள்ளிட்ட நிர்வாக பணிகளை தலைமை ஆசிரியர்களை கொண்டு நடத்த உத்தரவிட்டு இருந்தது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2021-22 கல்வி ஆண்டுக்கான 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது.

    இந்த பள்ளியில் புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தனது சொந்த செலவில் ரூ.1000 வழங்கி வருகிறார்.

    அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு இந்த பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு செல்போன்களை தலைமை ஆசிரியர் வாங்கி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், அரசு பள்ளியில் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

    அரசு சலுகைகள் வழங்கி வரும் நிலையில் தன்னால் முடிந்த வி‌ஷயங்களை செய்து பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி வருவதாகவும், கடந்த ஆண்டு செல்போன் கொடுத்த நிலையில் தற்போது ரூ.1000 கொடுத்து வருவதாகவும், இதனால் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாவதால் இதனை தொடர்ந்து செய்து வருவதாக கூறினார்.

    தலைமையாசிரியரின் இந்த செயல் சுற்றுவட்டார கிராம மக்களிடையே மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

    இவரைபோல் சமூக மேம்பாடு செய்ய துடிக்கும் அரசு ஆசிரியர்கள் தங்களால் இயன்ற உதவிகளை மாணவர்களுக்கு செய்தால் இன்னும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.



    அருப்புக்கோட்டையில் பூஞ்சை நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகள் இல்லாததால் பொன்மணி மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி பொன்மணி (வயது 70). இவர் கடந்த மாதம் 30-ந் தேதி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.

    மருத்துவர் சோதித்ததில் இவருக்கு பூஞ்சை நோய் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அருப்புக்கோட்டையில் இந்த நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகள் இல்லாததால் அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 17 நாட்கள் சிகிச்சை முடிந்து அருப்புக்கோட்டை திரும்பிய அந்த பெண் நேற்று இரவு திடீரென வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    வீடு திரும்பிய பெண்மணி திடீரென உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற போது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததால், திருமணமான 4-வது நாளில் புதுப்பெண் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானத்தால் 4 பேர் புதுவாழ்வு பெற்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் மறவர்பெருங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மகன் சங்கர்ராஜ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், சுத்தமடம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மகள் முத்துமாரிக்கும் (24) கடந்த 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    பின்னர் பந்தல்குடியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு சங்கர்ராஜிம், முத்துமாரியும் விருந்துக்கு சென்றுவிட்டு கடந்த 16-ந் தேதி மறவர்பெருங்குடி கிராமத்திற்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி முத்துமாரி தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவருக்கு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் முத்துமாரி நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். டாக்டர்கள் கூறியதன் அடிப்படையில் முத்துமாரியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது கணவர் மற்றும் பெற்றோர் முன்வந்தனர்.

    இதையடுத்து நேற்று அவரது சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை தானம் செய்தனர். திருமணம் முடிந்த 4 நாட்களிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த முத்துமாரியின் உடல் உறுப்புகள் தானத்தால் 4 பேர் புதுவாழ்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் குறித்த காலக்கெடுவுக்குள் 2-வது டோஸ் செலுத்திக் கொள்வதற்கு மாவட்ட, மாநில சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


    விருதுநகர் மாவட்டத்தில் இது வரை 2 லட்சம் பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சமீப காலமாக தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போட பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டால் அவர்கள் அனைவருக்கும் உடனடியாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது தவிர சேவை அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்து அவர்கள் மூலம் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு உடனடியாக குறுந்தகவல் அனுப்பும் நடவடிக்கை மற்றும் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. தடுப்பூசி போட்ட ஓரிரு நாட்களுக்கு பிறகு அவர்கள் வலியுறுத்தி கேட்ட பின்புதான் சான்று வழங்கப்படும் நிலையும் உள்ளது.

    இதனிடையே முதல் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 21 நாட்களில் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2-வது டோசை 4 முதல் 6 வாரங்களுக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விருதுநகர் மாவட்டத்திலேயே பலர் இதற்காக முன்பதிவு செய்தும் தடுப்பூசி மருந்து வராத நிலையில் அவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 2-வது டோஸ் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் கடந்த 6 வாரங்களில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 119 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட முடியாமல் போய்விட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்திலும் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கோேவக்சின் தடுப்பூசி மருந்து சப்ளை இல்லாததால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 2-வது டோஸ் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது பற்றி மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே 6 வாரம் கடந்துவிட்ட நிலையில் பிரச்சினை ஏற்படாது என்றாலும் மேலும் தாமதிக்காமல் 2-வது டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    எனவே தமிழக அரசு தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் மாநில சுகாதாரத்துறையிடம் மாவட்டத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி போட வேண்டியவர்களுக்கு மேலும் தாமதப்படுத்தாமல் தடுப்பூசி போட தேவையான மருந்தை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,478 படுக்கைகள் உள்ள நிலையில் தற்போது 976 படுக்கைகள் காலியாக உள்ளன. 502 பேர் நோய் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    விருதுநகர்,ஜூன்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்து 379 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 41 ஆயிரத்து 344 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    நேற்று மட்டும் 513 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,529 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு 3 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.

    இம்மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,478 படுக்கைகள் உள்ள நிலையில் தற்போது 976 படுக்கைகள் காலியாக உள்ளன. 502 பேர் நோய் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை மையங்களில் 1,853 படுக்கைகள் உள்ள நிலையில் 286 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,567 படுக்கைகள் காலியாக உள்ளன. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் சூலக்கரை, புதுக்குடி, தாதம்பட்டி, மீசலூர், முண்டலாபுரம், பட்டம்புதூர், சின்ன வாடியூர், என்.ஜி.ஓ காலனி, அல்லம்பட்டி, சூலக்கரை, பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் தொம்பக்குளம், மம்சாபுரம், நாச்சியார்புரம், வடமலாபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், கோவிலூர், புனல்வேலி, செவலூர், பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 58 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பட்டியலில் 142 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 3.5 ஆக உள்ளது.
    தளவாய்புரம் அருகே கிணற்றில் குளித்த 2 வாலிபர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
    தளவாய்புரம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் அறிவுராஜ் (வயது 22). இவர் நாகர்கோவிலில் ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் தவமணி (18). இவர் தளவாய்புரத்தில் உள்ள கோழிக்கறிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    உறவினர்களான அறிவுராஜூம், தவமணியும் நேற்று முன் தினம் மாலை நண்பர்கள் சிலருடன் தளவாய்புரம் அருகே முகவூர் அசையா மணிவிலக்கு செல்லும் ரோட்டில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். சுமார் 60 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் முழுவதுமாக தண்ணீர் நிரம்பியிருந்தது. நண்பர்கள் குளித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்ட நிலையில் அறிவுராஜூம், தவமணியும் கிணற்றின் அருகே இருந்து மது அருந்தி விட்டு மீண்டும் கிணற்றில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவல்அறிந்த தளவாய்புரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்களையும் தேடினர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. வாலிபர்களின் உடல்கள் மீட்கப்படுவதை காண அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கிணற்றுப்பகுதியில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மீட்கப்பட்ட வாலிபர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றி தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கிணற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 504 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று மேலும் 162 கொரோனாதொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 43,287 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 40,831 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 542 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    1,903 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 504 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,478 படுக்கைகள் உள்ள நிலையில் 935 படுக்கைகள் காலியாக உள்ள நிலையில் 543 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சிகிச்சை மையங்களில் 1,753 படுக்கைகள் உள்ள நிலையில் 249 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,504 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் மீசலூர், குல்லூர்சந்தை, பாண்டியன் நகர், தர்காஸ்தெரு, ரோசல்பட்டி, ெரயில்வே பீடர் ரோடு, சூலக்கரை, பெரிய தாதம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, அல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் நடுவப்பட்டி, கட்டங்குடி, தோப்பலாக்கரை, திருச்சுழி, கல்லூரணி, மடத்துபட்டி, மாத்தூர், மேலேந்தல், கஞ்சநாயக்கன்பட்டி, பாலையம்பட்டி, புலியூரான், புதுப்பட்டி, காரியாபட்டி, பந்தல்குடி, அச்சம் தவிர்த்தான், முகவூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், பந்தல்குடி, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட பட்டியலின்படி 77 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில் மாநிலப் பட்டியலில் 162 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 3.5 ஆக உள்ளது.
    வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சூரியகாந்தி விளைச்சல் அதிகமாக இருப்பதாலும் விலை உயர்ந்து இருப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் மக்காச்சோளத்துக்கு அடுத்தபடியாக சூரியகாந்தி அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது சக்கம்மாள்புரம், சிப்பிபாறை, செவல்பட்டி, குண்டம்பட்டி, முக்கூட்டு மலை, கஸ்தூரிரெங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தியை விவசாயிகள் பயிரிட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சூரியகாந்தியை அறுவடை செய்யும் பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இந்த பகுதியில் கிணற்றில் உள்ள தண்ணீரை கொண்டு சூரியகாந்தி சாகுபடி செய்தோம்.

    கடந்த காலங்களில் மழை பெய்ததால் நாங்கள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. அதாவது சென்ற சாகுபடியின் போது ஒரு ஏக்கருக்கு 3 குவிண்டால் தான் சூரியகாந்தி பூக்கள் கிடைத்தன. தற்போது நல்ல விளைச்சல் உள்ளது. ஏக்கருக்கு 5 குவிண்டால் வரை கிடைக்கிறது.

    அதேபோல தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் இந்த சமயத்தில் குவிண்டாலுக்கு ரூ.6000 வரை விற்பனையாகிறது.

    ஆனால் சென்ற ஆண்டு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை மட்டுமே விலை கிடைத்தது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மகசூலும் அதிகம். விலையும் அதிகம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்ததால் நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம்.

    இந்த பகுதியில் இருந்து சூரியகாந்தியானது ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×