என் மலர்
வேலூர்
குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி மாநில இளைஞரணி துணை செயலாளர் என்.குமார், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் புகார் மனு கொடுத்தனர்.
சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் தமிழகத்தின் மிகப்பெரிய சாதியான வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, படத்தின் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சாதி பிரிவினை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
துலாம் மாதம் முழுவதும் காவிரியில் நீராடினால், 7 ஜென்மங்களில் செய்த பாவம், முன்னோர்களின் சாபம் நீங்குவதாக நம்பிக்கை.
துலாம் மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டாலும், முதல்நாள் மற்றும் கடைசி நாள் நீராடினாலே புண்ணியப்பேறு அடைவார்கள் என்பது ஐதீகம். இந்த நிலையில் துலாம் (ஐப்பசி) மாதத்தின் கடைசி நாளான நேற்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரி ஆற்றில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி ஐயாறப்பர் கோவிலில் இருந்து சூலபாணி காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்யமண்டப படித்துறைக்கு எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் ஆற்றில் புனித நீராடினர். சிலர் தர்ப்பணம் கொடுத்தனர்.
வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி ஐயாறப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக காவிரி புஷ்யமண்டப படித்துறை மற்றும் கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஆற்றங்கரை மற்றும் கோவில் பகுதிகளில் திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை:
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்த போது, அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்த மிதுன்சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததும், அதனாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்தனர். ஆனால் உறவினர்கள், பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்தும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். எனவே அவரையும் கைது செய்ய வேண்டும் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரை கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு துணை கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
பள்ளி முதல்வரிடம், ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவி உங்களிடம் தெரிவித்தும், நீங்கள் ஏன் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் பாலியல் தொல்லை தெரிந்ததும், போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் மையத்திற்கு தகவல் தெரிவிக்காது ஏன்? அதற்கு என்ன காரணம். யாராவது நடவடிக்கை எடுக்க வேண்டாம், வெளியில் சொல்ல வேண்டாம் என உங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்களா? கைது செய்யப்பட்ட ஆசிரியர் இந்த மாணவியை போன்று வேறு யாராவது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? அது குறித்து யாராவது புகார் உங்களிடம் தந்தார்களா? இதில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா? அது குறித்த தகவல் உங்களுக்கு தெரியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். அதற்கு மீரா ஜாக்சனும் பதில் அளித்துள்ளார். அதனை போலீசார் வீடியோ பதிவுடன் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
காலையில் தொடங்கிய விசாரணை இரவு வரை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
விசாரணை முடிந்ததும் போலீசார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினி தேவி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கோவை சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் கூறுகையில், மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்தா? என விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள துண்டு சீட்டு மற்றும் வாட்ஸ்- அப் ஆதாரங்கள், ஆடியோ உரையாடல்களை வைத்தும் அடுத்தகட்ட விசாரணை நடக்கிறது. மாணவி தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்து வருகிறோம். இதுதவிர மாணவி எழுதிய துண்டு சீட்டில் உள்ள பெயர்கள், விவரங்கள் குறித்து விசாரணை நடக்கிறது. சக மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம் என்றார்.
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை இல்லாத சூழலில், இன்று காலை பரவலாக மழை பெய்தது. வேலூர் உட்பட பல மாவட்டங்களில் அதிக கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் 49 ஹெக்டேர் பயிர்கள் சேதமாகியுள்ளது. 3 பேர், 3 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 93-க்கும் மேற்பட்ட கூரை மற்றும் ஓட்டு வீடுகள் முழுவதுமாகவும் பகுதி அளவும் சேதமடைந்துள்ளது.
வேலூரின் முக்கிய ஆறுகளான பாலாறு மற்றும் பொன்னை ஆறு, கவுண்டன்ய மகா நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீட்கப்படும் மக்களை தங்க வைக்க 27 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அவலூர் கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக சேதமடைந்த விளைபயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவருகிறது.
தற்போது நெமிலி, வாலாஜா, ஆற்காடு, திமிரி உள்ளிட்டபகுதிகளில் இதுவரை 48 ஹெக்டேர் நெல்பயிர் மற்றும் 10 ஏக்கர் வரை உளுந்து, கரும்பு மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்கள் உள்ளிட்ட விளைபயிர்கள் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து சேதம் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லட்சுமி பிரியா பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும் விவசாய பயிர்கள் குறித்து தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் மழை எச்சரிக்கை நாட்களிலும் கண்காணித்து அறிக்கையை தயார் செய்து அளிக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்யப்பட்ட விவரங்களையும் விவசாயிகளிடமிருந்து பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஓச்சேரி கோவிந்தவாடி ஏரிக்கு அணைக்கட்டில் இருந்து கால்வாயில் செல்லும் தண்ணீரை பார்வையிட்டு தண்ணீர் செல்லும் ஏரிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த வேளியநல்லூர் கிராமத்தில் ஜாகீர்தண்டலம் ஏரி நிரம்பி விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
அறுவடைக்கு தயராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் மிக பலத்த மழை கொட்டியது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாளை (11-ந் தேதி) கடலூர் அருகே கரையை கடக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்பட வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் அதிகளவில் மேகக் கூட்டங்கள் காணப்படுகின்றன. அவை 13-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று வானிலை இலாகா கூறி இருக்கிறது.
அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் என்றும் கூறி உள்ளனர். இதனால் 13-ந் தேதிக்கு பிறகு மீண்டும் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
வேலூர்:
கோவை மாவட்டம் வெள்ளாலூர் ராகவேந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் மகன் நவநீதன் (வயது 40). இவர் வேலூர் காட்பாடியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
இன்று காலையில் நீண்டநேரமாகியும் நவநீதன் இருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் இதுகுறித்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவைத் திறந்தனர். அங்குள்ள மின்விசிறியில் நவநீதன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் எதற்காக வேலூர் வந்தார்? தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னூர்:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆம்போதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்த கிராமத்தையொட்டி 8 கி.மீ தொலைவில் சிறுமுகை வனப்பகுதி உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியை சேர்ந்த சிலர் ஒடை அருகே மாடுகளை மேய்ச்சலில் விட்டிருந்தனர். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்றது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோன மக்கள் உடனடியாக தங்கள் கால்நடைகளை அவசர, அவசரமாக பட்டிக்கு கொண்டு வந்து அடைத்தனர். சிறுத்தை வந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. இதையடுத்து மக்கள் தனியாக செல்வதற்கும், குழந்தைகளை வெளியில் விடவும் மிகவும் அச்சப்படுகின்றனர்.
இதற்கிடையே நேற்று காலை மீண்டும் அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சிறுமுகை வனசரகர் செந்தில் குமார் தலைமையிலா வனத்துறையினர், அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்தியா தலைமையிலான போலீசார் கிராமம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் சிறுத்தை தென்படவில்லை. இதையடுத்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி விட்டு வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் அதனை தேடி பார்த்தோம். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தையும் பதிவு செய்தோம். ஆய்வில் அது காட்டுப் பூனையின் கால்தடம் போல் தெரிகிறது.
எனினும் இன்னும் அது எந்த விலங்கு என்று உறுதிபடுத்தப்படவில்லை. கால்நடைகளை சிறுத்தை தாக்குவது அறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.
சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக ஆம்போதி மற்றும் அக்கரை செங்கம்பள்ளி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 1-ந் தேதி முதல் இன்று வரை தொடர்மழையால் 3 பேர் பலியாகி உள்ளனர். 3 பசுமாடுகள் இறந்துள்ளன.
இதேபோல மாவட்டம் முழுவதும் 75 வீடுகள் இடிந்துள்ளன. இதில் 9 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது.
மழை பாதிப்பால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்குவதற்காக 27 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று வரை இந்த முகாம்களில் பொதுமக்கள் யாரும் தங்க வைக்கப்படவில்லை.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக சோளிங்கர் அரக்கோணம் பகுதியில் இன்று 3 வீடுகள் இடிந்தன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மழையினால் சேதம் ஏற்படவில்லை. ஆண்டியப்பனூர் அணை நிரம்பி ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:
வேலூர் 18.9 செ.மீ.
வாலாஜா 52.6 செ.மீ.
அரக்கோணம் 22.2 செ.மீ.
சோளிங்கர் 29.4 செ.மீ.
கலவை 11.2 செ.மீ.
திருப்பத்தூர் 20.2 செ.மீ.
ஆம்பூர் 59.4 செ.மீ.
ஆலங்காயம் 78.6 செ.மீ.
நாட்றம்பள்ளி 29.4 செ.மீ.
ஜோலார்பேட்டை 26 செ.மீ.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
* வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து நவ.11ந்தேதி தமிழகம் அருகே வரும்.
* வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






