என் மலர்
வேலூர்
வேலூர்:
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மோட்டார் தொழில் தொடர்புடைய அனைத்து சங்க கட்டமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் 20 சதவீதம் ஆட்டோ, வேன்கள் இன்று ஓடவில்லை.
போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சேர்ந்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று இரவு 50 சதவீதத்துக்கு அதிகமான பஸ்கள் ஓடவில்லை. இன்று காலை 20 சதவீத அரசு பஸ்கள் இயக்கபடவில்லை.
ஆனால் அரசு பஸ்கள் அனைத்தும் இயக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிராமபுறங்களுக்கு செல்லும் சில பஸ்கள் நிறுத்தபட்டுள்ளன.
வேலூர், அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட நகர் புறங்களில் பஸ் போக்குவரத்து பாதிப்பு இல்லை. ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்கள் பாதிக்கபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்டோ பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.
மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு மற்றும் தனி நபர் கழிப்பறை திட்டங்களிலும், அதேபோல் அரசு திட்டங்களுக்கு மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள், அலுவலக வளாகத்தில் இருந்த தேக்கு மரங்களை முறைகேடாக விற்பனை செய்தும், நடைபெறாத திட்டப்பணிகளுக்கு நடந்தது போல் கோப்புகள் தயாரித்து அதற்குரிய பணத்தை முறைகேடாக எடுத்து கொண்டது என்பது உள்பட பல்வேறு புகார்கள் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து சென்றது.
இந்த நிலையில் கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் ராமன் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று திடீரென ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் மாவட்ட தணிக்கைப்பிரிவு உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த மோகன், மாதனூரில் ஒன்றிய ஆணையாளராக பணிபுரிந்த போது எழுந்த பல்வேறு முறைகேடுகள் புகார் தொடர்பாக, தணிக்கை ஆட்சேபனைகளுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் ஓய்வுபெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக முறைகேடு புகார் எதிரொலியாகவும், ஒன்றியத்தில் பணிபுரியும் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததை தொடர்ந்தும் தற்போது மாதனூர் ஒன்றியத்தில் பணிபுரியும் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாதனூர் ஒன்றியத்தில் பதிவறை எழுத்தராக இருந்த மணிகண்டன் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் கணியம்பாடி ஒன்றியத்துக்கும், அலுவலக உதவியாளர்கள் செல்வம் நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கும், சுந்தர் குடியாத்தம் ஒன்றியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் இன்று (திங்கட்கிழமை) அந்தந்த ஒன்றியத்துக்கு சென்று பணியில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் சில அலுவலர்கள் மீதும், திருப்பத்தூர் கோட்ட அலுவலக அதிகாரிகள் மீதும் பல லட்சம் ரூபாய் முறைகேடு புகார்கள் கூறப்படுகிறது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் அவர்களும் இடமாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் மாதனூர் ஒன்றிய அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம், கலெக்டர் ராமன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் புகார் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் அளித்த மனுவில்:- வேலூர் மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவில் விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். ஆனால், மழை இல்லாததால் வேர்க்கடலை பட்டு போய் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஒரு குழு அமைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு நிலக்கடலை பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மற்றொரு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில்:- 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாதத்திற்கு 8 நாள் என வரைமுறை வகுத்து 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கூறியிருந்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த புதுவசூரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர்ராஜாவின் தாய் கலைச்செல்வி (வயது 65), கலெக்டர் ராமனை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ஆறுமுகம் ராணுவத்தில் பணி புரிந்து இறந்துவிட்டார். எனக்கு புற்று நோய் இருப்பதால் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எனது ஒரே மகன் ராஜா என்கிற வசூர் ராஜா மீது மீண்டும் மீண்டும் பல பொய் வழக்குகளை போட்டு பொதுமக்களிடம் ரவுடியாக சித்தரித்து விட்டனர்.
ராஜா என்பவரை வசூர்ராஜா என்று பட்டம் கொடுத்து போலீசார் உருவாக்கிவிட்டனர். நான் சென்னையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறேன். வயதான காலத்தில் என் உடல் நிலையை கருத்தில் கொண்டு என் மகன் கடந்த மாதம் 9-ந் தேதி கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் மனு கொடுத்தார்.
அப்போது முதல் எந்த வம்புக்கும்போகாமல் வீட்டில் இருந்து என்னை கவனித்து கொண்டார். இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி காலை 8.30 மணிக்கு வீட்டில் தூங்கி கொண்டிருந்த வசூர் ராஜாவை, சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
நானும் பின்தொடர்ந்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு சென்றேன். போலீசாரிடம் கேட்டதற்கு, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதாக வசூர் ராஜாவை கைது செய்துள்ளதாக கூறினர்.
என் மகன் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்துள்ளனர். வசூர் ராஜா திருந்தி என்னுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தேன். பெண் பார்த்துவந்தேன். இந்த நிலையில், போலீசார் கைது செய்ததால் மகன் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மகன் வசூர்ராஜாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம், சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்து சட்ட விரோதமாக செயல்படும் கும்பலை பிடித்து ஜெயிலில் அடைக்க எஸ்.பி. பர்வேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த 3-ந்தேதி இரவு 10 மணி முதல் 4ந் தேதி காலை 6 மணிவரை மாவட்டம் முழுவதும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முடுக்கிவிடப்பட்டனர்.
அந்த ஒருநாள் இரவு நேர வேட்டையில் மட்டும் மணல் கடத்தியது, சாராயம் விற்றது மற்றும் காட்டன் சூதாட்டம் நடத்தியது ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 22 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
அன்று ஒருநாள் மட்டும் மொத்தம் 28 வழக்குகள்பதிவு செய்யப்பட்டன. மேலும் 15 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, 2-வது நாளாக 4-ந் தேதி இரவு 10 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை போலீசார் மீண்டும் குற்றவாளிகளை பிடிக்க களமிறங்கினர்.
அதன்படி, 2-வது நாள் வேட்டையில் மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம் மற்றும் சாராயம் விற்ற மேலும் 26 குற்றவாளிகள் பிடிபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி வேட்டை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 1980-ம் ஆண்டு நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதியான இதே நாளில், ஏலகிரியில் நக்சலைட்டுக்கு மூளையாக செயல்பட்டுவந்த சிவலிங்கத்தை போலீசார் மடக்கிபிடித்து ஜீப்பில் ஏற்றி சென்றனர்.
திருப்பத்தூர் அருகே சேலம் சாலையில் சென்ற போது, நக்சலைட்டு சிவலிங்கம் மறைத்து எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டை ஜீப்பில் வீசி விட்டு, சினிமா பாணியில் எகிறி குதித்து தப்பி சென்றார். வெடிகுண்டு வெடித்ததில் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு மற்றும் போலீஸ்காரர்கள் ஏசுதாஸ், முருகேசன் ஆகிய 4பேர் பலியாகினர்.
வேலூரில் இன்ஸ்பெக்டர் பழனிசாமி இறுதி சடங்கு நடந்தது. அதில், அப்போதைய முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பங்கேற்று சவ ஊர்வலத்தில் நடந்தே சென்றார். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தை, வேலூரில் உள்ள அண்ணா கலை அரங்கத்தில் எம்.ஜி.ஆர். நடத்தினார். நக்சலைட்டுகளை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, வட ஆற்காடு சரக டி.ஐ.ஜி.யாக இருந்த வால்டர் தேவாரம் தலைமையிலான போலீசார் நக்சலைட்டுகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினர். அப்போது, தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிர்நீத்த 4 போலீசாருக்கும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, வீரமரணமடைந்த போலீசாருக்கு 38-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது.
30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் மற்றும் டி.ஐ.ஜி. வனிதா, எஸ்.பி. பர்வேஷ்குமார், கியூபிரிவு எஸ்.பி. தர்மராஜன், நல்லதம்பி எம்.எல்.ஏ. மற்றும் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. தேவாரம் பேசியதாவது:-
நக்சலைட்டுகளை ஒழிப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு தான் முக்கிய காரணம். வீரமரணமடைந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமிக்கு அப்போது, 7 வயதில் அஜந்தா என்ற மகள் இருந்தார். அவரது மகளின் பெயரில் அஜந்தா ஆபரேசன் தொடங்கப்பட்டு நக்சலைட்டுகள் அடியோடு ஒழிக்கப்பட்டனர். தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் நடமாட்டம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #WalterDevaram
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அல்டாப். இவரது மனைவி நஷீமா (வயது 22). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருப்பத்தூரில் அப்பாஸ் என்பவர் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
திருமணமான நாளில் இருந்து கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இளம்பெண் நஷீமாவுக்கு திருமணத்தின்போது, பெற்றோர் அணிவித்த நகைகளை அல்டாப் வாங்கி, அதனை விற்று ஊதாரித்தனமாக செலவழித்து விட்டதாக கூறப்படுகிறது. அவர், பலரிடம் கடன் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீப காலமாக அல்டாப் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு, வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே கடையை மூடி விட்டு 2 மாதங்களுக்கு முன்பு சென்னைக்குச் சென்று விட்டார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். சென்னையில் இருந்து அவ்வப்போது திருப்பத்தூருக்கு வந்து மனைவி, குழந்தைகளுடன் தங்கிவிட்டு செல்வார்.
நஷீமாவிடம் மேலும் தாயார் வீட்டில் இருந்து நகை வாங்கி வரும்படி கேட்டு வந்தார். அது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் நேற்று இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அல்டாப், மனைவியை அடித்து உதைத்து, வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை சரமாரியாக அறுத்துக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நஷீமாவை கொலை செய்த தகவலை, அல்டாப் தனது செல்போன் மூலமாக தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த இரு வீட்டாரும், சம்பவ இடத்தில் திரண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நஷீமாவின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பி ஓடிய அல்டாப்பை போலீசார் கைது செய்தனர். கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்சமத் இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 1989ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கபட்டார்.
கடந்த 5 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் நதீம் தோல் வியாபாரி. மற்றும் குடும்பத்தினர் வாணியம்பாடி நியூ டவுனில் வசித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். இதனை தெரிந்து கொண்ட மர்ம கும்பல் வீட்டின் முன்பக்க கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் பின்பக்க கதவை திறந்து கொண்டு வெளியே சென்றுவிட்டனர்.
பெங்களூரில் இருந்து திரும்பிய அப்துல்சமத் குடும்பத்தினர் வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
இது பற்றி வாணியம்பாடி டவுன் போலீசஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. முரளி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கைரேகைகள் சேகரிக்கபட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்சமத் வீட்டின் அருகில் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் மதுவிலக்கு போலீஸ் நிலையம் உள்ளது. இந்த இடத்தில் கொள்ளை நடந்தது வாணியம்பாடி போலீசாருக்கு சவால் விடும் வகையில் உள்ளது.
போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை ஈசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44). இவர், பெங்களூரில் தங்கி வியாபாரம் செய்து வந்தார். செல்வராஜிக்கு புஷ்பா (42) என்ற மனைவியும், ரித்திகா (11) என்ற மகளும் இருந்தனர். நேற்றிரவு, சொந்த ஊரான ஈசலாபுரத்திற்கு செல்வராஜ் தனது மனைவி, மகள் மற்றும் நண்பர்கள் 2 பேருடன் காரில் புறப்பட்டார்.
நள்ளிரவு 1 மணியளவில் சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் உள்ள கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்தனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின் பக்கத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முகப்பு பகுதி நொறுங்கி சேதமடைந்தது.
செல்வராஜ், அவரது மகள் உள்பட 5 பேரும் பலத்தகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜூம், ரித்திகாவும் இறந்தனர். மற்ற 3 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து, கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே மின்னூர் எம்.சி. ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மல்லிகா (வயது 50). இவர், பெட்ரோல் பங்க்கில் துப்புரவு வேலை செய்து வந்தார். இன்று காலை 9 மணிக்கு மல்லிகா வேலை முடிந்து தேசிய நெடுசாலையோரம் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பெங்களூரில் இருந்த வந்த கார் திடீரென மல்லிகா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையோர பள்ளத்தில் விழுந்து துடிதுடித்து பலியானார்.
விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த சென்னை அண்ணாநகரை சேர்ந்த சீனிவாசன் மனைவி பிரேமா (70) பலத்த காயமடைந்தார். கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அவர், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
பள்ளிக்கல்வி விளையாட்டு துறை சார்பில் அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் முள்வாய் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகள் நடந்தபோது, 2 ஆசிரியைகள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக மாணவிகளை குடை பிடிக்க வைத்தனர். போட்டி முடியும் வரை மாணவிகள் நின்றபடி ஆசிரியைகளுக்கு குடை பிடித்தனர்.
ஆசிரியைகளுக்கு மாணவிகள் குடை பிடித்த போட்டோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக, விசாரணை நடத்த அரக்கோணம் மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரனுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உத்தரவிட்டார்.
விசாரணையில், மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள், அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரிவது தெரியவந்தது. அந்த பள்ளிகளின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வேலூர் நேதாஜி மைதானத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது, வெயில் கொளுத்தியது. போட்டியில் நடுவராக இருந்த ஆசிரியை மாணவிகளை தனக்கு குடை பிடிக்க வைத்தார். இது, பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அரக்கோணத்தையடுத்து வேலூரிலும் ஆசிரியைகள் மாணவிகளை குடைபிடிக்க வைத்த சம்பவம் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலை தளங்களில் கல்வித்துறைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இதனால் கல்வித்துறையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அரக்கோணம் மற்றும் வேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்து சர்ச்சையில் சிக்கிய ஆசிரியைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #Teachers
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சின்ன பஜார் வீதியை சேர்ந்தவர் கனகதாரா (வயது72). இவர் 2001-2005-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பேரணாம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தாய் சின்னபாப்பா(90), தங்கை நளியுடன் பேரணாம்பட்டில் வசித்து வந்தார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்றிரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் இன்று காலை 9 மணி வரை அறையை விட்டு வெளியேவரவில்லை. இதனால் அவரது உதவியாளர் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் இறந்து கிடந்தார். மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது கனகதாரா அ.தி.மு.க.வில் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளராக பதவியில் இருந்தார்.
தொகுதி சீரமைப்பில் பேரணாம் பட்டு தொகுதி நீக்கப்பட்டு தற்போது குடியாத்தம், ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி, விருதம்பட்டு, வேலூரில் ஓல்டு டவுன், சலவன்பேட்டை, கஸ்பா, தோட்டப்பாளையம் மற்றும் காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் என பல்வேறு இடங்களில் மணல் கடத்தல், சாராய விற்பனை, காட்டன் சூதாட்டம் கொடி கட்டி பறக்கிறது.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை குறிவைத்து காட்டன் சூதாட்டம் அதிகம் நடக்கிறது. அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பல கூலித் தொழிலாளர்கள் பணத்தை இழக்கின்றனர். முன்பெல்லாம் மறைவிடங்களில் காட்டன் சூதாட்டம் நடந்தது.
தற்போது தற்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் துணிகரமாக நடக்கிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், மணல் கடத்தல், சாராய விற்பனை மற்றும் காட்டன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
சூதாட்ட கும்பலிடம் போலீசார் சிலர் மாமூல் பெற்றுக்கொண்டு தொடர்பில் இருப்பதால், பொதுமக்கள் புகார் அளிக்க தயங்குகின்றனர். இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம், சாராய விற்கும் கும்பலை பிடிக்க எஸ்.பி. பர்வேஷ்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணிவரை மாவட்டம் முழுவதும் சிறப்பு ரோந்து மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முடுக்கிவிடப்பட்டனர். இந்த இரவு நேர வேட்டையில் மணல் கடத்தியது, சாராயம் விற்றது, காட்டன் சூதாட்டம் நடத்தியது ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 22 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஒரே இரவில் மொத்தம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 15 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆற்காடு:
கலவை அடுத்த மேச்சேரி காந்திநகரை சேர்ந்தவர் எழிலரசன் (வயது40). இவரது மனைவி லட்சுமி (வயது36). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் எழிலரசன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். இதனால் விரக்கியடைந்த அவர் நேற்று வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த கலவை போலீசார் உடலை மீட்டு வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






