என் மலர்tooltip icon

    வேலூர்

    • கலெக்டர் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, வேலூர் மாவட்ட நூலக ஆணை குழு சார்பில் வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் 56வது தேசிய நூலக வார விழா நடைபெற்று வருகிறது.

    விழாவை கடந்த 14-ந்தேதி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    உரைக்களம் நிகழ்ச்சிக்கு காட்பாடி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.ஆர்.ரவி தலைமை தாங்கி பேசினார்.

    வழக்கறிஞர் இந்துமதி, வருவாய்த்துறை சேர்ந்த சிவ.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட மைய நூலக நல் நூலகர் ஏ.கணேசன் வரவேற்றார்.

    திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை பதிவாளர் எஸ்.ரமேஷ் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். உரைகளம் நிகழ்ச்சியில் கொஞ்சம் சிந்திக்கலாமா என்ற தலைப்பில் கவிஞர் ச.லக்குமிபதி, வாசிக்கலாம் வாங்க என்ற தலைப்பில் கவிஞர் பொன். செல்வகுமார், யோசிக்கலாம் நீங்க என்ற தலைப்பில் கவிஞர் எஸ்.கே.எம்.மோகன் ஆகியோர் பேசினர்.

    மக்கள் கவிஞர் கண்ணதாசன் என்ற நூலை கவிஞர் கோ.சித்ரா அறிமுகப்படுத்தி பேசினார். உயரபடி என்ற தலைப்பில் வாசகர் காமராஜ் கவிதை வாசித்தார்.

    விழாவில் மாவட்ட மைய நூலக கண்காணிப்பாளர் சிவகுமார், காந்திநகர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வேலூர் மாவட்ட மையம் நூலகர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். ஓய்வு பெற்ற நூலகர் ரவி விழாவை தொகுத்து வழங்கினார்.

    • மன உளைச்சலில் காணப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி, முகுந்தன் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் சூர்யா (வயது 19). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த தேர்வை சரியாக எழுதவில்லை என, சூர்யா மன உளைச்சலில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சூர்யா தனது வீட்டில், புடவை கொண்டு தூக்கில் தொங்கினார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரிசோதித்து இறந்ததாக தகவல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த சதுப்பேரி, பெரிய அகமேடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர் மூலை கேட்டில் இருந்து கந்தநேரி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த பைக் மீது சக்திவேல் ஓட்டிச் சென்ற பைக் மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்திவேல் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்பாடி அரசு விடுதியில் இருந்து மாயம்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் அரசு விடுதியில் ஒப்படைப்பு

    வேலூர்:

    காட்பாடி செங்குட்டையில் அன்னை சத்தியபாமா அரசினர் விடுதி உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவர்கள் காட்பாடியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் மாலையில் விடுதிக்கு திரும்பவில்லை.

    இதுகுறித்து விடுதி காப்பாளர் சாந்தி காட்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவகளை தேடி வந்தனர்.

    மாணவிகள் நேற்று மாலை வேலூர் மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

    உடனடியாக விரைந்து சென்ற போலீசார் 2 மாணவிகளையும் மீட்டனர். மாணவிகளை காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் அரசு விடுதியில் ஒப்படைக்கப்பட்டனர்.

    • இசை, நடனங்களில் அசத்தினர்
    • ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஓட்டேரியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்தி றனை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழா இன்று நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நந்தகுமார் எம்.எல்.ஏ, வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழகம் முழுவதுமிருந்து அரசு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    அவர்கள் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், தமிழ்மொழியின் சிறப்பு ஆகியவைகள் குறித்து ஆடல், பாடல், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டினர்.

    மேலும் விவசாயத்தை காக்கும் வகையில் ஆடல்கள், சிறுதானிய தமிழ் பாரம்பரிய உணவுகளான சாமை, தினை, கேழ்வரகு ஆகியவை களின் நன்மைகள் பிட்சா, பர்கர் போன்றவை களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் வில்லுபாட்டு மூலம் விளக்கினர்.

    மேலும் கும்மியாட்டம், டிரம்ஸ் இசைக்கருவி இசைத்தல், தப்பு இசை ஆகியவைகளும் இசைத்து காட்டி மாணவர்கள் தனித்திறனை வெளிப்ப டுத்தி அசத்தினார்கள்.

    விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், கலையில் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் இக்கலை ப்போட்டிகள் நடக்கிறது.

    மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டி சிறந்து விளங்கினாலும் இது போன்ற கலைகளிலும் தனித்திறனை வெளிப்ப டுத்தும் வகையில் செயல்பட வேண்டும் தமிழகம் கல்வியில் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது அதை போல் கலைகளிலும் சிறந்து விளங்கவே இது போன்ற போட்டிகள் நடக்கிறது என பேசினார்.

    • குறை தீர்வு கூட்டத்தில் புகார்
    • வங்கி மேலாளர் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. உதவி கலெக்டர் கவிதா உள்ளிட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

    ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்.என். பாளையம், பச்சையப்பன் கவுண்டர் விரிவு பகுதியில் வசித்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு பல முறை மனு அளித்து உள்ளோம். ஆனால் இதுவரை இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவில்லை.

    இதனால் நாங்கள் பரிதவிக்கிறோம். நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    செதுவாலை பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் கைக்குழந்தைகளுடன் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் செதுவாலை ஏரியில் வசித்து வருகிறோம். தற்போது செதுவாலை ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். மழைகாலங்களில் சேறும், சகதியும் வசிக்கும் நிலை உள்ளது.

    நாங்கள் அனைவரும் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறோம். எங்களால் அங்கு கைக்குழந்தைகளுடன் குடியிருக்க முடியவில்லை. ஏற்கனவே ஏரியில் வசித்த 5 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர். எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டி தர வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியிருந்தனர்.

    வேலூர் நம்பிரா ஜபுரத்தை சேர்ந்த வேண்டா கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    நான் விரும்பாட்சி புரத்தில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறேன். எனது வங்கிக் கணக்கிற்கு கடந்த 3 மாதமாக மகளிர் உதவித்தொகை வந்துள்ளது. மேலும் எனது மகள் திருமணத்திற்கு வங்கி கணக்கில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் பணம் உள்ளி ட்டவை எடுக்க ப்பட்டாத தகவல் வந்தது.

    இது குறித்து வங்கியில் சென்று கேட்ட போது, எனது வங்கிக் கணக்கிலேயே மற்றொருவருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது தெரிந்தது. இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது அவர் என்னை அலைக்கழித்து வருகிறார். எனவே எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
    • போலீசார் தண்ணீரை ஊற்றி சமரசம் செய்தனர்

    வேலூர்:

    குடியாத்தம்- காட்பாடி சாலையில் உள்ள கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 45) இவரது மகன்கள் பரத் (23) மணிகண்டன் (20).

    செல்வி இன்று தனது மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தார்.

    கூட்டம் நடைபெரும் காயிதே மில்லத் அரங்கம் வெளியே திடீரென பரத் செல்வி ஆகியோர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது பெண் போலீசார் ஒருவர் தவறி கீழே விழுந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக செல்வியின் இடது காதுடன் கம்மல் அறுந்து கீழே விழுந்தது. தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமரசம் செய்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    நாங்கள் வசித்து வந்த வீட்டின் அருகே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் எங்கள் இடத்தில் சுவரை எழுப்பினர். இதனால் நாங்கள் அவதிப்பட்டோம்.

    அருகே இருந்த கோவில் நிலத்தை பயன்படுத்தி வந்தோம். கோவில் சார்பில் அந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கின்றனர்.

    இதனால் எங்களுக்கு பாதையில்லாத நிலை உள்ளது. நாங்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுவரை இடித்து அகற்ற வேண்டும். எங்களுக்கு பாதை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஆந்திர மாநிலம், குப்பம் ஆர்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மகன் நிதின் (வயது 30). இவர் நேற்று வீட்டில் இருந்து கோவிலுக்கு செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு இவருக்கு சொந்தமான காரில் வேலூர் நோக்கி சென்றார்.

    பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா ஓட்டல் எதிரே வந்த போது கார் பழுதடைந்துள்ளது. இதனால் அவர் காரை ஓட்டல் அருகில் நிறுத்திவிட்டு மெக்கானிக்கை அழைப்பதற்காக எதிரே உள்ள சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நிதின் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த நிதின் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • சிறப்பு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு
    • உபரி நீரை மலர் தூவி வரவேற்றனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி மற்றும் குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருவது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    அதன்படி பள்ளிகொண்டா அருகே உள்ள இறைவன்காடு மற்றும் கந்தனேரி ஆகிய 2 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி இன்று காலை கோடிப்போனது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் ஏரி நிரம்பி வழியும் இடத்தில் ஒன்றுகூடி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். மேலும் மதகின் வழியே வெளியேறும் உபரி நீரை மலர் தூவி வரவேற்றனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் கலந்து கொண்டு, மலர் தூவி வரவேற்றார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, தி.மு.க ஒன்றிய செயலா ளர்கள் குமாரபாண்டியன், வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
    • அறுசுவை உணவு பரிமாறப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், சாத்துமதுரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவிலில் முருகர் திருக்கல்யாணம் நடந்தது.

    இதற்கு கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் முருகனடிமை ஜம்பு என்கிற சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இதில்முருகருக்கு பட்டு வேட்டி ஆடை, அம்பாளுக்கு பட்டுப்புடவை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தேவசேனா, வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பணம் மற்றும் நகைகளை மொய் எழுதினர். இதைத் தொடர்ந்து அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    • திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடரும் குளறுபடி
    • கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    காட்பாடியை அடுத்த சேர்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 74 கலை, அறிவியல் உறுப்பு கல்லூரிகள் உள்ளன.

    நவம்பர் முதல் வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வரும் பல்கலைக்கழகப் பருவத் தேர்வின் போது முதுநிலை கணிதவியல் துறைக்கான 3-ம் ஆண்டு பருவத் தேர்வில் சிக்கலான பகுப்பாய்வு, கட்டமைப்பியல், வேறு பட்ட வடிவவியல் ஆகிய பாடங்களுக்கு 2021-ம் ஆண்டு வெளியான வினாத்தாள்கள் அப்படியே 2023 என ஆண்டை மட்டும் மாற்றி மறுபதிப்பு செய்து அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் குறித்து பல்கலைக் கழக நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு வினாத்தாள் குளறுபடி சம்பவம் வெளியாகி உள்ளது.

    அதன்படி, தற்போது நடை பெற்று வரும் பருவத் தேர்வில் முதுநிலை கணிதவியல் 2-ம் ஆண்டில் ரியல் அனலைசிஸ் பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறு தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத் தேர்வின்போது அளிக்கப்பட்ட வினாத்தாளை அப்படியே மாதத்தை மட்டும் மாற்றி அச்சிட்டு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் பல்கலைக்கழகம், அதன் கட்டுப்பாட்டிலுள்ள உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து வினாத்தாள் குளறுபடி விவகாரம் வெளியாகி வருவதை யடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வு நடைமுறைகள், அவற்றில் காணப்படும் நிர்வாக முறைகேடுகள் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.
    • குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே சந்தப்பேட்டை பகுதியில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலாம்மாள் (வயது 65).

    இவர் இன்று காலை பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் அருகில் நடந்து சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூதாட்டி தவறி விழுந்தார்.

    இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் மூதாட்டியை மீட்க முயன்றனர். முடியாததால் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டியை பிணமாக மீட்டனர்.

    இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    ×