என் மலர்
வேலூர்
- இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
- இ–மெயில், எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் அனுப்பப்படும்
வேலூர்:
வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில், இளங்கலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, இன்று முதல் 5-ந் தேதி வரை நடக்கவுள்ளது.
முதல் நாளான இன்று கல்லூரி முதல்வர் மலர் தலைமையில் கலந்தாய்வு தொடங்கியது.
அனைத்து பட்டப்படிப்புகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 55 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 30 பேருக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட உள்ளது .
தொடர்ந்து, கணிதம், இயற்பியல், கணினிஅறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு – ஜூன் 1-ந் தேதியும், வேதியியல், விலங்கியல் மற்றும் ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு 2-ந் தேதியும், வணிகவியல் மற்றும் கலை பாடப்பிரிவுகளுக்கான (வணிகவியல், வணிக மேலாண்மை, வரலாறு, பொருளியல்) கலந்தாய்வு 3-ந் தேதியும், தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு 5-ந் தேதியும் நடக்கிறது.
இந்த கல்லூரியில் உள்ள 984 இடங்களுக்கு, மொத்தம் 16 ஆயிரத்து 10 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
தொடர்ந்து, இவர்களின் தரவரிசைப்பட்டியல், www.mgacvlr.edu.in எனும் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு, கலந்தாய்வில் பங்கேற்பது குறித்து, கல்லூரியில் இருந்து இ–மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ–மாணவிகள், இணைய வழி விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ் (அசல் மற்றும் நகல்–2), பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றுகள் (அசல் மற்றும் நகல்–2), ஜாதிச்சான்று (அசல் மற்றும் நகல்–2), ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்–2), சிறப்பு பிரிவினருக்கான சான்று (அசல் மற்றும் நகல்–2) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ–2 ஆகியவற்றுடன் வருகை தரவேண்டும்.
தொடர்ந்து, உண்மை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அதன்பிறகே கல்லூரியில் சேர்க்கை உறுதி செய்யப்படும். அப்போது, கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு (பி.ஏ., பி.காம், பி.பி.ஏ.)– ரூ.2 ஆயிரத்து 306, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு (பி.எஸ்.சி.) –ரூ.2 ஆயிரத்து 336, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு (பி.எஸ்.சி.) – ஆயிரத்து 736 ரூபாய் சேர்க்கை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்
- பிளஸ்-2 முடித்தவர்கள் நேரடியாக முதுகலை பட்ட படிப்பில் சேரலாம்
வேலூர்:
திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற ஜூன் மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி வி.கே. சிங் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர்.
இந்த விழாவில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பட்டம் பெற உள்ளனர். விழாவில் முனைவர் பட்டம் மற்றும் பட்டப் படிப்புகளில் சாதனை படைத்த 550 பேர் நேரடியாக பதக்கம் பெற உள்ளனர்.
மற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகளில் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டு பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு 14 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்., உள்ளிட்ட 5 வருட முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஒரு வருட டிப்ளமோ படிப்புகள் இதில் தொடங்கப்பட்டுள்ளன.
பிளஸ்-2 படித்த மாணவ மாணவிகள் நேரடியாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இந்த பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருவரும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகள் வாங்குவதற்காக பஸ்சில் இருந்து இறங்கினர்.
- கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்து விசாரணை
வேலூர்,
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி சீதா. இவர்கள் இருவரும் விடுமுறைக்காக ஆம்பூர் சென்று விட்டு மீண்டும் நேற்று அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
30 பவுன் திருட்டு
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக சிறிதுநேரம் பஸ் நின்றது. அந்த சமயம் கணவன், மனைவி இருவரும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகள் வாங்குவதற்காக பஸ்சில் இருந்து இறங்கினர்.
அப்போது அவர்கள் பையை பஸ்சில் வைத்துவிட்டு சென்றனர். கடைக்கு சென்று தேவையான வற்றை வாங்கி விட்டு சிறிதுநேரத்துக்கு பின்னர் அவர்கள் பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்தனர்.
பஸ்சில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 30 பவுன் நகை காணாமல் போயிருந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் இதுபற்றி அங்கிருந்த வர்களிடம் கேட்டும் உரிய தகவல் கிடைக்கவில்லை.
கேமராக்கள் ஆய்வு
இதையடுத்து இதுகுறித்து சீதா வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அதிநவீன கேமராக்கள் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றி சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் மூலம் நகை திருடன் பிடிபடுவான் என போலீசார் தெரிவித்தனர்.
- சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்
குடியாத்தம்:
வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குடியாத்தம் சித்தூர் கேட் அருகே தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் பழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், ஆவின் முன்னாள் தலைவருமான வேலழகன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, ஒன்றிய செயலாளர்கள், சீனிவாசன், பாபுஜி, ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், நகரமன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.சிவா வரவேற்றார்.
குடியாத்தம் நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி துவக்க உரையாற்றினார்.
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி தலைவர் புகழேந்தி, வர்த்தக அணி செயலாளர் இமகிரிபாபு, மாவட்ட பொருளாளர் காடைமூர்த்தி, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் கள்ளூர்பாஸ்கரன், ஒன்றிய வர்த்தக அணி பொருளாளர் கள்ளூர்பாபு உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
- கிடாக்களையும், சேவல்களையும் பலியிட்டு கிராம மக்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
குடியாத்தம் :
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கெங்கையம்மன் சிரசு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.
தொடர்ந்து கோவிலில் வைக்கப்பட்ட கெங்கையம்மன் சிரசு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் குடியாத்தம் நகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
நூற்றுக்கணக்கான கிடாக்களையும், சேவல்களையும் பலியிட்டு கிராம மக்கள் நேர்த்தி கடன் செலுத்தினர் இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கிய பிரமுகர்கள், விழா குழுவினர் மற்றும் தட்டப்பாறை, சின்னாலபல்லி கிராம பொதுமக்கள் ஊர் இளைஞர்கள் செய்திருந்தனர்.
- இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
- மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பிரியா. இவர்களது 1½ வயது மகள் தனுஷ்கா.
இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்தது.
இதனால் குழந்தை அலறி துடித்துள்ளது. சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்போது குழந்தையை பாம்பு கடித்தது தெரிந்தது. உடனடியாக அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சாலை வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாமதமானது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.
தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தை உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை உடலை வீட்டிற்கு ஆம்புலன்சு மூலம் அத்தி மரத்து கொல்லை கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.
கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்து இறக்கிவிட்டனர். பின்னர் இறந்த குழந்தை பிணத்தை 10 கிலோ மீட்டர் தூரம் கையில் சுமந்து சென்றனர்.
அல்லேரி மலைப் பகுதியில் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து சாலை வசதி கேட்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
பாம்பு கடித்த உடன் குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால் சாலை வசதி இல்லலாததால் உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
மேலும் இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- 1,074 பேர் ஆப்சென்ட்
- வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்
வேலூர்:
நாடு முழுவதும் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற இந்திய ஆட்சி பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு வேலூர் ஊரிசு பள்ளி, ஊரிசு கல்லூரி, டி.கே.எம். கல்லூரி, கோடையிடி குப்புசாமி அரசு பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, சாந்திநிகேதன், எத்திராஜ் மெட்ரிக் பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் உள்ளிட்ட 9 தேர்வு மையங்களில் நடந்தது.
இதில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 2 ஆயிரத்து 391 பேரில், 1317 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
மீதமுள்ள 1,074 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வின் முதல் தாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடந்தது. மேலும் தேர்வின் 2-ம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத சென்றவர்களை செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு மையங்களில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஊரீசு கல்லூரியில் நடந்த தேர்வை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
- 2 மணி நேரம் நடந்தது
- தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயில் உள்ளது. இங்கு தண்டனை, விசாரணை கைதிகளாக 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயில் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி, சிகரெட் மற்றும் செல்போன் போன்றவைகள் உள்ளதா? என ஜெயில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி, அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
எனினும் கைதிகள் ரகசியமாக அவற்றை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் கைதிகள் அறையில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில், 3 இன்ஸ்பெக்டர் உள்பட 50 போலீசார் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலுக்கு வந்தனர்.
அவர்கள் சிறைத்துறை காவலர்கள் 65 பேர் என 115 பேர் ஜெயில் வளாகத்தில் அணிவகுத்து நின்றனர். அப்போது அவர்களுக்கு எவ்வாறு சோதனை நடத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து அவர்கள் பல்வேறு குழுக்களாக கைதிகளின் அறைகளுக்கு சென்றனர். அங்கு கைதிகளை தீவிரமாக சோதனை செய்து வெளியே அனுப்பி விட்டு, அவர்களின் அறைகள் மற்றும் கழிவறைகளில் சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக போலீசாரின் உயர் கண்காணிப்பு கோபுரங்களுக்கு அடிப்பகுதி மற்றும் பொது கழிவறை, குளியலறை உள்ளிட்ட ஜெயில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது.
அதேபோல் பெண்கள் ஜெயிலிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் மத்திய ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
- தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நாகநதி கிராமத்தில், வேலூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் அந்த வழியாக வந்த லாரியை மடக்கினர்.
இதனைப் பார்த்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஒடிவிட்டார்.
பின்னர் போலீசார் சோதனை செய்தபோது, அதில் திருட்டுத்தனமாக செம்மண் கடத்தி செல்வது தெரிய வந்தது.
லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
- ஸ்டார்ஸ் திட்டத்தில் 871 மாணவர்கள் பயன்
- வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் பேச்சு
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஸ்டார்ஸ் தின விழா இன்று நடந்தது இந்நிகழ்ச்சியில் ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி வரவேற்று பேசினார்.
வி.ஐ.டி. பதிவாளர் ஜெயபாரதி இணைத்துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பெங்களூருவை சேர்ந்த டெல் நிறுவன துணைத்தலைவர் இளவரசு கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-
ஸ்டார்ஸ் திட்ட மாணவர்களைப் போலவே நானும் குக் கிராமத்தில் பிறந்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். நானும் உங்களை போல் இன்டர்மீடியட் படிக்கும்போது தமிழை தவிர்த்து அனைத்து பாடங்களும் ஆங்கிலம் என்பதால் ஆங்கிலம் தெரியாமல் தவித்தேன்.
வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றக்கூடிய சக்தி கல்விக்கு மட்டும் தான் உள்ளது. இதனால் அனைவருக்கும் உயர் கல்வி அவசியம். வி.ஐ.டி. யில் 871 மாணவர்கள் ஸ்டார்ஸ் திட்டத்தில் பயன் அடைந்து உள்ளனர்.
இந்த திட்டம் தற்போது ஆந்திரா, மத்திய பிரதேசத்தில் உள்ள வி.ஐ.டி.யில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உயர் கல்வியில் ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் இங்கு படித்துச் சென்ற மாணவர்கள் லஞ்சம் வாங்கவில்லை என்பது பெருமையாக உள்ளது. லஞ்சம் ஊழலை ஒழிக்க எந்த கட்சியும் இதுவரை தீர்வு கண்டுபிடிக்க வில்லை.
நாம் தமிழர்கள் என்பதில் பெருமைப்பட வேண்டும். இந்தியாவில் பேசப்பட்ட ஒரே மொழி தமிழ் மட்டும் தான் வேற எந்த மொழியும் கிடையாது.
அதன் பிறகு தான் மற்ற மொழிகள் வர ஆரம்பித்தன நாம் தனித்தன்மையோடு வாழ வேண்டும் பள்ளி கல்வியை காமராஜர் பெற்று தந்தார்.
உயர் கல்வியை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். தான் பெற்று தந்தார். 1983-ம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளையும், 84-ம் ஆண்டு சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் துவக்கப்பட்டது.
உயர் கல்வியில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதற்கு எம்.ஜி.ஆர் ஒரு காரணம். இந்தியாவில் 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் உயர் கல்வி படிப்பதில் பின்தங்கி உள்ளனர். உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதாச்சாரம் 27 சதவீதமாக உள்ளது.
உயர்கல்வியில் முன்னிலையில் உள்ள நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேறி உள்ளன. தமிழ்நாடு உயர் கல்வியில் 50 சதவீதத்தை தாண்டி உள்ளது.
கிறிஸ்தவர்கள் பள்ளி கல்லூரிகளை துவக்கினர். அதன்பிறகு மற்றவர்களும் தனியார் பள்ளிகளை ஆரம்பித்தனர். அனைவருக்கும் உயர் கல்வி வாய்ப்பை தர வேண்டும். மத்திய அரசு உயர் கல்விக்கு ஒதுக்கும் தொகை 3 விழுக்காடாக உள்ளது அதை 6 விழுக்காடாக உயர்த்த வேண்டும்.
அமெரிக்கா உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை 87 சதவீதமாக உள்ளது இதேபோல் ஜப்பான் தென்கொரியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களின் தனி நபர் வருமானம் உயர்ந்துவிட்டது.
வெளிநாடுகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளது அதற்கு ஏற்றார் போல் நம்மை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். 4 ஆண்டுகள் உழைத்து படித்தால் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக வாழ முடியும். மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும்.
உங்களுக்காக வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். எப்படியாவது நம் பிள்ளைகளுக்கு உயர் கல்வியை கொடுக்க வேண்டும்.
அனைவரும் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை சார்பில் உதவித்தொகை வழங்கி வருகிறோம்.
உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் இந்தியாவுக்கு தமிழ்நாடு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு வேலூர் மாவட்டம் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார். முன்னாள் ஸ்டார்ஸ் திட்ட மாணவர்கள் சார்பில் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது.
- ஜூன் 25-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கபட உள்ளது.
விருது பெற தகுதிகள் குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் சுய உதவிக்குழுக்கள், மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம். விருது பெறுவதற்கான விண்ணப்பத்தினை வருகிற ஜூன் 25-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மாதந்தோறும் கூட்டங்கள் நடத்துதல், குழுவின் சேமிப்பு தொகை முறையாக செலவிடப்படுதல், வங்கியில் கடன் பெறுதல், குழு உறுப்பினர்கள் பொருளாதார நடவடிக்கை களில்ஈடுபடுதல், திறன் வளர்ப்பு பயிற்சி, வாழ்வாதாரம் சார்ந்த பயிற்சி மற்றம் சமூக மேம்பாட்டு பணிகளில் மக்கள் அமைப்புகளை ஈடுபடுத்துதல் ஆகிய 6 காரணிகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்யப்படும் . மேலும் தகுதியான குழு தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
- தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
2023-2024-ம் கல்வியாண்டிற்க்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கீழ்காணும் தேதிகளில் இணையவழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
30-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு. இதில் விளையாட்டு, என்சிசி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவர்
ஜூன் மாதம் 1-ந் தேதி காலை 9 மணி அளவில் முதற்கட்ட பொது கலந்தாய்வு அறிவியல் பாடப் பிரிவுகள்-
கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல்.
ஜூன் மாதம் 5-ந்தேதி காலை 9 மணி அளவில் மொழி பாடப்பிரிவு கலந்தாய்வு- தமிழ் மற்றும் ஆங்கிலம்.
7-ந்தேதி காலை 9 மணி அளவில் கலை பாடப்பிரிவுகள்-
வரலாறு மற்றும் பொருளியல்.
ஜூன் மாதம் 8-ந் தேதி காலை 9 மணி அளவில் வணிகவியல் பிகாம் மற்றும் வணிக நிர்வாகவியல் பிபிஏ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு மின்னஞ்சல் (மெயில்) குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் தொலைபேசி வாயிலாக சேர்க்கை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






