என் மலர்tooltip icon

    வேலூர்

    • கதிர்ஆனந்த் எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
    • அறிக்கை மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது

    வேலூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கோ, காவிரி படுகையில் வேறெந்த திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கோ கர்நாடக அரசுக்கு தன்னிச்சையாக எவ்வித அதிகாரமுமில்லை என வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் கேள்விக்கு மத்திய நீர்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.

    வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் நாடாளுமன்றத்தில் விதி எண் 377-இன் கீழ் ''தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

    இது தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். பெங்களூரு மாநகரின் குடிநீர் பயன்பாட்டுக்காக காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில் பெங்களூருவில் இருந்து வெகு தொலைவில் உள்ள மேகதாதுவில் பெரிய நீர்த்தேக்கம் கட்டப்படுவதாகக் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது.

    பெங்களூரு மாநகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள நிலையில், 4.75 டிஎம்சி குடிநீருக்காக மேகதாதுவில் 67.16 டிஎம்சி கொள்ளளவு நீர்த்தேக்கம் தேவை என்பது எவ்வகையிலும் நியாயமல்ல.

    கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, இதை மத்திய பாஜக அரசு தடுக்க வில்லை. தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதிக்கும் மேகதாது அணை பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மேகதாதுவில் எப்போதும் அணை கட்ட முயற்சி எடுக்கக் கூடாது என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தியிருந்தார்.

    இது தொடர்பாக மத்திய நீர்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அனுப்பியுள்ள கடிதத்தில், ''கர்நாடக மாநில அரசு 2019-ம் ஆண்டு ஜனவரியில் மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்த மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை கருத்துகள் பெறவேண்டி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பல்வேறு கூட்டங்களில் மேகதாது அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 18-வது கூட்டத்தில் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை மேகதாது திட்டம், காவிரி படுகையில் உள்ள வேறு எந்தத் திட்டத்திலும் விவாதித்து முடிவு எடுப்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒத்தி வைக்க வேண்டும் என்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதனை ஏற்று பிப்ரவரி 10-ந்தேதி நடைபெற்ற 19-வது கூட்டத்திலும் இந்த விவகாரம் மீதான விவாதம் தவிர்க்கப்பட்டது'' என தெரிவித்துள்ளார்.

    • ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நடந்தது
    • காட்பாடியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்ததை கண்டித்து காட்பாடி ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் சித்தூர் பஸ் நிலையத்தில் இன்று சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு காட்பாடி ஒ ன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். காட்பாடி வடக்கு ஒன்றிய தலைவர் கணேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, பிரசன்ன குமார், 1-வது மண்டல தலைவர் பால குமார், 2-வது மண்டல தலைவர் ஜான் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன் மாநில பொதுச் செயலாளர் எஸ் சி எஸ் டி பிரிவு சித்தர் ரஞ்சன் ஆகியோர் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    சிறு பான்மை பிரிவு மாவ ட்ட தலைவர் வாகித் பாஷா, ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவர் நோபல் லிவிங்ஸ்டன், கிருஷ்ணகுமார், கதிர்வேலு, கப்பல் மணி, கணேஷ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் எத்திராஜ் தலைமையில் காங்கிரசார் வேலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்தில் மாவட்ட இளைஞரணி முன்னாள் தலைவர் தினகரன், மனித உரிமைகள் துறை தலைவர் ஜேம்ஸ் ராஜேந்திரன், குடியாத்தம் முன்னாள் நகர மன்ற தலைவர் தேவராஜ், வேலூர் மாநகர பொருளாளர் ரங்கநாதன், மாவட்ட விவசாய அணி தலைவர் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாரை வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் 30 பேரை கைது செய்து தனியாக திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    • அரியூர் ரெயில்வே மேம்பாலத்தில் விபத்து
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் திருலோக சந்தர். இவரது மனைவி அனிதா (வயது 41). இவரது பிள்ளைகள் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    அனிதா தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவது வழக்கம்.

    வழக்கம் போல இன்று காலை குழந்தைகளை தனது பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் அரியூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அரியூர் ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த லாரி அனிதா ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அனிதாவின் தலை மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவரது தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் தேடி வருகின்றனர்.

    • ஏப்ரல் 1-ந்தேதி முதல் முகக்கவசம் கட்டாயம்
    • கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதி கரித்து வரும் நிலையில், சினிமா தியேட்டர்கள், அரங்குகள், மால்களில் நேற்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்க ப்பட்டுள்ளது.

    இந்தப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த நிலை யில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரங்களைத் தொட்டுள்ளது.

    தமிழகத்திலும் 150 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து, கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்து வமனைகளுக்கு வரும் நோயாளிகள் மட்டுமின்றி பார்வையா ளர்களும், நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, தொற்று பரவும் அபாயம் உள்ள திரையரங்குகள்,மால்கள், திருமண மண்டபங்கள், கலையரங்குகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் நேற்று முதல் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து வேலூர் மாநகரிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் திங்கள்கிழமை முதல் முகக்கவசம் அணிய வேண்டும் என திரையரங்க ஊழியர்கள் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஜெயிலில் அடைப்பு
    • கலெக்டர் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சாத்கர், கோட்டை காலனியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் சுந்தரராஜ் (வயது 47). அதே பகுதி சேர்ந்தவர் பசுபதி.

    இவர்கள் 2 பேரும் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்டதால் போலீசார் இருவரையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    அவரது பரிந்துரையின் பேரில் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    • மேலாளர் கைது
    • போலீசார் திடீர் சோதனை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூரில் உள்ள லாட்ஜிகளில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அரியூர் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் போலீசார் அரியூரில் உள்ள லாட்ஜ்களில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அரியூரில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விபச்சாரம் நடந்த லாட்ஜ் மேலாளர் திருவண்ணாமலை மாவட்டம், காட்டுக்கானூர் பகுதியை சேர்ந்த சபாபதி (வயது 34) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள லாட்ஜை லீசுக்கு எடுத்து நடத்திய நாராயணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மாடு முட்டி 32 பேர் காயம்
    • 250 காளைகள் பங்கேற்று ஓடியது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா யாதவர் வீதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நேற்று நடந்தது.

    விழாவிற்கு அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், பழனி முத்து மற்றும் விழா குழுவினர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் கலந்து கொள்ள ஆந்திர மாநிலம் நெல்லூர்பேட்டை மற்றும் ஜோலார்பேட்டை, பர்கூர், திருப்பத்தூர், வாணியம் பாடி, பரதராமி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 250 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலில் இருந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடின.

    அப்போது பாதைகளில் நின்றிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர். அவர் களில் 4 பேர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக் கப்பட்டனர். இளைஞர்கள் விசிலடித்து மாட்டின் மீது கையை போட்டு உற்சாகப்படுத்தி ஓட வைத்தனர். முதல் பரிசாக ரூ.77 ஆயிரத்து 777, இரண்டாம் பரிசாக ரூ.55 ஆயிரத்து 555 உள்ளிட்ட 51 பரிசுகள் வழங்கப்பட்டன.

    பார்வையாளர்கள் அதிக அளவில் கூடியதால் காளைகள் ஓடுவதற்கு வழிதெரியா மல் திருவிழா கடைகளுக்குள்ளும், பிரியாணி இருந்த குண்டாக்கள் மீதும் முட்டி மோதியது.

    பள்ளிகொண்டாபோலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் வெங்கடேசன் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் வாலிபர் ஒருவரை ஒரு கும்பல் தூக்கிச் சென்று சரமாரியாக தாக்கினர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    கே.வி.குப்பம் தாலுகா கீழ் முட்டுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சரண்யா (வயது 17), ரூஷா டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் குமார் என்பவரின் மகள் ஷாலினி (17).

    இருவரும் கே.வி.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். நேற்று கடைசி தேர்வை எழுதிவிட்டு மோட்டார்சைக்கிளில் குடியாத்தத்தில் பொருட்களை வாங்க வந்தனர். சரண்யா மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

    குடியாத்தம் காட்பாடி ரோடு அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி அருகே சென்று கொண்டு இருக்கும் போது பின்னால் வந்த லாரி இவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மாணவிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    • உறவினர்கள் அதிர்ச்சி
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடி யாத்தம் பிச்சனூர் வாரியார் நகரை சேர்ந்தவர் குமாரவேல், இறைச்சிக்கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் நரேந்திரன் (வயது 23). இவர் தந்தைக்கு உதவியாக ஓட்டலை கவனித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நரேந்திரன் நேற்று அதிகாலை நண்பர்களுக்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் அனுப்பி விட்டு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சமூக வலைதளங்களில் தகவலை பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக நரேந்திரனின் வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டில் சென்று சென்று பார்த்த போது வீட்டில்நரேந்திரன்தூக்கில் பிணமாக கிடந்தார்.

    இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்று நரேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நரேந்திரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மேலாளர் கைது
    • வாலிபருக்கு எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் காந்திரோடு, பாபு ராவ் தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்ப தாக வேலூர் வடக்கு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்குள்ள விடுதி களில் அதிரடியாகசோதனை செய்தனர்.

    அப்போது பாபுராவ் தெரு வில் உள்ள தங்கும் விடுதியின் அறை ஒன்றில் இளம்பெண்ணும், வாலிபரும் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    போலீசாரின் விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தங்கும் விடுதியை குத்தகை எடுத்து நடத்தி வருவதும், அங்கு மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் வாலிபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • அரசியல் கட்சி பிரமுகர் மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

    குடியாத்தம் வணிகர்கள் மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    மனுவில் கூறியிருப்பதாவது:-

    குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய சிறிய துணிக்கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசியல் கட்சியின் குடியாத்தம் நகர பிரமுகர் நன்கொடை கேட்டு அப்பகுதி வணிகர்களை அணுகியுள்ளார்.

    வணிகர்களும் நன்கொடை வழங்கி உள்ளனர். ஆனால் பெருந்தொகையினை பிரமுகர் கேட்டுள்ளார். வணிகர்கள் பெரும் தொகையை தர மறுத்துள்ளனர்.

    அதை மனதில் வைத்து அவர் பண்டிகை காலங்களில் தெருவில் கூடும் கூட்டத்தை படம் பிடித்து வணிகர்கள் தெருவில் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என புகார் அளித்தார்.

    அப்போதும் வணிகர் சங்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வணிகம் செய்து வருகிறோம் நன்கொடை தர மறுத்த காரணத்தால் தொடர்ந்து வணிகர்கள் மீது போக்குவரத்து இடைஞ்சல் என புகார் அளித்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி இருந்தனர்.

    • பணம் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த பெருமுகையில் பணம் வைத்து சூதா டுவதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பெருமுகை குடிநீர் தொட்டியின் பின்பகுதியில் மலையடிவாரத்தில் 6 பேர் சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×