என் மலர்tooltip icon

    வேலூர்

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • பாம்பு கடித்து சில மாதங்களுக்கு முன்பு 2 பேர் உயிரிழந்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமத்தில் பாம்பு கடித்து சில மாதங்களுக்கு முன்பு 2 பேர் உயிரிழந்தனர்.

    சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலையில் இருவரும் உயிரிழந்ததாக குற்றம் சாட்டுகள் எழுந்தது.

    இதனை தொடர்ந்து, பீஞ்சமந்தை மலை கிராமத்தி ற்காக பிரத்தியோக ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வசதி கொண்ட வாகனத்தை ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த வாகனத்தை மலை கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுரை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் மலை கிராம மக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

    இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். வேலூர் கோட்டை அருகில் இருந்து இந்த வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த பிரத்யேக ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராம சாலைகளில் பயணிக்கும் வகையில் அதிக உந்து விசையுடன் கூடிய வாகனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், அந்த வாகனத்தில் உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கும்வசதிகளுடனும், மருத்துவ உதவி தேவைப்படும் நபருக்கான படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் பீஞ்சமந்தை மலை கிராமத்தில் முழு நேரமும் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பானுமதி, வேலூர் சப் -கலெக்டர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கோவை உயிரியல் பூங்கா கொண்டுவரப்பட்டது
    • ஒவ்வொன்றும் கூண்டில் அவிழ்த்து விடப்பட்டன

    வேலுார்:

    கோவை வ.உ.சி. மைதானம் அருகில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்தது. அங்கு முதலை, புள்ளிமான், குரங்கு, கிளி உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டன.

    அந்த பூங்காவை கோவை மாநகராட்சி நிர்வகித்து வந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த உயிரினங்களை பார்த்து ரசித்து சென்றனர்.

    இந்நிலையில், பூங்காவை பராமரிக்க போதிய இடவசதி இல்லை எனக் கூறி, பூங்காவுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தேசிய வன உயிரின ஆணையம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்துசெய்தது.

    அதன்பிறகு பூங்காவுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    மேலும், அங்கிருந்த உயிரினங்கள் வேறு பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கோவை வ.உ.சி. பூங்காவில் இருந்து 2 முதலை, 3 நட்சத்திர ஆமை, 4 சாரைப்பாம்பு ஆகிய 9 உயிரினங்கள், சென்னை வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் மூலமாக, மினிவேனில் எடுத்துவந்து, வேலுார் மாவட்டம் அமிர்தி சிறு வனஉயிரின பூங்காவில் வனச்சரகர் குணசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டன.

    பின்னர் ஒவ்வொன்றும் கூண்டில் அவிழ்த்து விடப்ப ட்டன.

    • மேயர் சுஜாதா ஆய்வு
    • முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி 21-வது வார்டு பூங்கா நகர் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தார் சாலை அமைக்கும் பணியை மேயர் சுஜாதா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குறிப்பிட்ட உயரத்தில் தரமாக சாலை அமைக்கப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இ.பி நகர், ஸ்ரீராம் நகர் நேதாஜி போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் சர்க்கரை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த முடினாம்பட்டை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 23).. இவருக்கும் கீழ்மொணவுரை சேர்ந்த அருண்குமார் (33) என்றவர்க்கும் திருமணம் நடந்தது திருமணத்தின்போது 12 சவரன் நகையை ஐஸ்வர்யாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர்.

    இந்த நிலையில் அருண்குமார் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஐஸ்வர்யாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அருண்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதை ஐஸ்வர்யா தட்டி கேட்டுள்ளார். அப்போழ அருண்குமார் மற்றும் அவரது தந்தை அசோகன் (60), தாய் வசந்தா (50), அகிலா (32), ஆஷா (22) ஆகியோர் ஐஸ்வர்யாவை ஆபாசமாக திட்டி உள்ளனர்.

    இது குறித்து ஐஸ்வர்யா வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணல் கடத்தலை தடுத்ததால் ஆத்திரம்
    • போலீஸ் குவிப்பு- பதட்டம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னதோட்டாளம் கிராமத்தில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக மேல்பட்டி தனிப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணவாளனுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நேற்று இரவு மணவாளன் அந்த கிராமத்தில் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பேர் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி வந்தனர். அவர்களை மணவாளன் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.

    கடத்தல்காரர்கள் சப்- இன்ஸ்பெக்டர் மணவாளனை சரமாரியாக தாக்கியதோடு, அவர் மீது மாட்டு வண்டிகளை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தனர்.

    இதில் மணவாளன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணவாளன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    மேலும் அந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்ப ட்டதால் பதட்டமான சூழல் நிலவியது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிப்பு
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    சென்னையை சேர்ந்தவர் தனானந்தகிரி (வயது 50). இவர் சாமியார் போன்று பல்வேறு இடங்களுக்கு செல்வார். கடந்த 2021-ம் ஆண்டு வேலூர் வந்த அவர் வேலூருக்கு வந்தார்.

    கேரளமாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாபு அகமது ஷேக் (50). இவரும் வேலூரில் சுற்றித்திரிந்து கிடைக்கும் வேலைகளை செய்து சாலையோரம் எங்காவது தூங்குவதை வழக்கமாக கொண்டி ருந்தார்.

    இந்தநிலையில் அவர் வழக்கமாக தூங்கும் இடத்தில் தனானந்தகிரி படுத்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5.11.2021 அன்று காட்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த தனானந்தகிரியை, பாபு அகமதுஷேக் கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுஅகமது ஷேக்கை கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் சம்பத் ஆஜராகி வாதாடினார்.

    நீதிபதி ரேவதி வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட பாபு அகமதுஷேக்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண் டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து பாபுஅகமதுஷேக்கை, போலீசார் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

    • போலீஸ் நிலையம் முற்றுகை- பரபரப்பு
    • 4 மாதங்களாக போலீசார் தேடி வந்தனர்

    வேலூர்:

    பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி (வயது 50). கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம கும்பல் வளர்மதியை கழுத்தை அறுத்து கொலை செய்து, அவர் காதில் அணிந்திருந்த கம்மலை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக குற்றவாளி களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே உள்ள கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்த கணபதி என்கிற புகழேந்தி (23), ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த ரவி (46) ஆகிய 2 பேரும் வளர்மதியை கொலை செய்து கம்மலை கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ரவி வழிப்பறி கொள்ளை, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர். இவர் வழிப்பறி செய்யும் நகைகளை தனது கள்ளக் காதலிகளுக்கு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    நேற்று காலை கணபதி என்கிற புகழேந்தியை போலீசார் பிடித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வளர்மதியை கணபதி கொலை செய்யவில்லை எனவும், அவரை விடுவிக்க கோரியும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் அவர்களிடம் ஆதாரத்தோடு கணபதியை பிடித்ததாக தெரிவித்து எச்சரித்தார். இதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • வாழ் வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை
    • மொத்தம் 33 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    அணைக்கட்டு:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

    இதற்காக நிரந்தர தூய்மைப்பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், டெங்குகொசு ஒழிப்பு பணியாளர்கள் என அனைத்து மாவட்டங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

    அதன்படி, ஒடுகத்தூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களின் விவரங்கள் கணக்கெடுக் கும் பணி ெதாடங்கப்பட்டது.

    இங்கு மொத்தம் 33 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பயிற்சி அளிக் கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் வீடு, வீடாக சென்று தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    • 21 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர்மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 6-ந் தேதி முதல் 26-ந் வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் 4-ம் சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம் ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது.

    கால் நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும் விவசாயயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

    மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

    பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் 3 மாத வயதுக்குட்பட்ட கன்றுகளின் இறப்பும் ஏற்படும்.

    பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

    கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.

    குளிர் மற்றும் பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்கில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைளுக்கு தடுப்பூசி போடாமல் இருந்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவுகிறது.

    இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீர், உமிழ்நீர், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 1 லட்சத்து 85 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 21 நாட்களுக்கு முகாம் நடைபெறவுள்ளது.

    கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசுக்ககள். எருதுகள். எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • விற்பனைக்கு கொண்டு வந்தபோது சிக்கினர்
    • குடியாத்தத்தில் 2 ஆடுகள் திருட்டு

    அணைக்கட்டு:

    குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 37). இவர் அதே பகுதியில் சுமார் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு ரஞ்சித் வழக்கம்போல் ஆடுகளை வீட்டின் அருகே உள்ள ஆட்டுக் கொட்டகையில் கட்டி வைத்தார்.

    பின்னர் இன்று காலை எழுந்து பார்த்தபோது, அதில் இருந்த 2 ஆடுகள் காணாமல் போனது தெரியவந்தது. அக்கம், பக்கம் பல்வேறு இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. அதனை மர்ம நபர்கள் இரவோடு, இரவாக திருடி சென்றிருக்கலாம் என அவர் சந்தேகம் அடைந்தார்.

    இந்த நிலையில் ரஞ்சித் மற்றும் அவரது உறவினர்கள், ஒடுகத்தூரில் இன்று காலை நடந்த ஆட்டு சந்தைக்கு வந்தனர். அப்போது காணாமல் போன 2 ஆடுகளை விற்பனைக்காக நிற்க வைத்திருந்ததை கண்டு ரஞ்சித் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஆடு வைத்திருந்த நபரிடம் விசாரித்தபோது, 3 வாலிபர்கள் 2 ஆடுகளையும் ரூ.17 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து ரஞ்சித் அந்த 3 வாலிபர்களையும் தேடிப்பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தார்.

    இது குறித்து அந்தபகுதி மக்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் 3 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் குடியாத்தம் அடுத்த செதுக்கரை அருகே உள்ள ஜீவா நகரை சேர்ந்த அஜித் (வயது 19) , போஸ் (20), சந்துரு (19) என்பதும், அவர்கள் ரஞ்சித் ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து வேப்பங்குப்பம் போலீசார், 3 வாலிபர்களையும் குடியாத்தம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அதன் பேரில் குடியாத்தம் போலீசார் 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஒடுகத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அமைச்சர் துரைமுருகன் பேச்சு
    • சேண்பாக்கத்தில் புதிய ரேசன் கடை திறப்பு

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கம் திடீர் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-

    வேலூர் மாநகராட்சியில் சேண்பாக்கம் பகுதி ஒதுக்கப்படுவதாக தகவல் வருகிறது. இந்த பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணிகளை செய்ய வேண்டும்.

    எனக்கு காவேரி, தாமிரபரணி பிரச்சினைகள் உள்ளன. காவேரி பிரச்சினை தலைக்கு மேல் உள்ளது. அதனால் என்னால் இந்த பகுதிக்கு சரியாக வர முடியவில்லை.

    ஆனாலும் புகைப்படங்கள் மற்றும் பொதுமக்கள் தரும் தகவல் மூலம் இந்த பகுதியை கண்காணித்து பணிகள் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

    சேண்பாக்கம் பகுதியில் தெருக்கள் மோசமாக உள்ளன. மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேண்பாக்கம் பாலாற்றில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.

    அதன் மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    இவர் அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வடகாத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணாளன் (வயது 45). ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி கல்பனா (36) அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல தங்கள் பிள்ளைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்கு சென்றனர்.

    கல்பனா பணி முடிந்து மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 60 பவுன் நகை, 2 லட்சம் மதிப்புடைய வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பள்ளி கொண்டா போலீசாருக்கு கல்பனா தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த கேமராவில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரின் அடையாளம் பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    ×