என் மலர்
வேலூர்
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
- பாரம்பரிய விதை கண்காட்சி நடந்தது
வேலூர்:
வேலூர் மாவட்டம் அரசு ஏந்திர கலப்பை பணிமனையில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக பாரம்பரிய பயிர்கள் மற்றும் பாரம்பரிய விவசாயம் தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. அதில் நம்முடைய பகுதியில் விளையக்கூடிய பல்வேறு வகையான பயிர்கள் மற்றும் நம்முடைய பகுதியில் என்னென்ன வகையான முறைகளை கையாண்டு நாம் வேளாண்மை துறையில் செய்து வருகின்றோம்.
அந்த முறைகளுக்கு தேவையான கருவிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் பெருமக்கள் அறிய ரக பயிர்களை கொண்டு வந்து காட்சிப்படுத்தி உள்ளனர். நம்முடைய வாழ்க்கை முறை என்பது தட்பவெட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளால் அமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பகுதியை பொறுத்தவரை வெப்பமண்டலத்தில் அமைந்திருக்கக்கூடிய பகுதி.
இந்த பகுதியில் கோடைகாலத்தில் உச்சபட்ச வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் ஆகும். குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பம் 14 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. தற்பொழுது நாம் குளிர்காலத்தில் மையப் பகுதியில் உள்ளோம். இந்த பனிக்காலத்தில் நோய் தாக்குதல் என்பது சற்று குறைவாகவே இருக்கும். தை மாதம் என்பது நெல், சோளம், சிறுதானியங்களை அறுவடை செய்ய உகந்த காலம்.
வேளாண்மை என்பது இன்றியமையாத ஒரு தொழில் இந்த தொழிலை நாம் வாழ்க்கை முறையாக பின்பற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வேலூரில் தை அமாவாசையொட்டி நடந்தது
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
தை அமாவாசை யொட்டி இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.
இந்தாண்டு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர். பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.
தை அமாவாசையொட்டி திருஷ்டி பூசணிக்காய் பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்க ரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் மாநில மத்தியக்குழுவின் கூட்டம் நடந்தது
- விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து வழங்குவது என தீர்மானம்
வேலூர்:
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் மாநில மத்தியக்குழுவின் கூட்டம் தமிழக அரசின் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் பூஜாரி தலைமையில் சென்னையில் நடந்தது.
முன்னதாக சிறைத்துறை துணைத்தலைவர் மற்றும் சங்க செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார்.
சங்கத்தின் இயக்குநரும் சிறைத்துறை துணைத்தலைவருமான ஆர்.கனகராஜ் செயல்பாடுகள் குறித்து பேசினார். பொருளாளார் வழக்கறிஞர் எஸ்.ஞானேஸ்வரன் நிதிநிலை அறிக்கையினை சமர்பித்து பேசினார்.
சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் மத்திய குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஜி.பி.செந்தாமரைக்கண்ணன், மகளிர் சிறை கண்காணிப்பாளர் நீலமணி உள்ளிட்டோர் பேசினர்.
சரக சிறைத்துறை துணைத்தலைவர்கள் கே.ஜெயபாரதி, (திருச்சி), சண்முகசுந்தரம், (கோவை), பழனி (மதுரை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தற்போது வரை சுமார் 300 முன்னாள் கைதிகளிடமிருந்து உதவி கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றினை பரிசீலனை செய்து உடனடியாக முன்னாள் சிறைவாசிகள் சங்கத்தின் சார்பில் உதவிகள் வழங்க திட்டமிடுவது மற்றும் வேலூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள விண்ணப்பங்களையும் பெற்று ஒருங்கிணைத்து வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- மாடு விடும் விழாவில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் அருகே உள்ள புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 24) ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 17-ந் தேதி லத்தேரி அருகே உள்ள பனமடங்கி கிராமத்தில் மாடு விடும் விழா நடந்தது. இதில் வேடிக்கை பார்ப்பதற்காக வெங்கடேசன் சென்றார்.
அப்போது வேகமாக ஓடி வந்த காளை ஒன்று வெங்கடேசனை முட்டி தூக்கி வீசியது.
இதில் அவரது தலை தொண்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனமடங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்திருக்க வேண்டும்
- வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும்
வேலூர்:
வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு, அதனுடன் 18 வகை தொழிலாளர் நலவாரி யங்கள் செயல்படுகிறது.
இதில் உறுப்பினராக 18 முதல் 60 வயது வரை உள்ள தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் நலத்திட்டத்தை பெறுகின்றனர்.
இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
மேலும், கொத்தனார், பற்றவைப்பவர்கள், மின்சார வேலை, குழாய் பொருத்துனர், மரவேலை மற்றும் கம்பி வளைப்பவர்கள் உட்பட பல தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் மூலம் 3 மாத திறன் பயிற்சி, ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
3 மாத கால பயிற்சியில் முதல் மாதம் தையூரில் அமையவுள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், 2-வது மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் நீவலூரில் உள்ள எல் அண்ட் டி., கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சி பெறவுள்ளவர்கள் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அல்லது ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும்.
18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம் பயிற்சி பெறுவோருக்கு எல் அண்ட் டி., நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேலும்
ஒரு வார பயிற்சி, தையூரில் கட்டுமான கழகம் வழங்கும், 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பயிற்சி பெறலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும்.
இந்த தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். எனவே தகுதியானவர்கள் அம்மன் நகர், மேல்மொணவூர், அப்துல்லாபுரம் வேலூர் 632 010 என்ற முகவரியில் உள்ள வேலூர், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் படிவம் பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 0416-2292212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பள்ளியின் பெயர் பலகை மீது நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியிருந்தனர்.
- போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூரை அடுத்த அலமேலு மங்காபுரத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பள்ளியின் பெயர் பலகை மீது நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 2-ம் பகுதி செயலாளர் ரீகன் தலைமையில் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், பள்ளி சுவர் மீது சினிமா விளம்பர போஸ்டர் ஒட்டக்கூடாது. ஆனால் இங்கு பள்ளியின் பெயர் பலகை மீது 2 போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் திங்கட்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர். இந்த சம்பவம்அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
- கடைகள் உள்வாடைகை விடப்பட்டுள்ளதா என ஆய்வு
வேலூர்:
வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் ஏராளமானோர் பாக்கி வைத்துள்ளனர்.
தற்போது மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வாடகை வசூல் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
நீண்ட நாட்களாக வரிபாக்கியுள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சி நான்காவது மண்டல இளநிலை பொறியாளர் சீனிவாசன் உதவி வருவாய் அலுவலர் தனசேகர் மற்றும் உதவியாளர்கள் இளஞ்சேரன் விஜயகுமார் ஆகியோர் இன்று காலை வேலூர் திருப்பதி தேவஸ்தானம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 12 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்வாடைகை விடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். கடைகள் உள் வாடகைக்கு விடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த கடைகள் பறிமுதல் செய்யப்படும்.
நீண்ட நாட்கள் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
பாக்கம் கைலாயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அணைக்கட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவில் உள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சேர்பாடி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் 175 மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடியது
- கிணற்றில் விழுந்த காளை 2 மணி நேரம் போராடி மீட்பு
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த, சேர்பாடி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு அரசின் நிலையான அனுமதி பெற்று எருது விடும் போட்டியானது நடைபெற்ற வருகின்றது. இப்போட்டியில் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ் மற்றும் விழா குழுவினர் ரவி, லட்சுமண் ஆகியோரின் தலைமையில் விழா நடைப்பெற்றது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போட்டிக்காக காளைகள் கொண்டு வந்திருந்தனர்.
எருது விடும் போட்டியின் போது காளைகள் முட்டியதால் 25-க்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர்.
போட்டியில் ஓடிய காளை ஒன்று வழிமாறி நிர்க்காமல் ஓடிக்கொண்டே இருந்ததால் எதிரே இருந்த விவசாய கிணற்றில் விழுந்தது. தகவலறிந்த ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினர் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றிலிருந்து காளையை கயிறு கட்டி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி பத்திரமாக மீட்டனர்.
போட்டியின் இறுதியில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை ஓடி கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் எருது விடும் போட்டியின் போது ஒடுகத்தூர் தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தின் மூலம் ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா, அணைக்கட்டு துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக வரதலம்பட்டு, கரடிகுடி, டி.சி.குப்பம், ஓங்கப்பாடி, மற்றும் தேவிசெட்டிகுப்பம், பிச்சாநத்தம், பூஞ்சோலை, மகமதுபுரம், குருவராஜ பாளையம், சின்ன பள்ளி குப்பம், ஓ.ராஜாபாளை யம்,வேப்பங்குப்பம், சேர்பாடி, ஒதியத்தூர், கீழ்கிருஷ்ணாபுரம், உள்ளி, வளத்தூர், கூட நகரம், மேலாளத்தூர் ஆகிய பகுதிகளிலும், பிராமணமங்கலம், மற்றும் ஒடுகத்தூர், மேல்அரசம்பட்டு, ஆசனம்பட்டு, தென்புதூர், கீழ்கொத்தூர், அகர ராஜபாளையம், போடி பேட்டை, அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை பள்ளிகொண்டா செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் எச்சரிக்கை
- காவல்துறையினரின் அறிவுரைகளை கடைபிடிக்கப்படுவதில்லை என புகார்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
வேலுர் மாவட்டத்தில் எருதுவிடும் திருவிழா நடத்துவது தொடர்பாக அரசினால் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் நிபந்தனை களை விழாக்குழுவினர் சரியான முறையில் கடைபிடிக்காமல் அலட்சியத்துடன் விழா நடத்தி வருவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் அரசால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மீறப்படுவது தெரியவருகிறது.
அரசின் விதிகளின்படி இரட்டை தடுப்பான்கள் அமைத்திருக்க வேண்டும். மாடுகள் ஓடும் இடத்தில் அதிபட்சமாக குறிப்பிடப்பட்ட 25 தன்னார்வ தொண்டர்களுக்கு அதிகமாகவும், எராளமான பொது மக்களும், காளை உரிமையாளர்களும் கூடி மாடுகள் எளிதான ஓடுவதற்கு தடையாக உள்ளனர்.
விழா ஆரம்பம் மற்றும் முடிக்கும் நேரங்கள் நிபந்தனைகளில் உள்ளவாறு கடைபிடிக்கப்பது இல்லை. வருவாய் மற்றும் காவல்துறையினரின் அறிவுரைகளை கடைபிடிக்கப்படுவதில்லை. விழாக்குழுவினர் அதை கண்டுகொள்ளுவதும் இல்லை.
அவ்வப்போது காளைகள் பொதுமக்கள் பகுதியில் எதிர்பாராத விதமாக புகுந்து பொது மக்களுக்கு காயத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது.
அரசு வழங்கி உள்ள உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து விழாக்குழுவினர் அந்தந்த கிராமங்களில் மிகவும் பாதுகாப்பான முறையிலும், பொதுமக்கள் மற்றும் காளைகளுக்கு பாதுகாப்பான முறையில் விழாக்கள் நடத்திக் கொள்ள சம்மந்தப்பட்ட விழாக்குழுவினருக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் எருதுவிடும் விழா தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- 6 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
- ஏ.டி.எம். அமைக்க வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் 9.25 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.53.13 கோடி செலவில் கட்டப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
புதிய பஸ் நிலைய வளாகத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன.இதில் 68 கடைகள் மட்டுமே வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த ப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு கடை எண் 16 ஒதுக்கப்பட்டுள்ளது. கடையின் குறைந்தபட்ச அளவு 100 சதுர அடி. 540 சதுரடி, 800 சதுரடி, 1,200 சதுரடி மற்றும் 1,600 சதுரடி கொண்ட பெரிய கடைகளும் உள்ளன.
வேலூர் மாநகராட்சி டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால், புதிய பஸ் நிலைய கடைகள் மூடப்பட்டு உள்ளன.
இதன் விளைவாக, புதிய பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகள் அமர்ந்து தண்ணீர் குளிர்பானம் பிஸ்கட் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் விற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது.
பெரும்பாலும் நீண்ட தூரப் பயணிகள், வளாகத்தில் வியாபாரிகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.
பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்பட பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்க முடியவில்லை.
இதனால் அதிக அளவு விலை கொடுத்து பொருட்களை வாங்கி அவதிப்படுகின்றனர்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடைகள் வெகுதூரத்தில் இருப்பதால் எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, பஸ் நிலையத்தில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து பொருட்கள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சில வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதையும் தவிர்க்க முடியவில்லை என பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:-
கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கான அடிப்படை விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விண்ணப்ப தாரர்களிடம் இருந்து டெண்டர் கோரும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், அவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும்.
புதிய பஸ் நிலையத்தில் தரை தளத்தில் 1,800 சதுர அடி மற்றும் 900 சதுர அடி அளவில் 2 உணவகங்களும் வருகின்றன. தவிர, ஆவின் விற்பனை நிலையங்களும் இருக்கும்.
ஒரு மருந்தகம், காலணிகள், ஆடைகள் மற்றும் ஆடம்பரமான பொருட்களின் விற்பனை நிலையங்கள் மற்றும் ஒரு பேக்கரி அமைய உள்ளது. புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஏ.டி.எம்.களை அமைக்க வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தபடுகிறது.
இந்த புதிய கடைகளில் பெரும்பாலான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றனர்.






