என் மலர்
நீங்கள் தேடியது "அ.தி.மு.க.-தி.மு.க வாக்குவாதம்"
- வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்
- சாலைகளை சீரமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
வேலூர்:
வேலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கவுன்சிலர்கள் சாலை மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பாமக கவுன்சிலர் பாபி கதிரவன் பேசுகையில்:-
என்னுடைய வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் குப்பையை சாலையிலேயே கொட்டி விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைத்தொட்டி வைக்க வேண்டுமென கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய கமிஷனர் அசோக் குமார் குப்பைத்தொட்டி இல்லாத நகரமாக வேலூர் மாநகராட்சி உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் வரும்போது குப்பைகளை வண்டியில் கொட்ட வேண்டும் என தெரிவித்தார்.
1-வது வார்டு கவுன்சிலர் அன்பு பேசுகையில் எனது வார்டில் 12 லட்சம் கொள்ளளவு கொண்ட கூட்டு குடிநீர் மேல்நிலைத் நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் குழாய்களில் காற்று மட்டும் தான் வருகிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் செங்கோட்டை முதல் கல் புதூர் வரை கோழிக்கழிவுகளை சாலையோரம் கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கோழி கழிவுகளை சாலையோரம் கொட்டும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.
கமிஷனர் கூறுகையில் கோழி கழிவில் இருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதையடுத்து அதிமுக கவுன்சிலர் எழிலரசன் பேசும்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய பஸ் நிலையம் திறந்து முழுமையாக பயன்பாட்டுக்கு வருவது எப்போது என கேள்வி எழுப்பினார்.
வாக்குவாதம்
அப்போது துணை மேயர் சுனில் குமார் உங்கள் ஆட்சியில் காண்டிராக்டர் எடுத்தவர் சரிவர பஸ் நிலையத்தில் கட்டாததால் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார்.
கவுன்சிலர் எழிலரசன் பேசிக்கொண்டிருந்த போது தி.மு.க. கவுன்சிலர்கள் மைக்கை பறித்து சென்றனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது அ.தி.மு.க, தி.மு.க கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கமிஷனர் பேசுகையில்:-
மாநகராட்சியில் சாலைகளை சீரமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஆயிரம் மின்விளக்குகள் வீதம் வேலூர் 4000 மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்றார்.






