என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர் கல்வியில் ஏழை, கிராமபுற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்
    X

    உயர் கல்வியில் ஏழை, கிராமபுற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்

    • ஸ்டார்ஸ் திட்டத்தில் 871 மாணவர்கள் பயன்
    • வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் பேச்சு

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஸ்டார்ஸ் தின விழா இன்று நடந்தது இந்நிகழ்ச்சியில் ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி வரவேற்று பேசினார்.

    வி.ஐ.டி. பதிவாளர் ஜெயபாரதி இணைத்துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பெங்களூருவை சேர்ந்த டெல் நிறுவன துணைத்தலைவர் இளவரசு கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    ஸ்டார்ஸ் திட்ட மாணவர்களைப் போலவே நானும் குக் கிராமத்தில் பிறந்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். நானும் உங்களை போல் இன்டர்மீடியட் படிக்கும்போது தமிழை தவிர்த்து அனைத்து பாடங்களும் ஆங்கிலம் என்பதால் ஆங்கிலம் தெரியாமல் தவித்தேன்.

    வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றக்கூடிய சக்தி கல்விக்கு மட்டும் தான் உள்ளது. இதனால் அனைவருக்கும் உயர் கல்வி அவசியம். வி.ஐ.டி. யில் 871 மாணவர்கள் ஸ்டார்ஸ் திட்டத்தில் பயன் அடைந்து உள்ளனர்.

    இந்த திட்டம் தற்போது ஆந்திரா, மத்திய பிரதேசத்தில் உள்ள வி.ஐ.டி.யில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உயர் கல்வியில் ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் இங்கு படித்துச் சென்ற மாணவர்கள் லஞ்சம் வாங்கவில்லை என்பது பெருமையாக உள்ளது. லஞ்சம் ஊழலை ஒழிக்க எந்த கட்சியும் இதுவரை தீர்வு கண்டுபிடிக்க வில்லை.

    நாம் தமிழர்கள் என்பதில் பெருமைப்பட வேண்டும். இந்தியாவில் பேசப்பட்ட ஒரே மொழி தமிழ் மட்டும் தான் வேற எந்த மொழியும் கிடையாது.

    அதன் பிறகு தான் மற்ற மொழிகள் வர ஆரம்பித்தன நாம் தனித்தன்மையோடு வாழ வேண்டும் பள்ளி கல்வியை காமராஜர் பெற்று தந்தார்.

    உயர் கல்வியை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். தான் பெற்று தந்தார். 1983-ம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளையும், 84-ம் ஆண்டு சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் துவக்கப்பட்டது.

    உயர் கல்வியில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதற்கு எம்.ஜி.ஆர் ஒரு காரணம். இந்தியாவில் 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் உயர் கல்வி படிப்பதில் பின்தங்கி உள்ளனர். உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதாச்சாரம் 27 சதவீதமாக உள்ளது.

    உயர்கல்வியில் முன்னிலையில் உள்ள நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேறி உள்ளன. தமிழ்நாடு உயர் கல்வியில் 50 சதவீதத்தை தாண்டி உள்ளது.

    கிறிஸ்தவர்கள் பள்ளி கல்லூரிகளை துவக்கினர். அதன்பிறகு மற்றவர்களும் தனியார் பள்ளிகளை ஆரம்பித்தனர். அனைவருக்கும் உயர் கல்வி வாய்ப்பை தர வேண்டும். மத்திய அரசு உயர் கல்விக்கு ஒதுக்கும் தொகை 3 விழுக்காடாக உள்ளது அதை 6 விழுக்காடாக உயர்த்த வேண்டும்.

    அமெரிக்கா உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை 87 சதவீதமாக உள்ளது இதேபோல் ஜப்பான் தென்கொரியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களின் தனி நபர் வருமானம் உயர்ந்துவிட்டது.

    வெளிநாடுகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளது அதற்கு ஏற்றார் போல் நம்மை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். 4 ஆண்டுகள் உழைத்து படித்தால் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக வாழ முடியும். மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும்.

    உங்களுக்காக வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். எப்படியாவது நம் பிள்ளைகளுக்கு உயர் கல்வியை கொடுக்க வேண்டும்.

    அனைவரும் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை சார்பில் உதவித்தொகை வழங்கி வருகிறோம்.

    உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் இந்தியாவுக்கு தமிழ்நாடு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

    தமிழ்நாட்டிற்கு வேலூர் மாவட்டம் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார். முன்னாள் ஸ்டார்ஸ் திட்ட மாணவர்கள் சார்பில் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×