search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி முதல்வர்
    X
    பள்ளி முதல்வர்

    மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வரிடம் 12 மணி நேரம் நீடித்த விசாரணை

    மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்த போது, அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்த மிதுன்சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததும், அதனாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து போலீசார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்தனர். ஆனால் உறவினர்கள், பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்தும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். எனவே அவரையும் கைது செய்ய வேண்டும் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு துணை கமி‌ஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    பள்ளி முதல்வரிடம், ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவி உங்களிடம் தெரிவித்தும், நீங்கள் ஏன் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும் பாலியல் தொல்லை தெரிந்ததும், போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் மையத்திற்கு தகவல் தெரிவிக்காது ஏன்? அதற்கு என்ன காரணம். யாராவது நடவடிக்கை எடுக்க வேண்டாம், வெளியில் சொல்ல வேண்டாம் என உங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்களா? கைது செய்யப்பட்ட ஆசிரியர் இந்த மாணவியை போன்று வேறு யாராவது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? அது குறித்து யாராவது புகார் உங்களிடம் தந்தார்களா? இதில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா? அது குறித்த தகவல் உங்களுக்கு தெரியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர். அதற்கு மீரா ஜாக்சனும் பதில் அளித்துள்ளார். அதனை போலீசார் வீடியோ பதிவுடன் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    காலையில் தொடங்கிய விசாரணை இரவு வரை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    விசாரணை முடிந்ததும் போலீசார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினி தேவி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கோவை சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து துணை கமி‌ஷனர் ஜெயச்சந்திரன் கூறுகையில், மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்தா? என விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள துண்டு சீட்டு மற்றும் வாட்ஸ்- அப் ஆதாரங்கள், ஆடியோ உரையாடல்களை வைத்தும் அடுத்தகட்ட விசாரணை நடக்கிறது. மாணவி தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்து வருகிறோம். இதுதவிர மாணவி எழுதிய துண்டு சீட்டில் உள்ள பெயர்கள், விவரங்கள் குறித்து விசாரணை நடக்கிறது. சக மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம் என்றார்.

    Next Story
    ×