search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது
    X

    வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல்வர் மலர் தலைமையில் இன்று நடந்தது.

    முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

    • இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
    • இ–மெயில், எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் அனுப்பப்படும்

    வேலூர்:

    வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில், இளங்கலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, இன்று முதல் 5-ந் தேதி வரை நடக்கவுள்ளது.

    முதல் நாளான இன்று கல்லூரி முதல்வர் மலர் தலைமையில் கலந்தாய்வு தொடங்கியது.

    அனைத்து பட்டப்படிப்புகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்ள 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 55 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 30 பேருக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட உள்ளது .

    தொடர்ந்து, கணிதம், இயற்பியல், கணினிஅறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு – ஜூன் 1-ந் தேதியும், வேதியியல், விலங்கியல் மற்றும் ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு 2-ந் தேதியும், வணிகவியல் மற்றும் கலை பாடப்பிரிவுகளுக்கான (வணிகவியல், வணிக மேலாண்மை, வரலாறு, பொருளியல்) கலந்தாய்வு 3-ந் தேதியும், தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு 5-ந் தேதியும் நடக்கிறது.

    இந்த கல்லூரியில் உள்ள 984 இடங்களுக்கு, மொத்தம் 16 ஆயிரத்து 10 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

    தொடர்ந்து, இவர்களின் தரவரிசைப்பட்டியல், www.mgacvlr.edu.in எனும் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு, கலந்தாய்வில் பங்கேற்பது குறித்து, கல்லூரியில் இருந்து இ–மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ–மாணவிகள், இணைய வழி விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ் (அசல் மற்றும் நகல்–2), பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றுகள் (அசல் மற்றும் நகல்–2), ஜாதிச்சான்று (அசல் மற்றும் நகல்–2), ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்–2), சிறப்பு பிரிவினருக்கான சான்று (அசல் மற்றும் நகல்–2) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ–2 ஆகியவற்றுடன் வருகை தரவேண்டும்.

    தொடர்ந்து, உண்மை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அதன்பிறகே கல்லூரியில் சேர்க்கை உறுதி செய்யப்படும். அப்போது, கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு (பி.ஏ., பி.காம், பி.பி.ஏ.)– ரூ.2 ஆயிரத்து 306, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு (பி.எஸ்.சி.) –ரூ.2 ஆயிரத்து 336, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு (பி.எஸ்.சி.) – ஆயிரத்து 736 ரூபாய் சேர்க்கை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×