என் மலர்tooltip icon

    வேலூர்

    • மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    வேலூர் காந்தி ரோடு பாபு ராவ் தெரு பகுதிகளில் ஏராளமான லாட்ஜ் கடைகள் உள்ளன. இங்கு வெளி மாநிலத்தவர்கள் தங்கி உள்ளனர்.

    காந்தி ரோடு பாபு ராவ் தெரு பகுதிகளில் கால்வாய் நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் வைத்தனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

    இதனையடுத்து இன்று காலை மாநகராட்சி உதவி பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் ஆக்கிரமிப்பு களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    பொக்லைன் எந்திரம் மூலம் கடை படிக்கட்டுகள் முகப்பு இடித்து அகற்றினர். 700 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு அகற்றினார்கள்.

    இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தி.மு.க. 15-வது பொதுக்குழு தேர்தலில் 2-வது முறையாக பொதுச் செயலாளராக

    ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன் ரெயில் மூலம் இன்று காட்பாடி வந்தார்.

    அவருக்கு, தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சித்தூர் பஸ் நிலையம் வரை கரகாட்டம், புலியாட்டம், சிலம்பம், மேளதாளம், பூரணகும்ப மரியாதை, வானவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன் எம்.பி., கதிர் ஆனந்த் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ், எம்.எல்.ஏ.க்கள், நந்தகுமார், நல்லதம்பி, அமலுவிஜயன், கார்த்திகேயன், டாக்டர் வி.எஸ். விஜய், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாநகர மாவட்ட நிர்வாகிகள் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் துரைமுருகனை வரவேற்கும் விதமாக காட்பாடி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கரகாட்டம் நடந்தது.தவில், பம்பை, டிரம்ஸ், வாணியம்பாடி மேளங்கள் முழங்கியதில் காட்பாடி ரெயில் நிலையம் குலுங்கியது. சாலையில் பெண்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.

    இதனால் ெரயில் நிலையம் முதல் சித்தூர் பஸ் நிறுத்தம் வரை விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
    • ஒன்றிய குழு தலைவர் பேச்சுவார்த்தை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் வரதாரெட்டிபல்லி ஊராட்சியில் வரதாரெட்டிபல்லி, பண்டப்பல்லி, மோடிகுப்பம், வி.எஸ்.புரம், குப்பகொட்டுர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமானோர் 100 நாள் வேலைக்கு பதிவு செய்துள்ளனர்.

    கூலி வழங்க வில்லை

    இதில் சூழ்ச்சி முறையில் 100 நாள் பணி இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக 100க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கூலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக பணிதள பொறுப்பாளரும் இல்லை எனவும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டில் பெயர்கள் பதிவு செய்ய முடியவில்லை எனவும் உடனடியாக தரவேண்டிய கூலியை தர வலியுறுத்தியும், பணிதள பொறுப்பாளரை நியமிக்க வலியுறுத்தியும் 100 நாள் பணிக்கு வருகை பதிவேடு பதிவு செய்ய வலியுறுத்தியும் நேற்று 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் இருந்தது விரைந்து வந்த குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்ளிட்டோர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் தமிழக முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கான கூலித்தொகை விடுவிக்கப்ப டவில்லை எனவும், உடனடியாக பணிதள பொறுப்பாளரை நியமிப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • 2017-ம் ஆண்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கருணை இல்லம் செயல்பட கோர்ட்டு ஆணை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
    • சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள குகையநல்லூர் கிராத்தில் கருணை இல்லம்' என்ற பெயரில் தனியார் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், சரியான உணவு, தங்குமிட வசதி இல்லை என்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

    அதன்பேரில், உதவி கலெக்டர் பூங்கொடி தலைமையில் காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், சமூகநலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அந்த முகாமில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, அந்த இல்லத்தில் 37 ஆண்கள், 32 பெண்கள் என மொத்தம் 69 பேர் தங்கியிருப்பதும் அவர்களுக்கு உரிய வசதிகள் இல்லாமல் துன்புறுத்தப்படுவது தெரியவந்தது.

    இதையடுத்து, அங்கிருந்து 61 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர், வாலாஜா, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அந்த இல்லத்தில் தற்போது 8 பேர் மட்டும் தங்கியுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது,

    இந்த இல்லம் ஏற்கனவே 2017-ம் ஆண்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கருணை இல்லம் செயல்பட கோர்ட்டு ஆணை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில், கருணை இல்லத்தில் தங்கியுள்ளவர்களை அடித்து துன்புறுத்துவது உறுதியானதால் 69 பேரில் 61 பேரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளோம்.

    பின்னர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மீதமுள்ள 8 பேரை வேறு முதியோர் இல்லத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

    தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபாவளி பண்டிகைக்கு பரோலில் செல்ல அனுமதி கோரி கைதிகள் மனு அளித்து வருகின்றனர்.
    • கடந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான கைதிகள் மட்டும் பரோலில் சென்றனர்.

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் ஆயுள் தண்டனை பெற்று பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் சிறையில் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆண்டுதோறும் தண்டனை கைதிகள் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், பரோல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம்.

    அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பரோலில் செல்ல அனுமதி கோரி கைதிகள் மனு அளித்து வருகின்றனர்.

    இவர்களுடைய மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்படும். வழக்கமாக தீபாவளி பண்டிகை காலத்தில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் பரோலில் விடுவிக்கப்படுவார்கள்.

    கடந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான கைதிகள் மட்டும் பரோலில் சென்றனர்.

    இந்த ஆண்டு தகுதி அடிப்படையில் கைதிகள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மண்டல அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம்
    • சொத்துவரி பொது சீராய்வு நடைபெற்று வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் புதிய கட்டிடங்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம் என ஆணையர் அசோக்குமார் தெரி வித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    "வேலூர் மாநகராட்சியில் சொத்துவரி பொது சீராய்வு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, புதிய கட்டிடங்களுக்கு வரி விதிப்புகள் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சொத்துவரி பொது சீராய்வு பணிகள் முடிவுற்றுள்ளன.

    வரி விதிப்பு செய்யப்படாத கட்டிடங்களுக்கு புதிய வரி விதிப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    எனவே, பொதுமக்கள் புதிய வரி விதிப்பு செய்ய சொத்து உரிமைக்கான பத்திரப்பதிவு நகல் மற்றும் கட்டிட அனுமதி உள்ளிட்ட ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

    • ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
    • மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணியில் சேர்க்கலாம்

    வேலூர்:

    தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க வேண் டும் என முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

    "தமிழகத்தில் 2 ஆயிரத்து 381 அரசு நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து செயல்படுத்திடவும், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் தற்காலிக ஆசிரி யர்களை நியமித்து அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பிழைப்பூதியமாக வழங்க தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை வெளியிட்டது. அந்த உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. மேலும், தமிழ்நாடு தொடக் கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தும் கோரிக்கைகளை பரிசீலித்து, புதிய அரசாணை பிறப்பித்து மழலையர் பள்ளிகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எல்.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத் , தில் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே. ஜி., வகுப்புகளை தொடங்க வேண்டும்.

    மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் ஒரு பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் 5 வீதம் நியமிக்க வேண்டும் அவர்களுக்கு மாதம் ரூ.20,600 ஊதியம் வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    • எம்.எல்.ஏ., மேயர் நேரில் ஆய்வு
    • சீரமைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    வேலூர்:

    வேலூரில் பெய்த பரவலான மழையால் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட் பட்ட நேதாஜி மார்க்கெட் சேறும், சகதியுமானது, இதனை அவற்றை சரிசெய்ய உரிய நடவ டிக்கை எடுக்கும்படி பொது மக்கள், வியாபாரிகள் எம்எல்ஏ மற்றும் மேயர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, எம் எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளு டன் நேற்று மாலை நேதாஜி மார்க்கெட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது, மார்க்கெட்டுக்குள் வாகனங்கள் வந்து செல்லும் பகுதியில் அழுகிய காய்கறிகள், வாழைத்தார் உள்ளிட்டவை கொட்டப் பட்டு துர்நாற்றம் வீசியது.

    மேலும் மழை காரணமாக அப்பகுதி சேறும், சகதியு மாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் காணப்பட்டது. அதைப் பார்த்த எம்.எல்.ஏ., மேயர் ஆகியோர், மார்க்கெட்டில் சேகரமாகும் அழுகிய காய் கறிகள், குப்பைகளை தினமும் சேகரித்துச் செல்லும் படி மாநகராட்சி ஊழிய ர்களுக்கு உத்தரவிட்டனர்.

    மேலும் அங்குள்ள வியாபாரிகளிடம் அழுகிய காய்கறிகள், குப்பைகளை சாலையில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அவ ற்றை மாநகராட்சி ஊழியர் களிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். மேலும், நேதாஜி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி சேறும், சகதியும் ஆகாத வகையில் உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று தெரிவித் தனர்.

    அதையடுத்து அவர்கள் சாரதி மாளிகையில் ஆய்வு செய்தனர். அங்குள்ள கழிவறையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் அங்கு சில கடைக்காரர்கள், பொதுமக்கள் செல்ல வழி பயின்றி ஆக்கிரமிப்பு செய்து கடைக்கு வெளியேயும் பொருட்களை வைத்திருந் தனர். அதை அகற்றவும் உத்தரவிட்டனர்.

    பின்னர் சாரதி மாளிகையில் அடிக்கடி திருட்டு போவதாகவும், அதை தடுக்க சிசிடிவி கேமராக் கள் பொருத்தி தரும்படி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆய்வின் போது 2வது மண்டலக்குழு தலைவர்நரேந்திரன், உதவி கமிஷனர் சுதா, உதவி பொறியாளர் வெங்கடே சன், சுகாதார அலுவலர் லூர்துசாமி, அனைத்து வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மாவட்ட தலைவர். ஞானவேலு, நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் எல்.கே.எம்.பி. வாசு மற்றும் கலந்து பலர் கொண்டனர்.

    • விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் கம்பன் கழகத்தின் சார்பில் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் 9-ம் ஆண்டு கம்பன் விழா, நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா, விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியை முத்தமிழ் சுவை சுற்ற நிறுவனர் புலவர் பதுமனார் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கம்பன் கழக தலைவரும், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளருமான கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் வி.ராமு என்.எஸ்.குமரகுரு, சி. கண்ணன், வீரய்யபத்தர், பாபுஜனார்த்தனம், பைரோஸ் அகமது, டி.என்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கம்பன் கழக நிறுவனரும், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே.என்.பழனி வரவேற்புரை நிகழ்த்தினார். கம்பன் கழக செயலாளரும் வழக்கறிஞருமான கே.எம். பூபதி மங்கல சிறப்புரையாற்றினார். சங்கத்தின் இணைச் செயலாளர் தமிழ் திருமால் தொடக்க உரையாற்றினார்.

    விழாவில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கம்பன் கழக இணைச் செயலாளர் தமிழ் திருமாலிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    தொடர்ந்து திருப்பத்தூர் கம்பன் கழக அமைப்பாளர் பொன்செல்வகுமார், கிருஷ்ணகிரி கம்பன் கழகத் தலைவர் ரவீந்தர் ஆகியோருக்கு கம்பர் மாமனி விருதும், மூத்த வழக்கறிஞர் சு.சம்பத்குமாருக்கு கவிமாமணி விருதும், அரசு சித்த மருத்துவர் தில்லைவாணனுக்கு சித்த மருத்துவமாணி விருதுகளை அம்பலால் வர்த்தக குழுமத்தின் தலைவர் கே.ஜவரிலால் ஜெயின், அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.என்.ஜோதிகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.

    முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் கம்பன் செய்த பாயிரம் நெஞ்சில் நிற்கும் ஆயிரம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் ஆவின் தலைவர் த.வேலழகன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி, நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, கூட்டுறவு வங்கி தலைவர் டி.சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கம்பன் கழக பொருளாளர் கே.இ.எம்.சிவக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா. சம்பத்குமார் தொகுத்து வழங்கினார்.

    • வாலிபர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் டி.ஐ.ஜி பங்களா பின்புறம் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 60) இவர் நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்றார்.

    அந்த வழியாக வந்த 2 பேர் திடீரென இருதய ராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2500 ரூபாய் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இருதயராஜ் கத்தி கூச்சலிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓடிய இருவரையும் பிடித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வேலூர் தோட்ட பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (31) சரத்குமார் (27) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் மீது ஏற்கனவே வேலூர் வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. ‌ போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • 25 கிலோ பறிமுதல்
    • ஒருவர் கைது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியில் பல பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன இந்த புள்ளிமான்களை வனப்பகுதியை ஒட்டியபடியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிலர் வேட்டையாடி மான் இறைச்சியை விற்பனை செய்வதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி மேற்பார்வையில் பழைய குற்றவாளிகளை கைது செய்ய குடியாத்தம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு சத்தியமூர்த்தி உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை சூராளூர் அடுத்த மலையடிவாரம் அருகே தேடப்படும் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்றனர்.

    போலீசாரை கண்டதும் 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடினர். அங்கு இருந்த ஒரு நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அந்த நபரை தீவிர விசாரணை செய்த போது ஒடுகத்தூர் அடுத்த தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 30) என்பது தெரியவந்தது. சிலருடன் சேர்ந்து பெரிய புள்ளி மானை வேட்டையாடி இறைச்சியை துண்டுகளாகிய விற்பனைக்கு கொண்டு செல்லும்போது பிடிப்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் பாபுவிடமிருந்து மோட்டார் சைக்கிள் 25 கிலோ மான் இறைச்சி வேட்டையாட பயன்படுத்தும் கருவிகள் கத்தி, எடை மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பிடிப்பட்ட பாபு மற்றும் மான் இறைச்சி உள்ளிட்டவைகளை குடியாத்தம் வனத்துறை யினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    குடியாத்தம் வனப்பகுதியில் புள்ளி மான்களை வேட்டையாடி இறைச்சி விற்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது ரோந்து செல்லாத வனத்துறையினரையும் சம்பவத்தை கண்டுக்காமல் மெத்தனமாக உள்ள வனத்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்தை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளதால் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை- அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலுார் அடுத்த பெருமுகை யில் பாலாற்று கரையில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் மணல் குவாரி சில மாதங்க ளுக்கு முன்பு தொடங்கியது.

    பெருமுகையில் யார்டும், அரும்பருதியில் குவாரியும் கொண்டு செயல்படத் தொடங்கியது. ஒரு யூனிட் மணல் ரூ.3 ஆயிரத்து 150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆன்லைன் மூலமாக இ சேவை மையத்தில் இருந்து மணலுக்கு பதிவு செய்ய வேண் டும். அத்துடன் கட்டுமானம் நடக்க உள்ள கட்டிடத்தின் வரைபடத்தையும், மணல் எடுக்க வரும் வாகனத்தின் எண்ணையும் அதில் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு சம்பந்தப்பட்ட வர்களுக்கு எஸ் எம்எஸ் வரும். அதை காண்பித்து மணல் எடுத்துசெல்லலாம்.

    மற்றபடி முறைகேடாக மணல் எடுக்க முடியாது. மேலும் பாலாற்றில் இருந்து மணலை அள்ளி எடுக்க பொக்லைன் போன்ற எந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது, யார்டில் இருந்து மட்டும் வாகனங்களுக்கு எந்திரங்கள் மூலமாக மணல் நிரப்பப்படும் என்று கூறியிருந்தனர்.

    ஆனால், பெருமுகை பகுதியில் மணல் விற்பனையில் முறைகேடு நடப்பதாக அப்ப குதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் ஏராளமான லாரிகள் மணல் எடுத்துக்கொண்டு செல்வதாகவும், பாலாற்றில் இருந்தே பொக்லைன் மூலமாக விதிமீறி வாகனங்களில் மணல் நிரப்புவ தாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.

    பாலாற்றுக்கரையோரம் உள்ள சுடுகாட்டையும்கூட விட்டு வைக்காமல் மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் மணல் எடுத்து வந்த வாகனங்களை சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

    ஏற்கெனவே பாலாற்றில் இருந்து அளவுக்கு மீறிய மணல் கடத்தல் காரணமாக நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேலுார் மாவட்ட விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி யிருந்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:-

    'ஆற்றுப்படுகை யில் எந்திரங்கள் கொண்டு மணல் அள்ளப்படுவது இல்லை. யார்டில் மட்டுமே எந்திரங்கள் வாகனங்களில் மணல் ஏற்ற பயன்படுத்தப் படுகிறது.

    ஆற்றில் நீரோட்டம் இருப் பதால் குவாரி பணிகள் பாதிக் கப்படக்கூடாது என்பதற்காக நீர் வழித்தடத்தை திருப்பிவிட எந்திரங்கள் பயன்படுத்தியி ருப்பார்கள். இதுகுறித்து எந்த புகாரும் வரவில்லை, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்கிறோம். முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை' என்றார்.

    பெருமுகை மணல் குவாரிக்கு வரும் லாரிகள் அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அணிவகுத்து நிற்கின்றன.

    இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை நிறுத்தி வருவதால் பெரும் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மணல் குவாரிக்கு வரும் லாரிகளை நெடுஞ்சாலையில் நிறுத்த அனுமதிக்க கூடாது என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×