search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் அவதி
    X

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் அவதி

    • 6 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
    • ஏ.டி.எம். அமைக்க வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் 9.25 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.53.13 கோடி செலவில் கட்டப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

    புதிய பஸ் நிலைய வளாகத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன.இதில் 68 கடைகள் மட்டுமே வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த ப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு கடை எண் 16 ஒதுக்கப்பட்டுள்ளது. கடையின் குறைந்தபட்ச அளவு 100 சதுர அடி. 540 சதுரடி, 800 சதுரடி, 1,200 சதுரடி மற்றும் 1,600 சதுரடி கொண்ட பெரிய கடைகளும் உள்ளன.

    வேலூர் மாநகராட்சி டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால், புதிய பஸ் நிலைய கடைகள் மூடப்பட்டு உள்ளன.

    இதன் விளைவாக, புதிய பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகள் அமர்ந்து தண்ணீர் குளிர்பானம் பிஸ்கட் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் விற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது.

    பெரும்பாலும் நீண்ட தூரப் பயணிகள், வளாகத்தில் வியாபாரிகள் விற்கும் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.

    பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பெண்கள் மற்றும் முதியோர்கள் உட்பட பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்க முடியவில்லை.

    இதனால் அதிக அளவு விலை கொடுத்து பொருட்களை வாங்கி அவதிப்படுகின்றனர்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடைகள் வெகுதூரத்தில் இருப்பதால் எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, பஸ் நிலையத்தில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து பொருட்கள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

    சில வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதையும் தவிர்க்க முடியவில்லை என பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:-

    கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கான அடிப்படை விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    விண்ணப்ப தாரர்களிடம் இருந்து டெண்டர் கோரும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர், அவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும்.

    புதிய பஸ் நிலையத்தில் தரை தளத்தில் 1,800 சதுர அடி மற்றும் 900 சதுர அடி அளவில் 2 உணவகங்களும் வருகின்றன. தவிர, ஆவின் விற்பனை நிலையங்களும் இருக்கும்.

    ஒரு மருந்தகம், காலணிகள், ஆடைகள் மற்றும் ஆடம்பரமான பொருட்களின் விற்பனை நிலையங்கள் மற்றும் ஒரு பேக்கரி அமைய உள்ளது. புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஏ.டி.எம்.களை அமைக்க வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தபடுகிறது.

    இந்த புதிய கடைகளில் பெரும்பாலான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றனர்.

    Next Story
    ×