என் மலர்tooltip icon

    வேலூர்

    • அந்த வழியாக சென்ற கலெக்டர் பொதுமக்கள் உதவியுடன் மாட்டை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார்
    • சமூக ஆர்வலர்கள் பாராட்டு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நேற்று மாலை பிள்ளையார் குப்பம் சென்று விட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரங்காபுரம் 6 வழிச்சாலையில், மாடு ஒன்றின் மீது கார் மோதி, மாடு பலத்தகாயங்களுடன் ரோட்டில் கிடந்தது.

    இதைப்பார்த்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி இறங்கி வேகமாகச் சென்று மாட்டை தொட்டுப் பார்த்தார். அதன் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தால், அதனால் எழமுடியவில்லை. மேலும் அதன் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.

    இதைப்பார்த்த கலெக்டர் பொதுமக்கள் உதவியுடன் ரத்தத்தை துடைத்து, விட்டு, உட டியாக ஒரு வாகனத்தை வரவைத்தார். பின்னர் அந்த மாட்டின் கால்கள்பத்திரமாக கட்டப்பட்டு, பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றப்பட்டு, வேலுார் மண்டல கால்நடை பராமரிப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அவர் துறை அதிகாரிகளுக்கு போன் செய்து மாட்டுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

    இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கலெக்டரின் செயலைப் பாராட்டிச் சென்றனர்.

    • புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலுார்:

    புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மாலை வேலூர் ரங்காபுரத்தில் உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது .

    ரங்காபுரம் கோதண்ட ராமர் கோயில் எதிரே நடந்த சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில், போட்டியிட்ட அணிகளில் , காகி தப்பட்டறை அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து வாணவேடிக்கையுடன் ஸ்ரீ கிருஷ்ணர் வீதி உலா நடந்தது.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்ததான கழகத்தின் 30 -ம் ஆண்டு விழா, போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு விழா, செய்தோருக்கு பாராட்டு விழா வேலூர் பில்டர் பெட்ரோடு அனிகர் ஆஸ்ரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது.

    விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் திலிபன் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் நாராயணன் வரவேற்று பேசினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் கார்த்திகேயன் எம். எல். ஏ, மேயர் சுஜாதா, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள்பாஸ்கரன், மேனாள், வரவேற்புக்குழு செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆட்டோவில் பைக் எதிர்பாராத விதமாக மோதியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி வ.ஊ.சி நகரை சேர்ந்தவர் வின்சென்ட்.இவரது மகன் சாம்சன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவருக்கு சுவேதா என்ற மனைவியும் ஒரு மகன் உள்ளனர். மனைவிக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் மாலை தனது குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    இதையடுத்து இரவு 11:30 மணியளவில் தனது பைக்கில் வேகமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த குடிநீர் சப்ளை செய்யும் ஆட்டோ மீது சாம்சன் ஓட்டிச் சென்ற பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    இதனால் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்சன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியின் பிறந்தநாள் கொண்டாடிய ஆட்டோ டிரைவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் எழுதினர்
    • தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு

    வேலூர்:

    ஐகோர்ட்டு ஆணைக்கினங்க மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள முதுநிலை மற்றும் இளநிலை கட்டளை பணியாளர், நகல் எடுப்பவர், நகல் வாசிப்பாளர், நகல் பரிசோதகர் ஆகிய பணியிடங்களுக்கு இன்று எழுத்து தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம்பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    இன்று காலை தேர்வு எழுத விண்ணப்பி த்திருந்தவர்கள் பலத்த பரிசோதனைக்கு பின்னர் 9-30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெறுவதை யொட்டி தேர்வு மையங்களுக்கு முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இளங்கோ குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி, அருப்புமேடு, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 22). கேபிள் டிவி ஆபரேட்டரிடம் வேலை செய்து வந்தார். இவர் தனது அத்தை மகளை காதலித்து வந்தார்.

    இவர்களது காதலுக்கு இளங்கோவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அத்தை மகளை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு தனது வீட்டிற்கு செல்லாமல் பெண்ணின் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளங்கோ பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இளங்கோ குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் அறிவுரை
    • வாட்ஸ்-அப், பேஸ் புக்கில் ஏமாற்றுகிறார்கள்

    வேலூர்:

    சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இதுவரை 1,174 புகார்கள் இணைய வழியாகவும், நேரடியாகவும் பெறப்பட்டுள்ளது.

    பணமோசடி புகார்களில் ரூ.6 கோடியே 68 லட்சத்து 96 ஆயிரத்து 489ஐ பொதுமக்கள் இழந்துள்ளனர்.

    இப்புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ரூ.4 கோடியே 27 லட்சத்து 79 ஆயிரத்து 810 முடக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.90 லட்சத்து 35 ஆயிரத்து 726 மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சைபர் குற்றவாளிகள் போலியான அடையாள அட்டைகள் மூலம் சிம் கார்டுகளையும், வங்கிக் கணக்குகளையும் தொடங்கி அதன் மூலம் இணையவழி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் வடமாநிலங்களை சேர்ந்த நபர்களே சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு இழந்த பணத்தை மீட்பது மிகவும் கடினமாக உள்ளது.

    எனவே பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்கள் கேட்கும் விவரங்களையோ, வங்கி விவரங்களையோ அவர்களிடம் பகிர வேண்டாம். பெரும்பாலும் மோசடி நபர்கள் தான் போலியான அடையாளங்களுடன் இணைதளம் வாயிலாக பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறித்து வருகின்றனர்.

    பல்வேறு வகைகளில் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பகுதிநேர வேலை வழங்குவதாக கூறி மொபைல் ஆப்கள் மூலம் செல்போனில் உள்ள உங்களது புகைப்படங்கள், வங்கி விவரங்களை பதிவிறக்கம் செய்து மோசடி செய்து பணத்தை திருடி விடுவார்கள்.

    தேவையற்ற கடன் லோன் ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். பரிசு கூப்பன் தருவதாக கூறியும் ஏமாற்றுவார்கள். ஏதேனும் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் இழந்தை பணத்தை மீட்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 நாட்கள் இயக்கப்படுகிறது
    • இருக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் வேலூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வேலூரில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் பூந்தமல்லி தற்காலிக பஸ்நிலையம் வரை இயக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து வேலூர் வழியாக திருப்பத்தூருக்கு 30 சிறப்பு பஸ்களும் குடியாத்தம் செல்வதற்கு 20 பஸ் இயக்கப்படுகிறது.

    வேலூரில் இருந்து பூந்தமல்லிக்கு 45, திருச்சிக்கு 10, பெங்களூருக்கு 15 ஓசூருக்கு 15, தருமபுரிக்கு 25, பூந்தமல்லியில் இருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு மேலும் 15 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 200 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வேலூரில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, கோவை செல்லும் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல பஸ்களில் இருக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வீடு, வீடாக சென்று மேற்கொள்ளப்பட உள்ளது
    • கலெக்டர் அறிவிப்பு

    வேலூர்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை பெற்று இணைய வழியில் மொபைல் ஆப் மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 875 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 737 வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    இப்பணியை விரைந்து முடிக்கும் பொருட்டு இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு பணியாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்கள் இதனை பயன்படுத்தி இணைத்துக்கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • மாஸ்டர் கைது
    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

    வேலூர்:

    அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லுார் அடுத்த சீலேரி கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 35). கராத்தே மாஸ்டர். இவர் அணைக்கட்டில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். அணைக்கட்டு பகுதியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி (17) ஒருவர் கராத்தே பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

    இந்நிலையில் மாணவி மயக்கமடைந்தார். இதையடுத்து மாணவியை அவ ரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.அப்போது மாணவி கர்ப்பம் அடைந்துள்ளதாக டாக்டர் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். தனது கர்ப்பத்துக்கு காரணம் கராத்தே மாஸ்டர் பாபுதான் காரணம் என்று மாணவி கூறியுள்ளார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ் பெக்டர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் மாணவி மைனர் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் கராத்தே மாஸ்டர் பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு
    • ஆக்கிரமிப்பு இடம் குறித்தும் கேட்டறிந்தார்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரின் மத்தியில் உள்ள உழவர் சந்தை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் தனிநபர் ஆக்கிரமிப்பு குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வருவாய்த்துறை வணிகவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் அந்த ஆக்கிரமிப்பு இடம் குறித்தும் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து உழவர் சந்தைக்குள் சென்று பார்வையிட்டார் மேலும் உழவர் சந்தைக்கு வெளியே காய்கறி கடைகள் அமைந்துள்ள பகுதியில் சேர்ந்துள்ள குப்பைகளை தினந்தோறும் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    நகரி நடுவே கவுண்டன்யா மகாநதி ஆறு செல்கிறது இதில் கெங்கையம்மன் கோவில் அருகே தரைப்பாலம் உள்ளது. இந்த ஆற்றில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருத்த வெள்ளப்பெருக்கின் போது கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. போக்குவரத்துக்கு மிகவும் பேரு உதவியாக இருக்கும் இந்த தரைப்பாலம் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்டதால் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து தடை

    ஆற்றில் வெள்ளம் செல்லும் போது தரைப்பாலத்தின் மேலே வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதாலும் ஆற்றில் வெள்ளம் செல்லும் போது போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க ரூ. 5 லட்சத்தில் தற்காலிகமாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் 7 இடங்களில் ராட்சத பைப்புகள் வைத்து ஆற்றில் வெள்ளம் அதில் செல்லும் வகையில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கலெக்டர் ஆய்வு

    அந்த தரைப்பாலத்தில் நடைபெறும் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கோபி, நகர நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் ஜி எஸ்.அரசு, ஆட்டோமோகன், என்.கோவிந்தராஜ், சி.என்பாபு, அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.அமர்நாத் உள்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
    • தரமான வீடுகள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

    வேலூர்:

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதி கபிலன், வேலூர் தொகுதி செயலாளர் சரத், தொகுதி துணை செயலாளர் முருகன் ஆகியோர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்ப தாவது:-

    மேல்மொணவூரில் ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஈழ சொந்தங்களுக்காக இலவச தொகுப்பு வீடுகள் என்ற பெயரில் ரூபாய் 11 கோடி செலவில் 220 வீடுகள் கட்டும் திட்டத்தினை கடந்த ஆண்டு முதல்அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    ஆனால் வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பெற்ற கட்டுமான நிறுவனங்கள் வீடுகளை முற்றிலும் தரமற்ற முறையில் கட்டி வருவதாக முகாம்களில் வசிக்கும் மக்களே குற்றம் சாட்டினர். இதை அடுத்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கே நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

    அடித்தளம் ஆழமாக அமைக்கப்படாததும் சிமெண்டு அதிகளவு மலை மணல் கலக்கப்படுவதும் கான்கிரீட் தூண்கள் ஏதுமின்றி பாதுகாப்பற்ற கலவையில் வகையில் வீடுகள் கட்டப்படுகின்றனர். என்ற அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

    நாடு இழந்து வீடு இழந்து மண்ணையும் மக்களையும் உயிரையும் உறவுகளையும் உடமைகளையும் இழந்து நிம்மதியாக உயிர் வாழ இந்த பூமிப் பந்தில் ஒரு இடம் கிடைத்திடாதா என்ற எதிர்பார்ப்புகளுடன் இன்னொரு தாய் நிலமான தமிழ்நாட்டுக்கு நம்மை நம்பி வந்த ஈழச் சொந்தங்கள் முகாம்கள் என்ற பெயரில் சிறையை விட கொடுமையான எவ்வித அடிப்படை வசதி அற்ற வதைக்கூடங்களில் ஒரு தலைமுறைக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த நாட்டிற்குச் சிறிதும் தொடர்பில்லாத திபெத்தியர்களுக்கு வளமான வாழ்வை இந்திய பெரும் நாடு அமைத்துக் கொடுத்துள்ளது.

    தமிழர்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத ஐரோப்பிய நாடுகள் கூட ஈழ தமிழ் சொந்தங்களை தங்கள் சொந்த நாட்டு குடிமக்களைப் போல அரவணைத்து ஆதரித்து வாழ வைக்கின்றனர். நம்முடைய தமிழ்நாட்டில் நம்முடைய தமிழக முதல்வர் இலங்கை தமிழர்களுக்கான கட்டுமான வேலையில் சற்றும் மனசாட்சியின்றி பாறையை உடைக்காமல் அதன் மீது போலி அஸ்திவாரம் போடுவது டம்மி கலம் போட்டு கட்டுவது தரமற்ற கம்பிகளை கொண்டு கட்டுமான பணிகளை செய்வதும், தூண்களே எழுப்பாமல் சுவர் எழுப்புவதும் ஈழத் தமிழ் மக்களின் உயிர்களில் விளையாடும் ஒரு செயலாகும் இத்தகைய செயல், மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

    உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு மேல்மொணவூரில் ஈழ சொந்தங்களுக்கு புதிதாக கட்டப்படும் குடியிருப்புகள் தர மற்றதாக கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி உறுதிமிக்க தரமான வீடுகள் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    ×