என் மலர்tooltip icon

    வேலூர்

    • 10 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்கள், குறிப்பாக சிறைவாசியின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்க வேண்டும்.
    • வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 47 கைதிகளை விடுதலை செய்ய பரிந்துரை குழு முடிவு செய்துள்ளது.

    வேலூர்:

    அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்டகாலம் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன்விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    10 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்கள், குறிப்பாக சிறைவாசியின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல், முறைகேடு, வழிப்பறி, மோசடி, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், சிறையில் இருந்து தப்பித்தல், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றம், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த பொருட்களை விற்பனை செய்தல், வனம் குறித்த தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், ஒருவருக்கு மேற்பட்டவர்களை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்றவர்கள், சாதி மற்றும் மத ரீதியான வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு முன்விடுதலை அளிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

    முன்விடுதலை அளிக்கப்படுவதை, மாநில அளவில் டிஜிபி அல்லது சிறைத்துறை தலைவர், சிறைத்துறை தலைமையிடத்து டிஐஜி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    மேலும் குழுவினர் மாவட்ட அளவில் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு, மண்டல அளவில், மண்டல சிறைத்துறை டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து பட்டியலை மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 47 கைதிகளை விடுதலை செய்ய பரிந்துரை குழு முடிவு செய்துள்ளது.

    வேலூர் ஜெயிலில் இருந்து முதல் கட்டமாக 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    இன்று 2-வது கட்டமாக 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 7 பேர் 10 ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை கைதிகள். இவர்கள் அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர ஒருவர் 75 வது சுதந்திர தினத்தையொட்டி தண்டனை குறைப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    • வேலூர் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் வகையில் எஸ்.பி. ஆபீசில் பிரமாண்ட அரங்கம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போதை பொருள் கடத்தல், விற்பனை தடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. கடத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஒவ்வொரு துறை வழியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

    குறிப்பாக மருந்தகங்களில் டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக் கூடாது.ஏனென்றால் சில மருந்துகளை குறிப்பாக மனநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதாக புகார் வந்துள்ளது. மற்ற நகரங்களில் இதுபோன்ற குற்ற சம்பவம் நடந்துள்ளது.அதை தடுப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் சிலர் கூரியர் மூலம் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்துவதாகவும் புகார் வந்துள்ளது.அதை தடுப்பதற்காகவும் கூரியர் நிர்வாக ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

    போதை பொருள் ஒழிப்பை தடுக்கும் விதமாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் காவல் மன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் காவல் மண்டபம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த காவல் மன்றம் போலீசாருக்கும் பள்ளிக்கும் இடையே இணைப்பு பாலமாக உள்ளது.பிரத்தியேகமாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட வாட்ஸ்அப் புகார் எண்ணில் இதுவரை 7 புகார்கள் வரப்பெற்றது.

    அதில் 6 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஒரு புகார் சரியான தகவல் இல்லை. வேலூர் மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய குழுவினர் அங்கு வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

    மாவட்டத்தில் உள்ள 7 சோதனைச் சாவடிகளில் குழுக்கள் மூலம் சோதனை செய்யப்படுகிறது. இது தவிர ஊரகப் பகுதி வழியாக சிலர் கடத்துவதை தடுக்க அங்கேயும் மோட்டார் சைக்கிள் மூலம் போலீசார் ரோந்து சென்று தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    போதைப்பொருள் தடுப்பது குறித்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் கமிட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் செயல்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் இந்த கமிட்டி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே பிரமாண்டமான அரங்கம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கூறினார்.

    • வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு எச்.எம்.எஸ். தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலைவாணி முன்னிலை வகித்தார்.

    அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கீதா கோரிக்கை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மாநில சட்டங்களை பாதுகாக்க வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த 36 நல வாரியங்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் கஞ்சா ஆபரேஷன் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் நேற்று இரவு கலால் பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் ஆந்திராவில் இருந்து வந்த பஸ்களில் சோதனை நடத்தினர்.

    அப்போது திருப்பதியில் இருந்து கடலூர் நோக்கி வந்த பஸ்சில் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்த பூவரசன் (வயது 25) நாமக்கல்லை சேர்ந்த வினோத் (26) ஆகியோர் பையில் மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்த து தெரியவந்தது. அவர்களிடம்11 ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர் ‌

    இதேபோல திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பஸ்சில் நடத்திய சோதனையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (60) என்பவரிடம் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கஞ்சா கடத்தி வந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேமராக்கள் பழுதாகி உள்ளது; பார்க்கிங் வசதி இல்லை
    • தினமும் ஒரு வாகனத்தை ஓட்டி சென்று விடுகின்றனர்

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மற்றும் வேலூர் புறநகர் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி

    மேலும் உள்நோயா ளியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வருபவர்கள் பைக் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை.

    பைக் திருட்டு

    அவசர கதியாக வருபவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் பைக்கை நிறுத்திவிட்டு பதற்றத்துடன் உள்ளே செல்லும் நிலைமை உள்ளது.இதனை பயன்படுத்திக் கொண்டு பைக் திருட்டு நடக்கிறது.

    கடந்த சில மாதங்களாக பார்க்கிங் மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக பிரசவ வார்டு பகுதியில் அதிகளவில் பைக் திருடு போகின்றன.

    தற்போது தினமும் ஒரு பைக் திருடு போகிறது.வாகன உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    கேமராக்கள் செயல்படுவது இல்லை

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள ஏராளமான கேமராக்கள் செயல்படுவது இல்லை.

    திருடர்கள் முக கவசம் அணிந்து வருவதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் திருட்டு சம்பவத்தை தடுக்க பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்கும் முறை கொண்டு வர வேண்டும்.

    மேலும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சரி பார்க்க வேண்டும். அப்போது தான் பைக் திருட்டை தடுக்க முடியும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்
    • பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் திட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளித்த உடனே பணிகளை தொடங்க வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும.

    அணைக்கட்டு மற்றும் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும். சிமெண்டு தளத்துடன் கூடிய கழிவுநீர் கால்வாய் பேவர் பிளாக் சாலை அமைக்க மொத்தம் ரூ.32 லட்சத்து 26 ஆயிரம் பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம், வேலூர் பெருமுகை, ஆம்பூர் ஆகிய இடங்களில் இந்த குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன.
    • ஆம்பூரில் இன்று காலை கூடுதலாக 10 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.

    வேலூர்:

    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பரிதா குழுமத்துக்கு பரிதாஷூஸ், பரிதா லெதர் வார் உட்பட 11 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன‌. இந்த குழுமம் ஷூ பெல்ட், பை உள்பட பல்வேறு தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் வருவாயை முறையாக கணக்கில் காட்டவில்லை என்ற புகார் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை தொடங்கினர். சென்னை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, புதுச்சேரி என நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலை என 32 இடங்களில் நேற்று காலை 8 மணி முதல் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

    இதேபோல சென்னை நுங்கம்பாக்கத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கே.எச் இந்தியா குழுமத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகளிலும் நேற்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம், வேலூர் பெருமுகை, ஆம்பூர் ஆகிய இடங்களில் இந்த குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த குழுமம் வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார் வந்தது.

    இதையடுத்து இது தொடர்புடைய கடைகள் தொழிற்சாலைகள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இரவிலும் நீடித்து விடிய விடிய சோதனை நடந்தது. 2-வது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது.

    இந்த 2 நிறுவனங்கள் தொடர்புடைய மொத்தம் 62 இடங்களில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூரில் இன்று காலை கூடுதலாக 10 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு பல கோடி கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 2 குழுமங்களில் 250-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர்.

    சோதனை நடந்து வரும் தோல் தொழிற்சாலைகள் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் ஆம்பூர் உள்பட சோதனை நடந்து வரும் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மேயர் சுஜாதா ஆய்வு
    • மதியம் 12 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் முடிக்க வேண்டும்

    வேலூர்,

    வேலூர் மாநகராட்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் 508 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்கின்றனர்.

    2-ந் தேதி வேலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து சிலைகள் ஊர்வலம் தொடங்குகிறது. சைதாப்பேட்டை, கோட்டை, சுற்றுச்சாலை, கொணவட்டம் வழியாக சதுப்பேரி ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், டி.எஸ்பி. திருநாவுக்கரசு மற்றும் இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் ஆகியோர் சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கக்கூடிய இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது சிலைகள் உள்ளே கொண்டு செல்லவும் கரைத்து விட்டு வெளியே செல்லவும் தனித்தனியாக வழியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சிறிய சிலைகளை கரைப்பவர்களுக்கு தனி வழி ஏற்படுத்தப்படுகிறது. இது தவிர பெரிய சிலைகளை கரைக்க கிரேன் வசதி ஏற்படுத்துவது மின்விளக்கு வசதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர்.

    மதியம் 12 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகளை கொண்டு வந்து கரைத்து விட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வலம் வந்து நோட்டம்
    • தந்தை வழியில் திருடிய சகோதரர்கள்- பரபரப்பு

    வேலூர், ஆக.23-

    வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்ணன் (வயது 52). இவர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டை உடைத்து சுமார் 22 பவுன் தங்க நகைகள், ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இதே போல சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த மற்றொரு டாக்டர் வீட்டில் அமெரிக்க டாலர்கள் உட்பட நகை பணம் கொள்ளையடிக்கபட்டது.

    இது தொடர்பாக வேலூர் தெற்கு மற்றும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். கொள்ளையர்களை கண்டுபிடிக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு தனிப்படை போலீசார் தேர்தல் வேட்டையை தொடங்கினர்.

    வேலப்பாடி டாக்டர் வீட்டில் அருகே ஒரு கார் வந்து சென்றது தெரிய வந்தது. அந்த கார் மூலம் காரில் கொள்ளையர்கள் வந்து சென்றதை தனிப்படையினர் உறுதி செய்தனர்.

    தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்த கொள்ளையர்கள் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மொய்தீன் (வயது 33), அவரது தம்பி ஷாஜகான் (28) என்பது தெரிய வந்தது.2 பேரையும் கைது செய்தனர்.

    அண்ணன்- தம்பிகள் தொடர் திருட்டில் இவர்கள் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த சகோதரர்களின் தந்தையும் பல திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அதே வழியில் மகன்களும் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.இதுவரை 20-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடித்த பணத்தை வைத்து,ஓ.எல்.எகஸ். மூலம் ஒரு காரை வாங்கினர். அதில் டாக்டர் அடையாள ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வலம் வந்துள்ளனர்.

    வேலூரில் கொள்ளையடிக்க திட்டமிட்ட இவர்கள் ஆற்காடு டவுன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். அங்கிருந்து தினமும் வேலூர் வந்து டாக்டர்கள் வீடுகளை குறிவைத்து நோட்டமிட்டுள்ளனர். பின்னர் ஆளில்லாத வீடுகளில் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    அவர்களிடமிருந்து ரூ.2500 அமெரிக்க டாலர் உட்பட ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், 2.5 பவுன் நகை, ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை வேலூர் ஜெயிலில் அடைத்தனர். 

    • குடியாத்தம் தட்டப்பாறை அரசு பள்ளியில் விழிப்புணர்வு
    • எஸ்.பி. பங்கேற்று பேசினார்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போலீசார் சார்பில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார்கள் முன்னிலை வகித்தனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார். குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் விரிவாக பேசினார்.

    தொடர்ந்து போலீசார் மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து போதை பழக்கத்திற்கான எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் பார்வையிட்டார்
    • சோதனைச்சாவடியில கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவு

    குடியாத்தம்:

    குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநா யகர் சிலை ஊர் வலம் நடைபெ றும் இடங்களை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

    விநாயகர் சிலைகள்

    பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் வரும் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் போலீசாருக்கு அவர் ஆலோசனை நடத்தினார்.

    கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு பேரணாம்பட்டில் விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்கள், விநா யகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் இடங்களான திரு.விக நகர், நெடுஞ்சாலை, பஸ் நிலையம், நான்கு கம்பம் மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பத்தரபல்லி அணைப் பகுதி ஆகிய இடங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தமிழக எல்லையான பத்தரபல்லியில் போலீஸ் சோதனைச் சாவ டிக்குச் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை சரிபார்த் தார். ஆந்திரத்தில் இருந்து பத்தரபல்லி வழியாக தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வாகனங்களில் கடத்தப்படுகிறதா? என தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறைக்குச் சென்ற அவர் அங்கு விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களை பார்வையிட்டார். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவர்களிடையே பேசினார்.

    • நரசிம்மன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளுனராக பணிபுரிந்து வருவதாக கூறி பொதுமக்களுக்கு தனது வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
    • நரசிம்மன் சிகிச்சை குறித்து வேலூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மற்றும் ஊரக நல அலுவலர் ஆகியோருக்கு புகார் சென்றுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தேவிசெட்டி குப்பம் மந்தைவெளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 40). இவரது மனைவி அரியூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    நரசிம்மன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளுனராக பணிபுரிந்து வருவதாக கூறி பொதுமக்களுக்கு தனது வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இவரது சிகிச்சை குறித்து வேலூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மற்றும் ஊரக நல அலுவலர் ஆகியோருக்கு புகார் சென்றுள்ளது. அதைத்தொடர்ந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் ஜெயந்தி மற்றும் சுகாதாரத்துறையினர் நரசிம்மன் வீட்டுக்கு சென்றனர்.

    அப்போது அவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இதுகுறித்து டாக்டர் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நரசிம்மனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நரசிம்மனை கைது செய்தனர்.

    ×