என் மலர்tooltip icon

    வேலூர்

    • 1 மணி நேரம் வரை தாமதமாக சென்றன
    • பயணிகள் அவதி

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது.

    காட்பாடி அடுத்த திருவலத்தை கடந்து சென்றபோது சரக்கு ரெயிலின் பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் திடீரென உடைந்தது.

    இதனால் ரெயில் பெட்டிகள் தனித்தனியாக கழன்றது. இதனைக் கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    இதுகுறித்து காட்பாடி ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

    திருவலம் அருகே சரக்கு ரெயிலின் கப்ளிங் உடைந்து தண்டவாளத்தில் ரெயில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் திருவலத்திற்கு முன்பாக பயணிகள் ெரயில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தை தாண்டி நடு வழியில் நிறுத்தப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த ெரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சரக்கு ரெயிலில் உடைந்த கப்ளிங்கை சரி செய்து பெட்டிகளை இணைத்தனர். இதையடுத்து சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதனால் சுமார் ஒரு மணி நேரம் காட்பாடி-சென்னை மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் அந்த நேரத்தில் அரக்கோணம், சென்னை மார்க்கமாக சென்ற மற்ற ரெயில்களும் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக சென்றன.

    • வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நடந்தது
    • பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வைகுண்ட ஏகாதசியை சொர்க்கவாசல் சேவை நடைபெறுவது வழக்கம். இது தொடர்பாக நேற்று ஆர்டிஓ தலைமையில் பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதிகள் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான உத்திர ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஜனவரி 2-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் சேவை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக வேலூர் ஆர்டிஓ பூங்கொடி தலைமையில் தாசில்தார் ரமேஷ் திருக்கோயில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் வருவாய் துறை, பேரூராட்சி துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்று இருந்தனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 30 முதல் 50 ஆயிரம் வரை பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் கூட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் பொதுமக்கள் மூலம் பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் போது அதிக அளவில் பஜனை குழுக்கள் திருக்கோவிலுக்கு வருகை செய்வதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சாலையை உபயோகப்படுத்துவதாலும் அன்று ஒரு நாள் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மாற்றுப்பாதையில் கனரக வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும் இக்கூட்டத்திற்கு போக்குவரத்து துறை அலுவலர்கள் கூட்டத்திற்கு வருகை புரியாமல் புறக்கணித்ததால் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பொதுமக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

    இக்கூட்டத்தில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், ஆர் ஐ ஜெயந்தி, சுகாதார ஆய்வாளர் சந்திரன் சுகாதார், மேற்பார்வையாளர் ரமேஷ், திருக்கோயில் கணக்காளர் பாபு மற்றும் மணியம் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

    • போலீசார் விசாரணை
    • பால் வாங்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி இவருடைய மகள் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த போது யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார் இதனைகண்ட அப்பா மகளை கண்டித்துள்ளார்.

    மேலும் இளம்பெண்ணிற்கு தாய்மாமனுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காலையில் பால் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற அந்த பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்திலுள்ள உறவினர் வீடுகளிலும் தேடி கிடைக்காததால் இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    இதே போல் சின்னப்பள்ளி குப்பம் கிராமத்தை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி அகரம் கூட்ரோட்டில் இருக்கும் அரசு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என மாணவியின் தாய் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதன் சம்பந்தமாக வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    • உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவு
    • வீட்டுமனை பத்திரத்தை மீட்டு தர வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையம், அருகந்தம் பூண்டியை சேர்ந்த வயதான தம்பதியினர் இன்று மக்கள் குறை தேர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது மகளும் மருமகளும் சேர்ந்து வயது வித்தியாசம் பார்க்காமல் அடித்து துன்புறுத்துகின்றனர். மேலும் அசல் வீட்டு மனை பத்திரத்தை எடுத்துக்கொண்டு ஜெராக்ஸ் காப்பியை எங்களிடம் கொடுத்தனர்.

    இதனால் நாங்கள் இருவரும் வாடகை வீட்டில் கூட வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எனவே எங்களது வீட்டுமனை அசல் பத்திரத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என மனு அளித்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தாயையும், தந்தையையும் அடித்து துன்புறுத்திய மகன் மற்றும் மருமகளை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    • கொலை செய்து வீசப்பட்டாரா? விசாரணை
    • வலது கையில் பூமாலை, பெண்ணின் போட்டோ பச்சை குத்தப்பட்டுள்ளது

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வரக்கூடிய பழைய பாலாற்று பாலத்துக்கு அடியில் வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட ஆண் பிணம் சிக்கி இருந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    முதலில் வேலூர் தீயணைப்பு துறையினரை வரவழைத்து பிணத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டவருக்கு சுமார் 40 முதல் 50 வரை வயது வரை இருக்கும். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. பேண்ட் சட்டை அணிந்திருந்தார். வலது கையில் பூமாலை போட்டது போலவும் ஒரு பெண்ணின் போட்டோவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் போலீசார் பிணமாக கிடந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரது உடல் சிதைந்திருந்தது. வேலூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள தொலைவிலிருந்து உடல் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    மேலும் அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    வெள்ளத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    விரிஞ்சிபுரம் மற்றும் வேலூர் பகுதியில் ஆண்கள் யாராவது மாயமாகி உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 20-க்கும் மேற்பட்ட கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரில் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய கும்பாபிஷேகம விழாவை முன்னிட்டு மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது. இதில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுகள் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    ஒடுகத்தூரில் உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. உதனைத் தொடர்ந்து 2 நாட்களாக மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது.

    இதில் அண்டை மாநிலம் உட்பட வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டத்தில் இருந்து சுமார் 50-க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்துக்கொண்டன.

    இதில் 5 பிரிவுகளாகவும், 2 நாட்களாக நடைபெற்ற போட்டியானது நேற்று மாலை முடிவுக்கு வந்தது. இதில் சிறப்பாக விளை யாடி வெற்றிப்பெற்ற சிறந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    மேலும் விளையாட்டில் முடிவில் முதலாவது பரிசாக 10 அடி கோப்பையை மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் ஏரியூரை சேர்ந்த ஜெய் அணுமான் அணியும், 2-வது பரிசாக 9 அடி கோப்பை மற்றும் 8 ஆயிரம் ரொக்கப்பணத்தை வாணியம்பாடி அணியும் தட்டிச்சென்றது.

    இதனைத்தொடர்ந்து சுமார் 20 அணிகள் வெற்றிப்பெற்று கோப்பையும் ரொக்க பணத்தையும் தட்டிச்சென்றனர்.

    2 நாட்களாக விறுவி றுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் என சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

    • திருவண்ணாமலையை சேர்ந்தவர்
    • திடீரென வலிப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார்

    வேலூர்:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 47) சாராய விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு கிருஷ்ணனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கைதி திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க இளைஞர் மகளிர் வழிபாட்டு மன்றம் சார்பில் 43 ஆம் ஆண்டாக சக்தி மாலை அணிவது கஞ்சி கலச ஊர்வலம் அன்னதானம் தீச்சட்டி ஊர்வலம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    குடியாத்தம், பேர்ணாம்பட்டு தாலுகாக்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் இருந்து மேல் மருவத்தூருக்கு இருமுடி செலுத்தி வருகின்றனர்.

    நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக குடியாத்தம் தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் நேற்று கஞ்சி கலச ஊர்வலம் நடைபெற்றது.

    இந்த ஊர்வலத்தை முன்னிட்டு முத்தியாலம்மன் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

    தொடர்ந்து 501 பெண்கள் கஞ்சி கலசம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கள்ளூர் காந்தி நகரில் உள்ள மன்றத்தை அடைந்தனர். தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலையில் முத்தாலம்மன் கோவிலிலிருந்து 251 பெண்கள் தீச்சட்டி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று மன்றத்தை அடைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க மாவட்ட தலைவர் கே.எம்.எஸ்.ஜெயவேல், மன்ற உறுப்பினர்கள் ஜீவா, பாபு, பாலாஜி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜி.சரவணன் உள்ளிட்ட மன்றத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

    • கலைஞர்களின் ஊர்வலம் நடந்தது
    • நடிகர் மனோபாலா பங்கேற்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட நடிகர் சங்கம் சார்பில் 21 ஆம் ஆண்டு கலை விழா மற்றும் மாநாடு, கலைஞர்களின் ஊர்வலம், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு சங்க காப்பாளரும் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளருமான கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து நடிகர் சங்க கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியை அடைந்தனர். முன்னதாக ஊர்வலத்தை திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா, குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கே.எம். பூபதி, அமெரிக்க தமிழ் சங்கத்தின் ஆலோசனை குழு தலைவர் மெய்யர்தன், தமிழ்நாடு நாடக மன்ற நாட்டுப்புற கலைஞர்களின் மாநில சங்கத்தின் மாநில தலைவர் தங்கவேல், கௌரவ தலைவர் சிங்காரவேலன், மாநில துணைத்தலைவர் சின்னசாமி, ஒருங்கிணைப்பாளர் கும்பகோணம் ஆனந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் நாடகக் கலைஞர்கள், திரைப்பட நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள், சாதனை புரிந்த மாணவர்கள், சான்றோர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை சங்க பொதுச் செயலாளர் ஜெ. சிவகுமார், சங்கத் தலைவர் புலவர் ராமகிருஷ்ணன், பொருளாளர் மு. ஜெய்பிரகாஷ் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மாநாட்டில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    குடியாத்தம் நகரில் கலையரங்கம் அமைத்து தர வேண்டும். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

    ஓய்வூதியம் பெறும் வயது வரம்பை ஆண் கலைஞர்களுக்கு 55 வயதாகவும், பெண் கலைஞர்களுக்கு 50 வயதாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும். கலைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு, வீட்டு மனை பட்டா, பஸ்பாஸ் ஆகிவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.

    ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக்க வேண்டும்.

    தமிழக அரசு வழங்கும் கலைஞர்களுக்கான உயர்ந்தவிருதான கலைமாமணி விருதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலா இரண்டு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைஞர்களுக்கு வழங்கும் இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணக்கான நிதி உதவி அனைத்து தகுதி வாய்ந்த கலைஞர்களுக்கும் பயன்பெறும் வகையில் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

    உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    அ.தி.மு.க., வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, இணை செயலாளர் சுகன்யா தாஸ், துணைச் செயலாளர் ஜெயபிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் குட்டிலட்சுமி சிவாஜி, பகுதி செயலாளர்கள்‌ நாகு, குப்புசாமி, அணி மாவட்ட செயலாளர்கள் அமர்நாத், ராகேஷ், ஆர்.சுந்தரராஜி, எம்.ஏ.ராஜா, பாலச்சந்தர், வி.எல்.ராஜன், அண்ணாமலை, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் எஸ். குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 450 லிட்டர் சிக்கியது
    • 3 பேர் கைது

    வேலூர்:

    வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் நேற்று இரவு வேலூர் ஆரணி சாலையில் வல்லம் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது வாகன பதிவு எண் இல்லாமல் வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி காரில் சோதனை நடத்தினர். காரில் இருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர் அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    காரில் சோதனை செய்தபோது தல 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 லாரி டியூப் களில் 450 லிட்டர் கள்ள சாராயம் கடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து காரில் கள்ள சாராயம் கடத்தி வந்த கீழ் பள்ளிப்பட்டை சேர்ந்த ராம்குமார் (வயது 45), தெல்லையை சேர்ந்த ராமு (30), அமிர்தியை சேர்ந்த செல்வம் (55) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • திராவிட கழகம், தி.மு.க.வினர் பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு திராவிட கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திராவிட கழக தலைமை கழக பேச்சாளர் இரா. பெரியார்செல்வன், திராவிடர் கழக வேலூர் மண்டல தலைவர் வி. சடகோபன், மாவட்ட தலைவர் இரா.அன்பரசன், மண்டல மகளிர் அணி செயலாளர் ச.ஈஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் குடியாத்தம் நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான எஸ்.சவுந்தரராசன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கே.கண்ணன் நகர் மன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், நவீன்சங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் சிவ. செல்லபாண்டியன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கு.விவேக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட சமூக நல்லிணக்க பேரவை அமைப்பாளர் குருவிகணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×