என் மலர்tooltip icon

    வேலூர்

    • வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் மனு
    • இதுபோன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் நடைபெறாமல் தடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை பழைய முன்சீப் கோர்ட்டு தெருவை சேர்ந்தவர் காஞ்சனா. இவரது மகன் ஆனந்த் (வயது 26).

    இவர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் அமைப்பு மூலம் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைக் ஓட்டிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    இதையடுத்து சில நாட்களுக்கு பின்னர் மகன் இறந்த துக்கம் தாளாமல் காஞ்சனாவும் காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து காஞ்சனாவின் பெற்றோர் சிட்டிபாபு, லோகம்மாள் இன்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும் எனது மனைவியும் மகள் மற்றும் பேரன் அரவணைப்பில் வாழ்ந்து வந்தோம். இருவருமே இறந்து விட்டதால் நாங்கள் ஆதரவின்றி வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எனது பேரன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் விபத்தில் உயிரிழந்தான்.

    எனவே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய தனியார் அமைப்பு சார்பில் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் போதிய இழப்பீடு வழங்கவில்லை.

    இதனால் கூடுதல் இழுப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனிமேல் யாருக்கும் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • செல்போன் பார்த்ததை கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஆற்காட்டான்குடிசை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் திலகா (வயது 17).

    பென்னாத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சமீபத்தில் தேர்வு எழுதி முடித்தார். தற்போது விடுமுறையில் வீட்டில் இருந்த திலகா அடிக்கடி செல்போன் பார்த்ததாக கூறப்படுகிறது .

    மேலும் வீட்டுவேலையும் செய்யவில்லை. இதனைஅவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த திலகா நேற்று வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார்.

    மகள் தூக்கில் தொங்குவதைக் கண்ட அவரது பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே திலகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு சென்று மாணவியின் உடலைப் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தம்

    வேலூர்:

    வேலூர் மின் வாரிய செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் கூறுகையில், வருகிற 27-ந்தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையங்களில் அத்தியாவசியமான மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக சாத்துமதுரை, அடுக்கம்பாறை, மூஞ்சூர்பட்டு, நெல்வாய், துத்திப்பட்டு, காட்டுப்புத்தூர், கீழ்பள்ளிப்பட்டு, கம்மவான்பேட்டை, சலமநத்தம், காட்டுக்காநல்லூர், ரெட்டிபாளையம் மற்றும் அதைச்சுற்றி கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    • சர்வீஸ் ரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பள்ளிகொண்டா நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஹரி (வயது 52) பள்ளிகொண்டா பேரூராட்சி 10-வது வார்டு செயலாளராக பதவி வகித்து வந்தார்.இவருடைய மனைவி பிரேமா பள்ளி கொண்டா பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    ஹரி நேற்று மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி வந்தார்.

    விரிஞ்சிபுரம் அடுத்த மேல்மொணவூர் சர்வீஸ் ரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது கருகம்புத்தூரை சேர்ந்த மணி என்பவர் பைக்கில் வந்தார் அவரது பைக் நிலை தடுமாறி ஹரி மீது மோதியது.

    இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தி.மு.க பிரமுகர் ஹரி இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒடுகத்தூர் வனத்துறை பிடித்தனர்
    • காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரராஜா இவருக்கு செந்தமாக மாந்தோப்பு உள்ளது.

    வழக்கம்போல இவர் மாந்தோப்பில் மாங்காய்களை பறிப்பதற்காக நேற்று மாலை மாந்தோப்பிற்கு சென்றுள்ளார்.

    அப்போது சுமார் 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஊர்ந்து கொண்டு மா மரத்தின் அடியில் இருந்துள்ளது. இதனை பார்த்த தாமோதரன் அலறி அடித்து ஓடி உள்ளார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருகே இருக்கும் ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் வருவதற்குள் மலைப்பாம்பு மாமரத்தில் ஏறியது.

    பின்னர் வந்த ஒடுகத்தூர் வனத்துறை 40 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள சானாங்குப்பம் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

    • பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் நடந்தது
    • மருத்துவ முகாம் அமைத்து தர வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் வேண்டா தலைமையில் நடைப்பெற்றது.

    கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.இக்கூட்ட த்தில் நாளை (புதன்கிழமை )நடைபெறும் தேர் திரு விழாவின் போது தேர் செல்லும் வீதிகளில் தேர் புறப்படுவதற்கு முன்னதாக அனைத்து மின் வயர்களை அகற்றி தேரோட்டம் முடிந்தபின் இணைப்பு வழங்க வேண்டும் தேர் திருவிழா தவிர இதர திருவிழாவின் போது மும்முனை மின்சாரம் தடையின்றி சீராக வழங்க வேண்டும்.

    பள்ளிகொண்டா பேரூராட்சி சார்பில் தேர் செல்லும் வீதிகளில் பாதைகள் சீராக அமைத்தல், இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், கோவில் சு ற்றிலும் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வினி யோகம் செய்து தருதல், உயர்மின் கோபுர விளக்கு களை பழுது நீக்கி சீரமைத்து தர வேண்டும்.

    சுகாதாரத்துறை சார்பி ல் மருத்துவ முகாம் அ மைத்து தர வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு வாகனம் கோவில் முன்பு நிறுத்த வேண்டும். தேரோட்டத்தின் போது பொதுமக்கள் தேர் சக்கரத்தின் அருகே செல்லாமல் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் கணக்காளர் சரவணபாபு, கோவில் மணியம் ஹரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் முடிந்துள்ளது.
    • பாதாள சாக்கடை திட்டத்தில் 29 கிலோமீட்டர் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை திட்ட பணிகள் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    வேலூர் மாநகராட்சி சாலைகளுக்காக ரூ.280 கோடி வழங்க உள்ளோம். மேலும் பல்வேறு திட்டங்களில் மொத்தம் ரூ.314 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப பணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் முடிந்துள்ளது. 23 பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. விரைவில் அந்தபணிகள் முடிக்க தீவிரம் காட்டப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் 29 கிலோமீட்டர் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

    அந்த பணிகளும் முடிக்கப்படும்.பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள் அமைக்கும் பணி மற்றும் சீரமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட உள்ளது.

    ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். ரூ.7 ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடந்துள்ளது. காவிரி குடிநீர் வழங்கும் பொருட்டு வேலூர் (ஒரு பகுதி), திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் (ஒரு பகுதி) ரூ.14 கோடி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கடன் வரப்பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும்.

    வேலூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும் சப்ளை குழாய் இன்னும் சரிவர பணிகள் நிறைவடையாததால் தண்ணீர் வழங்க முடியவில்லை.

    பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கபடவில்லை மேலும் ஒப்பந்ததாரரும் ஓடிவிட்டார் அவரை நான் என்ன செய்ய முடியும்

    இவ்வாறு அவர் கூறினார். 

    • உறவினர்கள் தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதாக புகார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பனந்தோப்பு பட்டி பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி மஞ்சுளா (வயது 42). இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு அவரது பேத்திகளுடன் வந்தார்.

    கலெக்டர் அலுவலக வாசலில் நின்ற போலீசார் மஞ்சுளா வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் மண்ணெண்ணை கேன் இருந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    தன்னை உறவினர்கள் தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். மேலும் என்னுடைய வீட்டில் இருந்த 5 பவுன் நகை, லேப்டாப், பித்தளை சாமான்கள் கட்டில் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டனர்.

    இதை தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    இது குறித்து அணைக்கட்டு போலீசில் 4 முறையும் கலெக்டர் அலுவலகத்தில் 1 முறையும் எஸ்பி அலுவலகத்தில் ஒரு முறையும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வந்ததாக மஞ்சுளா தெரிவித்தார்.

    அவரை மனுகொடுத்து விட்டு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

    • பல நாட்களாக வெயிலில் வாட்டி வதைத்த வெப்பம் தணிந்து சில்லென்று காற்று வீசியது
    • ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம், சுட்டெரித்தது.

    அனல் காற்று வீசியது, வயதானவர்கள் பெண்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர மிகவும் அச்சப்பட்டனர், இதேபோல் இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசியது.

    இந்நிலையில் நேற்று மாலை குடியாத்தத்தில் சுமார் அரை மணி நேரம் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.

    குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்திரா நகர் பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தது பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

    அதேபோல் குடியாத்தம் சுற்றுப்புற கிராமங்களான கல்லப்பாடி, சைனகுண்டா உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் மாலை மழை பெய்தது. இதனால் பல நாட்களாக வெயிலில் வாட்டி வதைத்த வெப்பம் தணிந்து சில்லென்று காற்று வீசியது. பொதுமக்கள் மகிச்சியடைந்தனர்.

    • சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்
    • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண் ஒரு வருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடக்க போவதாக வேலூர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பெற்றோரிடம் திருமணம் வயது அடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டபடி குற்றம்.

    அதையும் மீறி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் அங்கிருந்த மைனர் பெண்ணை அழைத்துவந்து வேலூரில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • பலவகையான மூலிகை மரங்கள் நாசம்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் காடுகளும், மலைகளும் நிறைந்து காணப்படுகிறது. இங்கு உள்ள காடுகளில் அரிய வகை மரங்கள், செடிகள் போன்றவை உள்ளது.

    மர்ம நபர்கள் சிலர் வைக்கும் தீயால் அவை அழிவை சந்தித்து வருகிறது. அதே போல், இந்த காட்டு தீயால் வனவிலங்குகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்துள்ளனர்.

    இதனால், காடு கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. சுமார் 2 மணி நேரம் மலை முழுவதும் சுற்றி சுற்றி எரியும் தீயால் பலவகையான மூலிகை மரம் செடி,கொடிகள், வனவிலங்குகள் எரிந்தனர்.

    இதனை வனத்துரை அதிகாரிகள் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், காட்டினால் நமக்கு கிடைக்கும் பயன்களை எடுத்துரைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளன.

    மேலும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை கொடுத்தால் மட்டுமே அடுத்த முறை யாரும் வனப்பகுதிக்கு தீ வைக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.

    • 7 ஆயிரம் லிட்டர்சேவ சாராய ஊரலைக் கைப்பற்றி அதனை கீழே கொட்டி அழித்தனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில் கலால் இன்ஸ்பெக்டர் பேபி, வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழநிமுத்து, அணைக்கட்டு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையாக கொண்ட குழுவினர் சாராய வேட்டை நடத்தினர். அல்லேரி, வாழைப்பந்தல், பீஞ்ச மந்தை, ஜார்தா ன்கொல்லை, பலாம்பட்டு உள்ளிட்ட மலை பகுதிகளில் டிரோன் கேமரா மூலம் கண்டுபிடித்தனர்.

    அப்போது, அல்லேரி மலைப்பகுதியில் காட்டுக்கு நடுவே கள்ளச்சாராயம் காய்ச்சிவதற்காக பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 5ஆயிரம் லிட்டர் சாராய ஊரலையும் ஜார்தான்கொல்லை பகுதியில் ஆயிரம் லிட்டர் சாராய ஊரல், குருமலையில் 1000 என மொத்தம் 7 ஆயிரம் லிட்டர் சாராய ஊரலைக் கைப்பற்றி அதனை கீழே கொட்டி அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சிவதற்காக பயன்ப டுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேரல்கள், மண் பானைகள், அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தாதவாறு நொறுக்கி தள்ளினர்.

    இதுகுறித்து அணைக்கட்டு, வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×