என் மலர்
வேலூர்
- வேலூர் பெருமுகையில் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
- 2 கார்களில் வந்த வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டது.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஷூ கம்பெனி மற்றும் தோல் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மிக அதிகமான தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு உயர்தரம் மிக்க ஷூ மற்றும் பெல்ட், பர்ஸ், பேக் வகைகள் என பல்வேறு தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணிகளை அதிகம் ஈட்டித் தருகின்றன.
இதில் பரிதா குரூப்ஸ் ஷூ மற்றும் தோல் தொழிற்சாலைகள் பிரபலமானதாகும். ஆம்பூர், ராணிப்பேட்டை, வேலூர், புதுச்சேரி, சென்னை மற்றும் வெளிநாடுகளிலும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை, ஷூ கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆம்பூரில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருகிறது. ராணிப்பேட்டையில் பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 3 தொழிற்சாலைகள் உள்ளன.
ஆம்பூர் துத்திபட்டு, மோட்டு கொல்லை, எம்.சி.ரோடு ஆகிய இடங்களில் உள்ள பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஷூ மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறை அதிகாரி கிருஷ்ண பிரசாத் தலைமையில் காலை 8 மணிக்கு 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வருமான வரித்துறையினர் 100-க்கும் மேற்பட்டோர் இந்த தொழிற்சாலைகளுக்கு வந்தனர். அவர்கள் உள்ளே சென்று அங்குள்ள அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டன. உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஆம்பூர் பஜார் பின்புறம் நாகேஸ்வரன் கோவில் அருகே உள்ள தோல் கம்பெனியின் அதிபர் வீட்டிலும் சோதனை நடந்தது.
வேலூர் பெருமுகையில் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இதில் 2 கார்களில் வந்த வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டது.
இந்த தொழிற்சாலையில் மட்டும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வருமான வரி சோதனையால் இந்த அலுவலக பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதேபோல ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு ஆகிய இடங்களில் உள்ள பரிதா குரூப்ஸ் சொந்தமான தோல் தொழிற்சாலைகளில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, புதுச்சேரி, ஆம்பூர், ராணிப்பேட்டை உள்பட பரிதா குரூப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.
சென்னை ராமாபுரம் மவுண்ட் பூந்தமல்லி ரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலையின் அலுவலகத்திலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.
- அழகாய் மாறுது வேலூர்
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிளில் மேம்பால சுவர்களில் இருபுறமும் போஸ்டர்கள் ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர்.
இதனால் மேம்பாலச் சுவர்கள் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மாநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த மேம்பாலச் சுவர்களை அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கிரீன் சர்க்கிளில் இருபுறமும் உள்ள மேம்பால சுவர்களில் பல வகையான ஓவியங்களை வரையும் பணி இன்று தொடங்கியது.
இதற்காக மேம்பால சுவர்களில் இருபுறமும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றி அதில் வெள்ளை நிற வண்ணம் தீட்டு பணி இன்று நடந்தது.
இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம் எல் ஏ, மேயர் சுஜாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மாநகர நல அலுவலர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது;
வேலூர் மாநகராட்சி சார்பில் கிரீன் சர்க்கிளில் மேம்பாலத்தின் சுவர்களில் இருபுறமும் வண்ண ஓவியங்கள் தீட்டப்படுகிறது. தமிழகம் நம்முடைய மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் உள்ள கோட்டை உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்க வரைபடம் அமைய உள்ளது.
மேலும் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் அரசு நில திட்டங்கள் போன்றவை பட விளக்கங்களாக இந்த மேம்பாலங்களில் வரையப்படுகிறது.
நெரிசலை குறைக்க கிரீன் சர்க்கிள் இன்னும் சில மாதங்களில் செவ்வக வடிவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் கிரீன் சர்க்கிள் பகுதியில் முழுவதுமாக போக்குவரத்து நெரிசல் குறையும்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் மேம்பால சுவர்களில் வண்ண ஓவியங்கள் மூலம் அழகு படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- நல்ல முறையில் ஹேர் கட்டிங் செய்து கொண்டால் தான் நல்ல பழக்கவழக்கங்கள் வரும்
- கலெக்டர் அறிவுரை
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறை தீர்வு கூட்டத்தில் பெண் ஒருவர் அவரது 2 மகன்களுடன் மனு கொடுக்க வந்திருந்தார்.
தனது கணவர் இறந்து விட்டதால் குடும்பம் நடத்த வழி இல்லை. இதனால் வேலை தந்து உதவும்படி அவர் கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் நேரில் மனு அளித்தார். மனுப் பெற்றுக் கொண்ட கலெக்டர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.
அந்த பெண்ணுடன் வந்திருந்த மகன்கள் இருவரும் புள்ளிங்கோ கட்டிங் செய்திருந்தனர்.
இதனை கண்ட கலெக்டர் இது போன்ற முடி திருத்தம் செய்வது நல்லதல்ல. நல்ல முறையில் ஹேர் கட்டிங் செய்து கொண்டால் தான் நல்ல பழக்கவழக்கங்கள் வரும். முதலில் இது போன்ற ஹேர் கட்டிங் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உடனடியாக அந்த ஹேர் கட்டிங்கை திருத்தம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
- குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35) சாராயம் விற்பனை தொடர்பாக குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 11-ந் தேதி இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் இன்று காலை இறந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .
- வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி
- போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்ட கலெக்டர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதனையொட்டி கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் பலத்த சோதனைக்கு பிறகு பொதுமக்களை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அனுமதித்தனர்.
அரியூர் அருகே உள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் (வயது 60) என்பவர் மஞ்சள் பையுடன் வந்திருந்தார். அதை போலீசார் சோதனை யிட்டனர். அதில் அரை லிட்டர் பெட்ரோல் கேன் இருந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் கலெக்டரிடம் சென்று மனு அளித்தார். அப்போது பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. அதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்ததாக கூறினார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அர்ஜுனன் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவரை சத்துவாச்சாரி போலீசார் அழைத்துச் சென்றனர்.
பொன்னையைச் சேர்ந்த ஏகாம்பரம் (60) என்பவர் மனு கொடுக்க வந்தார். அவர் கலெக்டர் முன்பு திடீரென அமர்ந்து விட்டார். அவரிடம் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள சுவரை அகற்றிவிட்டு புதிதாக வீடு கட்ட உள்ளேன்.
அந்த சுவரை இடிக்க விடாமல் அருகில் உள்ளவர்கள் தாக்க வருகிறார்கள். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனது இடத்தில் உள்ள சுவரை அகற்றிவிட்டு புதிய வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என கூறினார். அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பள்ளிகொண்டா பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் தீபா கார்த்திகேயன் என்பவர் அளித்த மனுவில் பள்ளிகொண்டா வேப்பங்கால் பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட இடம் இல்லை. அந்த பகுதியில் சுகாதார நிலையம் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
- மகளிர் சுய உதவி குழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சம் கடன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
- விசாரணையில் கிளை மேலாளர் உமா மகேஸ்வரி இந்த மோசடியில் நேரடியாக ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பயிர் கடன், மகளிர் சுய உதவி குழு கடன், புதிய தொழில் தொடங்குவதற்கான கடன்கள் வழங்கப்படுகிறது.
கடந்த 2018-19 ஆம் ஆண்டுகளில் இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிய கடன்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதன் பெயரில் கூட்டுறவு சங்க தணிக்கை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் மகளிர் சுய உதவி குழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சம் கடன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணையில் கிளை மேலாளர் உமா மகேஸ்வரி இந்த மோசடியில் நேரடியாக ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் பேரில் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உமா மகேஸ்வரியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கிடையில் உமா மகேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். அவரை பணிநீக்கம் செய்து வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வங்கி தொடர்பாக பொதுமக்கள் உமா மகேஸ்வரியுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சிக்கினர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மற்றும் சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளைய டித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
கொள்ளை
இந்த நிலையில் கொள்ளையடித்தபோது அந்த கும்பல் பயன்படுத்திய கார் அந் தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பதிவான கார் நம்பரை வைத்து தனிப்படை போலீசார் தொடர்ந்துவிசாரணை நடத்தினர். அதில்கொள்ளை கும்பல் பயன்படுத்திய கார் தர்மபுரி பகுதியில் இருந்தது தெரியவந்தது.
4 பேர் சிக்கினர்
அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று கார் மற்றும் காரை பயன்படுத்திய ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேரை பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையின் போது துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் போலீஸ் நிலையத்திற்குள் யாரும் செல்லமுடியாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் காகிதப்பட்டறையில் நடந்தது
- ஏராளமானோர் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை ராதா ருக்மணி சமேத கிருஷ் ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறி யடி மற்றும் சறுக்கு மரம் ஏறும் திருவிழா நேற்று நடை பெற்றது.
இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு சறுக்கு மரம் ஏறினர். மேலும் ஒருவர் மீது ஒரு வர் ஏறி நின்று உறியடித்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் அங்குதிரண்டு நின்று கண்டுகளித்தனர்.
முன்னதாக ஆற்காடுசாலையில் மின் விளக்கு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. வீடுகள் மற்றும் சாலையில் ஏராள மான பொதுமக்கள் நின்று தரிசனம் செய்தனர்.
- ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
- 2-ந்தேதி சிலை ஊர்வலம்
வேலூர்:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வேலூர் ரங்கா புரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோட்ட பொருளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆதிமோகன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோட்டத் தலைவர் மகேஷ் கலந்து கொண்டு விழா குறித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க 22 வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்த வேண்டும். சிலை வைக்க பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டி உள்ளதால் பலர் சிரமத்தில் உள்ளனர். எனவே ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க வேண்டும்.
508 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
வேலூர் பெருங்கோட்டத்தில் 23 இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் 1008 இடங்களில் சிலை வைக்கப்பட உள்ளது.வேலூர் மாவட்டத்தில் மட்டும் 508 சிலைகள் அமைக்கப்படுகிறது.
வேலூரில் செப்டம்பர் 2- தேதி சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலக ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஊர்வலம் தொடங்குகிறது.
மாநில செயலாளர் மனோகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம் காககிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின் பஜார், லாங்கு பஜார், கமிஷனரி ரோடு, கோட்டை சுற்றுசாலை வழியாக செல்கிறது. அதேபோல கொணவட்டத்திலும் இருந்து ஊர்வலம் செல்கிறது. சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு திருவிழாவில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விழாவில் ஏன்? அவர்கள் கலந்து கொள்ளக் கூடாது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்துகளை மையமாகக் கொண்டு ஊர்வலம் நடத்தப்படுகிறது. அதே போல இந்த ஆண்டு பிரிவினை வாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற கருத்தை முன்வைத்து ஊர்வலத்தை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் லாங்கு பஜாரில் கடை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல்
- மாற்று இடம் குறித்து ஆலோசனை
வேலூர்:
வேலூர் லாங்கு பஜாரில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அங்குள்ள வியாபாரிகளுக்கு பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இருப்பினும் அங்கு போதிய அளவு கடை அமைக்க வில்லை, மின்சார வசதி இல்லை சமூக விரோதிகளின் தொல்லை உள்ளிட்டவைகளால் அங்கு கடைகளை நடத்த முடியாமல் மீண்டும் லாங்கு பஜாரில் கடை நடத்தி வருகின்றனர். இதனால் போலீசார் லாங்கு பஜாரில் உள்ள பழக்கடைகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் லாங்கு பஜாரில் உள்ள சண்முகனடியார் சங்கத்தில் பழ வியாபாரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இதையடுத்து லாங்கு பஜாரில் பழக்கடையை வேறு எங்கு மாற்றம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது
- கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் இன்று நடந்தது.
சத்துணவு ஊழியர்
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் சீனிவாசன், பியூலா எலிசபெத் ராணி, சேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பு தலைவர் சரவண ராஜ், மாநில செயலாளர் மோகன மூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் ராஜாமணி, மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் துவக்க உரையாற்றினர்.மாநில செயலாளர் ஜெயந்தி சிறப்பு உரையாற்றினார்
தர்ணாவில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- தமிழகத்தில் குரங்கு அம்மை, தக்காளி காய்ச்சல் பாதிப்பு இல்லை.
- விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை 24 மணி நேரமும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. முதல் தவணை 2-வது தவணை, பூஸ்டர் தடுப்பூசி போன்றவை இந்த முகாம்களில் செலுத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் டோஸ் 96.99 சதவீதம், 2-வது டோஸ் 89.5 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர்.
3.50 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அதனை இலக்காக கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தண்ணிறைவு பெற்ற மாவட்டமாக உள்ளது.
முதல் தவணை 102.4 சதவீதமும், 2-வது தவணை 109.5 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்தும் பணியில் சுணக்கம் இருந்தது. அதற்கு பிறகு சமூக ஆர்வலர்களை கூட்டி கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கபட்டது. தற்போது தடுப்பூசி செலுத்தும் பணியில் தன்னிறைவு பெற்றுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று 952 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. இன்று நடைபெறும் முகாமில் இந்த தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அடுத்த வாரம் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்திக்க இருக்கிறோம். அப்போது கோவை, மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டிட பணிகள் குறித்தும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தேவைப்படுகிறது. இது குறித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்.
மேலும் தடுப்பூசி தேவை குறித்து தெரிவிக்க இருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளன.
ஒரு சிலர் மருந்து இல்லை என கற்பனை கதையை சொல்லி வருகின்றனர். ஒரு சில இடங்களில் 4 வகை மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலக அளவில் அந்த மருந்துக்கான தேவை அதிகமாக இருந்ததால் அந்த நிலை இருந்தது. தற்போது அதுவும் சரியாகி விட்டது. காப்பீடு திட்டம் அரசு ஆஸ்பத்திரியில் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் போதுமான நிதி உள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் மருந்து இல்லை என கூறி பொதுமக்களை வெளியே அனுப்புவது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதார துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள், நர்சுகள், டெக்னீசியங்கள் உட்பட 4,308 காலி பணியிடங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும்.
தமிழகத்தில் குரங்கு அம்மை, தக்காளி காய்ச்சல் பாதிப்பு இல்லை. விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை 24 மணி நேரமும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கேரளா எல்லையில் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 85 லட்சத்து 36 ஆயிரத்து 501 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த திட்டம் உலகத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் இல்லம் தேடி மருத்துவம் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்துவதற்காக பாலிகிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படும். அதனை பார்த்து பொதுமக்கள் சிகிச்சை அளித்துக் கொள்ளலாம்.
அமைச்சர் துரைமுருகன் தொகுதியான காட்பாடியில் ரூ.30 கோடியில் அரசு ஆஸ்பத்திரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கு அடிக்கல் நாட்டப்படும். மேலும் பழைய அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தும் பணி தொடங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாய்சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ.மேயர் சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






