search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
    X
    சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    அன்னூர் அருகே கிராமத்திற்குள் சிறுத்தை நடமாட்டமா?- பொதுமக்கள் அச்சம்

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆம்போதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்த கிராமத்தையொட்டி 8 கி.மீ தொலைவில் சிறுமுகை வனப்பகுதி உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியை சேர்ந்த சிலர் ஒடை அருகே மாடுகளை மேய்ச்சலில் விட்டிருந்தனர். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்றது.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோன மக்கள் உடனடியாக தங்கள் கால்நடைகளை அவசர, அவசரமாக பட்டிக்கு கொண்டு வந்து அடைத்தனர். சிறுத்தை வந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. இதையடுத்து மக்கள் தனியாக செல்வதற்கும், குழந்தைகளை வெளியில் விடவும் மிகவும் அச்சப்படுகின்றனர்.

    இதற்கிடையே நேற்று காலை மீண்டும் அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சிறுமுகை வனசரகர் செந்தில் குமார் தலைமையிலா வனத்துறையினர், அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்தியா தலைமையிலான போலீசார் கிராமம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் சிறுத்தை தென்படவில்லை. இதையடுத்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி விட்டு வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் அதனை தேடி பார்த்தோம். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தையும் பதிவு செய்தோம். ஆய்வில் அது காட்டுப் பூனையின் கால்தடம் போல் தெரிகிறது.

    எனினும் இன்னும் அது எந்த விலங்கு என்று உறுதிபடுத்தப்படவில்லை. கால்நடைகளை சிறுத்தை தாக்குவது அறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக ஆம்போதி மற்றும் அக்கரை செங்கம்பள்ளி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×