search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்ட நடிகர் சங்கத்தின் 21 ஆம் ஆண்டு கலை விழா
    X

    வேலூர் மாவட்ட நடிகர் சங்கத்தின் 21 ஆம் ஆண்டு கலை விழா

    • கலைஞர்களின் ஊர்வலம் நடந்தது
    • நடிகர் மனோபாலா பங்கேற்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட நடிகர் சங்கம் சார்பில் 21 ஆம் ஆண்டு கலை விழா மற்றும் மாநாடு, கலைஞர்களின் ஊர்வலம், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு சங்க காப்பாளரும் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளருமான கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து நடிகர் சங்க கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியை அடைந்தனர். முன்னதாக ஊர்வலத்தை திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா, குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கே.எம். பூபதி, அமெரிக்க தமிழ் சங்கத்தின் ஆலோசனை குழு தலைவர் மெய்யர்தன், தமிழ்நாடு நாடக மன்ற நாட்டுப்புற கலைஞர்களின் மாநில சங்கத்தின் மாநில தலைவர் தங்கவேல், கௌரவ தலைவர் சிங்காரவேலன், மாநில துணைத்தலைவர் சின்னசாமி, ஒருங்கிணைப்பாளர் கும்பகோணம் ஆனந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் நாடகக் கலைஞர்கள், திரைப்பட நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள், சாதனை புரிந்த மாணவர்கள், சான்றோர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை சங்க பொதுச் செயலாளர் ஜெ. சிவகுமார், சங்கத் தலைவர் புலவர் ராமகிருஷ்ணன், பொருளாளர் மு. ஜெய்பிரகாஷ் உள்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மாநாட்டில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    குடியாத்தம் நகரில் கலையரங்கம் அமைத்து தர வேண்டும். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

    ஓய்வூதியம் பெறும் வயது வரம்பை ஆண் கலைஞர்களுக்கு 55 வயதாகவும், பெண் கலைஞர்களுக்கு 50 வயதாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும். கலைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு, வீட்டு மனை பட்டா, பஸ்பாஸ் ஆகிவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.

    ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக்க வேண்டும்.

    தமிழக அரசு வழங்கும் கலைஞர்களுக்கான உயர்ந்தவிருதான கலைமாமணி விருதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலா இரண்டு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும்.

    தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைஞர்களுக்கு வழங்கும் இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணக்கான நிதி உதவி அனைத்து தகுதி வாய்ந்த கலைஞர்களுக்கும் பயன்பெறும் வகையில் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

    உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×