search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former DGP Walter Devaram"

    தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் நடமாட்டம் இல்லை என திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் கூறினார். #WalterDevaram
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 1980-ம் ஆண்டு நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதியான இதே நாளில், ஏலகிரியில் நக்சலைட்டுக்கு மூளையாக செயல்பட்டுவந்த சிவலிங்கத்தை போலீசார் மடக்கிபிடித்து ஜீப்பில் ஏற்றி சென்றனர்.

    திருப்பத்தூர் அருகே சேலம் சாலையில் சென்ற போது, நக்சலைட்டு சிவலிங்கம் மறைத்து எடுத்து வந்த நாட்டு வெடிகுண்டை ஜீப்பில் வீசி விட்டு, சினிமா பாணியில் எகிறி குதித்து தப்பி சென்றார். வெடிகுண்டு வெடித்ததில் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஆதிகேசவலு மற்றும் போலீஸ்காரர்கள் ஏசுதாஸ், முருகேசன் ஆகிய 4பேர் பலியாகினர்.

    வேலூரில் இன்ஸ்பெக்டர் பழனிசாமி இறுதி சடங்கு நடந்தது. அதில், அப்போதைய முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பங்கேற்று சவ ஊர்வலத்தில் நடந்தே சென்றார். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தை, வேலூரில் உள்ள அண்ணா கலை அரங்கத்தில் எம்.ஜி.ஆர். நடத்தினார். நக்சலைட்டுகளை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, வட ஆற்காடு சரக டி.ஐ.ஜி.யாக இருந்த வால்டர் தேவாரம் தலைமையிலான போலீசார் நக்சலைட்டுகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை தொடங்கினர். அப்போது, தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து, நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிர்நீத்த 4 போலீசாருக்கும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் அங்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, வீரமரணமடைந்த போலீசாருக்கு 38-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது.

    30 துப்பாக்கி குண்டுகள் முழங்க சோக கீதம் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் மற்றும் டி.ஐ.ஜி. வனிதா, எஸ்.பி. பர்வேஷ்குமார், கியூபிரிவு எஸ்.பி. தர்மராஜன், நல்லதம்பி எம்.எல்.ஏ. மற்றும் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. தேவாரம் பேசியதாவது:-

    நக்சலைட்டுகளை ஒழிப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு தான் முக்கிய காரணம். வீரமரணமடைந்த இன்ஸ்பெக்டர் பழனிசாமிக்கு அப்போது, 7 வயதில் அஜந்தா என்ற மகள் இருந்தார். அவரது மகளின் பெயரில் அஜந்தா ஆபரேசன் தொடங்கப்பட்டு நக்சலைட்டுகள் அடியோடு ஒழிக்கப்பட்டனர். தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் நடமாட்டம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #WalterDevaram

    ×