என் மலர்
விருதுநகர்
மலைமேல் உள்ள இந்த கோவிலுக்கு பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரி ஆகிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேல் சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இன்று சனி பிரதோஷம், 20-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வருவதை தடுக்க மலைக்கோவிலுக்கு செல்ல இன்று முதல் வருகிற 21-ந் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு 20, மற்றும் 21-ந் தேதிகளில் பவுர்ணமியை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தற்காலிக தடை விதித்து உத்தர விடப்படுகிறது. கோவில் பூஜைகள் பூசாரிகள் மூலம் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் யாரும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கும் ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் வருகை தர வேண்டாம். எனகூறப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 வரை 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
தமிழத்தை கொரோனா 3-வது அலையில் இருந்து பாதுகாப்பதற்காகவும், தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்கும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த பல்வேறு இடங்களில், வாராத்தின் அனைத்து நாட்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 18 வயதிற்கு மேற்பட்ட 16 லட்சத்து 36 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 16-ந் தேதி வரை முதல் தவணையாக 8 லட்சத்து 78 ஆயிரத்து 691 பேருக்கும், 2-வது தவணையாக 2 லட்சத்து 54 ஆயிரம் 410 பேருக்கும் ஆக மொத்தம் 11 லட்சத்து 33 ஆயிரத்து 101 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் கடந்த 12-ந் தேதி நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 1070 தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 75 ஆயிரத்து 643 பேருக்கு தடுப்பூசி செலத்தப்பட்டு விருதுநகர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 53 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவிகிதத்தை எட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாமகள்; மூலமாக நடைபெற உள்ளது.
கொரானா நோய் முற்றி உயிரிழப்பு ஏற்படாமலிருக்க, வரும்முன் காத்திட, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது ஒன்றே தீர்வு ஆகும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வருகிற 19 -ந் தேதி நடைபெறுகின்ற 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரானா இல்லாத விருதுநகர் மாவட்டத்தையும் தமிழகத்தையும் உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.கே.என் ரோட்டை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 60). இவர் எளிதில் மக்கக் கூடிய வகையில் பேப்பர் கப் தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 4 மாதத்தில் இவருக்கு ரூ.25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து ஆராய்ந்த போது தாமோதரன் கம்பெனியின் உரிமத்தை பயன்படுத்தி போலி பேப்பர் கப் கடைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை சிவகாசியை சேர்ந்த ஜனா, ஜீவா, கரீம், பெங்களூர் கிரண் ஆகிய 4 பேர் போலியாக பேப்பர் கப் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதனால் நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ராஜபாளையம்:
அஞ்சலகங்கள் முழுவதும் தனியார்மயமாக்கலை கண்டித்தும், நடப்பு வங்கி மற்றும் சேமிப்பு வங்கி கணக்குகளில் கூடுதலாக குறியீட்டை அடைவதற்கு கடுமையான பணிப்பழு சுமத்துவதை கண்டித்தும் ராஜபாளையம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம், மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாடடத்துக்கு பி4 கிளைச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
மண்டல தலைவர் சண்முகராஜா பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பினார்கள். கிளைச் செயலாளர் காசி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ. புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது சகோதரி பிரேமா (வயது35.)
இவர் எஸ். ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை காதல் திருமணம் செய்து வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த 14-ம் தேதி பிரேமா தனது சகோதரன் வீட்டிற்கு வந்துவிட்டு ஊருக்கு சென்றார். இந்த நிலையில் பிரபாகரனுக்கு போன் செய்து பிரேமாவுக்கு உடல் நலம் சரியில்லை என மகேந்திரன் கூறியுள்ளார். நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்திருப்பதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரபாகரன் அவசர அவசரமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி சென்றபோது, பிரேமா இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன், சகோதரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிருஷ்ணன் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
சிவகாசி நாரணபுரம் சாலையை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 65). இவர் முதியோர் பென்ஷன் பெறுவதற்காக சிவகாசி பஸ் நிலையம் அருகே உள்ள வங்கிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கஸ்தூரியிடம் நகைகள் அணிந்து சென்றால் முதியோர் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என கூறினர்.
மேலும் நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கொடுங்கள். அதனை பேப்பரில் மடித்து தருகிறோம் என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய கஸ்தூரி தனது கம்மல், வளையல் போன்றவற்றை கழற்றி கொடுத்துள்ளார். அதை பேப்பரில் சுற்றிய வாலிபர்கள் கஸ்தூரி வைத்திருந்த மஞ்சள் பையில் வைத்தனர். பின்னர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு எங்கு உள்ளது என அவர்கள் கேட்டனர். அதற்கு கஸ்தூரி மஞ்சள் பையில் தான் உள்ளது என கூறினார்.
இதனை தொடர்ந்து அந்த பையை வாங்கிக்கொண்டு வங்கிக்குள் நுழைந்த வாலிபர்கள் பின்னர் தலைமறைவாகிவிட்டனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் ஏமாற்றத்திற்கு உள்ளான கஸ்தூரி, தனது பேரன் பாலகுருவுக்குக தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து வங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடிப்பார்த்தும் 2 வாலிபர்களையும் கண்டறிய முடியவில்லை.
இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. வங்கியில் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து நகைகளை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கோட்டை பட்டியை சேர்ந்தவர் வனிதா (வயது 38). இவரது மகள் ஷோபனா (19) பிளஸ்-2 முடித்துள்ள இவர் தனது தாயுடன் பட்டாசு கம்பெனி வேலைக்கு சென்று வந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சந்தை முருகன் என்பவருக்கும் ஷோபனாவுக்கு காதல் ஏற்பட்டது. இது தெரிய வந்ததும் குடும்பத்தினர் கண்டித்தனர். மேலும் மதுரையை சேர்ந்த சரவணன் என்பவருடன் ஷோபனாவுக்கு கடந்த 29-ம் தேதி திருமணம் நிச்சயமானது.
இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற ஷோபனா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசில் புகார் செய்யப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சந்தை முருகன் வீட்டிற்கு சென்றபோது அவரும் மாயமாகி இருந்தார்.
எனவே அவர்தான் ஷோபனாவை கடத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவர் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவியரசி. இவர்களுக்கு, பிரியதர்ஷன் (8), தீனதயாளன் (4) ஆகிய 2 மகன்கள்.
இந்த நிலையில் பார்த்திபன் தன்னுடைய 2-வது மகன் தீனதயாளனை அதே பகுதியில் உள்ள தனது தாயார் லட்சுமியின் வீட்டில் நேற்று முன்தினம் மதியம் கொண்டு சென்று விட்டுள்ளார். அந்த சிறுவன் வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த சில சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் பார்த்தபோது, குழந்தை தீனதயாளனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி லட்சுமி, தனது மகன் பார்த்திபனுக்கு போன் செய்து தீனதயாளனை காணவில்லை என்று கூறி உள்ளார்.
பின்னர் இதுகுறித்து விஸ்வநத்தம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாயமான சிறுவன் தீனதயாளனுடன் விளையாடிய அதே பகுதியை சேர்ந்த 13, 11 வயது சிறுவர்கள் இருவரிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், தீனதயாளனை அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தள்ளிவிட்டோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது போலீசாருக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே போலீசார், நேற்று முன்தினம் இரவில் கிணற்றில் தேடினர். ஆனால், போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் தீனதயாளன் உடல் கிணற்றில் மிதந்தது. பின்னர் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த 2 சிறுவர்களை கைது செய்தனர். கொலைக்கான காரணத்தை கண்டறிய அந்த சிறுவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்புதுலங்க காரணமான கண்காணிப்பு கேமரா
தனது பாட்டி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தீனதயாளனை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்ட போது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் துப்புதுலங்கவில்லை. எனவே அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதுதான், தீனதயாளனை அதே பகுதியை சேர்ந்த 13, 11 வயது சிறுவர்கள் கூட்டிச் சென்றது பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து அவர்களை அழைத்து விசாரித்த போதுதான், அந்த 2 சிறுவர்களும் கிணற்றில் தள்ளி தீனதயாளனை கொலை செய்த அதிர்ச்சி தகவல் அம்பலமானதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக 2 சிறுவர்களிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் அருகே உள்ள வரலொட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் பிரீத்தி (வயது 19). இவர் அங்குள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பிரீத்தி கல்லூரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். அதன் பிறகு மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசில் பாண்டி புகார் செய்தார். அதில், பாண்டியன் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பிரீத்தியுடன் பழகி வந்ததாகவும், அவர் தான் தனது மகளை கடத்தி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரீத்தியை தேடி வருகின்றனர்.






