என் மலர்tooltip icon

    வேலூர்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் வேலூர் மாநகர பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி, காலை உணவு தயாரிப்பு கூடங்களில் ஆய்வு செய்தார்.
    • 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அந்த திட்டங்களின் நிலவரம் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

    வேலூர்:

    கள ஆய்வில் முதல்வர் என்ற திட்டத்தில் ஆய்வு பணிகளை தொடங்கியுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலையில் வேலூர் மாநகர பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி, காலை உணவு தயாரிப்பு கூடங்களில் ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட த்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். இதில் கலெக்டர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்) முருகேஷ் (திருவண்ணாமலை) பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை) அமர் குஷ்வாஹா (திருப்பத்தூர்) மற்றும் அரசு துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்களுடன் 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அந்த திட்டங்களின் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.

    கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு சென்றார்.

    வேலூரில் கள ஆய்வில் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து 2 நாள் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்து இன்று மாலை பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சர் வருகையொட்டி வேலூர் மாநகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மேளதாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் 2 நாட்களாக வேலூரில் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

    இன்று காலையில் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் ஓட்டலில் தங்கி இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் உள்ளிட்ட நான்கு மாவட்ட திட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்திற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது கிரீன் சர்க்கிள் அருகே வேலூர் மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்எல்ஏ தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க பொய்கால் குதிரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் முதல்அமைச்சரை வரவேற்றனர்.

    வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, டாக்டர் வி.எஸ். விஜய், 21-வது வார்டு செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ், 24-வது வார்டு கவுன்சிலர் சுதாகர், வட்ட செயலாளர் தேவமணி, சாந்தி அம்பேத்கர், பாலு, சீனு, பகுதி செயலாளர்கள் தயால் ராஜ், சுந்தர விஜி, பாலமுரளி கிருஷ்ணா, முனவர் பாஷா, ஐயப்பன், தங்கதுரை, கணேஷ் சங்கர், சக்தி, சசிகுமார், முருகப்பெருமாள், பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், கதிரேசன், அன்பு நிதி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்
    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட கலெக்டர்களுடன் பல்வேறு திட்ட பணிகள் குறித்து இன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார்.

    இநனையொட்டி கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அரசு அலுவலர்கள் தவிர மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    முதல்அமைச்சர் வருகையை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டு இருந்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக காத்திருந்தனர்.

    கைக்குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் வயதான முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

    • வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில் கிடைத்தது
    • ஏராளமானோர் தரிசித்து சென்றனர்

    அணைகட்டு:

    ஒடுகத்தூரை சேர்ந்த கலைவாணி இவருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்ட அடிக்கல் நாட்ட ஜேசிபி எந்திரத்தை வைத்து பள்ளம் தோண்டிகொண்டு இருந்தார்.

    அப்போது 6 அடி பள்ளம் தோண்டும் போது திடீரென பொக்லைன் இயந்திரத்தில் பச்சை நிற சிலை ஒன்று மாட்டிகொண்டது.

    பின்பு இயந்திரத்தை நிறுத்தி விட்டு கையால் தோண்டியபோது சுமார் 3 அடி உயரம் சுமார் 40 கிலோ எடை கொண்ட நடராஜர் சிலை தென்பட்டது.

    உடனடியாக சிலையை தண்ணீர் ஊற்றி துடைத்து விட்டு அதற்க்கு பால் அபிஷேகம் செய்து பூமாலை வைத்து பூஜை செய்து வணங்கினர்.

    பின்னர் சிலையை அணைக்கட்டு வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிலையாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.

    வீடு கட்ட தோண்டும் போது சிலை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையை பரவியதால் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து சிலையை பார்த்து தரிசித்து சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேலூரில் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
    • பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க செய்யப்பட்ட சிற்றுண்டியைச் சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார்.

    வேலூர்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார்.

    தமிழ்நாட்டில் முதன் முறையாக வேலூரில் கள ஆய்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட ஆய்வு பணியை தொடங்கி உள்ளார். இதற்காக ரெயில் மூலம் சென்னையில் இருந்து நேற்று காட்பாடி சென்றார்.

    காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 36 மாவட்டங்களில் 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு ரூ.784 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கள ஆய்வுத் திட்டத்தின் முதல் ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

    இதில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

    இரவு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கினார். இன்று காலையிலேயே மு.க. ஸ்டாலின் தனது வாகனத்தில் சென்று ஆய்வு பணியை தொடங்கினார்.

    முதலில் வேலூர், சத்துவாச்சாரி, பாரதி நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மையத்தில் மருத்துவம் சார்ந்த தனிநபர் கண்காணிப்பு, மனநலம் சார்ந்த ஆலோசனை போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் ஏழை எளிய மக்களுடைய குழந்தைகளின் கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், வருகையை அதிகரிக்கவும், வேலைக்கு செல்லும் தாய் மார்களின் பணிச்சுமையை குறைக்கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.9.2022 அன்று தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கிட வேலூர் மாநகராட்சியில் முதற்கட்டமாக 48 தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளியில் பயிலும் 3249 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 34 அரசுப் பள்ளிகளில் பயிலும் 3701 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி, ரவை, கோதுமை ரவை, சேமியா, உள்ளூரில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளுரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள்.

    ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்ககூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று வேலூர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையற் கூடத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கு உள்ள ஒவ்வொரு சமையல் அறைகளுக்கும், உணவு ஏற்றும் பகுதிக்கும் சென்று பார்வையிட்டார். உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் உணவினை சுகாதாரமான முறையில் தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    பின்னர், சத்துவாச்சாரி, காந்தி நகரில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு நேரில் சென்று, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, அலமேலு மங்காபுரத்தில் 132 மாணவ, மாணவியர்கள் பயிலும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு உணவு பறிமாறினார்.

    இந்த ஆய்வின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமா வகைகளும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிச்சடி வகைகளும், வெள்ளிக்கிழமை மட்டும் இனிப்பு கேசரியும், புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய பொங்கல் வகைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும், உணவினை காலை 6.30 மணிக்குள் தயாரிக்க வேண்டும். காலை 7.30 மணிக்கு பள்ளிகளில் உணவு பரிமாறப்பட வேண்டும். மாணவர்களை காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் உணவு பரிமாற வேண்டும். உணவு உண்ணும் மாணவர்களின் பதிவேடு சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். சத்தான மற்றும் தரமான உணவினை மாணவர்களுக்கு வழங்கிட அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    காலை உணவு நன்றாக இருக்கிறதா என குழந்தைகளிடம் கேட்டார். மேலும் பள்ளியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என அங்கிருந்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு வந்ததை அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்களது அருகில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார். மு.க.ஸ்டாலினை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரிடம் நலம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

    அப்போது பொதுமக்கள் சிலர் அவரிடம் மனுக்கள் அளித்தனர். இந்த ஆய்வின் போது, வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு சென்றார்.
    • கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

    முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார்.

    தமிழ் நாட்டில் முதன் முறையாக வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார்.

    இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவருக்கு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன், நந்தகுமார் எம்.எல்.ஏ. கதிர் ஆனந்த் எம்.பி. மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம். எல். ஏ, மேயர் சுஜாதா ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 6 மணி அளவில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு கலைஞர் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும், ஆராய்ச்சி கட்டிடத்தையும் திறந்து வைத்து உரையாற்றினார்.

    • தொடரும் சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி
    • வனத்துறையினர் எச்சரிக்கை

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரகம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இதனுடைய எல்லைப் பகுதி ஆந்திர மாநிலம் எல்லை வரை விரிந்து உள்ளது, குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன.

    சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

    இந்த சிறுத்தைகள் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி, அனுப்பு, துருகம், மூலகாங்குப்பம், தேவரிஷிகுப்பம், மயிலாடும்மலை, மேல்மாயில், பரதராமி அடுத்த கொட்டாளம் வனப்பகுதி, டி.பி.பாளையம், கொத்தூர், தனகொண்டபல்லி, சைனகுண்டா, மோர்தானா, கொட்டாரமடுகு உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகள் ஜோடி, ஜோடிகளாக சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

    குடியாத்தம் வனப் பகுதியில் ஆறு ஜோடி பெரிய சிறுத்தைகளும், குட்டிகளும் என 25 ற்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டிய படி இரவு நேரங்களில் உலா வருவதாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கிராமங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

    குடியாத்தம் சேம்பள்ளி ஊராட்சி உப்பிரப்பள்ளி பகுதியில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி விவசாயி இவருக்கு சொந்தமான நிலம் உப்பிரப்பள்ளி- தட்டப்பாறை கூட்ரோடு ஊத்துமலை அருகே உள்ளது இந்த நிலத்தில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை மூன்று நாட்களுக்கு முன்பு சிறுத்தைகள் அடித்துக் கொன்றது. இதனால் அப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் அச்சத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் சேம்பள்ளி ஊராட்சி கொட்டார மடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாத்திரி இவருக்கு சொந்தமான நிலம் ஜிட்டப்பள்ளி செக் டேம் அருகே உள்ளது அந்த நிலத்தை ஒட்டியபடி மோர்தானா காப்புக் காடுகள் உள்ளது.

    நேற்று காலையில் தனது பசு மாட்டை மேச்சலுக்கு விட்டுள்ளார் மாலையில் பால் கறப்பதற்காக தனது நிலத்தில் உள்ள பசுமாட்டை தேடிப் சென்ற போது பசுமாட்டை சிறுத்தைகள் கடித்து குதறி கொன்று இருப்பது தெரியவந்தது.

    சிறுத்தைகள் பசு மாட்டை கொன்ற சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் நேதாஜி உள்ளிட்ட வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட வருவாய் துறையினர் பசு மாட்டை சிறுத்தை கொன்ற பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கொட்டாரமடுகு கிராமத்தை ஒட்டியபடி வனப்பகுதி உள்ளதால் மாலை வேலைகளிலே அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும்

    இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகர்ப்புறத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு செல்லும் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

    • டிரோன்கள் பறக்க தடை
    • முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை யையொட்டி வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரி வித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன் கிழமை) சென்னையில் இருந்து ரெயிலில் காட்பாடிக்கு வருகை தருகிறார்.

    அவர் இன்று மற்றும் நாளை (வியாழக்கிழமை) காட்பாடி, வேலூர் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    போக்குவரத்து மாற்றம்

    இதையொட்டி வேலூர், காட்பாடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்தூரில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சேர்க்காடு மற்றும் இ.பி. கூட் ரோடு வழியாக வேலூருக்கு செல்ல வேண்டும்.

    குடியாத்தம் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வடுகன்தாங்கல், விரிஞ்சிபுரம் வழியாக வேலூர் பைபாஸ் செல்ல வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வரும் கனரகவாகனங்கள் சாத்துமதுரை, தங்ககோவில் வழியாக பெங்களுரூ பைபாஸ் சாலைக்கு செல்ல வேண்டும்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதிக்குள் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான் ஊர்திகள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லாத வான் ஊர்திகளை பறக்கவி டும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொதுமக்கள் காவல்து றையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
    • கோரிக்கை மனு அனுப்பப்பட்டது

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பல் வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வேலூர் மாவட்ட குழு செயலாளர் ஜி.லதா கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதன்விவரம் வருமாறு:-

    வேலூர் மாநகரம் போக் குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண காட்பாடி முதல் பாகாயம் வரை, காட்பாடி முதல் தொரப்பாடி வரை, சத்துவாச்சாரி.சி.எம்.சி. வழியாக மாங்காய் மண்டி வரை மேம்பாலங்கள் அமைத்திட வேண் டும். காட்பாடி பழைய பாலாறு மேம்பாலம் இணைக்கும் வழியை சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊசூர் அருகே உள்ள 90 ஏக்கர் முந்திரி தோப்பு நிலப்பகுதியில் வேலூர் மாவட்டத் துக்கான சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை- பெங்களூரு இடையில் வேலூர் மையப்ப குதியில் சீன நிறுவன ஆய்வு அறிக்கையின் அடிப்படை யில் வேலூர் பகுதியில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும்.

    வேலூர் புதிய பஸ் நிலை யத்தில் டவுன் பஸ்கள் நிற்க நிழற்குடை இல்லை. அங்கு அரசு துறைகளுக்கு ஒதுக்கப் பட்ட அறைகளில் கதவுகள் இல்லை. கடைகள் ஏலம் விடுவது 6 முறைகளுக்கு மேல் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும்.

    அணைக்கட்டு தொகுதியில் மலர்கள் அதிகம் உற்பத்தி ஆவதால் சென்ட் தொழிற்சாலையும் குடியாத்தம், காட் பாடி. கே.வி.குப்பம் பகுதி களை மையப்படுத்தி குடியாத் தம் பகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். பாலாற்றில் நீர்வ ரத்து உள்ளதால் தடுப்பணை அமைக்க வேண்டும். மேல் அரசம்பட்டு அணைக்கட்டு திட்டத்தையும், பேரணாம்பட்டு பத்திரப்பல்லி அணைக் கட்டுதிட்டத்தையும் விரைந்து முடிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலூர் மாவட்டத்தில் மட்டும் 7 ஒன்றியங்களில் 55 பள்ளிகளில் 114 புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
    • புதிய பள்ளி கட்டிடங்களை மாணவ- மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    வேலூர்:

    காட்பாடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நான் இங்கு விழா பேரூரையாற்ற வரவில்லை. உங்களுக்கு நன்றி கூற வந்திருக்கிறேன். இந்த பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த பள்ளிக்குள் நுழைந்ததும் அமைச்சர் துரைமுருகன் அவர் இங்கு படித்ததாக கூறினார். அவர் படித்த பள்ளியில் இது போன்ற திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.

    பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை சார்பில் புதிய வகுப்பறைகள் கட்டவும் ரூ. 2400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி கட்டிடங்கள் பழுதான வகுப்பறைகள் சீரமைக்க இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இன்று மட்டும் ரூ.784 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் மட்டும் 7 ஒன்றியங்களில் 55 பள்ளிகளில் 114 புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்க நாட்டப்பட்டுள்ளது.

    நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தவறாமல் ஒன்றை குறிப்பிட்டு வருகிறேன். இந்த அரசை பொறுத்தவரை கல்வி மருத்துவம் இரண்டு கண்களாக பாவித்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

    நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தொகுதி வாரியாக திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

    அவ்வாறு பள்ளிகளில் ஆய்வுக்கு சென்றபோது காலை உணவு கூட சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறோம் என உருக்கமாக பள்ளி மாணவ- மாணவிகள் என்னிடம் கூறினார்கள். இதனை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதனை தொடர்ந்து காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி செப்டம்பர் 15-ந்தேதி முதல் அதனை பல பகுதிகளில் நிறைவேற்றி வருகிறோம். விரைவில் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். சில பள்ளிகளில் மரத்தடியில் மாணவ-மாணவிகள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. உடனடியாக அதை சீர் செய்யும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதிய பள்ளி கட்டிடங்களை மாணவ- மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காந்தி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் கார்த்திகேயன் நந்தகுமார் அமுலு விஜயன், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காட்பாடி சாலையில் இருபுறம் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
    • பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    வேலூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று வேலூருக்கு வருகை தந்தார். அவர் சென்னையில் இருந்து ரெயிலில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன் வந்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேலூர் மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ, கதிர் ஆனந்த் எம்.பி. கார்த்திகேயன் எம்.எல். ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலூர் ஒன்றிய குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், கவுன்சிலர் அன்பு, சுதாகர் 21-வது வார்டு செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காட்பாடி சாலையில் இருபுறம் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    வரும் வழியெல்லாம் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் திரண்டு இருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மேளதாளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விழா நடைபெறும் பள்ளி போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. மெயின் ரோடு மற்றும் பள்ளி நுழைவுவாயில் என 2 அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மெயின் ரோட்டில் இருந்து பள்ளி வரை இருபுறமும் வாழை மரங்கள் மற்றும் பூக்களால் அலங்கார தோரணங்கள் செய்யப்பட்டிருந்தன.

    பள்ளிக்கு வரும் அனைவரையும் தீவிர சோதனைக்கு பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கேமராக்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் கீழ் 36 மாவட்டங்களில் 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.784 கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 55 ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 114 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.15 கோடியே 96 லட்சத்தில் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

    காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மேம்பாட்டு திட்டத்தில் அரசு பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 670 அரசு பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு உள்ளே அனுமதி வழங்கப்படவில்லை.

    • நாளை ரெயில் மூலம் வருகிறார்
    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கேமராக்கள் பொருத்தம்

    வேலூர்:

    வேலூரில் கள ஆய்வில் முதல்அமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் ஆய்வு செய்கிறார்.

    இதற்காக நாளை பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து சீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காட்பாடிக்கு வருகிறார். அவருக்கு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்கிருந்து காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    அங்கு தமிழகத்தில் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தினை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 55 பள்ளிகளில் ரூ.15. 96 கோடியில் 114 புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    விழா முடிந்ததும் தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடுகிறார்.

    இதனைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் திடீரென கள ஆய்வு பணியில் ஈடுபடுகிறார். அவர் எந்த இடத்தில் ஆய்வு செய்ய உள்ளார் என்பது தெரிவி க்கப்படவில்லை.

    மாலை 5 மணிக்கு வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்.அங்கு கலைஞர் கருணாநிதி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகிறார். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, காந்தி, வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    விழா முடிந்ததும் மு.க ஸ்டாலின் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிறார். அங்கு காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் வடக்கு மண்டல ஐ.ஜி டாக்டர் கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்) டாக்டர் கார்த்திகேயன் (திருவண்ணாமலை) டாக்டர் பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்) டாக்டர் தீபா சத்யன் (ராணிப்பேட்டை) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    நாளை இரவு மீண்டும் தனியார் ஓட்டலில் சென்று தங்குகிறார்.

    2-வது நாள் அதாவது 2-ந் தேதி காலை வேலூர் கலெக்டர் அலுவலக த்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டருடன் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறும் மற்றும் நடைபெற உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ஆய்வு கூட்டம் முடிந்ததும் மீண்டும் ரெயில் மூலம் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேலூர் கலெக்டர் அலுவலக பகுதியில் தூய்மைப்படுத்தப்பட்டு தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டன.

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் மின்விளக்குகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    முதல்அமைச்சர் வருகையையொட்டி வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலூர் காட்பாடி உள்ளிட்ட மாநகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ×