என் மலர்tooltip icon

    வேலூர்

    • மாணவன் கைது-மாணவி காப்பகத்தில் ஒப்படைப்பு
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் குடியாத்தம் நகரைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.

    குடியாத்தம் நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்கு பிளஸ் டூ படித்து வருகிறார் அந்த மாணவி படிக்கும் அதே பள்ளியில் குடியாத்தம் நகரத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவனுடன் பழகி உள்ளார்.

    கடந்த வாரம் அந்த மாணவி பள்ளிக்குச் செல்வதாக வீட்டை விட்டு கிளம்பி உள்ளார் அதேபோல் அந்த மாணவனும் வீட்டை விட்டு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றனர். பள்ளி வகுப்பை ஆரம்பித்ததும் மாணவி வகுப்புக்கு வரவில்லை இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதேபோல் மாணவரும் பள்ளிக்கு வரவில்லை.

    அவரது பெற்றோருக்கும் தெரிவித்துள்ளனர் அப்போதுதான் இரண்டு பேரும் பள்ளிக்கு வரவில்லை என‌ தெரிய வந்தது.

    தொடர்ந்து மாணவியின் பெற்றோரும், மாணவனின் பெற்றோரும் தனித்தனியாக தங்கள் பிள்ளைகளை காணவில்லை என குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலையில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே அந்த மாணவியும் மாணவனும் நின்று கொண்டு இருந்தனர். 2 ேபரையும் பிடித்து போலீஸ் நிலையத்தில் வந்து தீவிர விசாரணை செய்தபோது இருவரும் காதலித்து உள்ளனர். இந்த ஜோடி ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளனர்.

    வீட்டிற்கு செல்ல வந்த போது போலீசாரிடம் பிடிபட்டது தெரியவந்தது இதனை தொடர்ந்து போலீசார் காணவில்லை என்ற வழக்கை போஸ்கோ வழக்காக மாற்றி அந்த மாணவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். நீதிபதி உத்தரவின் பெயரில் அந்த மாணவன் சென்னை கெல்லிசில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த மாணவி வேலூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • போலீசார் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு
    • முக்கிய வீதிகள், சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ளது

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    இதில் இந்து முன்னணி சார்பில் மட்டும் 1600 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி விழா நடப்பதால் விழா குழுவினர் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கற்பக விநாயகர், செல்வ விநாயகர், புலியை அடக்கும் விநாயகர், குதிரை, பசு மீது அமர்ந்திருக்கும் விநாயகர் என விதவிதமான சிலைகள் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    பந்தல் அமைத்து வாழை தோரணங்கள் கட்டப்பட்டுள்ள மேடையில் விநாயகர் சிலை வைத்து இன்று காலை கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது . தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பல்வேறு இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது‌.

    மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

    விநாயகர் சதுர்த்தியொட்டி கோவில்களில் உள்ள விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வெள்ளிக்கவசம் தங்கக் கவசம் அலங்காரத்தில் விநாயகர் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விநாயகர் சிலைகளுக்கு விழா குழுவினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.மேலும் வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெரு சந்திப்புகளில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் என விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியது.

    • அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
    • வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி. சிசில்தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் சிட்டிபாபு பேசும்போது அதிமுக கவுன்சிலர்்கள் வார்டில் எந்த அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை பணிகள் நடைபெறவில்லை என புகார் கூறினார்.

    அப்போது அ.தி.மு.க. கவுன்சிலரின் பேச்சை மறுத்த நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் நகர மன்ற துணைத் தலைவர் அதிமுகவை சேர்ந்தவர் தானே அவரிடம் கேளுங்கள் அவர் வார்டில் எவ்வளவு பணிகள் நடைபெற்று உள்ளது இந்த நகராட்சியில் உள்ள நகர மன்ற உறுப்பினர்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.

    அப்போது புரட்சி பாரதம் கட்சி உறுப்பினர் மேகநாதன் அதிமுக உறுப்பினர் சிட்டிபாபு ஆகியோருக்கும் திமுக உறுப்பினர்கள் என்.கோவிந்தராஜ், சி.என். பாபு ஆகியோருக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி தலைமையில் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள், பாரதிய ஜனதா கட்சி நகர் மன்ற உறுப்பினர் சீதாலட்சுமி, புரட்சி பாரதம் நகர மன்ற உறுப்பினர் மேகநாதன் ஆகியோர் சேர்ந்து நகர மன்ற தலைவரிடம் மனு அளித்து வெளிநடப்பு செய்தனர்.

    அந்த மனுவில் நகர மன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாதம் ஆகிவிட்டது. இதுவரை வார்டுகளில் எந்த பணியும் சரிவர நடைபெறவில்ல, மக்களின் தேவைகளை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை குறிப்பாக கால்வாய் தூர்வார படுவதில்லை, குப்பைகள் சரிவர அகற்றாமல் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது.

    வீட்டு வரி உயர்வை 40 சதவீதம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை அதிகாரிகள் கண்டு கொள்வதில் ஆகவே நகர மன்ற கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

    • ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தேடி திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்த்தல் நிகழ்ச்சி குடியாத்தம் பிச்சனூர் பாரதியார் தெருவில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே. ராஜமார்த்தாண்டன் தலைமை தாங்கினார். குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ், பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர் கே.ஜனார்தனன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.என். விஜயகுமார் வரவேற்றார்.

    குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம்.பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் கலந்து கொண்டு இல்லம் தேடி திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் த.புவியரசி, தலைமைக் கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன், நகர மன்ற உறுப்பினர்கள் ஜி எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், சி. என்.பாபு, எம்.எஸ்.குகன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்
    • சாலைகளை சீரமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய கவுன்சிலர்கள் சாலை மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    பாமக கவுன்சிலர் பாபி கதிரவன் பேசுகையில்:-

    என்னுடைய வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் குப்பையை சாலையிலேயே கொட்டி விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைத்தொட்டி வைக்க வேண்டுமென கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய கமிஷனர் அசோக் குமார் குப்பைத்தொட்டி இல்லாத நகரமாக வேலூர் மாநகராட்சி உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் வரும்போது குப்பைகளை வண்டியில் கொட்ட வேண்டும் என தெரிவித்தார்.

    1-வது வார்டு கவுன்சிலர் அன்பு பேசுகையில் எனது வார்டில் 12 லட்சம் கொள்ளளவு கொண்ட கூட்டு குடிநீர் மேல்நிலைத் நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் குழாய்களில் காற்று மட்டும் தான் வருகிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் செங்கோட்டை முதல் கல் புதூர் வரை கோழிக்கழிவுகளை சாலையோரம் கொட்டி விட்டு செல்கின்றனர்.

    இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கோழி கழிவுகளை சாலையோரம் கொட்டும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.

    கமிஷனர் கூறுகையில் கோழி கழிவில் இருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இதையடுத்து அதிமுக கவுன்சிலர் எழிலரசன் பேசும்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய பஸ் நிலையம் திறந்து முழுமையாக பயன்பாட்டுக்கு வருவது எப்போது என கேள்வி எழுப்பினார்.

    வாக்குவாதம்

    அப்போது துணை மேயர் சுனில் குமார் உங்கள் ஆட்சியில் காண்டிராக்டர் எடுத்தவர் சரிவர பஸ் நிலையத்தில் கட்டாததால் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார்.

    கவுன்சிலர் எழிலரசன் பேசிக்கொண்டிருந்த போது தி.மு.க. கவுன்சிலர்கள் மைக்கை பறித்து சென்றனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    அப்போது அ.தி.மு.க, தி.மு.க கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கமிஷனர் பேசுகையில்:-

    மாநகராட்சியில் சாலைகளை சீரமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஆயிரம் மின்விளக்குகள் வீதம் வேலூர் 4000 மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்றார்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 52 ) . இவர் சிட்டிங் பஜார் பகுதியில் நடந்து சென்று கொண் டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரமேஷின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார் . இதுகுறித்து ரமேஷ் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய் தார் .

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டது சலவன் பேட்டையை சேர்ந்த ரகுநாதன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • வரைவு பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட்டார்
    • திருத்தங்கள் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் கால அட்டவணை அளித்தது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும்நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம மூர்த்தி வாக்குச்சாவடிபட்டி வெளியிட்டார். வேலூர் உதவி கலெக்டர் பூங் கொடி உடன் இருந்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023க்கான கால அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன் படி 9.11.2022-ல் வரைவு வாக் காளர் பட்டியல் வெளியிட்டு 1.1.2023 - ல் 18 வயது நிறைவு பெற்றவர்கள் வாக்காளர் பட் டியலில் சேர்க்கவும், பெயர், வயது, முகவரி திருத்தங்கள் மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையம் கால அட்ட வணை அளித்துள்ளது.

    இந்த சுருக்க முறை திருத்தப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக வாக்குச்சாவடிகள் வரையறை செய்யப்பட்டு வரு கிறது. அதன்படி 1,500 வாக்கா ளர்களுக்கு மேல் உள்ள வாக் குச்சாவடிகள் 2 - ஆக பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல் , வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளா கத்தில் பழுதடைந்த பழைய கட்டிடத்தில் உள்ள வாக்குச் சாவடிகளை அதே வளாகத் தில் உள்ள புதிய கட்டிடத் துக்கு மாற்றுதல், ஒருவாக்குச் சாவடி வளாகத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளை 1,500 வாக்காளர்களுக்கு மிகாமல் ஒன்றிணைத்தல் போன்ற வழி முறைகளை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    1,301 வாக்குச்சாவடிகள் அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் , காட் பாடி, அணைக்கட்டு , குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் 1,301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரையின் பேரில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அனைத்து வாக்குச்சாவடிக ளையும் தணிக்கை செய்து தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து வரைவு வாக்குச்சா வடிபட்டியல் அனுப்பிவைக் கப்பட்டதன் பேரில் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பட்டியல் உதவி கலெக்டர் அலுவலகம், வேலூர் மாநகராட்சி அலு வலகம், தாலுகா அலுவலகங் களில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனில் தெரி விக்கலாம். 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த பட்டியல் வாக்காளர்களின் எண்ணிக் கைக்கு ஏற்பவரையறை செய்யப்பட்டு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாலிபர் கைது
    • வேலூர் சிறையில் அடைத்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி இவரது 17 வயது மகள் பிளஸ்-1 முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து அவர் திடீரென மாயமானார்.

    இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் அவரது தந்தை புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலையில் பஸ்சுக்காக காத்திருந்த அந்த சிறுமி மற்றும் உடன் இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடியாத்தம் செருவங்கி தனலட்சுமி நகரைச் சேர்ந்த சேகர் மகன் அசோக் குமார் (வயது 27) எலக்ட்ரீசியன் வேலை செய்து வருபவர் என்பதும் இவர் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று ரத்தனகிரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

    இதனையடுத்து அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • எஸ்.பி.க்கு வந்த வாட்ஸ்-அப் தகவல் மூலம் நடவடிக்கை
    • 2 கி.மீ. தூரம் நடந்து சென்றனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் கலர்பாளையத்திலிருந்து பெரும்பாடி ஏரி கரை மீது சென்று சுமார் இரண்டு கிலோமீட்டர் சேரும் சகதியுமான பாதையை தாண்டிச் சென்றால் ஒரு விவசாய நிலத்தில் வாழைத்தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ள தாக பெயரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மற்றும் அதிரடி படையினருடன் நேற்று மாலையில் கொட்டும் மழையில் எர்த்தாங்கல் கலர்பாளையம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெரும்பாடி ஏரிக்கரையின் மீது சென்று அங்கிருந்து உசேரும் சகதியுமாக உள்ள ஒத்தையடி பாதையில் மிகவும் சிரமப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று குழுவினருடன் ஆய்வு செய்தபோது கஞ்சன் என்கிற முனியப்பன் என்பவருடைய வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது கண்டு அதிர்ச்சடைந்தார் உடனடியாக அதிரடிப்படையினருடன் வாழைத்தோட்டத்தில் தீவிர சோதனை செய்தபோது சுமார் ஒன்றரை அடி உயரம் முதல் 4 அடி உயரம் வரை வளர்ந்துள்ள 40 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது-கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் வாட்ஸ் அப் எண் 9092700100 என்ற எண்ணை அறிமுகம் செய்தோம் அதன்படி வேலூர் மாவட்டத்தில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்து ஏராளமான ரகசிய தகவல்கள் வரப்பட்டன.

    அந்த தகவல்களின் பேரில் தனிப்படையினர் தீவிரமாக சோதனை செய்து கஞ்சா விற்பவர்கள், கடத்திச் செல்பவர்கள் மற்றும் குட்கா ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை கடத்திச் செல்பவர்கள் விற்பவர்கள் என தொடர்ந்து கைது செய்யப்பட்டு கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    போலீசார் தெரிவித்த வாட்ஸ் அப் எண்ணின் பலனாக குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கலர் பாளையத்திலிருந்து பெரும்பாடி ஏரிக்கரை தாண்டி ஒரு விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக அதில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து சாதாரண சீருடையில் தனிப்படை போலீசார் புகார் வந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு கஞ்சா பயிரிடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து காலதாமதம் செய்யாமல் விரைந்து சென்று கொட்டும் மழையும் பார்க்காமல் மோட்டார் சைக்கிலை சென்று அந்த நிலத்திற்கு சென்று பார்த்தபோது வாழைத் தோட்டத்தில் 40 கஞ்சா செடிகள் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அந்த நிலத்தின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போல் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முன்னேற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை
    • தூய்மைப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது

    குடியாத்தம்:

    குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஏராளமான விநாயகர் சிலைகள் கரைப்பது வழக்கம்.

    இதனை முன்னிட்டு அங்கு கரைப்பதற்கான முன்னேற்பாடுகளை குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் காவல்துறையினர், வருவாய் துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் எஸ். தனஞ்செயன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் விஜயகுமார், நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், தீயணைப்பு நிலையை அலுவலர் லோகநாதன், நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

    அப்போது நெல்லூர் பேட்டை ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்கும் பகுதியில் பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்வது சிலைகள் கரைக்கும் பகுதியில் ஆழப்படுத்துவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் சிலைகள் கரைக்கும் இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

    • கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வள்ளியம்மாள் மகன் வடிவேல் வீட்டில் வசித்து வந்தார்.
    • போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா, பாஸ்மார் பெண்டா மலைப்பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.விவசாயி. இவர் சகோதரிகளான வள்ளியம்மாள் (வயது 60), முனியம்மாள் என 2 பேரை திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

    முதல் மனைவியான வள்ளியம்மாளுக்கு தங்கராஜ், வடிவேல், தங்கமணி, ஜெயலட்சுமி என 3 மகன்கள் 1 மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வள்ளியம்மாள் மகன் வடிவேல் வீட்டில் வசித்து வந்தார். இவர் தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை ஆடுகளை ஓட்டி வந்து வீட்டில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இன்று காலை 6 மணிக்கு அங்குள்ள விவசாய நிலத்தில் தலை, முகம் பாறாங்களால் சிதைத்து ஆடைகள் கலைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    வள்ளியம்மாள் கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த அவரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொலையாளிகளை கைது செய்த பின்பு வள்ளியம்மாள் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

    போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றபோது ஏற்பட்ட தகராறில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம்
    • திட்டத்தின் பலன்களை விரிவுப்படுத்த ஆலோசனை

    வேலூர்:

    வேலூர் கூட்டு றவு சர்க்கரை ஆலை மூலம் செயல்படுத்தப்படும் கரும்பு மேம்பாட்டுத் திட்டப்பணிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

    வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் , கரும்பு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், நடைமுறையில் கரும்பு கரணைகளை வெட்டிப் பயிரிடும் முறையால் ஏக்கருக்கு ரூ.12,000 அளவுக்கு, அதாவது 4 டன் கரும்புகள் செலவாகிறது. இதைத் தவிர்க்க கரும்பு பருசீவல் நாற்றுகள் தயார் செய்து அளிக் கப்படுகிறது.

    இதன் மூலம் ஒரு டன் கரும்பு மூலம் ரூ.3,500 செலவில் 5,000 நாற்றுகள் உற்பத்தி செய்து அளிக்கப்படுகிறது. தவிர, கரும்பு ஆராய்ச்சி பனைகளில் இருந்து ஏக்கரைக்கு 60 டன் கரும்பு விளைச்சலை அதிகரிக்க கூடிய புதிய கரும்பு ரகங்களும் விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிக்கப்படுகின்றன.

    இந்த திட்டங்கள் குறித்தும், அதனால் கிடைக்கப்பெறும் பயன்பாடுகள் குறித்தும் வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் கள ஆய்வு மேற்கொண்டார். காட்பாடி வட்டாரத்துக்குட் பட்ட ஏரந்தாங்கல் கிராமத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் தோட்டங்களில் அவர் நேரில் பார்வையிட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததுடன், திட்டத்தின் பயன்களை மேலும் விரிவுப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்.

    ஆய்வின் போது, துணை இயக் குநர் (சொட்டுநீர் பாசனம் ) ஆர் . விஸ்வநாதன், காட்பாடி வட்டார வேளாண்மை அலுவலர் முருகன், சர்க்கரை ஆலை கரும்பு மேம்பாட்டு அலுவலர் மு.வேலாயுதம், ஆலைப்பகுதி கரும்பு அலுவலர் எம்.சக்திவேல், கரும்பு மேம்பாட்டு உதவியாளர் சி.ஆப்ரகாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×